'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

நடுப்பக்க நயம்


மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

இனவுணர்வு கொள்

உயிர்களை ஆறாகப் பகுத்துக் காட்டியதுடன், அவை இன்னின்ன என்று தொகுத்தும் காட்டி, மரம், செடி, கொடிகளுக்கும் உயிருண்டு; அவற்றிற்கும் உணர்வுண்டு என்றும் கூறியவர் நம் தாத்தா தொல்காப்பியர். (19ஆம் நூற்றாண்டில் ஜெகதீஸ் சந்திரபோஸ் என்னும் இந்தியர் (தமிழரல்லர்) செடிகளுக்கு உயிருண்டு என்பதைக் கருவி மூலம் நிறுவி "சர்" பெற்றார்.)

உயிர்களை உற்றுநோக்கி வாழ்வியலை வகுத்த நம் முன்னோர் அவற்றின் செயல்பாடுகளிலிருந்து தம் வாழ்வியலையும் முன்னேற்றிக் கொண்டனர்.

மீன்களைக் கண்டு நீந்தக் கற்றவன், குதிரையைக் கண்டு தேரைக் கண்டவன் வாழ்வில் கற்ற பாடங்கள் அதிகம்.

வாழ்வியல் மட்டுமா? எத்தனை கண்டுபிடிப்புகள்?

பறவையின் இயக்கத்தைப் பார்த்தவன் வானூர்தியைக் கண்டான்.

கால்நடைகள் சேற்றில் நடந்த அடிச்சுட்டைப் பார்த்து "அச்சு இயந்திரத்தைக்" கண்டான்.

பறவையும், விலங்கும் தங்களுடன் பரிமாறிக் கொண்டதைப் பார்த்தவன் "அலைபேசி, வானொலி, தொலைக்காட்சி" என்று ஆயிர மாயிரமாய்க் கண்டுபிடித்தான். இன்று அறிவியலின் உச்சத்தில் நாம் உலவிக் கொண்டிருக்கிறோம்.

சிந்திக்கத் தெரிந்ததால் ஆறாவது அறிவு பெற்றவனான மாந்தன் முற்றிலுமாகக் கற்றானா? இல்லையென்கிறார் பேராசான்.

புழுக்கள் தின்னும் இலைகள்தான் இரசாயனம் அற்றவை என்பதைப் புரிந்துகொண்டானா? இல்லையே. இரசாயனம் தெளித்த இலைகளைப் புழுக்கள் உண்பதில்லை. புழுக்கள் கொறித்த இலைகளை நாம் ஒதுக்கிவிடுகிறோம்.

என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் வயிறு சரியில்லையென்றால் நாய்கள் உண்பதில்லை. இதைக் கற்றானா மனிதன்? இல்லையேகிடைத்தவற்றை அள்ளிப்போட்டு வயிற்றைக் கொல்லும் செயலைத் தானே செய்கிறான்?

இந்த உலகத்திலேயே முதல் கட்டடப் பொறியாளர் காக்கைதான் என்பதை அறிந்த மனிதன், அவற்றின் இனக்காப்புணர்வை ஏனோ கவனித்துத் தொடர மறந்துவிட்டான்.

காக்கை கரைந்துண்ணும்போது பாருங்கள். நல்ல உணவை உண்ணும்போது அவை தன் இனத்தை அழைத்துண்ணும். ஆனால், செத்த எலி போன்ற இரையை உண்ணும்போது அழைத்துண்பதில்லை. தனக்குக் கேடுற்றாலும் தன் இனத்தார் நலமாயிருக்கட்டும் என்ற இனவுணர்வு.

இந்த அரிய செயலைக் கண்டுணர்ந்த ஐயன் திருவள்ளுவர் அழகாக அதைத் தன் பனுவலில் சுட்டுகிறார்.

"காக்கை தானுண்ணும் இரையை மறைத்து வைக்காமல், தன் இனத்தையும் அழைத்துண்ணும்" என்று சொன்னவர். “ஆக்கமும் அந்தப் பண்புடையவர்க்கே வாய்க்கும்” - என்றோர் உம்மையைக் கூறித் தொக்கவைக்கிறார்.

ஆம்ஆக்கமானபோது இனத்தை அழைத்து உண்ணும் காக்கை, கேடுறும் உணவென்னும்போது தன் இனத்தை அழைப்பதில்லை. அதுபோல, தன் சுற்றத்தார்க்கு நன்மை தருமெனின் அரவணைத்தும், கேடுறுமெனில் அவர்களை விலக்கி அக்கேட்டைக் களைய வேண்டும் என்ற பேருண்மையைக் காக்கையை வைத்து நமக்குக் கூறுகிறார்.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள.
(குறள்.527 சுற்றந்தழால்)

சரி... இது உன்னுடைய கருத்தாகாதோ? என்று நீங்கள் ஐயுறலாம். சான்றேதேனும் உளதா? என்றென்னை வினவவும் கூடும்.

