'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

நடுப்பக்க நயம்


மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

இனவுணர்வு கொள்

உயிர்களை ஆறாகப் பகுத்துக் காட்டியதுடன், அவை இன்னின்ன என்று தொகுத்தும் காட்டி, மரம், செடி, கொடிகளுக்கும் உயிருண்டு; அவற்றிற்கும் உணர்வுண்டு என்றும் கூறியவர் நம் தாத்தா தொல்காப்பியர். (19ஆம் நூற்றாண்டில் ஜெகதீஸ் சந்திரபோஸ் என்னும் இந்தியர் (தமிழரல்லர்) செடிகளுக்கு உயிருண்டு என்பதைக் கருவி மூலம் நிறுவி "சர்" பெற்றார்.)

உயிர்களை உற்றுநோக்கி வாழ்வியலை வகுத்த நம் முன்னோர் அவற்றின் செயல்பாடுகளிலிருந்து தம் வாழ்வியலையும் முன்னேற்றிக் கொண்டனர்.

மீன்களைக் கண்டு நீந்தக் கற்றவன், குதிரையைக் கண்டு தேரைக் கண்டவன் வாழ்வில் கற்ற பாடங்கள் அதிகம்.

வாழ்வியல் மட்டுமா? எத்தனை கண்டுபிடிப்புகள்?

பறவையின் இயக்கத்தைப் பார்த்தவன் வானூர்தியைக் கண்டான்.

கால்நடைகள் சேற்றில் நடந்த அடிச்சுட்டைப் பார்த்து "அச்சு இயந்திரத்தைக்" கண்டான்.

பறவையும், விலங்கும் தங்களுடன் பரிமாறிக் கொண்டதைப் பார்த்தவன் "அலைபேசி, வானொலி, தொலைக்காட்சி" என்று ஆயிர மாயிரமாய்க் கண்டுபிடித்தான். இன்று அறிவியலின் உச்சத்தில் நாம் உலவிக் கொண்டிருக்கிறோம்.

சிந்திக்கத் தெரிந்ததால் ஆறாவது அறிவு பெற்றவனான மாந்தன் முற்றிலுமாகக் கற்றானா? இல்லையென்கிறார் பேராசான்.

புழுக்கள் தின்னும் இலைகள்தான் இரசாயனம் அற்றவை என்பதைப் புரிந்துகொண்டானா? இல்லையே. இரசாயனம் தெளித்த இலைகளைப் புழுக்கள் உண்பதில்லை. புழுக்கள் கொறித்த இலைகளை நாம் ஒதுக்கிவிடுகிறோம்.

என்னதான் பிடித்த உணவாக இருந்தாலும் வயிறு சரியில்லையென்றால் நாய்கள் உண்பதில்லை. இதைக் கற்றானா மனிதன்? இல்லையேகிடைத்தவற்றை அள்ளிப்போட்டு வயிற்றைக் கொல்லும் செயலைத் தானே செய்கிறான்?

இந்த உலகத்திலேயே முதல் கட்டடப் பொறியாளர் காக்கைதான் என்பதை அறிந்த மனிதன், அவற்றின் இனக்காப்புணர்வை ஏனோ கவனித்துத் தொடர மறந்துவிட்டான்.

காக்கை கரைந்துண்ணும்போது பாருங்கள். நல்ல உணவை உண்ணும்போது அவை தன் இனத்தை அழைத்துண்ணும். ஆனால், செத்த எலி போன்ற இரையை உண்ணும்போது அழைத்துண்பதில்லை. தனக்குக் கேடுற்றாலும் தன் இனத்தார் நலமாயிருக்கட்டும் என்ற இனவுணர்வு.

இந்த அரிய செயலைக் கண்டுணர்ந்த ஐயன் திருவள்ளுவர் அழகாக அதைத் தன் பனுவலில் சுட்டுகிறார்.

"காக்கை தானுண்ணும் இரையை மறைத்து வைக்காமல், தன் இனத்தையும் அழைத்துண்ணும்" என்று சொன்னவர். “ஆக்கமும் அந்தப் பண்புடையவர்க்கே வாய்க்கும்” - என்றோர் உம்மையைக் கூறித் தொக்கவைக்கிறார்.

ஆம்ஆக்கமானபோது இனத்தை அழைத்து உண்ணும் காக்கை, கேடுறும் உணவென்னும்போது தன் இனத்தை அழைப்பதில்லை. அதுபோல, தன் சுற்றத்தார்க்கு நன்மை தருமெனின் அரவணைத்தும், கேடுறுமெனில் அவர்களை விலக்கி அக்கேட்டைக் களைய வேண்டும் என்ற பேருண்மையைக் காக்கையை வைத்து நமக்குக் கூறுகிறார்.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே யுள.
(குறள்.527 சுற்றந்தழால்)

சரி... இது உன்னுடைய கருத்தாகாதோ? என்று நீங்கள் ஐயுறலாம். சான்றேதேனும் உளதா? என்றென்னை வினவவும் கூடும்.

இல்லாமலா? திருமந்திரத்தில் இருக்கிறது... இதற்கு விளக்கம்.

ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்
பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்
வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்
காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே (திருமந். 250)

காக்கை தன் இனத்தை அழைத்துண்ணும் "காலத்தை" அறிிந்து கொள்ளுங்கள் என்கிற திருமூலரின், காலம் என்ற சொல் எப்போது இனத்தை அழைத்துண்ணும்? அழையாம லுண்ணும் என்ற மறைகுறிப்பைக் காட்டும்.

காக்கை தன் இனத்தை அழைத்துண்பதுபோல் நீங்களும் பிறருக்குப் பகிர்ந்து உண்ணுங்கள் என்று பொருளாகாதா? என நீங்கள் கேட்கலாம்..

ஆயின், காலம் என்னும் சொல்லுக்குப்பதில் பண்பை என்ற சொல்லை அவர் ஆண்டிருந்தால் அந்தப் பொருள் மிக எளிதாக வருமே. ஆனால், "காலம்" என்னும் சொல்லாலும், ஐயனின் "உம்மை"யாலும் நமக்குக் கிடைக்கும் செய்தி இதுதான்...

உனக்குக் கேடுவந்துற்றாலும் உன் இனத்தைக் காக்க வேண்டும்! ஆனால் இன்றைய தமிழினம்...?

No comments:

Post a Comment