'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

கவிதைப் பட்டிமன்றம்


ஈரோடு தமிழ்ச்சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் புதுமையான முறையில் பாவலர் மா.வரதராசனார் அவர்களின் தலைமையில் பைந்தமிழ்ச்சோலைப் பாவலர் குழுவினரின் கவிதைப் பட்டிமன்றம் நடைபெற்றது. இரண்டு மணிநேரம் மிகமிகச் சுவையாகச் சிறப்பாக நடைபெற்ற அந்நிகழ்ச்சி மன்றத்தில் இருந்தவர்களை மயக்கிக் கட்டிப் போட்டது.


சொற்சுவையே...
கவிஞர் மன்னை வெங்கடேசன்
கவிஞர் வள்ளிமுத்து
கவிஞர் தமிழகழ்வன்

பொருட்சுவையே...
கவிஞர் விவேக்பாரதி
கவிஞர் சாமிசுரேசு
கவிஞர் சுந்தரராசன் 


தொடக்கக் கவிதை - பாவலர் மா.வரதராசன்

(காப்பு)

ஆயி மகமாயி ஆயிரம் கண்ணுடையாள்
தாயே தயாபரி சங்கரியே = வாயாரப்
பாடுமிப் பாட்டரங்கில் பக்குவமாய் வந்தமர்ந்து
நீடுதுணை யாவாய் நிறைந்து

அம்மா கலைவாணி ஆக்குமிப் பாட்டரங்கில்
எம்மாத் தவறும் நிகழாமல் - நம்பியோர்
இன்னல் தொலைப்பாய் இருந்தமிழை எம்நாவில்
கன்னலென வைப்பாய் கவித்து

மூத்தவளே முன்பிறந்த முத்தமிழே எம்நாவில்
பூத்தவளே எம்மையென்றும் காத்தவளே - வேர்த்தபடி
வேண்டுகிறேன் உன்னருளை வீழாமல் என்பாட்டில்
நீண்டருளச் செய்வாய் நிறைந்து

******

(தமிழ் வாழ்த்து)

சூரியனும் சந்திரனும் தோன்றிவருங் காலத்தே
வீரியமாய் வந்து நின்றவள் - அவள்
வீழுமழை யாகி நின்றவள் - நல்ல
காரியமாய் இங்கவளைக் காப்பெனவே வேண்டுகிறேன்
நேரிழையா ளேவருகவே - வந்து
நேரிசையாய்ப் பாத்தருகவே!

உச்சிமுதல் பாதம்வரை ஒய்யாரப் பொன்னகையாய்
வச்சிருக்கும் நூல்க ளெடுப்பாய் - எங்கள்
வாயமர்ந்து சொற்கள் கொடுப்பாய் - மிகக்
கச்சிதமாய் இவ்வரங்கைக் கட்டிவைத்து வெற்றிபெற
நிச்சயமாய்க் காத்தருள்கவே - எங்கள்
நினைவில்சொல் பூத்தருள்கவே!

வாய்திறந்த நாள்முதலாய் வண்டமிழே உன்னையெங்கள்
தாய்மொழியே என்று பணிந்தோம் - உன்றன்
தாள்பணிந்து சிந்தை குளிர்ந்தோம் - பல
நோய்க்கொடுமை யாய்ப்புகுந்த வேற்றுமொழி வீச்சிருந்து
பாய்மரமாய்க் கட்டியாண்டவள் - அவள்
பாமரனின் வாய்பிறந்தவள்.

நெஞ்சமெனும் வீட்டினிலே நினைவென்னும் ஆசனத்தில்
வஞ்சிமகள் வந்தமர்ந்ததால் - எங்கள்
வாக்கினிலும் வந்துநின்றதால் - துயர்
கொஞ்சமுமி லாதபடி கோதையவள் இவ்வரங்கில்
கொஞ்சிவந்து சிந்துதருவாள் - நமைக்.கொஞ்சிமகிழ்ந் தன்பைத்தருவாள்!

கொட்டிவரும் பேரிகைகள் கூட்டிவருந் தூரிகைகள்
கொட்டித்தரும் வெற்றியென்றுமே - கை
கொட்டுதுபார் இந்தமன்றமே - அட
பட்டிதொட்டி எங்கும்புகழ் எட்டும்படி நின்றதமிழ்
கொட்டுகவே இந்தமன்றமே - கை
தட்டுகஎ ழுந்துநின்றுமே!

