அத்தனை ஆட்டமும் கண்டநம் வேந்தன் அரசவையில் 
சத்தமே இன்றிச் சமர்த்தாய் அமர்ந்த தமிழரின்பால் 
சித்தமுத் தன்கொடு சித்திரப் போட்டி சிறந்திடுக
முத்தமிழ்ப் பாவலர் முந்துக வென்றான்! முரசறைந்தே
இத்தக வல்தனை ஊரார்க் குரைக்க இயம்பிவிட்டான்! 
கொத்துப் பறைகளைக் கொட்டித் தெருக்களைக் கண்டொருவன் 
அத்தனை பேரும் அவையினில் சேர்கென் றறைந்திடவும் 
மொத்த நகரமும் மன்று நிறைத்து முகிழ்ந்ததுவே! 
பரதக் கலைகள் பழகும் மகளிர் படைவரவும் 
சுருதி பிழையா திசைப்பார் அவையதைச் சூழ்ந்திடவும் 
மிருதங் கமும்பிற தாளமும் செய்பவர் வந்திடவும் 
அரசன் அவையினில் ஆய கலைகள் அமைந்தனவே! 
ஓவியம் தீட்டுவார் தூரிகை யோடே உடனிருந்தார் 
காவியம் பாடும் கவிஞர்கள் பீடம் கவித்திருந்தார் 
கோவிலில் வேதம் முழங்கிடும் அந்தணர் கூடவந்தார் 
காவலன் மன்றம் கலைதிகழ் மன்றெனக் கண்டதுவே! 
எழுவகை மகளிரும் ஏந்தலின் மன்றில் எழுந்திருந்தார் 
உழுவகை செய்தே உயிர்வகை காக்கும் உயருழவர், 
மழுவகை கொண்டெழில் மாநகர்க் காவல் வளர்ப்பவர்கள்,
முழுவகை மக்கள் முகிழ்ந்தனர் மன்றில் முறையுடனே! 
மன்னன் அவையது மக்கள் அவையதில் வந்தவர்க்குப்  
பென்னம் பெரிய இருக்கை வசதி பெருவிசிறி 
சின்னக் குடுவையில் தண்ணீர் எனப்பல செய்திருந்தான்! 
என்னே அரசன் எளிமைக் குணங்கள் எனவியப்பே! 
வேறு
காவலன் மன்றில் அந்தக் 
   கர்வமாப் புலவன் நின்று 
பாவலர் பாடு கின்ற 
   பாட்டுகள் அனைத்தி னுக்கும்
ஏவிய கணையைப் போல 
   எதிர்ப்பதம் எடுத்துப் பாடி
நாவல புலவோர் கைகள் 
   நடுங்கிடச் சிரித்தி ருந்தான்!
கட்டளை பாட வந்த
   கவிஞரோ கைகள் சேர்த்து 
கொட்டியோர் தாளம் போட்டு 
   குறையிலாக் கவிதை தந்தார்!
எட்டுணை ஐயம் இன்றி 
   எதிர்க்கவி விரல்சொ டுக்கி
தட்டிய ஓசை சேர்த்துத்  
   தாளமிட் டவரை வென்றான்!
திருந்திய சொற்கள் கொண்டு 
   திரள்பெருங் கருத்து மின்ன
ஒருவரோ விருத்தம் பாடி
   உயரவைப் பீடம் வந்தார்! 
வருத்தமே இன்றி முத்தன் 
   வாய்திறந் தெடுத்து விட்ட
விருத்தமோ நெருப்பு போல! 
   வீழ்த்திட வென்று விட்டான்!
வகையுளி நிறைந்தி ருக்கும் 
   வாக்குடைக் கவிஞர் வந்தார்!
தகைசிறந் தெடுத்த சொற்கள் 
   தமையவர் செதுக்கி வெண்பா
தொகைபடத் தொடுத்த போது, 
   தோன்றிய சித்த முத்தன் 
நகைப்பையீற் றடியில் வைத்து 
   நல்கியே வெற்றி கண்டான்!
