(மாறுரையும் நேருரையும்
- பாட பேதம்)
பொன் . இனியன்
8015704659
வன்கண் குடிகாத்தல் கற்றறித லாள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு (632)
இக்குறட்பாவில் அமைச்சருக்குரியதாகக்
குறிக்கப்பட்ட பண்புகள் அல்லது வினைகள் ஐந்து என்பது தெரிகிறது. ஆனால் இதில் அமைந்துள்ள
சொற்களைக் கொண்டு அவற்றை அறிவது அத்துணை எளிதாயில்லை. ஐந்து எவை என்பது குறித்த தேடலில்
உரையாசிரியர்களின் மாறுபட்ட போக்குகளைப் பற்றிய ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.
இக்குறளில் கூறப்பட்ட ஐந்து எவை
என்பதில் உரையாளர்கள் மூவகையாய் வேறுபட்டுள்ளனர். வன்கண், ஆள்வினை என்பவை பண்புத் தொகையாகி
நின்றமையின் அவை ஒருசொல் நீரதாயின. குடிகாத்தல், கற்றறிதல் என்பன கூட்டுச் சொற்களாயினமையின்
இவற்றுள் ஒன்றைப் பகுத்து இரண்டாகக் காட்ட முயன்றனர். ஐந்தைத் தொகைக் குறிப்பாக்கி
‘ஐம்பொறித் தூய்மை’ என ஒரு சாரரும், ‘பஞ்ச தந்திரம்’ எனப் பிறிதொரு சாரரும் உரைத்தனர்.
உரையும் குறையும்
மேற்கண்டவாறமைந்த முத்திற உரைகளின்
வாசிப்பால் எழும் ஐயங்களையும் அவற்றின் துணைகொண்டு திருக்குறளின் உட்கிடக்கையை உணர்ந்து
கொள்வதில் உள்ள சிரமங்களையும் சற்றுக் காண்போம்.
குடிகாத்தல் என்பதை இரண்டாகக்
கொண்டு காட்டினாருள் மணக்குடவர், குடிகாத்தலும் இந்திரியங்களைக் காத்தலும் எனவும்,
பாவாணர், நற்குடிப் பிறப்பும் குடிகளைக் காத்தலும் எனவும், காளிங்கர் குடிகளின் வன்மை
மென்மை வழக்கறிதல், காத்தலாகிய நாடுகாத்தல் காடுகாத்தல் எனவும் மு.வரதராசனார் குடிப்பிறப்பும்
காக்கும் திறனும் எனவும் உரைத்தனர் .
தற்காத்தல் (56), கதங்காத்தல்
(130), சினங்காத்தல் (301) என்பவை போல, குடிகாத்தல் எனற்கும் குடிகளைக் காத்தல் என்பதே
நேரிய தெளிந்த பொருளாகிறது. குடிகாத்தல் எனற்குக் குடிகளைக் காத்தல் எனக் குறித்துக்
காட்டியதன் பின்னும், இந்திரியங்கள் என்பதை மணக்குடவர் எவ்வாறு பெற்றார் என்பது விளங்குதலில்லை.
பாவாணரும் குடிகளைக் காத்தல் எனும் குறள் மூலத்தை உரையில் வைத்துக்கொண்டு குடிப்பிறத்தல்
என்பதை மேலும் பெய்கிறார். இது புறத்திருந்து கொணர்ந்து பொருத்திய இடைச்செருகலாவதன்றிக் குறளின் கிடக்கையாக் கொளற்காதலில்லை.
காளிங்கர், காத்தல் என்பதை நாடு
காத்தல், காடு காத்தல் என இரண்டாக்கியது ஒப்புதற்குரிதேயாயினும் அவ்விரண்டும் மக்களைக்
காத்தல் பொருட்டே என்பதும் அதனை மூலத்தில்
உள்ள குடிகாத்தல் என்ற சொல்லே திருந்த உணர்த்தி
நிற்பது கருத, காளிங்கர் கொண்ட சொற்பகுப்பு வேண்டற்பாலதின்றாம். மேலும் அவ்வாறான பகுப்புக்குப்
பின் குடி எனுஞ்சொல் கருத்துப் புலப்பாடற்றுத் தனித்து நிற்றலைக் காண்க. அதனைக் ‘குடிகளின்
வழக்கறிதல்’ என வலிந்து விரிக்கிறார். குடிகளின்
வழக்கறிதல் அமைச்சர் கடனே யாயினும் இக்குறளில் அதற்கான குறிப்பு ஏதுமில்லை. குடிப்பிறத்தல்
(681), குடியோம்பல் (390), குடிசெய்வல் (1023) என்பன போன்றதே குடிகாத்தல் என்பதும்
அதனால் இரண்டுபடக் கோடற்கு அதில் இடமில்லை என்க.
குடிகாத்தலை ஒருசொல் நீரதாக் கொண்டு
கற்றறிதலைப் பகுத்தாருள் பரிதி முன்னோடியாய்க் காணப்படுகிறார். அதனைக் ‘கல்வி அறிவுடைமை’
எனக் காட்டுவார் அவர். கற்பன கற்றல், உலகியல்
அறிவு மிகுதல் என இளங்குமரனும், நீதி நூல்களைக் கற்றல் செய்ய வேண்டுவன செய்யத் தகாதன
என்பவற்றைத் தெளிவாக அறிதல் உடையவன் எனச் ச.வே.சுவும் காட்டினர்.
கற்றல் என்பது முதனிலை தொடக்கம். அதற்குத் தக நிற்றலே அதன் பயனிலையும்
முடிநிலையுமாகும். கற்றது அறியாமை உய்க்கின்
அது கல்வியாகாது (440) என்பதை ஈண்டு எண்ணுக. கற்றறிதல் என்பது பகுபதமேயாயினும் ஈண்டு
அது ஒரு பொருள் குறித்து நிற்பதேயாம். இவை ஒன்றால் ஒன்றும் ஒன்றோடொன்றும் ஆகி இணைபிரியாதன.
ஒரு நாணயத்தின் இருபுறம் போல்வனவாம். என்னை எனில், கற்றனைத்து அறிவு ஊறுதலானும்
(396), அறிதொறும் அறியாமை காண்டலின் (1110) மேலும் கற்க வேண்டுதலானுமாம்.
“இதனை ஈண்டு எண்ணியவற்றுக்கே தொகையாக்கிக்
குடிகாத்தல் என்பதனைக் குடிப்பிறப்பும் அதனை ஒழுக்கத்தால் காத்தலும் எனப் பகுப்பாரும்,
கற்றறிதல் என்பதனை கற்றலும் அறிதலும் எனப் பகுப்பாரும் உளர். அவர் ‘உடன்’ என்பதனை முற்றும்மைப்
பொருட்டாக்கியும் ‘குடி’ என்பதனை ஆகுபெயராக்கியும் இடர்ப்படுப” எனக் குறிக்கிறார் பரிமேலழகர்
.
தொழில் செய்யுங்கால் மனந்தளராமையும்,
குடிகளைக் காத்தலும், நீதி நூல்களைக் கற்று நல்லன தீயன அறிதலும், முயற்சியும் ஆகிய
ஐந்தும் சிறப்பாக உடையவனே அமைச்சனாவான் என்பதில், எண்ணும்மை நான்கை மட்டுமே வைத்துத்
தொகையை ஐந்து எனக் குறித்துள்ள முனிசாமியார் உரையில் ஓர் உறுதியின்மை தோற்றுகிறது.
நீதி நூல்களைக் கற்று நல்லன தீயன அறிதலும், என முனுசாமியார் குறித்துள்ளதைத் தொடர்
வினையாகக் கொள்வதா அன்றி இருவேறாகக் கொள்வதா என்பது தெரியவில்லை. பேணிக் காப்பாற்றுதல்
எனக் குறித்துள்ள கு.ச.ஆனந்தன் உரையும் ஐந்தைத் தெளிவு காட்டாமலேயே அமைந்துள்ளது. ஐந்தைத்
தொகைக் குறிப்பாகக் கொண்டு ஐம்பொறிகளின் தூய்மையுடன் திருந்த உடையவனே அமைச்சனாவான்
என்பது குழந்தை உரை. ஐந்து தந்திரங்களும் சேர்ந்த சிறப்புடையதுதான் மந்திரிகளின் தன்மை
எனக் குறித்தார் வெ.ராமலிங்கம்.
