'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

மரத்தனைய மாந்தர் - மாறுரையும் - நேருரையும் - பொன் இனியன்


அரம்போலுங்  கூர்மைய ரேனு  மரம்போல்வர்
மக்கட்பண்  பில்லா  தவர்                                       (997)

திருக்குறள் பண்புடைமை அதிகாரத்தில் உள்ள இப்பாடலில், முதல் உபமான உபமேயங்களுக் கிடையேயான ஒத்த பண்பு ‘கூர்மை’ என்பது தெரியக் காட்டப்பட்டது. அதனால் பொருட்களை அறுத்துக்  கூறுபடுத்தற்குரிய அரத்தின் கூர்மை, பொருட்களைப் பகுத்தறிய வல்ல மக்களின் அறிவுக் கூர்மைக்கு ஒப்புக் கூறப்பட்டது நன்கு விளங்கு கின்றது. ஆனால், அடுத்ததில் அவ்வாறான குறிப்பேது மின்மையால் அவற்றுக்கிடையேயான பலப்படவாயுள்ள பொதுமைகளுள் ஈண்டு இயைபுடையதானதைக் குறிப்பறிந்து புலப்படுத்த வேண்டியதொரு பொறுப்பு உரையாசிரியர்க் காயிற்று. அக்கடனறிந்த உரையாளர்கள் அதன் பொருளைத் தாமுணர்ந்தவாறு காட்டியுள்ளனர். ஆயினும் பலர் அதைத் தவிர்த்தவாறாக உரை செய்துள்ளனர். முந்தை உரைகளைச் சற்றே உரசி இது குறித்த உண்மையறியும் முயற்சியாக அமைகிறது  இக்கட்டுரை.  

“உவமை இரண்டனுள் முன்னது, தான் மடிவின்றித் தன்னையுற்ற பொருட்களை மடிவித்தலாகிய தொழில் பற்றி வந்தது. ஏனையது, விசேட அறிவின்மையாகிய பண்பு பற்றி வந்தது. அவ்விசேட அறிவிற்குப் பயனாகிய மக்கட்பண்பு இன்மையின், அது தானும் இல்லை என்பதாயிற்று” என்கிறார் பரிமேலழகர்.

ஏலுமிடத்திலெல்லாம் இலக்கணஞ் சுட்டலும் எடுத்துக்காட்டுகளோடு இலக்கிய நயம் பாராட்டலும் பரிமேலழகரின் உரைச்சிறப்புகளில் குறிப்பிடத்தக்கதொன்றாகும். மேலும், ‘இதனை அதிகாரத்தால் பெற்றாம்; அவாய் நிலையால்   பெற்றாம்’ எனத் தம் கருத்துக்கான ஆதாரத்தை உரைகளுக்கிடையில் கோடிட்டுக் காட்டுவதும் உண்டு. இக்குறளுக்கான கருத்தாக, ‘விசேட அறிவின்மை’ என்பதை இவர் அநுமானித்த தெவ்விதம் எனக் காட்டாது விடுத்தது நமக்குப் பெருங்குறையே.

உவமம் இரண்டனுள் முன்னது அறுக்குங் கூர்மை பற்றியது; பின்னது அறுக்குங் கூர்மையின்மை பற்றியது எனுங் கருத்தில் உரைசெய்கிறார் பாவாணர்.

வள்ளுவர் ஒரு பொருள் பற்றி (உடன்பாடாகவேனும் மறுதலையாகவேனும்) இருமுறை கருத்தறிவிக்க நேர்கையில் அஃது எனும் சுட்டைப் பயன்கொண்டு பாடல் அமைக்கிறார். குறள் நடையை உற்றுக் கருதுவார்க்கு இது உடன் புரியவரும். அஃது என 15 பாக்களிலும், அஃதே என 3 பாக்களிலும், அஃதிலார் என 2 பாக்களிலும், அஃதில்லார் என 5 பாக்களிலும், அஃதின்றேல் என 3 பாக்களிலும் அமைத்திருக்கக் காண்கிறோம். பாவாணர் காட்டுவதுபோலக் கூர்மையின்மை என்பதை வள்ளுவர் குறிக்கக் கருதியிருப்பின் இப்பாடலிலும் அந்நடையைக் கையாண்டு,

அரம்போற்கூர்த்  தாரேனு  மஃதில் மரம்போல்வர்
மக்கட்பண் பில்லா தவர்
எனுமாறு அமைத்திருக்கக் கூடுமென்க.