திருப்புகழ் வண்ணம் பாடத்
   திரண்டனர் இருவர், காலில்
செருப்புகள் தாளம் கேட்டு 
   செருக்குடன் அதற்கோர் பாடல்
கருவனே யாத்தான், அங்கே 
  கவிஞர்கள் நடுங்கிப் போனார்
அரசனோ வியந்தான், மக்கள் 
   அமைதியாய் அரங்கில் நின்றார்!
ஆர்த்திருந் தானே முத்தன் 
   அதிர்ச்சியில் இருந்தான்
மன்னன் 
வேர்த்திருந் தாரே பின்னோர் 
   வெதும்பினர் புலவர், கண்கள்
நீர்த்திருந் தாரே தோற்றார், 
   நிகழ்வன அனைத்தை யும்தாம்  
பார்த்திரு தவர்க ளெல்லாம் 
   பகன்றனர் தங்க ளுக்குள்!
வேறு
ஒருவர் : 
எத்தனை கர்வம் எத்தனை ஆணவம் 
எழுந்து நிற்கிறது!  
மற்றொருவர் : 
ஆமாம்
அத்தனை! ஆனால் அவரது பாட்டே 
அதிர்ந்து நிற்கிறது!  
ஆண் : 
நாட்டினில் உள்ள கவிஞர்கள் கையில் 
நடுக்கம் இருக்கிறது!
பெண் : 
முத்தன்,  
பாட்டினில் வைத்த வேட்டதுங் கூடப் 
பயந்து கிடக்கிறது! 
ஒரு பெண்: 
அரசனின் முகமும் அவையினர் முகமும் 
ஆடி யிருக்கிறது! 
இன்னொரு பெண்: 
வந்த 
புருஷனப் பாரேன்! எத்தனை ஆற்றல்! 
புகழினில் ஜொலிக்கின்றான்! 
இப்படி யாக மக்களும் பேச 
   இதனைப் பெண்ணொருத்தி - கேட்டுத்
தப்பென நினைத்தாள் தமிழ்மகள் அலவோ 
   தம்மானம் நினைத்தாள்! 
அரசனும் தோற்றால் அத்துடன் நாடே 
   அவன்வசம் சென்றுவிடும் -
பின்னால் 
பரவிடும் ஏச்சில் பாரதம் முழுதும் 
   பார்த்துச் சிரித்துவிடும்
நம்முடை நாடு நம்முடை மானம் 
   நழுவிடக் கூடாது - இன்னோர்
தம்பட் டக்கவி ராயன் புவியில் 
   தளிர்க்கவும் கூடாது!
செந்தமிழ்த் தாயே உன்னைய ழைத்தேன் 
   சிந்தையில் நின்றிடுக - என்றே
வந்தனள் சிறுமி கோமதி என்னும் 
   வாலைப் பருவத்தாள்! 
கயல்களின் இனமே காமுறும் வண்ணம் 
   கண்ணுடை ஆகத்தாள் - சிறு
முயலெனும் மென்மைப் பதமலர் தாங்கும் 
   முகைசிறு பருவத்தாள்!
பறவைகள் நாணும் வகையில்ந டக்கும்
   பளிங்கு வண்ணத்தாள் - இறை
அறம்வெல மண்ணில் எடுத்திடும் உருவை 
   அப்படி யேயொத்தாள்! 
அவையினில் வந்தாள் மன்னவன் முன்னம்
   அரசர்க் கென்வணக்கம் - நானும்
கவிதைகள் பாடும் ஆசையில் வந்தேன் 
   கட்டளை யிடுகென்றாள்! 
மழலையின் உருவில் மன்றினில் வந்தாள் 
   மாபெரும் வார்த்தைகளைக்
- கேட்டோர் 
குழந்தைகள் ஆட்டம் அஃதிலை என்றே 
   கூறிய ழைத்தாரே! 
வேறு
நானும் குழந்தை இல்லை - இந்த 
நாட்டில் ஒருத்தி யாவேன்! 
நாடு வீழும் போது - பார்த்து 
   நாணி நிற்க மாட்டேன் 
பாடு நேரும் போதும் - என்றன் 
  பலம் மறக்க மாட்டேன்! 
கேடு சூழும் நேரம் - தோன்றிக் 
   கேடு தீர்க்கப் பார்ப்பேன்!