ஐந்து என்பவை குறள் 27-இல் பட்டியலிட்டுக் காட்டப்பட்டன. பிறவிடங்களில் பொறிவாயில் ஐந்து
(6), ஆற்றல் ஐந்து (25), பூதங்கள் ஐந்து (271), புலம் ஐந்து (343) எனக் குறிக்கப்பட்டன. இக்குறளில் மட்டுமே ஐயத்திற்கு இடங்கொள்ளுமாறு அமைய நின்றது ‘ஐந்து’ . .. .. ஒளி
என்று ஐந்தும் (939), ..... .. . இடனொடு ஐந்தும்
(675), .. .. வாய்மையொடு ஐந்து (983) என்புழி இக்குறளிலும் கொள்ளத் தகுவது ‘ஐந்து’.
இதைத் தொகைக்குறிப்பாகக் கருத வேண்டுவதின்றாம் .
மற்றெல்லா உரையாளர்களும் ‘ஐந்து’
என்பது இக்குறளுள் எண்ணப்பட்டவற்றின் தொகையே
எனக் கொண்டு அதற்கான கருத்தை இதற்குள்ளிருந்தே வருவித்துக் காட்ட முயன்ற நிலையில் பரிமேலழகர்
இக்குறளில் வள்ளுவர் குறித்தவை நான்கே எனுங் கருத்துடையவராகிறார். அவையும் இவற்றோடு
கூடியே மாட்சிமைப்பட வேண்டுதலானும், இந்நான்கினையும் மேற்(குறளில்) கூறியவற்றோடு தொகுத்துக்
கூறியது எனக் காட்டும் பரிமேலழகரின் உரை வரைவில் மூன்று முரண்பாடுகள் காணப்படுகின்றன
.
1) ஒவ்வோரு குறளும் ‘சொல்-பொருள்’
ஆகியவற்றைக் கொண்டமைந்த தனித்தனி கருத்து முழுமையுடையதே என்பதும் எந்த ஒரு குறளும்
பிறிதொரு குறளைத் தன் வாக்கியத் தொடக்கமாகவோ அன்றித் தொடராகவோ கொண்டிருக்கவில்லை என்பதும்
திருக்குறள் முற்றோதலான் பெறப்படும் ஓருண்மையாகும். குறட்டொகுதி முழுவதிலும் ஒவ்வொரு
குறளும் ஒரு தனித்த கருத்துடையதாகவே அமைந்துள்ளதன்றி ஓரிடத்தும் இருபாக்களின் கருத்தை
ஒன்றுகூட்டிப் பொருள்கொள்ளும் வகையில் இல்லை என்பது வெள்ளிடைமலையாதலின் பரிமேலழகரின்
கூற்று ஏற்புடையதன்றாம்.
2) இதை ஒருவாறு ஒப்புவமெனிலோ,
மேற்குறளில் கூறப்பட்டவை(யும்) நான்கேயாயிருக்க, ஐந்தெனும் தொகை காணவேண்டிக் ‘கருவி’யைத்’
தானையும் பொருளுமாக வலிந்து இரண்டாக்கிக் காட்டியது இயல்பாயில்லை. ‘கருவி’யை ஈண்டுத் தானையும் பொருளும் என விரித்துக்
காட்டிய பரிமேலழகர் குறள் 483-க்கான உரையில் கருவியை மூவகை ஆற்றலும் நால்வகை உபாயங்களுமாம்’
எனக் குறித்துள்ள முரண்பாட்டினையும் கருதுக.
அஃதன்றியும், மேற்குறளில் (631) வள்ளுவர் குறித்தது மாட்சியையன்றாம்
என்பதும் உன்னுதற்குரிதாம். அருளாள்வார் (245), நட்பாள்பவர் (791), நாணாள்பவர்
(1017), ஒற்றாளுதல் (589) என்பவற்றுள் போல கருவி, காலம், செயற்பாடு மற்றும் அரிதாய
வினைகளை ஆளத் தக்கவன் அமைச்சன் என்பதே மேற்குறளில் குறிக்கப்பட்டன என்பதும்
இக்குறளில் குறித்த ஐந்தால் அமைச்சுப் பணி மாண்புறும் என்பதுமாம். முன்னது ஆட்சி
பின்னது மாட்சி என்பனவாம். அதனால் இரண்டையும் ஒன்று கூட்டியது பிறழ உணர்ந்தவாறாம்.
3) இன்னொன்றையும் ஈண்டு நாம் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. காலத்தால் முந்தியவராகக் கருதப்படும்
மணக்குடவருரையில் இப்பாடலே அதிகாரத்தின் முதற்பாடலாகவும் ‘மேற்சொல்லிய’ என்று பரிமேலழகர்
குறிப்பிடும் பாடல் ஐந்தாவதாகவும் வரிசைகொள்ளப்பட்டுள்ளதைக் கருத்தில் கொளின் அவ்வைந்து
எனுஞ் சுட்டு வருவித்துக் கொள்ளும் பொருட்டே குறள் வரிசையில் (இவரால்) மாற்றம் செய்யப்பட்டதோ
எனும் ஐயுறவுக்கு(ம்) இடமுண்டாகிறது.
இதுகாறும் இக்குறளுக்கு அமைந்த
உரைகள் சிலவற்றில் காணப்படும் மாறுபாடுகள் குறித்தும் அவற்றின் கருத்தும் பொருளும் குறளோடு பொருந்தாமையும்
அவற்றை திருக்குறளின் எண்பொருளவாக் கொள்வதில் உள்ள தயக்கத்துக்கான கூறுகளையும் கண்டோம்.
இனி இதன் உண்மைப் பொருளைக் குறளின்
துணை கொண்டே அறியத் தலைப்படுவோம்.
‘ஓர்தல்’ மறைத்த ‘உடன் ஓடு’
குறட்டொகுதியில் பிறவெதனிலும்
இல்லாதவாறாக ஓடு உடன் ஆகிய மூன்றனுருபு இருமுறை பயிலப் பட்டுள்ளதுபோல் அமைந்த ‘ஆள்வினையோடைந்துடன்’
எனும் சொற்றொடரே இக்குறளின் பொருள் காண்பதில் பெரிதும் முட்டுப்பட அமைந்து நின்றது.
திருக்குறளின் அதிகார வைப்பு,
பாக்களின் வரிசை முறை பற்றிய மாறுபட்ட கருத்துகள் இருப்பினும், அதன் இற்றை வடிவம், அமைப்பு வள்ளுவர் வைத்த வகையில்
இல்லை; மாறுபட்ட நிலையதே என்பதில் எவரும் உடன்பட்டு நிற்பர்; இப்போது நமக்குக் கிடைத்துள்ள
திருக்குறள் பாடங்கள் படியெடுத்தவர் களின் பாடங்களே. குறள் பன்னெடுங் காலமாய் ஓலை வடிவில்
இருந்த நிலையில், படிஎடுக்கும்போது ஏற்பட்ட பிழைகளால் சுவடி வேறுபாடுகள் உண்டாயின.
இது படி எடுப்பவர் அறியாமலேயே நிகழ்ந்தும் இருக்கலாம். படி எடுத்தவரெல்லாம் இலக்கணம்
திருந்த அறிந்தவரா யில்லாதும் இருந்திருக்கக் கூடும்.
பழைய உரையாசிரியர்களான மணக்குடவர்
பரிதி காளிங்கர் பரிமேலழகர் முதலானோர் உரைகளில் பாட பேதங்காட்டி அவற்றிற்கு உரிய தகவும்
கூறி யிருப்பதைக் கருத, பாட பேதங்கள் அறிந்தேயும் உரையாசிரியர்களால் ஓதப்பட்டன என்பது
தெரிய வருகிறது. இவ்வாறு உரையாசிரியர்கள் பாட வேற்றுமை கொண்டது இரு வகையாலாம்.
1) கால நீட்சியில் சுவடிகளில் ஏற்பட்ட சிதலத்தால் எழுத்துகள் சிதைந்த நிலையில் உரையாசிரியர் உணர்ந்தவாறு இலக்கண
நெறிப்படத் தாமே ஒரு பாடங்
கற்பித்துக் கொள்ளுதல் ஒன்று.
2) ...... ‘என உரைப்பாரும் உளர்’ எனக் குறித்து, மாறுரைத்து அப்பாடற்குத்
தாம் கண்ட பொருட்கியைய ஒரு பாடத்தைக் கற்பித்துக் காட்டுதல் மற்றொன்று.
உரையாசிரியர்கள் தாமே உணர்ந்து
ஏற்படுத்திய பாட வேறுபாடுகள் சற்றேறக்குறைய 516 ஆகப் பட்டியலிடுகிறார் முனைவர் ச.வே.சுப்ரமணியம்..
