'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

சொற்சுவையே... - கவிஞர் மன்னை வெங்கடேசன்



அணிக்கான தலைமைக்கவிதை:

தமிழ்வாழ்த்து

என்றுபி றந்தாய் எனவறி யோமே
இன்றமிழ் மொழியாளே
கன்றுப சுவினைக் காண்பபோல் உன்னைக்
கதியெனக் கண்டுகொண்டேன்
மன்றினில் பெரிய அறிஞர்கள் முன்னே
வந்தனன் கவிபாட
நன்றெனைக் காத்து நல்வழி காட்ட
நானுனைப் பணிந்தனனே                            1

அவை வணக்கம்
ஈரோட்டில் உள்ள இந்த
ஏர்மிகு பேர வையை
சீரோடு நடத்து கின்ற
திருசேலம் பால னையா
பாராட்டுக் குரிய ஏனை
பண்புடைய மற்ற வர்க்கும்
தாராகப் பாத்தொ டுத்துத்
தந்தேனென் நல்வ ணக்கம்!                          2

தலைமை வணக்கம்
பாவகை யெல்லாம் வளமொடு கற்கப்
பைந்தமிழ்ச் சோலையைத் தந்த
பாவலர் வரத ராசரே இந்தப்
பாட்டரங் கத்திலே தலைவா
ஆவலாய் வந்தேன் அறிஞர்கள் முன்னால்
அருந்தமிழ்ப் பாக்களைப் படிக்கப்
பாவையாள் தமிழ்மேல் பற்றுள உம்மைப்
பணிந்துநான் தொடர்கிறேன் இங்கே!       3
  
(சொற்சுவையே சிறப்பு)

சொல்லுக சொல்லிற் பயனுடை யென்ற
வள்ளுவன் சொல்லை வழியாய்க் கொண்டால்
சொல்லின் திறத்தைத் சொல்லா தறியலாம்
சொல்லதன் சீர்மையைச் சொல்ல வந்தவன்
இனியவை கூறென்றான் இன்னா தவிரென்றான்
கனிஉள்ளங் கையாகக் காட்டாதோ சொல்வீர்
செவியில் நுழைவதைச் சித்தமேற் றால்தான்
கவிதையின் பொருளைக் கண்டு சொல்லலாம்
சொல்லைக் கொண்டுதான் சொல்தரும் பொருளை
நல்ல விதமாய் நாமும் உணரலாம்
இவ்விதம் சொல்லே எதிலும் முன்னிற்க
எவ்விதம் பொருளை ஏற்றம் எனலாம்
மாற்றுத் கருத்தினர் வந்துளார்
சாற்றுங்கள் அவர்க்குத் தரமிங்குச் சொல்லென்றே!
வள்ளுவன் தன்னை வகையாய் மறந்தாலும்
சொல்வலன் கம்பனைத் துணையாய்க் கொளலாம்
அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்
இன்ன வகையில் இன்பக் காதலை
நன்றாய் உரைத்த நயமிகு பாடலை
நன்றாய் நோக்கினால் நமக்கெலாம் விளங்கும்
சொல்லே கூட்டுமாம் சுவையைப் பொருளது
அல்லவென் றிந்த அவனிக்குக் காட்டுமே                 4

(வேறு)
எவரும் அறிந்த ஒருகதைதான்
இனிய சொற்கொண்டு அமைந்ததனால்
உவப்பும் இங்குப் பெரிதன்றோ
உலகில் கம்பன் தருங்காதை
புவிக்குத் தெரிந்த ஒருகதையைப்
புதிதாய்ச் சொற்கட் டமைத்ததனால்
எவரும் படித்து மகிழ்கின்றார்
இந்தச் சிறப்புக் காவியத்தை                        5

எந்தக் கவிதை கண்டாலும்
இயம்பும் பொருளோ சிலவகையே
சிந்தை வளத்தைப் பெருக்கவொன்று
தீமை தன்னை ஒறுக்கவொன்று
பந்தம் பாசம் உரைக்கவொன்று
பாங்காய் அரசை அமைக்கவொன்று
பந்தம் பாசம் விடவொன்று
பக்தி ரசத்தைப் பிழியுமொன்றே                 6

பொருளைச் செறிவாய் உணர்த்துதற்குப்
புதிதாய்ச் சொற்கள் தமைக்கண்டால்
அருமை என்றே மகிழோமோ
அதிலே நாட்டம் காணோமோ
கருவை எப்படி வைத்தாலும்
கட்டும் சொல்லில் சுவையிலையேல்
பெரிய ஏரி யுள்நீரை
பிடித்து வைக்கா நிலையன்றோ                 7

சுவரிலை யென்றால் ஆங்குத்
தூரிகை ஓவி யத்தைக்
கவினுற வரையும் ஆற்றல்
கடுகள வேனும் உண்டோ
சுவைபடப் பொருளைச் சாற்றும்
சொற்சுவை யில்லாப் போதில்
அவனியில் அந்தப் பாட்டை
அனுபவிப் பாரும் உண்டோ                          8

மகிழ்ச்சியைக் கருவாய்க் கொண்டால்
வரும்சொலால் மகிழ்ச்சி வேண்டும்
இகழ்ச்சியைக் கருவாய்க் கொண்டால்
இகழ்வது போல்சொல் வேண்டும்
முகிழ்கிற சொல்லே ஆங்கு
முனைகிற பொருளைத் தந்து
பகிர்கிற எல்லோ ருக்கும்
பயன்தரு மாறு வேண்டும்                              9

(வேறு)
சிலையானவர் உயிரோடெதிர்
வருமாயொரு கவியே
    செயலாமிக வெளிதாயொரு
செறிவானசொ லுறுமால்!
கொலைவாளினை எடடாமிகு
கொடியோர்செய லறவே
    குகைவாழொரு புலியேஉயர்
குணமேவிய தமிழா
கலைமேவிய கவிபாரதி
யவர்தாசனி னுரையே
    கணமேயிது விழிமூடிய
நிலையேசெவி புகுமால்
அலைமோதிடு கடல்போலுள
முணர்வேயது பெறுமே
    அறியாமையு மதுவோடிடு(ம்)
அறமேயுள முறுமே                                       10

(முடிவுரை)

பதமென்றால் சொல்லென்று
பொருளாகும் அறிவீரே
    பதமென்றால் பக்குவத்தின்
மறுசொல்லும் ஆகுமன்றோ
அதனால்தான் அவையோரே
சொல்கின்றேன் என்கருத்தை
    அழகுள்ள கவியொன்றை
யாரெழுத முயன்றாலும்
இதமாகச் சொற்சுவையே
வந்துதவும் என்கின்றேன்
    இயம்புகின்ற பொருளதுவும்
சொல்லாலே மேன்மையுறும்
இதையிங்கே யானுரைக்க
இனியதொரு வாய்ப்பீந்த
    எல்லோர்க்கும் என்நன்றி
மீண்டுமொரு முறைவருவேன்!                   11

No comments:

Post a Comment