பாத்தமிழே எங்களுள்ளம் வாதமிழே என்றுவேண்டி
நாத்தழுக்க வேண்டினேனடி - என்றன்
நாவினிக்க. வேண்டினேனடி - அடி
காத்திருக்கும் இந்தமன்றம் கைகள்தட்டிக் கேட்டிருக்கக்
காத்திடுவாய் சொல்லைக்கொடுத்து - புகழ்
சேர்த்திடுவாய் தொல்லைதடுத்து!

******
(சேலம் பாலன் அவர்களுக்கு)

எட்டுத் திக்கிலும் வெற்றி கொட்டிட
இட்டுந டத்திடும் சீலன் - இவர்
எட்டும்பு கழ்பெறு தூயன் - தமிழ்
எட்டிப் பாரெலாம் சுற்றி யெங்கிலும்
இட்டுச் செல்கிற பாலன் - இவர்
ஏர்கவி மாமணி பாலன்

சேலம் தந்தவோர் செம்ம லாகிய
சீர்புகழ் மாமணி பாலன் - தனிச்
செம்மை விளைத்திடும் சீலன் - கொடும்
ஆலம் மிகுப்பினும் அச்சமி லாதவர்
ஆல மரமெங்கள் பாலன் - அட
ஆளும் சிவனெங்கள் பாலன்!

******
(அவையடக்கம்)
கவிதை பாட வந்தோம் - உங்கள்
கவலை தீர்க்க வந்தோம் செவியில் தேனை ஊற்றி - உங்கள்
சிந்த மகிழச் செய்வோம்!

சொல்லைப் பாட வந்தோம் -
பொருளின்
சுவையைப் பாட வந்தோம்
கல்லைப் போன்ற மனமும்- இளகிக்
கனியப் பாட வந்தோம்

தன்னை மூல மாக்கி - நின்ற.
தமிழத் தாயை வேண்டி
மன்றம் வந்த மர்ந்தோம் - உங்கள்
மனத்தில் வந்த மர்ந்தோம்

கோல வானி லுள்ள - அந்தக்
குளிரும் வெண்ணி லாவைத்
தாளம் போட வைக்கும் - நல்ல
தமிழில் பாட வந்தோம்

பட்டம் வேண்ட வில்லை - எந்தப்
பரிசும் வேண்ட வில்லை
தட்டும் உங்கள் கையின் - சத்தம்
தன்னை வேண்டு கின்றோம்

காசு கேட்க வில்லை - உங்கள்
காதைக் கொஞ்சம் கேட்டோம்
பேசும் தமிழைக் கேட்க - உங்கள்
பேச்சை குறைக்க வேண்டும்

பாடும் எங்கள் பாட்டில் - குற்றம்
பார்க்க நேர்ந்து விட்டால்
நாடும் பிள்ளை உளறல் - என்று
நயத்தைப் பார்க்க வேண்டும்

கையி லுள்ள பேசி - இயங்கும்
காதைத் திருகி வைப்பீர்
பொய்யில் லாத கவிதை - கேட்கப்
புலன்கள் திறந்து வைப்பீர்

*******

உள்ளத்தின் உணர்வுகளை ஒன்றாய்க் கூட்டி
   ஒப்பற்ற சொல்லெடுத்தே ஒழுங்காய்க் கட்டித்
தெள்ளுதமிழ் மிக்கோங்கப் பொருளைச் சேர்த்துத்
   தேனொழுகும் அணிசெய்து கவிதை செய்ய
அள்ளுவிதம் நெஞ்சத்தில் அமரும் பாட்டே
   அழகான கவிதையென ஆகு மப்பா
உள்ளபடி அக்கவியின் சிறப்பெ தென்ற
   ஒருதலைப்பை எங்களுக்குக் கொடுத்துள் ளார்கள்

சொற்சுவையே எனுமணியில் வெங்க டேசன்
   சொக்குகவி தமிழகழ்வன் வள்ளி முத்து
சொற்சுவையே வேண்டுமெனச் சொல்ல வந்தார்
   சுவைப்பதற்காய் உங்களுடன் நானும் உள்ளேன்
அற்புதமாய் அமைகின்ற பொருளே வேண்டும்
   அதுகவிதை எனச்சொல்ல விவேக்கோ டிங்குக்
கற்பூர கவிஞன்சாமி சுரேசும் மற்றும்
   கண்ணான சுந்தராசன் வந்துள் ளார்கள்

வெற்றிபெறப் போவதுயார் பொருளா சொல்லா
வீசுகவி தனைக்கேட்டு முடிவு செய்வோம்

No comments:

Post a Comment