6.
கவிஞர் மதுரா
கவிஞர் அழைப்பு
வாசிப்பை நேசிக்கும் பண்பு டையாள்
மரபினிலே பாட்டியற்றும்
மாண்பு டையாள் !
காசினியில் பைந்தமிழைக் கண்ணாய்ப் போற்றிக்
கவிமழையில் குளிர்விக்கும்
சிறப்பு டையாள்!
ஆசையுடன் ஏருக்குப் பெருமை சேர்க்க
அன்னவளை எண்சீரில் விருத்தம்
பாடி
மாசில்லாத் தேன்மொழியே வருக
வென்று
மனம்நிறைந்த வாழ்த்துடனே
அழைத்தேன் நானே!
மதுரா வருக ! மணக்கும் கவிதை தருக !
தமிழ் வாழ்த்து !
உயிரில் கலந்தென் உணர்வில் நிறைந்தே
உயர்வை யளித்திடும் உன்னதத் தாயே
தொழுவே னுனைநான் துணையா யிருந்து
பழுதிலாப் பாடலைத் தா.
தலைமை வாழ்த்து !
நாமணக்கும் நற்றமிழை நாளெல்லாம் பாடுகின்ற
பாமலருஞ் சோலை பணிந்தே வணங்குகிறேன்
தேமதுரச் சொல்லரசி தீந்தமிழின் பாவரசி
மாமன்றில் ஏற்பாய் மகிழ்ந்து.
ஏருக்குச் சீர் செய்வோம்
சேற்றினிலே நெற்கதிரும் செழிப்பாக நின்று
சீரோடு மகிழ்வோடும் சிறந்ததொரு
காலம்
நாற்றுநடக் களையெடுக்க நாளெல்லாம் போக
நடுவீட்டில் பத்தாயம் நிரம்புமொரு
காலம்
காற்றடிக்கும் நேரத்தில் கதிரடித்து வேலை
கணக்காக வாழ்ந்திங்குக்
களித்ததொரு காலம்
மாற்றாக வந்ததுவே மழையற்ற மேகம்
மண்ணெல்லாம் தரிசாகி மனம்வெதும்புங்
கோலம்.
ஆனைகட்டிப் போரடித்த அழகான நாளும்
அயல்நாட்டு மோகத்தால் அடிபட்டுப்
போகக்
கானலதை நம்பிநாமும் கழனிகளை விற்றுக்
கனவுலகில் வாழ்கின்றோம்
கடுமுழைப்பை விட்டு.
வானமதுப் பொய்த்துநிற்க வறண்டுவிட்ட பூமி
வயல்வெளிகள் குடியிருப்பாய்
வளமிழந்த காட்சி
கானழித்துப் பெருங்கேட்டைக் கவலையின்றிச் செய்தோம்
கண்ணியம முழவுதனைக் களையிழக்க
வைத்தோம்
ஈடில்லா உழவினைநா மெப்படித்தான் மறந்தோம்
இவ்வுலகில் உணவின்றி எங்ஙனம்நாம்
வாழ்வோம்
வாடிநிற்கு முழவர்வாழ் வைமீட்க வேண்டும்
வாய்ப்புகளை உருவாக்கி
வளமாக்க வேண்டும்
பீடுடைய விவசாயம் பேணியதைக் காப்போம்
பெய்கின்ற பெருமழையைச் சேமித்து
வைப்போம்
நாடெங்கும் நதியிணைத்து நல்லுலகம் காண்போம்
நஞ்சைபுஞ்சை வளங்கொழிக்க
நாளெல்லாம் நினைப்போம்.
ஊரெல்லாம் செழிப்பாக்க ஊருணியை அமைப்போம்.
உழவருக்கு முயர்வளிக்க உறுதுணையா
யிருப்போம்.
பாரெல்லாம் சிறந்தோங்க பயிர்த்தொழிலை வளர்ப்போம்
பங்கிட்டுப் பகிர்ந்துண்ணும்
பண்பதனை யேற்போம்.
நீருக்குக் கையேந்தும் நிலைமைதனைத் தவிர்த்து
நிறைவான திட்டத்தால் நீரதனைச்
சேர்ப்போம்.
ஏருக்குச் சீர்செய்து எழுச்சிதனை யடைவோம்
என்றென்றும் தமிழோடு மியற்கையதைக்
காப்போம்.
வாழ்த்து
ஈடில்லாப் பயிர்த்தொழிலை மறந்து விட்டால்
இனியுணவுக் கென்செயவென்
றுள்ளம் நொந்தாய் !
வாடிநிற்கும் ஏருழவர் வாழ்வை மீட்டு
வளமாக்க நல்வழிகள் சொல்லித்
தந்தாய்!
காடுகரை விளையவில்லை என்றால் பாரில்
காசிருந்தும் பயனில்லை
என்று ணர்ந்து
பாடியநின் கவிகேட்டால் பெருகு
மூக்கம்
பாவையுனை வாழ்த்திடவே சோலை
பூக்கும் !!
★★★
No comments:
Post a Comment