“ஓரறறி வதுவே உற்றறி வதுவே”
எனும் தொல்காப்பியச் சூத்திரத்தை யுட்கொண்ட வாறாக, உணர்வை அறிவாக மயக்குரைக்கிறார் பரிமேலழகர்.

காலமும் இடமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போலிருந்து ஒன்றாலொன்று சுட்டப்பெறுதல் போல உணர்வு அறிவு ஆகியனவுமாம். எனினும், இவ்விரண்டிற்கிடையே மெல்லிதும் ஆனால் தெள்ளிதுமான வேறுபாடுண்டாம். அறிவும் உணர்வும் ஒன்றன்றாம். உணர்வின் பயனாவது  அறிவு. உணர்வு முதனிலை; அறிவு முடிநிலை. அறிவில் கூர்மையும் உணர்வில் தெளிவும் வேண்டும்.

ஒன்று முதலாக் கீழ்க்கொண்டு மேலுணர்தலின் ஓரறி வாதியா உயிரைந் தாகும்
எனும் தொல்காப்பியச் சூத்திரம் உணர்தல் அறிதல் என வேறுபடக்  காட்டியுள்ளது(ங்) காண்க.

காலிங்கர் காட்டும் “ஒருபொருளை வகுத்து உள்புக்கு அறியும் அறிவின் கூர்மை” என்பது அரம் என்னும் கருவிக்குப் பொருந்துவதின்றாம்.

இரண்டு உவமங்களையும் இணைத்தவாறாக, ‘பெரிய மரத்தை யறுக்கும் அரம் போன்ற கூர்மையான அறிவு’ என உரைத்து, இரும்பைத் தேய்க்கும் அரத்தையும் மரத்தை யறுக்கும் வாளையும் ஒன்றாகக் காட்டுகிறார் முகிலை இராசபாண்டியன்.

கா.சு.பிள்ளையின், ‘மனிதத்தன்மை யில்லாதவர்கள் தனிநின்ற மரத்தோ டொப்பர்’ என்பதில் அவன் அலகையா வைக்கப்படும் (850) என்னுமாப் போன்றதொரு கருத்துப்படவாகிறது. தனிமரமா தோப்பில் உள்ள மரமா என்பதைக் காட்டுமாறான குறிப்பேதும் குறளில் இல்லாத நிலையில் அது புறத்திருந்து கொண்டு பொருத்தியதே யாகிறது.

மரம் உவமமாகக் காட்டப்பட்டதன் பொருட்குறிப்பு  கவிராசர் போன்றோர் உரைகளில் இல்லை. பாவாணர் போன்றோர் உரைகளில் பிறழவும் மாறுபடவும் காட்டப்பட்டுள்ளது.

அரம் என்னும் உவமத்துக்கான உரை, ‘அரத்தைப் போன்ற கூர்த்த புத்தியுடையவராயினும்’ என்பதே போதுவதாயிருக்க, ‘கூர்த்தமதியுடையார் பண்பாடு பெறாது ஒழியின் தம்மைச் சார்ந்தார்க்குப் புத்திக் கூர்மையினால் தீமையே செய்வர் என மேலும் நீட்டித்து விளக்குகிறார் குன்றக்குடி அடிகளார். இவர்தம் இக்கூற்று முற்றிலும் உண்மையேயா மாயினும் ஈண்டு வேண்டற்பாலதன்றாம். இது இக்குறளின் கருதுகோள் மற்றும் நுவல்பொருட்குச்   சற்றேனும் தொடர்பில்லது என்பதோடு அதன் உட்பொருளைத் திசை திருப்புவதாகவும் உள்ளது. மரம் என்னும் உவமக் குறிப்பிற்கான கருத்தைத்  தெளிவுபடுத்திக்காட்ட வேண்டியிருப்ப, அதைக் கூர்ந்து அறிந்து புலப்படுத்திக் காட்ட ஒல்லாது தவிர்க்கிறார்  குன்றக்குடியடிகளார்.

