'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

காதலால் காதல் செய்க


மணிமாறன் கதிரேசன்

பட்டயக் கணக்காளர்
(Chartered Accountant)
காதல்…

காதல் என்னும் வாழ்க்கை எவருக்கும் வராமல் இருந்ததில்லை. வராமல் இருந்தால் அவர்கள் மனிதனின் பிறவிக்கும் மேல்.

ஆம்…
காதல் இல்லாது வாழ்க்கையே இல்லை. அனைத்தையும் துறந்த முனிவர்கள்கூடத் துறவறத்தின் மீதுள்ள காதலால்தான் சாத்தியமே தவிர காதலில்லா வாழ்க்கை இல்லை. காதல் என்பது ஒரு ஆணுக்கும் ஒரு பெண்ணுக்கும் மட்டுமானதென்று இக்காதலைக் கட்டுப்படுத்திவிடாதீர்கள். காதல் ஒரு மிகப்பெரிய சக்தி, இந்த சக்தி நம் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்குக் காரணமாகவும் இருக்கலாம் அல்லது தோல்விக்கான காரணமாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட ஒரு காதலியின் கதையை ஆரம்பிக்கிறேன்.

என்னுடைய நான்காம் வயதில் எல்லோரையும்போல என்னையும் பள்ளியில் சேர்த்தார்கள். முதன்முதலாகக் கல்வி எனும் தோழி எனக்கு அறிமுகமான தருணம். எனக்கும் அவளுக்குமான நட்பு நகமும் சதையும் போல நன்றாகவே வளர்ந்தது. இருப்பினும் அந்த நட்பு தொடர்வதில் பல சிக்கல்கள். கல்வித் தோழிக்கு என்னைப் பிடிக்கவில்லை. என்னுடன் பழகுவதைத் தவிர்க்க ஆரம்பித்தாள். எனக்கும் அவளுக்குமான நட்பு நீடிக்கவில்லை. அதன் காரணமும் ஏனோ புரியவில்லை. என்னுடைய வாழ்க்கையில் கல்வியெனும் நட்புக்கு இடமில்லையென்றே தீர்மானம் ஆனது. நானும் ஐந்தாம் வகுப்புவரை எதிரியாக மாறிய கல்வியிடம் பலமுறை தோற்றாலும் இறுதியில் படிப்பை முடிக்கும் அளவுக்கு எதிர்த்தே போட்டியிட்டேன்.

என்னுடைய ஆறாம் வகுப்பில் எனக்குள் சில மாற்றங்கள். இதுவரை எதிரியாக நினைத்த கல்வி என்னும் தோழிமீது ஏனோ ஒருவித காதல். காதல் மோதலில் மலரும் என்று சொல்வார்களே, அதுபோல எனக்குள்ளும் எதிரியாகத் தெரிந்த கல்வித் தோழி பல மோதல்களுக்குப் பிறகு காதலியாகத் தெரிந்தாள். என்னுடைய காதலை வெளிப்படுத்த முயன்ற பல முயற்சிகளுக்குப் பின்னரும் ஏனோ அவள் ஏற்கவில்லை. அவளிடம் பலமுறை எடுத்துக் கூறியும் என் காதலை உதாசினப்படுத்தியவாறே இருந்தாள். நானும் அவளும் எல்லா நேரத்திலும் ஒன்றாக இருந்தாலும்கூடத் தாமரை இலையில் உள்ள நீர்போல எங்களது உறவும் ஒட்டியும் ஒட்டாமலே இருந்தது. என்னுடைய பத்தாம் வகுப்புவரை அவளுக்காகக் காத்திருந்து அவளை அடைய முடியாதெனத் தீர்மானித்த தருணம். எனக்கும் அவளுக்கும் உள்ள காதலென்ன,  நட்புக்கூடத் தொடராதென முடிவெடுத்தேன். ஆக எனக்கும் படிப்பு வரவில்லை. எனவே வெளிநாட்டிற்குச் சென்று பிழைப்பைத் தேட ஆயத்தமானேன். அதற்கான வேலைகளை வெகுவிரைவாகச் செய்துகொண்டிருந்தேன். கிட்டத்தட்ட இது ஒரு காதல் தோல்வியில் எடுக்கப்பட்ட உச்சக்கட்ட நடவடிக்கை. கண்டிப்பாகக் காதல் தோல்வியில்தான் முடியும். ஏனெனில் அது ஒருதலைக் காதலே. ஆக என்னுடைய முடிவும் சரியென நானே உறுதிகொண்ட தருணம்.

