அறுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
1. கவிஞர் மொகைதீன் ஹாசன்
பனியின் குளுமை பாடுகிறார்
பசுமை தேடி யோடுகிறார்
குனிந்து வாழாக் குணத்தவரே
கொடுமை கண்டு கொதிப்பவரே
கனிவும் பணிவும் கொண்டவரே
காதற் கவிதை புனைபவரே
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
இனிய கவிஞர் வாழியவே
2. கவிஞர் நெடுவை ரவீந்திரன்
மணிபோல்அணியை வள்ளிமுத்து
மரபில் கோத்து மாட்டிடுவார்!
கனிபோல் சுவையைக் கவிதைகளின்
கருவில் ஏற்றிக் காட்டிடுவார்!
நனிதாய்ச் சீரைப் பாப்புகுத்தி
நகில்பால் போல ஊட்டிடுவார்!
இனிக்க வினிக்க பாவியற்றும்
இனிய கவிஞர் வாழியவே!
3. கவிஞர் ச. பாலாஜி
பனித்த சடைய னிளையமகன்
பருகிக் களித்த தனிமொழியாங்
கனித்துக் கிடக்குஞ் சோலையெனக்
கமழு மரிய பாங்குடனே
தனித்துச் சிறக்குஞ் செம்மொழியாந்
தமிழை விரும்பி ஆவலுடன்
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
இனிய கவிஞர் வாழியவே.
4. பைந்தமிழ்ச் சுடர்
பாலசுப்ரமணியன் நடராஜன்
நினைப்பு முழுக்க யாப்பெனுமோர்
நெருப்பு நிறையத் தீந்தமிழின்
வனப்பு மிகுந்த பாவகைகள்
மகிழ்ச்சி யளிக்கும் மாமழையாய்
எனக்குள் சுரக்கும் ஈர்ப்பிதனை
யியம்பி வியந்து வாழ்த்துகிறேன்
இனிக்க வினிக்க பாவியற்றும்
இனிய கவிஞர் வாழியவே!
5.
கவிஞர் பொன் இனியன்
நுனித்த புன்மே யாமற்றன்
நுழைபு லனதுங்
கொண்டினிது
நனித்த மரபெ லாஞ்சுட்டி
நன்கு பயிற்றும்
சோலையுற்றான்
கனித்த வாறாக் கற்றியையக்
கவியெ ழுதுகின்
றாரங்கே
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
இனிய கவிஞர் வாழியவே
6.
கவிஞர் சுரேசு
கனிக்கூட் டம்போற் கவிதைகளைக்
கற்கக் கற்கக் களிப்பாக்கும்
பனிக்கு ளுறையும் பழத்தோட்டம்
பாரி லவற்றுக் கிணையாகும்
தனிக்கல் லூரி தனைப்போன்ற
தண்ட மிழ்ப்பைஞ் சோலையிலே
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
இனிய கவிஞர் வாழியவே
No comments:
Post a Comment