'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

பட்டும் படாதன - பொன் இனியன்


பட்டென்று  தான்தொடங்கிப் பாடலிறு வாயதனைக்
கட்டுரைப்பீர் என்றார் படாரென - அட்டியின்றி
நான்முயன்றே னவ்வளவில் நன்கிதனை ஓர்ந்தினிது
சான்றுரைப்பீ  றென்று படார்*                       1

*படாரென்று என்பது பாடற் றளைகருதி மாறி நின்றது.

பட்டுப்போல் மேனி பவளச்செவ் வாயிதழ்
வெட்டுமிரு  கண்களொடு விற்புருவம் விட்டிழைத்த
கார்கூந்தல் வேய்தோற் கனங்குழை நூலுடைக்(கு) 
யார்தா மடிமைப் படார்                                  2

பட்டனைய மென்மேனி பல்முத்து பண்மழலை
விட்டிசைக்கும் வேய்குழல் யாழென்ப வாங்கை
யளாவிய கூழே யமுது;பிற* வாகத்
திலாராங் கவைக்குட் படார்                          3

* ஆகத்துப் பிற இலார் ஆங்கு அவற்றுக்கு உட்படார்

பட்டென்று  போட்டுடைப்பான்  கேட்ட மறையதனை
முட்டாள்  தனத்துக்கே  முன்வரிந்து பட்டயம்
கட்டுவான் பாரவன் தானோர் அறைபறையாம்
பெட்பவே உட்கப் படான்                                4

பட்டென் றுரைப்பவன் பாரான் இடம்பொருள்
முட்டுப் படச்சொரியும் தன்மறை நட்டா
ரிடைப்பட்டும்  நன்மையுறா னாவான் அவனோர்
அறைபறை யாயுருப்ப டான்                         5

பட்ட மரக்கிளையில் பைங்கிளி வந்தமரல்
கெட்டார்க்கு மற்றாங்கே கேளமைதல் முட்டாத
வாறாய் முயல்விலார் முன்னேறல் தானுண்டோ?
மாறாயர் மாணப் படார்                                 6

பட்டபின் வாராத புத்தி; படியாமல்
வி்ட்டநற் பண்பு; மனத்துளே நட்டநற்
கேண்மை விடலதும் கேடாவ; அன்னதோர்
பான்மையர் ஆற்றுப் படார்                           7

பட்டது பாடன்றாம் பன்னாள் உழைப்பினில்
முட்டுப் படாத முயல்வுடையார் கெட்டும்
மனந்தளரார் கீழறுப்புக் கஞ்சாராய் ஊங்கும்
குணத்தால் உலைவு படார்                            8

பட்டதெலாம் போதாதா பாராண் டிருந்தகுடி
கெட்டுந்தா னின்னும் கிளர்ந்தெழ முட்டுப்
படுவதுமென்? முன்னேற ஒட்டாமற் சாதி
சுடுவதால் சுற்றப் படார்                                 9

பட்டிற்காம் மென்மை; பளிங்கோ ஒளிவிடும்
கிட்டிப்புள் மேலேறிப் பாயுமே - மட்டிப்
பயலுக்கு மாங்குமாங்கென் றாலுமண் டைக்குள்
உயவாது ஊக்கப் படான்                                10

No comments:

Post a Comment