'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10



நிறைவு கவிதை !!

( சியாமளா ராஜசேகர் )

புத்தரிசி பொங்கலிட்ட பொன்னாளில் சோலையிலே
தித்திக்கும் கவியரங்கில்  சிறப்பாகப் படையலிட்டீர்!
எத்திக்கும் பாராட்ட இன்பத்தேன் பாய்ந்தாற்போல்
முத்தமிழாள் அகங்குளிர்ந்து முத்துநகை  புரிந்தாளே !!

வண்ணவண்ண பதங்கூட்டி வடிவாகப் பாதீட்டி
எண்ணத்தால் எழுத்துகளால் ஏருக்குச் சீர்செய்தீர் !
மண்ணுலகில் உழவின்றேல் வாழ்வில்லை என்றுணர்ந்து
கண்மணியாய்த் தான்கருதிக் காக்கின்ற வழிசொன்னீர் !

குருவருளுந் துணைநிற்கக் கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்து
விருத்தங்கள் வண்ணமென விதவிதமாய் விருந்தளித்தீர் !
அருந்தமிழுக் கணிசெய்த அனைவரையும் வணங்கியன்பாய்ப்
பெருமையுடன் வாழ்த்துவதில் பேருவகை  கொள்கின்றேன் !

கற்பித்த ஆசானும் களிப்பினிலே மிதக்கின்றார்
இற்றைக்குப் பாடாதோர் ஏமாந்தே தவிக்கின்றார்
சொற்றிறமை இருந்தென்ன சோலையிலே நழுவவிட்ட 
அற்புதநல் வாய்ப்பிதுபோல் அடுத்துவந்தால் விடவேண்டா!!


புதுமைகளைத் திறத்தோடு புகுத்துவதில் சோலைக்கு
முதலிடந்தான் எப்போதும் முழுவீச்சாய் முகநூலில்
மதுவுண்ட வண்டாக மனமளையத் திளைத்திருந்தோம்
கதையல்ல உண்மையெனக் கவிக்குயில்காள் நாமறிவோம் !!

அவரவர்தம் குரலினிலே அவரவர்தம் கவிகேட்டுச்
சுவைத்தவற்றை அசைபோட்டுச் சொக்கித்தான் போய்நின்றோம் !
அவைமணக்கச் செய்தவளின் அடிபணிந்து மலர்தூவிக்
கவியரங்கை நிறைவுசெய்வோம் கண்பனிக்கச் சோலையிலே !!

ஏருக்குச் சீர் செய்வோம் !!

உழவின்றேல் உணவில்லை என்றறிந்த பின்னும்
     உழவுக்கு முதலிடத்தைக் கொடுக்கத்தான் மறந்தோம் !
கழனிகளை ஆலைகட்குத் தாரைவார்த்து விட்டுக்
     கடுகளவும் கவலையின்றி வாய்மூடிக் கிடந்தோம் !
கழிவுகளால் ஆறுகளும் மாசுபட நோயால்
     கணக்கில்லா உயிர்ச்சேதம் கண்முன்னே கண்டோம் !
பொழிகின்ற மழைநீரைக் கடல்சேர விட்டுப்
    புலம்பித்தான் தீர்க்கின்றோம் நீரில்லை என்றே!!

மருதநிலம் பாலையாக விட்டுவிட லாமா
   வளம்நல்கும் பயிர்த்தொழிலை நலியவிட லாமா?
கருவேலங் காடுகளைப் பெருகவிட லாமா
   கதிர்களெல்லாம் நீரின்றிக் காயவிட லாமா?
புரியாமல்  மீத்தேனை எடுக்கவிட லாமா
    பொன்னான விளைநிலத்தைப் பொசுங்கவிட லாமா?
தெரிந்திருந்தும் நெகிழியினைப் பயன்படுத்த லாமா
    சீர்மிக்க நிலமகளை மலடாக்க லாமா ??

ஏரோட்டம் வயல்காண வான்கருணை  வேண்டும்
     ஏரிகுளம் நீர்நிலைகள் நிறைந்திருக்க வேண்டும்
நீரோடும் நதிகளெல்லாம் ஒன்றிணைய வேண்டும்
    நேர்மையுடன் நல்லரசும் துணைநிற்க வேண்டும்
தீராத கடன்சுமையால்  உழல்வோர்தம் பாட்டைத்
    தீர்த்திடவே இயன்றவரை  உதவிசெய வேண்டும்
வேரோடு நல்லுழவர் குறைகளைந்து விட்டால்
    விவசாயம் செழித்தோங்கி நாடுநலம் பெறுமே !!

அறிவியலால் தொழில்நுட்பம் வானெட்டி னாலும்
     அடுபசிக்குச் சோறின்‌றேல் எதையுண்டு வாழ்வோம் ?
உறவாக உரிமையுடன் உழுபவரைக் கருதி
      உயர்நிலையில் அவர்வாழச் செய்வதுநம் கடமை !
இறைதந்த கொடையான இயற்கையினைப் பேணி
     இறுமாப்பை விட்டொழித்துப் பல்லோரும் கூடிக்
கறையில்லா மனத்தோடு நலம்வாழ வாழ்த்தி
      களிப்புடனே ஏருக்குச் சீர்செய்வோம் நாமே !!
    
நன்றி ..!!

இச்சோலைக் கவிய ரங்கில்
     எளியேனைத் தலைமை யாக்கி
உச்சத்தி லேற்றி வைத்த
      ஒப்பில்லா வரத ருக்கும்
மெச்சுவண்ணம் ஏரைப் போற்றி
     மேன்மைசெய்த கவிஞர் கட்கும்
இச்சமயம் நன்றி யோடே
     இருகைகள் கூப்பு வேனே

★★★

No comments:

Post a Comment