மரபு கவிதைகள், இலக்கண,
இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச்
சோலையின் தமிழ்க்குதிர் பதினான்காவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி
அடைகிறேன்.
மண்புழு மண்ணைக் குடைந்து
அதிலிருந்தே உணவுண்டு பின் அங்கேயே மடிந்து அந்த மண்ணுக்கே உரமாகிறது. மண்ணைக் குடைந்து
அதைப் பக்குவமாக்குகிறது. அது உதவி செய்யவில்லை. ஆனால் அதன் வாழ்வே பிறருக்குப் பேருதவியாக
அமைகிறது.
மீன்கள் ஆற்று நீரிலுள்ள
அழுக்கைத் தின்று அந்த ஆற்றைச் சுத்தமாக்கு கின்றன. அவை உதவி செய்யவில்லை. ஆனால் அவற்றின்
வாழ்வே மற்றவர்க்கு உதவியாக அமைகிறது. எந்தப்பயனையும் எதிர்பார்க்காமல் இன்றைக்கு நாம்
செய்யும் சிறு உதவி பிற்காலத்தில் நமக்குப் பேருதவியாக வந்து உதவும்.
நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்
அந்நன்றி
என்று தருங்கொல் எனல்வேண்டா
- நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட
நீரைத்
தலையாலே தான்தருத லால்.
என்கிறாள் ஔவைப் பாட்டி. ஆம்… புவி என்ற புள்ளியைப் பிடித்துக்கொண்டு
அந்தப் புவியின் தன்னலமற்ற சுழற்சியால் நிலைத்து நின்றுவாழும் நாம், நம்மால் ஆன சிறுசிறு
உதவிகளைச் செய்து வாழவேண்டும். அவ்வாறு வாழும் வாழ்வே வாழ்க்கை… மற்றவை சீழ்க்கை.
தன்னலமற்ற விடுதலைப் போராட்ட
வீரர்களால்தான் நாம் இன்று சுதந்திரமாக வாழ்கிறோம். தன்னலமற்ற தலைவர்களின் உதவியால்தான்
நாம் இன்று கல்வியைப் பெற்றிருக்கிறோம். களப்பிரரின் ஆட்சிக் காலத்தை இந்தியாவின் இருண்டகாலம்
என்பர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், வாழும் முறைமையை, மக்களின் சிக்கலைத் தீர்த்து
வாழும் நெறியை எடுத்துக் கூறிய அறநூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றிய அந்தக்
காலக்கட்டம்தான் தமிழ்நாட்டுக்குப் பொற்காலம்.
அந்தப் பொற்காலத்தில் தோன்றிய திருக்குறள் மலைமேலிட்ட விளக்காக நின்று
நமக்கு வாழும் முறையைக் காட்டி இன்றைக்கும் ஒளிர்ந்துக் கொண்டிருக்கிறது. அந்த ஒளியில்
நம் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டு நம் வாழ்வைப் பயனுள்ள வாழ்வாக வாழ்வோமாக.
தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment