இணுவையூர் வ.க.பரமநாதன்
டென்மார்க்கிலிருந்து
முதியோர் வாழ்வு
இந்நாட்டில் வாழும் ஒருவர் 65 அகவையடையும் போது தனக்கான ஓய்வூதியத்
தொகையினைப் பெற உரிமையுடையவராகிறார். அனைவருக்கும் அடிப்படை ஓய்வூதியத் தொகையானது ஒரே
மாதிரியாக விருக்கும். ஒவ்வொருவரும் தாம் மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட
தொகையினையும், அதே போல பணி வழங்குவோர் ஒரு குறிப்பிட்ட தொகையினையும் பணிபுரியும் காலத்தில்
வழங்குகின்றனர். இத்தொகையானது ஓய்வூதிய அகவையினை அடையும்போது முழுமையாகவோ அல்லது மாதாமாதக்
கொடுப்பனவாகவோ, ஓய்வூதியம் பெறுபவரின் வேண்டுகோளுக்கேற்ப வழங்கப்படும்.
ஓய்வூதிய அகவைக்கு முன் ஒருவர் வேலைசெய்யும் காலத்தில் நோய்வாய்ப்பட்டோ
அல்லது உடலூனமுற்றோ இருப்பாரானால் அவர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது.
மேலும் 65 அகவையில் ஓய்வூதியத்தினைப் பெறும் ஒருவர் 80 ஆயிரம் குறோனருக்கு
மேற்படாத சொத்துக்களைக் கொண்டிருக்குமிடத்து அவருக்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டாக வாடகை வீட்டிலிருப்பவராக இருந்தால் வாடகைப் பணத்திற்காகவும், வீட்டினை
வெப்பமூட்டுவதற்கான செலவிற்காகவும் குறிப்பிட்ட தொகை அரசால் வழங்கப்படும். இது மட்டுமில்லாமல்
ஆண்டு முடிவில் 16 ஆயிரம் குறோனர் மேலதிகமாகவும் வழங்கப்படுகின்றது.
இங்கு கட்டணமில்லா மருத்துவம் என்பதால் நோயுறும்போது போக்குவரத்து உட்பட
அனைத்தும் கட்டணமின்றிக் கிடைக்கின்றது. மருத்துவ மனையில் உணவு, மாற்று உடை அனைத்தும்
வழங்கப்படுகின்றதினையும் குறிப்பிடலாம்.
ஓய்வூதியம் பெறுவோர்கள் தனித்து அல்லது கணவன் மனைவியாக மட்டுமே வாழ்கின்றார்கள்.
இவர்கள் பிள்ளைகளுடன் வாழ்வதினை விரும்புவதில்லை. பிள்ளைகளும் பெற்றோரினைத் தம்முடன்
வைத்திருப்பதினை விரும்புவதில்லை. இப்போது எமக்கு ஒரு கேள்வி எழும்... ஒருவர் நோயுற்று
வீட்டிலிருக்கும்போது அவருக்கான தேவைகள் எப்படிக் கிடைக்கும்... ஆம் இதனையும் அரசே
மேற்கொள்கின்றது.
தான் வசிக்கும் வீட்டினைச் சுத்தம் செய்வது, பயன்படுத்திய உடைகளை சுத்தப்படுத்துவது,
நேரம் தவறாமல் மருந்தினை உட்கொள்வது, உணவு உண்பது இப்படிப் பல தேவைகள் இருக்கும். இவற்றினை
நிறைவேற்றிக் கொடுப்பதற்காக பயிற்சியளிக்கப்பட்ட உதவியாளர்கள் ஒவ்வோர் கிராமசபைகளிலும்
பணிக்காக அமர்த்தப் படுகின்றார்கள். இவர்கள் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார்கள்,
ஒவ்வொருவரும் அவசர அழைப்புக்காக உருவாக்கப்பட்ட கருவியினைக் கழுத்தில் அணிந்திருப்பார்கள்.
தேவையேற்படும்போது இக்கருவியினை அழுத்தினால் போதும். உதவியாளர் விரைந்து வந்து தேவையினைப்
பூர்த்தி செய்வார்.
வாடகைக் குடியிருப்பில் இருக்கும்போது மிகவும் இயலாத்தன்மையினை ஒருவர்
பெற்றால் அவர் உடனடியாக முதியோர் இல்லத்திற்கு மாற்றப்படுவார்.
இயலாத்தன்மை, மாறாட்டம், உடலூனமுற்ற தன்மை போன்ற அடிப்படையில் முதியோர்
இல்லங்களில் அனுமதிக்கப்பட்டுப் பராமரிக்கப் படுகின்றார்கள்.
இப்படியான வாழ்வுப் போராட்டத்தில் மாட்டித் தவிக்கும் முதியோரினைப்
பிள்ளைகள் கைவிட்டு விடுகின்றார்களே என்ற என்ணம் எமக்குத் தோன்றும். இதுபற்றி எனது
வெள்ளைக்கார நண்பர்களுடன் கதைத்திருக்கின்றேன். அவர்களின் கருத்துச் சரியாகத்தான் தோன்றுகின்றது.
கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்லுமிடத்து இவர்களின் தேவைகளை எப்படிப்
பூர்த்தி செய்வது. தாய் தந்தை முதியவர்களாக இருப்பினும் அவர்களின் தனித்தன்மையில் எப்படித்
தலையீடு செய்வது.
நாம் சாப்பிடுவதினைத்தான் நீயும் சாப்பிட வேண்டும் என்று எப்படிக் கட்டாயப்படுத்துவது.
என் மனையாளுக்கு, என் தாய் தந்தையினைப் பார்க்க வேண்டும் என்று என்ன
கட்டாயம்?
இப்படிப் பல கேள்விகளை முன்வைக்கின்றார்கள். இதே போன்று முதியவர்களும் தம் கருத்தினை முன் வைக்கின்றார்கள்.
என் தனித்தன்மையினை எப்போதும் என்னால் விட்டுக் கொடுக்க முடியாது.
அவர்கள் வாழ்க்கையினை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்
கணவன் மனைவிக்கிடையில் உள்ள ஊடல் கூடலுக்குத் தடையாக இருக்கக்கூடாது.
இப்படித் தம் கருத்தினை முன் வைக்கின்றார்கள்
இப்படியான கோட்பாடுகளுக்குள் இவர்கள் உள்வாங்கப்பட்டு நீண்ட காலமாகிவிட்ட
நிலையில் இதுவே பண்பாடாகவும் மாறியுள்ளது எனலாம்.
No comments:
Post a Comment