இஃதன்றியும், சில உரையாசிரியர்கள் தம் உரை விளக்கத்தினூடே இக்குறளுவமங் குறித்து பெய்துவைத்திருக்கும் கருத்து(ம்) சற்றே   துணுக்குறுமாறுள்ளது. “ஆழ்ந்து சிந்திக்கையில் மக்கட் பண்பில்லாதவரை ஓரறிவுயிர்க்கே ஒப்பாகக் கூறுவது அத்துணைப் பொருத்தமாகத் தோன்றவில்லை” என்கிறார் பாவாணர். அவ்வாறாமாயின், அறிவுடைய மக்களை உயிரும் உணர்வுமற்ற அரத்தோடு ஒப்பிட்டது மட்டும் பொருத்தமாவதோ எனும் இடரானதொரு கேள்வி எழுவது ஈண்டு தவிர்க்கவியலாததாகிறது.

இதே போன்றதொரு கருத்தைக் குறட்பா 600-க்கான உரை விளக்கத்தில், “ஊக்கமில்லாதவரை மரம் என்று இழித்தல் அறிவியலுக்கு உடன்பா டுடையதல்ல; மரம் சூழ்நிலைக்குத் தாக்குப் பிடித்து நின்று வளர்ந்து பயன்தருவது அறிக” எனக் குறிக்கிறார் குன்றக்குடியடிகளார்.

குறளில் உள்ள உவமத்தையே குறைகண்டு சுட்டுவது போன்ற தொனியுடைய இவ்வாறான கருத்துகளால் குறளைத் தாம் சிறுமைப் படுத்துவதை இவரெல்லாம் அறியாது போயினர்  போலும்.

இவை யிவ்வாறாக,
மரம், மக்கள், பண்பு ஆகியவை குறித்த ஒரு புரிதலுக்கு இப்போது வருவோம்.

உயிர்க்குங்கால் மனிதன் என்றழைக்கப்படுபவன் மூச்சுநின்று போனால் பிணமென்று பெயர் மாற்றம் பெறுகிறான். ஆனால், கவையாகிக் கொம்பாகிக் கவிந்த நிழலும் கனியும் தருகின்றபோது மட்டுமின்றி வேரற்று வீழ்ந்த பின்னும் பேர் மாற்றமின்றி மரம் என்றே வழங்கப்படுவது அதன் பயன் கருதியதாலாம் என்க.

‘உத்திரத்துக்கு கட்டைவாங்க மரக்கடைக்குப் போனான்’ என்பதில் கட்டை என்பது மரத்தாலான திம்மையைக் குறிப்பதாகும். அடி பருத்து  கிளைகள் திண்ணிதாய் உள்ள மரங்களே இவ்வாறான பெயர் பெறுகின்றன. திண்மையுடையனவாதல் கொண்டு அவை திம்மை எனப்படுகின்றன.

கள்ளுண்டு மெய்யறியாது வீழ்ந்து கிடப்பவனை மரக்கட்டைபோல் விழுந்து கிடக்கிறான் எனும் சொல் வழக்கை உன்னுக. கைகால் மரத்துப் போதல் எனுந்தொடரில் ‘மரம்’ என்பது உணர்வற்ற நிலையைக் குறித்தலை உன்னுக.

உயிரற்ற மரம் கட்டையாகிறது; உணர்வற்ற மனிதன் கட்டை எனப்படுகிறான். இந்த ஒப்புமை பற்றியே இக்குறளில் மரம் என்பது மக்கட்கு உவமமாய் ஆளப்பட்டது என்க.

இதனை, ஓரறிவிற்றாய மரத்தினை யொப்பர் எனப் பரிமேலழகர் காட்டியுள்ளது ஈண்டு நினைதற் குரியது. அவ்வோரறிவாவது உற்று உணர்தலே என்பதும், வானோங்கி வளர்ந்து நிற்கும் மரத்துக்கே  அவ்வறிவு உண்டென்பதும் உன்னுக. வள்ளுவர் குறிப்பது அவ்வோரறிவும் அற்ற நிலைமைத்தாகிய மண்ணோடியைந்த (600) மரமேயாவதை  அறிக.

‘மக்கட் பண்பு’ என்பதனை ஒரு கூட்டுச்சொல்லாகக் கொண்டே உரைகள் யாவும் அமைந்துள்ளன. அவற்றுள், வள்ளுவர் குறிப்பதாக இவர்கள் கருதும்; ‘மக்கள்பண்பு’ எது என்பதற்கான ஒரு தெளிவு எவர் உரையிலும் காணோம்.

‘மக்கள்’ எனும் பன்மைக் குறிப்பை ஒரு தொகுதியெனக் கொண்டு, சமுதாயப் பண்பில்லாதவர் அரம்போன்ற கூரிய அறிஞராயினும் மரம் போல்வர் எனும் வ.சுப. மாணிக்கனார் உரை, ஒப்புர ஒழுகல் என்பதான சமூக அக்கறையை உள்ளடக்கியது போலவும், ஒட்ட ஒழுகல் என்பதான சமூக இணக்கத்தைக் காட்டுவது போலும் தோற்றுகிறது. ஆயினும் பண்பு எனும் குறள் குறிப்பைச் சமுதாயப் பண்பாகக் கொள்ளுதற்குரிய ஏது இன்னதென்றறியக் கூடுவதில்லை.

பண்பு என்ற சொல்லமைந்த பாடல்கள் திருக்குறள் தொகுதியுள் மொத்தம் 25ம் அவற்றுள் பண்புடைமை அதிகாரத்தில் 9ம் உள்ளன.  குறட்பா 997ல் அல்லாது வேறெதனிலும் மக்கட்பண்பு எனப் புணர்ச்சி  கொண்டு  அமைந்திலது. 

மக்கட்பண்பு என்பதை, மக்களுக்குண்டாம் பண்பு, மக்கட்குரிய பண்பு, மக்களுடைய பண்பு, என்றெல்லாம் விரிக்கத் தக்கவாறாகிறது. மக்கட்கு வேண்டுவனவாகிய பண்பு நலன்கள் பல உண்டு. அவ்வக்காலத்துக்கும் இடஞ்சூழலுக்கும் ஏற்ப ஒவ்வொரு பண்பும் தொழிற்பட வேண்டுவதாகிறது. மக்கட்கு வேண்டுவதாகிய நலன்கள் பல உண்டாயினும், நாநலன் என்னும் நலனுடைமையே பெரிதெனக் காட்டியதுபோல பண்புகள் யாவற்றினும் மேலானதாக அமைந்தாங் கொழுகலைச் சுட்டுகிறது குறள். இது எக்காலத்தும் எவ்விடத்தும் எந்நிலையிலும் வேண்டப்படுவ தொன்றாவதும் எல்லாராலும் நயக்கப்படுவது மாகும்.  இதனைப்  பண்பெனப்  படுவது பாடறிந் தொழுகல் எனகிறது  கலித்தொகை.

பண்புடைமக்கள் (62) என்பதன் மறுதலை பண்பில்லா மக்கள் (997). பரந்து உலகியற்றியான் (1062) - உலகியற்றுப் பரந்தியான், கால்வல் (496) - வல்கால், சிறுமையுள் (98) - உள்சிறுமை என்பன போல, பண்பில்லாத மக்கள் எனப் பொருள்கோள் வைப்பில் இது மாறி நிற்பதாகும்.

பண்பில்லாத மக்கள் அரம்போலும் கூர்மையரேனும் அவர் மரம் போல்வர் எனும் வைப்பிற்குரியது இப்பாடல்.
‘கூர்மையரேனும்’  என்பது கொண்டு போல்வரே என ஏகாரந் தொக்கதாகிறது.

கூர்த்த அறிவு உடையவராயிருப்பினும் பண்பில்லாத மக்கள் (உணர்வற்ற) மரக்கட்டையை ஒத்தவரேயாம் என்பது இதற்கான எளிய தெளி பொருளாகிறது.  

உயிரற்றதனால் மரம் உணர்வற்றுப் போனவாறு அதனோடு ஒப்புக் கூறப்பட்ட பண்பிலாத மனிதன் உயிரற்றவன் போலாவான் எனினுமாம்.

மரக்கட்டை என்பது ஒரு பொருட்கிளவி. மரம் என்னும் இக்குறளின் குறிப்பு உயிர்ப்பின்மை அல்லது உணர்வின்மையின் ஒரு குறியீடாகும்.

ஒத்ததறியான் செத்தாருள் (214) வைக்கப்படுமாறு போல பண்பிலாதான் உயிர்ப்ப உளனாகான் என்றவாறு. ஒ.நோ: மரம்போல்வர் பண்பிலாதார் (997). மா அன்னர்  கல்லாதார் (814).

No comments:

Post a Comment