ஆனால், வாழ்க்கையில் மாற்றங்கள் கண்டன. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்களே அதைப்போல. என்னுடைய வாழ்க்கையிலும் அந்த மாற்றம். ஆம்… கல்வித்தோழியோ காதலியாக மாறிய தருணம். என்னுடைய பத்தாம்வகுப்பு பள்ளித் தேர்வில் அவளின் காதலை உணர்ந்தேன். தேர்வே ஆக முடியாத என்னைத் தேர்வாக்கி விட்டுச் சென்ற அவளின் காதலை உணர்ந்தேன். இருப்பினும் ஏனோ அவளின் காதலை ஏற்க மனமில்லாமல் வெளிநாட்டிற்குச் செல்லவே முற்பட்டேன். ஆனால் கடவுளால் அமைக்கப்பட்ட விதியை மாற்றவா முடியும். அவ்விதியின்படி குடும்ப உறுப்பினர்களின் கட்டளைப்படி என்னுடைய மேல்படிப்பைத் தொடர்ந்தேன். ஆனால் உண்மையில் எனக்கு அவளின் மீதான காதலில் நம்பிக்கையற்றே இருந்தேன். மாறாக அவளோ என்னிடம் காதல் மொழியைக் கொட்டித் தீர்த்தாள். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என் மனமோ அந்தக் காதல் அனுதாபக் காதலோ என வருந்தியது. இருப்பினும் அவளின் உண்மைக் காதலை அறிந்துகொள்ள மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம், பல வருடங்களாக வராத காதல் எப்படி இப்பொழுது மட்டும் சாத்தியம். என் மனம் பெரும் குழப்பத்திற்கிடையே இரண்டு வருடங்கள் கடந்து விட்டது. கல்விக் காதலியும் காதல் மழை பொழிந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. என்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் காதலியின் வெற்றி மதிப்பெண்ணில் தெரிந்தது. நானும் என்னுடைய படிப்பை மற்றவர்கள் போலவே கல்லுரி வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கலானேன்.

கல்லுரியில் சேர்ந்த தருணம் வயதும் வரம்பை அடைந்த தருணம், காதலை உணரும் வயதும் வந்தது. கல்விக் காதலியின் உண்மைக் காதலை உணர்ந்து அவளின் காதலை ஏற்ற தருணம். காதலியின் காதலுக்காக ஏங்கியிருந்த காதலுனுக்கு இதைவிட வேறென்ன மகிழ்ச்சி கிடைத்துவிடப் போகின்றது. கல்லுரி வயதில் தொடங்கிய காதலியினுடனான காதல் இன்றளவும் பல வருடங்கள் தாண்டிச் செம்மையுடனும், செழிப்புடனும் எவ்வித சண்டை சச்சரவுகளுமின்றி இருவருக்குமிடையே உள்ள காதலின் பந்தம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என் வாழ்நாள் இறுதிநாள் வரை அவளுடனான காதல் தொடரும்.

ஆம்…
கல்வியே என்னுடைய காதலி. கல்வி என்னும் காதலியைக் கைப்பிடிக்கக் காதலென்னும் ஆயுதத்தைப் பயன்படுத்திக் காதலால் காதலை வென்றேன்.

காதலால் காதலியைக் காதல் செய்க.

காதல் என்றும் உன்னைக் கைவிடாது; நீ அக்காதலை முழுவதுமாக நம்பும்வரை.

காதலால் காதல் செய்க.

2 comments: