'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

பெண்களை மதிப்போம் - பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


விருத்தமாலை

வனப்பினில் மயங்கி நின்று
   வன்மைகள் செய்யு முலகில்
மனத்தினி லுறுதி கொண்டு
   மங்கையர் நலமாய் வாழ
அனைவரும் உதவ வேண்டும்
   அநீதிகள் குறைந்து போகும்
தனிமையில் வீதியில் செல்லத்
   தயக்கமும் விலகும் வாழ்வில்                     1

வாழ்வினில் துன்பம் நீங்க
   வகையாக உதவு நன்று
தாழ்வினில் சோர்ந்து செல்லத்
   தாங்கியும் வலிகள் நீக்கிச்
சூழ்ச்சிகள் செய்வோர் முன்னே
   துணிவுடன் நின்று தாக்கி
வீழ்ச்சிகள் யடைய முன்னர்
   மீளவே அகற்று கறையை                           2

கறைகளை நீக்கிப் பெண்ணின்
   கவலைகள் முற்றாய்த் தீர்ப்பாய்
குறைகளைச் சுட்டிக் காட்டிக்
   குற்றமும் தணிக்க வேண்டும்
அறிவினால் உயர்த்திப் பேச
   அனைத்தையும் கேட்பாள் நன்றே
பிறருடன் பேசும் போதும்
   பெண்மையின் உயர்வைக் காண்              3

காண்பதைக் கூற முன்னே
   கனிவினை மெல்லக் காட்டு
சீண்டலைச் செய்து பெண்ணைச்
   சீரழித் தேங்க வைப்பர்
தீண்டிட நெருங்க முன்னர்
   தீயவர் நட்பைத் தள்ளி
ஆன்றோர் மொழிந்த சொல்லைக்
   அகத்தினில் கொள்வ தறிவு                        4


அறிவினில் சிறந்த பெண்ணை
   அகிலமும் போற்ற வைக்க
நிறைகளை எடுத்துக் கூறி
   நெஞ்சினில் வீர மூட்டி
நெறிகளை நன்றே சொல்வாய்
   நிறைவினை மனத்தில் நல்கித்
திறன்களை வளர்க்க உதவித்
   தீயவை மெல்ல அகவு                                  5

அகவுமால் இருந்தால் ஏதும்
   ஆங்கவை எல்லாம் தீர்ப்பாய்
அகவையை எடுத்துச் சொல்லி
   அனைத்தையும் தெளிய வைப்பாய்
நிகழுமோர் காட்சி கொண்டே
   நிறைவினைக் காணச் செய்வாய்
இகழ்வதை தவிர்த்து என்றும்
   இனிதாகக் கூறு மேன்மை                           6

மேன்மைகள் கூறி நன்று
   மெல்லென வழிகள் சொல்வாய்
சான்றுகள் பலவும் காட்டித்
   தனிவழி தையல் சென்றால்
மான்றிட வேண்டாம் என்றே
   மாதைக் காக்க நிற்பாய்
தோன்றுபல் இடர்கள் நீக்கித்
   துயரினை வைப்பாய் மறக்க                     7

மறப்பது நல்ல தென்று
   மனத்தினில் தெளிவைக் காட்டு
அறிவினைக் கொடுத்து நல்ல
   அன்பினில் மகிழ வைப்பாய்
அறத்தினை எண்ணி நாளும்
   அணங்கினை வாழ வைக்க
உறுதிகள் பலவும் நல்கி
   உயிரென அன்பாய்ப் பழகு                         8

பழகிடும் நண்ப ரெல்லாம்
   பண்பினில் மிளிரச் செய்தால்
அழகுற அறிவும் கூடும்
   அன்பினில் நனைவாய் நன்றே
விலகிச் செல்லும் பெண்ணை
   விரட்டித் துன்பம் செய்து
வலிகளைச் சுமக்க வேண்டா
   மகிழ்வினைக் கொடுப்பாய் வாழ்வில்      9

வாழ்வினில் உயர வைப்போம்
   வசந்தமும் வீசச் செய்வோம்
சூழ்ச்சிகள் செய்யும் போதே
   சூழவே நின்று தடுத்துத்
தாழ்வினில் கைகள் கொடுப்போம்
   தர்மதைப் போற்ற வைப்போம்
வாழ்வியல் கூறும் வழிகள்
   வருமிடர் நீக்கு மன்றோ                               10

No comments:

Post a Comment