'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

சொற்சுவையே... கவிஞர் தமிழகழ்வன்



அந்தமிழ்த் தாயைப் போற்றி
அடிமலர் வணங்கு கின்றேன்
இந்தநல் அவையி ருக்கும்
இன்சொலர் யாவ ரையும்
வந்தனம் என்று கூறி
வணங்குகின் றேனே தேனின்
சந்தமார் கவிதை செய்யும்
கவிஞரை வணங்கு கின்றேன்                     1

ஈரோடு தமிழச் சங்கம்
என்றென்றும் வாழ்க வென்று
சீராட்டிச் சீர்கள் கூட்டிச்
சிந்தைசேர் இன்பம் எல்லாம்
வேராக்கி விளைக்கும் பாக்கள்
வியன்றமிழ்ப் பெருமை பேசப்
பாராட்டிப் போற்று கின்றேன்
பாலனைய பால னையா                              2

புன்னகையைப் பொன்னகையாய்ப் புனைந்தி ருக்கும்
    பொழிலாசான் எழிலாசான் வரத ராசர்
பொன்னடியைப் போற்றுகிறேன் உண்மை பாடிப்
    புத்துலகம் படைக்கின்ற வெங்க டேசர்
நன்கவிந்த கவியாலே நலஞ்சேர்க்கின்ற
    நன்முத்துச் சொன்முத்து வள்ளி முத்து
மன்னர்கள் இங்கிருக்க மனம கிழ்ந்தேன்
    மங்காத தமிழாலே கவிதை செய்தேன்                3

எதிரணியில் நின்றெம்மை ஏய்க்கத் தானே
    எடுப்பாரே பொருட்சுவையென் றெண்ணி யெண்ணி
அதிரடியாய்க் கவிபாடும் விவேகங் கொண்ட
    அருளாள்வான் பாரதியே வாழ்க வாழ்க
புதிதாகச் சுவைகூட்டும் பாங்கில் பாடும்
    புதுமைமொழி சாமிசுரேசு வாழ்க வாழ்க
விதவிதமாய்க் கவிசெய்யும் அழகு வேந்தன்
    வித்தகரே சுந்தரரே வாழ்க வாழ்க                         4

******
புவியில் மனிதன் போற்றிச் செய்யும்
கவிதை சிறக்கக் காரணம் எதுவோ?

சொல்லா? பொருளா? சுவைமிகுந் ததுவே
சொல்வீர் புலவீர்! சிந்தனை செய்தே!

சுவைபடச் சொல்க என்பதே வழக்கு!
சுவைபடப் பொருளுரை என்பதா வழக்கு?

பொருண்மை தெரிதலும் சொன்மை தெரிதலும்
சொல்லின் ஆகும் என்மனார் புலவர்
அத்தகு சொல்லின் அருஞ்சிறப் புகளை
இத்தகு மவையில் இனிதாய் உரைப்பேன்

பெயரே வினையே இடையே உரியே
எனநால் வகைமை உடைய தாகும்
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்
எனவும் நான்கு வகைமைய தாகும்
ஒருசொல் கூறிப் பலபொருள் செய்தலும்
பலசொல் கூறி ஒருபொருள் செய்தலும்
திணைபால் இடமொடு காலம் உணர்த்தலும்
ஆகு பெயரும் வேற்றுமைப் படுத்தலும்
தோகை விரிக்கும் மயிலைப் போலத்
தொகைவிரி எனஇரண் டாக நிற்றலும்
சொல்லாண் மையின் சொக்கும் அழகே!

ஐயன் வள்ளுவன் அழகாய் உரைப்பார்
கேட்டார்ப் பிணிக்கும் தகைமை உடையதும்
கேளாரும் விரும்ப மொழிவதும் சொல்லே

சொல்லுதல் எங்ஙனம் சிறக்கும் என்றால்
சொல்லலின் குற்றம் நீக்கும்போதே
நின்று விளக்கம் வேண்ட விடுத்துக்
குன்றக் கூறலும் குன்றக் கூற
வேண்டிய பொருளை விரித்துக் கூறலும்
தாண்டிய பின்னும் தடுத்து மீண்டும்
கூறிய கூறலும் கொண்டன விடுத்து
மாறு கொள்ளலும் வழுவுடைச் சொல்லை
ஏற்றிக் கூறலும் இடந்தடு மாறலும்
போற்றத் தகாதன பொதித்து வைத்தலும்
ஒன்றை விடுத்து வேறொன்று கூறலும்
தொடங்கும் போது சரியே முடிவைத்
தொடும்போ(து) அழிந்து போதலும் தோன்றும்
சொல்லோ பயக்கா திருத்தலும் ஆகிய
பத்துக் குற்றம் பார்த்து நீக்கிச்
சுவைபடச் சொல்வர் சொல்லேர் உழவர்

பின்னும்

வெல்லும் சொல்லே உலகில் இலையெனச்
சொல்லும் அழகைத் தொகுப்பர் பத்தாம்
சுருங்கக் கூறலும் விளங்க வைத்தலும்
அருஞ்சொல் அறைய இன்பம் பயத்தலும்
நல்ல சொல்லை நாட்டலும் ஓசை
வெல்லம் போலே வேட்கை மிகுத்தலும்
நுண்மையும் நுவலும் முறைமையும் உலகம்
அண்ணுதற் கெளிதாய் அமைதலும் சிறந்த
பொருளைத் தருதலும் பொருள்பொதி சான்றோர்
அருள்வழி வைத்தலும் ஆகிய பத்தே

அவ்வழிச் சொல்லின் அழகை ஆய்ந்து
செவ்வழி செய்வார் செந்தமிழ்ப் புலவோர்
சொற்கள் பலவாய்க் கிளைத்துக் கிளைத்துச்
சொக்க வைக்கும் அழகைக் காண்பீர்
பொருளோ பலவாய்க் கிளைக்கக் கிளைக்கப்
பொருண்மை சிதைந்து புதைந்தே போகும்

சொல்ல வந்த கருத்தை மட்டும்
சொல்ல மெல்ல மறையும் அதனை
அழகை ஏற்றி அலங்கரித் தாலோ
பழகுதற் கினிமை பன்னெடுங் காலம்
அழியா திருக்கும் அதனை எண்ணி
எதனுள் புகுத்தி எப்படிச் சொல்ல
விதமாய் விளையும் உலகில் நிலைக்கும்
என்றாய்ந்(து) உரைத்தவை எழிலார் சொற்கள்      5

வில்லி னின்று பறக்கின்ற
வீரி யங்கொள் அம்பைப்போல்
சொல்லைத் தேர்ந்து சொக்கிப்போய்ச்
சுவையாய் உரைக்கும் புலவர்தம்
சொல்லால் இன்பம் கொண்டாடச்
சுடராய் விளங்கும் உளக்கோயில்
எல்லை இல்லாப் பேரின்பம்
எல்லாம் சொல்லால் அறிவீரே                6

பொருளில் எங்கே சுவையுளது?
பொதிந்த பொருளை எடுத்துரைக்க
அருளும் சொல்லே! அஃதன்றி
ஆக்கம் இல்லை அறிவீரே
மருளும் அருளும் யாவையுமிம்
மனங்கொள் சொல்லின் துணையாலே
பொருளைத் தேடிச் செல்வோர்க்குப்
பொருள்இல் பாட்டே முன்தோன்றும்      7

எழுத்தும் சொல்லும் இன்றி
எப்படிப் பொருளு ரைப்பார்
எழுந்த சுவையா தென்றே
எண்ணிப் பொருளைப் பார்த்தேன்
எழுந்த யாவும் சொல்லை
எதிர்க்க வியலா துறையும்
அழுத்திச் சொல்வேன் ஐயா
அழகு சொல்லே சொல்லே!                       8

சொல்லை இடமாற்றிப் போட்டுச்
சுற்றி விடச்செய்தால் போதும்
எப்படி?
கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை
சுரையாழ அம்மி மிதப்ப - வரையனைய
யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப
கானக நாடன் சுனை
இப்படிச்
சொல்லை இடமாற்றிப் போட்டுச்
சுற்றி விடச்செய்தால் போதும்
இல்லை பொருளெங்கே என்பார்
இறப்பார் பொருள்தேடி நாளும்
சொல்லைச் சீரமைத்து வைத்துப்
சொக்கும் பொருள்கோளை வைத்துச்
சொல்லின் அரும்பெருமை ஏற்கும்
சுழலும் புவிநாளும் ஐயா                              9

பொருளில் விளங்கும் நயங்களினைப்
பொதித்தல் சொல்லால் இயன்றிடுமா?
அருள்கூர்ந்(து) இந்தக் கதைகேளீர்
அடர்ந்த காட்டில் இராமன்தான்
அருளும் குகனின் உள்புகுந்தான்
அவனைத் தொடர்ந்த பரதன்மேல்
பொருந்தா திருந்து சினங்கொண்டு
பொங்கும் குகன்சொல் கேட்பீரே              10

ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றுஅவர் சொல்லிய சொல்ஒரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ

அஞ்சன வண்ணனென் ஆருயிர் நாயகன் ஆளாமே
வஞ்சனை யால்அர செய்திய மன்னரும் வந்தாரே
செஞ்சரம் என்பன தீயுமிழ் கின்றன செல்லாவோ
உய்ஞ்சிவர் போய்விடி னாய்க்குக னென்றெனை ஓதாரோ

தகரப் பாட்டுக் கோர்தலைவன்
தமிழைத் தாங்கி மகிழ்ந்தானே
அகர முதலாய் அவன்வாங்கி
அகத்தில் ஏற்றி அழகாகப்
புகழும் வண்ணம் கவிசெய்தான்
புலவன் சொல்லைக் கேட்போமா?
இகழ்தல் அவன்றன் போக்காமே
இனிமை சேர்க்கும் சொல்லாலே               11

கருக்கூடி அப்பொழுதே பொழியும் மேகம்
    காளமேகம் மதுமேக மயக்கந் தானே
ஒரு கூத்தைக் கேட்டீரோ நச்சுப் பாம்பை
    ஒருகயிறாய் ஆக்கித்தான் பூண்ட நாதன்
தெருத்தெருவாய்ப் பிச்சையெடுத்து உண்ணச் சென்றும்
    தேர்ந்தெடுத்த காளம்மேளம் குஞ்ச ரத்தோ(டு)
இருந்தானே எனவஞ்சப் புகழ்ச்சி செய்தான்
    இதுவன்றோ சொல்வன்மை இன்பம் இன்பம்    12

தாதி தூதோ தீதென்றும்
தத்தை தூ(து)ஓ தாதென்றும்
தூதி தூதும் ஒன்றென்றும்
துத்தி தத்தாதே யென்றும்
ஆதி வரதன் அறைந்(து)ஆனார்
அழகு காள மேகமென
நீதி உரைப்பீர் ஐயாவோ
நிறைந்த சொல்லே சிறப்பென்று              13

நன்றி நன்றி எனக்கு இந்த
நல்ல வாய்ப்பைத் தந்தமைக்கு
நன்றி நன்றி ஈரோட்டுத்
தமிழச் சங்கப் பேரவைக்கு
நன்றி நன்றி பாலன்ஐயா
நன்றி நன்றி வரதன்ஐயா
பொன்றும் வரையில் தமிழ்பேசிப்
பொத்திப் பொத்திக் காப்போமே             14

No comments:

Post a Comment