வாடும் வழக்கம் கொள்ளேன் - எதையும் 
   வலிமை கொண்டு பார்ப்பேன்!
மன்னர் அவையில் வந்தார் - ஏதோ 
   மனங்கு ரைப்ப தெல்லாம் 
தந்தம் கவிதை என்றே - சொல்லிச் 
   தர்க்கம் செய்யு கின்றார்!
என்ன அவர்தம் புலமை - இன்னும் 
   எதனில் அவர்க்குத் திறமை
என்று கீறிப் பார்க்க - நானும் 
   எழுந்து பாடு கின்றேன்! 
கலைக ளுக்குத் தேவி - எங்கள் 
   கல்வி வாணி பாதம் 
தலைப ணிந்து தாழ்ந்தேன் - நெஞ்சில் 
   தமிழை ஏந்தி வந்தேன்! 
அலைய டித்தல் ஓய்தல் - யாவும் 
   அலங்கரித்தல் ஆகும் 
நிலைமை கொண்ட வர்கள் - என்றும் 
   நிறைய பேச மாட்டார்! 
முத்தன் என்னும் இந்த - வயதில் 
   மூத்த கவிஞ ரோடு 
யுத்தம் செய்ய வந்தேன் - என்ன 
   உதற லோவ வர்க்கும்? 
வித்தை கொண்டு வாள்கள் - தம்மை 
   வெற்றி கொண்ட அன்னார் 
கத்தி போன்றி ருக்கும் - என்முன் 
   கவிதை பாடி டாரோ? 
அனும திக்க வேண்டும் - எனக்கும் 
   அவைவ ழங்க வேண்டும் 
மனத்தில் அன்னை சக்தி - சேர்க்கும் 
   வலிமை உண்டு மன்னா 
எனையும் ஏற்று நீங்கள் - கவிதை 
   எழுப்பச் சம்ம தித்தால் 
வினைகள் செய்வேன் நாட்டின் - வெற்றி 
   விளங்கும் வண்ணம் என்றாள்!
வேறு
மக்களிவை கேட்டதும் மயங்கினார் - அந்த 
   மன்னவனோ கொஞ்சமாய்த் தயங்கினான்
- இனி 
சொக்கன்வசம் யாவுமென எண்ணினான் - சின்னச் 
   சொக்கியங்கு பாடும்வகை பண்ணினான்!
- உடன்
அக்கறையாய் மக்களெலாம் கெஞ்சினார் - இந்த 
   அவசரம்வேண் டாமென்றே கொஞ்சினார்
- அதில்
மிக்கசினம் கொண்டெழுந்தான் முத்தனும் - கவி 
   மீட்டிடுக என்றுரைத்தான்
மன்னனும்! 
வேறு
கோமதியும் பீடத்தில் அமர்ந்து கொண்டாள் 
   கோக்கவிஞன் கண்மூடி தியானம்
செய்தான்! 
தாமதே இல்லாமல் சித்த முத்தன் 
   தான்முதலோ ரேகபாதம் பாடி
விட்டான்!
நாமதனை மெச்சுகிறோம் என்றாள், பாட்டின் 
   நற்பொருளை அவளுமொரு பாட்டில்
சொன்னாள்!
தேமதுரக் குரலெடுத்தாள் வியந்தான் முத்தன்
   தெய்வத்தின் அருளென்றே நினைத்தான்
உள்ளே! 
சித்தமுத்தன் ஓர்சந்தக் குழிப்பைச் சொன்னான் 
   சிறுபெண்ணாள் அதற்கேற்ற பாட்டைச்
சொன்னாள்! 
பத்திரசம் கொண்டதொரு கவிதை கேட்டான், 
   பாவைவிளக் கொன்றுவைத்தாள்
அவைக்கு முன்னே 
சத்தியவள் ஆடல்வரும் சந்தப் பாட்டைச் 
   சதிர்போலப் பாடுகையில் விளக்கில்
கங்கு 
வைத்துச்சுடர் விளங்குவதை மக்கள் கண்டார் 
   வெற்றிக்களிப் பேந்தியவன்
வியர்வை கண்டான்! 
                                               -தொடரும்-
No comments:
Post a Comment