இல்லாமலா? திருமந்திரத்தில் இருக்கிறது... இதற்கு விளக்கம்.

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே (திருமந். 250)

காக்கை தன் இனத்தை அழைத்துண்ணும் "காலத்தை" அறிிந்து கொள்ளுங்கள் என்கிற திருமூலரின், காலம் என்ற சொல் எப்போது இனத்தை அழைத்துண்ணும்? அழையாம லுண்ணும் என்ற மறைகுறிப்பைக் காட்டும்.

காக்கை தன் இனத்தை அழைத்துண்பதுபோல் நீங்களும் பிறருக்குப் பகிர்ந்து உண்ணுங்கள் என்று பொருளாகாதா? என நீங்கள் கேட்கலாம்..

ஆயின், காலம் என்னும் சொல்லுக்குப்பதில் பண்பை என்ற சொல்லை அவர் ஆண்டிருந்தால் அந்தப் பொருள் மிக எளிதாக வருமே. ஆனால், "காலம்" என்னும் சொல்லாலும், ஐயனின் "உம்மை"யாலும் நமக்குக் கிடைக்கும் செய்தி இதுதான்...

உனக்குக் கேடுவந்துற்றாலும் உன் இனத்தைக் காக்க வேண்டும்! ஆனால் இன்றைய தமிழினம்...?

சுறவம்பாவை



சுறவம்பாவை - தமிழினப் பண்பாட்டு மீட்புப் பனுவல் ஆகும்.

அறிவியலுக்கொவ்வாத சித்திரை 1  (ஏப்ரல் மாதம்... கடுங்கோடைக் காலம்) தமிழ்ப் புத்தாண்டென்று நுழைக்கப்பெற்று அதை இன்றளவும் ஏற்றுக் கொண்டாடும் தமிழர்காள்!

ஆடியில் விதைத்துச் சுறவத்தில் (தைத்திங்கள் என்னும் சனவரியாம்... வாழ்வின் மலர்ச்சிக் காலம்) அறுத்து இந்த உலகத்திற்கே சோறிடும் நம் பண்டைய முன்னோர் கண்டறிந்த வானியற் கூற்றின்படி, சுறவம் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாம்…!

இக்கருத்தை வலியுறுத்தும் முகத்தான், திருப்பாவை, திருவெம்பாவை வரிசையில் எந்தமிழர் இனமோங்க, எந்தமிழின் புகழோங்க, நம் புத்தாண்டான சுறவம் திங்களைப் பாவையாக முன்னிறுத்தித், தமிழ்கூறு நல்லுலகில் முதன்முதலாக, மரபுமாமணி பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன் அவர்களால் இயற்றப்பட்ட   சுறவம்பாவை பனுவலைச் சுவைத்து மகிழலாம். இக்கருத்தியல் எம் பெருமையை மீட்டெடுக்கக் கூடிய போர்வாள்.

அமேசான் கிண்டிலில் வெளியிடப்பட்டுள்ளது இப்பனுவல். தரவிறக்கிப் படியுங்கள்.

கவிஞர், தமிழர் என்றெல்லாம் திரிந்து கொண்டிருக்கும் இனவுணர்வாளர்களே! தமிழ் உணர்வைக் காட்டித் திரியும் தமிழுள்ளங்களே! வெறும் பட்டத்திற்கும் சான்றிதழுக்கும் மட்டுமே உங்களை அடகு வைத்துவிடாதீர்.

இலவச அமேசான் கிண்டிலில் இலவசமாகவும் படிக்கலாம். தவறாமல் அமேசானில் உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.

சோலைக் கவியரங்கம் - 10


தலைப்பு : ஏருக்குச் சீர் செய்வோம்

 தலைமை : பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்

பங்கேற்போர்:

1. பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்
2. கவிமாமணி சேலம்பாலன்
3. பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்
4. பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்
5. கவிஞர் நெடுவை இரவீந்திரன்
6. கவிஞர் மதுரா
7. புலவர் இரா. மாது
8. கவிஞர் சோமு. சக்தி
9. கவிஞர் இரா.அழகர்சாமி.
10. கவிஞர் ஷேக் அப்துல்லாஹ் அ
11. கவிஞர் பி. எம். நாகராஜன்
12. கவிஞர் கல்யாணசுந்தரராஜன்
13. கவிஞர் சதீஷ் காளிதாஸ்
14. கவிஞர்  வே. அரவிந்தன்

தொடக்கக் கவிதை

பைந்தமிழ்ச் செம்மல்
சியாமளா ராஜசேகர்

தமிழ் வாழ்த்து

முன்னவள் சுவையில் இனியவள் கன்னல்
      மொழியவள் இளமை யானவள் !
தன்னிக ரின்றித் தனித்துவ மாகத்
      தரணியை ஆளும் தன்மையள் !
நன்னய மிக்க இலக்கண வளமும்
      நல்லிலக் கியங்கள் கொண்டவள் !
தென்னவன் மன்றில் வளர்ந்தவள் புவியில்
      செம்மொழி யாகச் சிறந்தவள் !!

இயலுடன் இசையும் நாடக மென்றே
      இயல்பினில் மூன்றா யானவள் !
உயிரொடு மெய்யும் உயிர்மெயு மாகி
      ஓரெழுத் தாய்த மானவள் !
துயருறும் போது சுகம்பெறத் தமிழே
      துடைத்திடும் கையாய் நீள்பவள் !
தயவுடன் விரும்பும் அன்னியர் தமக்கும்
      தமிழமிழ் தம்போல் சுவைப்பவள் !!

கல்லையும் கனியச் செய்பவள் தம்மைக்
      கற்பவ ருள்ளம் நிறைபவள் !
வெல்லமாய் நாவில் இனிப்பவள் என்றும்
      வெற்றிகள் ஈட்டித் தருபவள் !
நல்லறம் காட்டி மிளிர்பவள் வாழ்வில்
      நைந்திடா வண்ணம் காப்பவள் !
வல்லவள் ழகரச் சிறப்பவள் எங்கும்
      மணப்பவள் வாழி வாழியே !!

சோர்வினை யகற்றும் அன்னையாய் நித்தம்
      சோலையில் வளைய வருபவள் !
நேர்வழி காட்டிக் கவியரங் கத்தை
      நிறைவொடு நடத்தித் தருபவள் !
ஏரினைப் போற்ற வந்தவர்க் கெல்லாம்
      ஏற்றநற் றுணையாய் இருப்பவள் !
சீர்மிகும் பாட்டில் நெஞ்சம கிழ்ந்து
      செந்தமி ழன்னாய் வாழியே !!

அவை வாழ்த்து

நல்லதமிழ்ப் பாமணக்கும் மரபின் சோலை
      நன்னாளில் கவியரங்கம் காணும் சோலை
வல்லவராம் மாவரதன் வழிந டத்த
      வண்டமிழின்  மாண்புகளைப் பேணும் சோலை
பல்வகையில் பிழைகளின்றிப் பாவி யற்றப்
      பயிற்றுவிக்கும் பாவலரின் பாசச் சோலை
வில்லினின்றும் புறப்பட்ட பாணம் போலும்
     மின்னலெனக் கவியம்பு பாயுஞ் சோலை

முத்தமிழாள் முப்போதும் உலவுஞ் சோலை
      முகநூலில்  இளமையுடன் திகழுஞ் சோலை
வித்தகராம் வரதனாரின் பணியை  மெச்சி
      விழிவிரியப் பல்லோரும் வியக்கும் சோலை
சொத்தாக மரபினையே கருதும் சோலை
      சொந்தமெனக் கவிஞர்களை அணைக்கும் சோலை
சத்தான பைந்தமிழின் சோலை தன்னைத்
       தமிழன்பால் தலைதாழ்த்தி  வணங்கு வேனே!

தொடக்கம் !

வாருங்கள் கவிக்குயில்காள் என்றே அன்பாய்
   மனங்கனிந்து நானழைக்க மகிழ்ந்தே வாரீர்
ஏருக்குச் சீர்செய்ய வேண்டு மாயின்
   என்னவெலாம் செய்யவேண்டு மென்றுசொல்வீர்
காருண்ட மேகத்தின் பொழிவைப் போலும்
   கவினழகு சொற்றொடுத்து மழையாய்ப்பெய்வீர்
பாருக்குள் நற்றொழிலாம் உழவைப் போற்றிப்
   பாட்டொன்று குரல்வடிவில் தாரீர்! தாரீர்!!

ஏழிரண்டு கவிஞர்கள் ஒன்றாய்க் கூடி
      ஏருக்குச் சீர்செய்வோம் என்றே நாடி 
வாழுவகை கற்பிக்க வந்தார் ஓடி 
       வளமான பைந்தமிழின் சோலை தேடி !
ஆழியலை யாய்ப்பொங்கிக் கவிய ரங்கில்
     ஆனந்த மாய்நனைய வைப்பார் பாடி !!
வேழமெனச் செவியசைத்துக் கவிதை கேட்க
     விழைவோர்க்கு முதலிலென்றன் நன்றி கோடி !!

தரணியெங்கும் வாழ்கின்ற தமிழ ரெல்லாம்
      தைத்திருநாள் கவியரங்கைச் சுவைத்திடுங்கள்
பரந்தவுளத் தோடேயெம் பக்கம் வந்து
       பைந்தமிழின் கனிச்சாறைப் பருகிடுங்கள்!
குரல்பதிவு முண்டிங்கே செவியைத் தீட்டிக்
      கொஞ்சுதமிழ் கேட்பதற்குக் காத்திருங்கள்!
கரந்தட்டிக் கவிபாடும் கவிஞர் கட்குக்
     கனிவோடு வாழ்த்துகளைப் பகிர்ந்திடுங்கள்!!
★★★

சோலைக் கவியரங்கம் - 10


1.     பைந்தமிழ்ச்செம்மல்
மன்னை வெங்கடேசன்


கவிஞர் அழைப்பு

பட்டங்கள் பற்பல பெற்றவராம்  - இவர்
      பைந்தமிழ்ச் சோலையில்  கற்றவராம்!
நுட்பத்து டன்கவி நெய்பவராம் - நல்ல
       நூல்களைத் தேடிப் படிப்வராம் !

நாடியே நன்மைகள் செய்பவராம் - இவர்
      நற்றமிழ்த் தாயைத் துதிப்பவராம் !
கூடிய அன்பர்கள் கூட்டத்திலே - கவிக்
      கொட்டிடவே இங்குக் கூப்பிடுவேன் !!

வியன்கவி தரவே வெங்கடேசன் வருக!!

தமிழ் வாழ்த்து

எங்கள் தமிழே இனியாளே
     என்றும் எங்கள் வழியாளே!
சங்கம் கண்ட மூத்தோளே
    தரணி வந்த முதலாளே!
தங்க மென்ன வெள்ளியென்ன
தமிழுன் ஒலிக்கு நிகராமோ
      இங்கிச் சபையில் உனைவணங்கி
      இனிதே கவிதை பாடுகிறேன் !!

தலைமை , அவை வாழ்த்து

தேனா யினிக்கும் பாவெல்லாம்
     தெளிவா யாக்கும் சியாமளாம்மா !
ஆனா ரரங்கின் தலைமையென
    அன்னார் அவர்க்கென் தலைவணக்கம் !
தேனைச் சுவைக்கும் சிறுவண்டாய்த்
      திரண்ட புலவர் அவைமுன்னால்
யானும் கவிதை வழங்கவந்தேன்
      அனைவ ருக்கும் என்வணக்கம் !!

ஏருக்குச் சீர் செய்வோம் !!

செல்வத் தின்பின் செல்வோரும்
      சிறிதே கொஞ்சம் சோறிலையேல்
பல்வா றாகத் துயருறுவார்
      பணத்தால் ஏதும் பயனின்றி
அல்லும் பகலும் உழவோரால்
      ஆழ உழப்பட் டெந்நிலமும்
நெல்வ ளத்தைப் பெறுவதற்கு
      நீண்ட ஏரின் துணைவேண்டும்

வேண்டும் வரைக்கும் உதவிபெற்று
      விலகி நிற்கும் உலகோரே
யாண்டும் உந்தம் பசிநீக்கும்
      அழகுச் செந்நெல் வளர்வதற்கு
நீண்ட ஏரே மண்ணோடி
      நிலத்தை வளமாய் ஆக்குவதால்
வேண்டு மட்டும் சீர்செய்வீர்
      விந்தை செய்யும் ஏரதனை!

ஏரென் னுஞ்சொல் தமிழினிலே
      இரண்டு பொருளில் வருமன்றோ
நீரைப் பாய்ச்சும் முன்னாலே
      நிலத்தை உழுமோர் கருவியொன்று
சீராய்ச் சிறப்பாய் உளவொன்றைத்
      தெளிவாய்ப் புகழும் சொல்லொன்றாம்
ஏரின் சீரை இதனின்றும்
      இனிதாய் உரைக்க ஏலாதே

உரைப்ப தற்கும் ஏலாதே
      உழவன் கைக்கொள் ஏர்ப்பெருமை
தரையில் உள்ளோர் பசிதன்னைத்
      தணிக்கும் ஏரின் பெருமையதை
உரத்துச் சொல்லிக் கவிசெய்ய
      உவந்தே என்னை இங்கழைத்த
தரத்தில் பெரிய சோலையர்க்குத்
      தந்தேன் நன்றி பலபலவே!

வாழ்த்துப்பா !!

கவிதை மூலம் ஏருக்குக்
      கணக்காய்க் கருத்தாய்ச் சீர்செய்தீர்!
செவிக்கு விருந்தாய்க் குரல்பதிவால்
     சிந்தை குளிர வைத்துவிட்டீர்!
உவந்தே ஏரின் பெருமைதனை
    உரத்துச் சொல்லிச் சிறப்பித்தீர்!
அவையி லுமக்கு நன்றியுடன்
    அன்பாய் வாழ்த்தைச்  சொல்வேனே!

★★★