இவ்வாறான பின்புலத்தைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் கீழ்க்கண்ட இருவகையான வாய்ப்புகளால்
இக்குறளில் மாறுபாடு நேர்ந்திருக்கக் கூடும் எனும் ஊகத்திற்கு இட்டுச் செல்கிறது.
சுவடி வடிவில் இருந்தபோது, இக்குறளில், 4-ஆவது சீரின் கடை மற்றும் 5-ஆவது சீரின்
முதற்பகுதியில் ஏதேனும் சிதைவு நேர்ந்து ‘ஆள்வினையோ’ ‘ந்துடன்’ என்றிருந்ததை ஓடு எனவும்
ஐந்துடன் எனவும் இலக்கண நெறிப்பட ‘ஆள்வினையோ டைந்துடன்’ எனக் காட்டியிருக்கலாம். இது
ஒன்று
மூலப்படியில் இருந்த ஆள்வினை‘யோர்
வைந்து’டன் என்பதை ‘ஓரைந்து’ம் (24) என்புழிப்
பொருள்கொண்டு ஓர்’ என்றிருந்ததை ஓடு என எவரோ திருத்தி இருக்கவும் கூடுவதாம். இது மற்றொன்று.
மணக்குடவர் உரை செய்திருப்பது
‘ஆள்வினையோ டைந்துடன்’ எனும் பாடம் கொண்டே யாதலின் அவர் காலத்துக்கு முன்னரே இந்தப்
பாட மாற்றம் நிகழ்ந்திருக்கக் கூடும் எனக் கருத வேண்டியுள்ளது. தக்க சான்றுகள் இன்மையின்
இது வெறும் ஊகமும் கணிப்புமே யாதல் அன்றி இதை உறுதியாய்க் காட்டக் கூடுவதில்லை என்க.
எனினும், இக்குறட்பாவில் குறிக்கப்பட்ட
ஐந்தாவதை இக்குறளுக் குள்ளிருந்தே கண்டு தேருமுன், ஓர்வின் சிறப்பு மற்றும் அமைச்சர்க்கு
அதன் இன்றியமையாமை குறித்த வள்ளுவரின் பார்வை
எவ்வாறானது என்பதைச் சற்று எண்ணுவம்.
ஓர்ந்து யார் மாட்டும் கண்ணோடாது
இறைபுரிந்து தேர்ந்து செய்வஃதே முறை (541) என்றும் எண்பதத்தான் முறைசெய்யா மன்னவன்
ஓரா தன்பதத்தால் தானே கெடும் (548) என்பதும் செங்கோன்மை அதிகாரத்தில் காட்டப்படுகின்றன.
அரசு வினைகள் யாவும் அமைச்சன் வாயிலாகவே நிகழ்த்தப்படுதலும், மன்னன் தன் செயலாற்றலுக்கு அமைச்சனையே சார்பு கொண்டிருத்தலும்
ஆட்சிமுறையின் இயற்பு. ஒற்றுரையும் நூல் சான்றினையும் மன்னனுக்கமைந்த (Annexed
vision) தெற்றுக் கண்களாகக் (581) காட்டுகிறார் வள்ளுவர். நூல் சான்றுகளைத் தக்கவாறு
ஓர்ந்து காட்ட வல்லவனாய் அமைச்சர் உடனிருக்கிறார். இது மன்னன் நாடொறும் நாடி முறை செய்யுங்கால்
ஓர்தல். சூழாது கோல்கோடி அல்லவை செய்யுங்கால் முறை செய்யுமாறு மன்னற்கு எண்பதங் காட்டி
ஓர்வு ஊட்டுங் கடமையும் அமைச்சர்க்கே உரியதாயிற்று.
பொச்சாப்பு உடையார் தம் வினை நன்றாகா
(534). பொச்சாந்திருக்கும் அமைச்சரால் தம் கடமைகளை முறைப்பட ஆற்றுதல் ஏலாது. வினை செய்வார்க்கு
வேண்டப்படும் கருவிகளுள் தலையாயது பொச்சாவாமை (537). கெடுவார்க்குரிய கலங்களுள் ஒன்றாக
மறவியைச் சுட்டிய வள்ளுவர், ஆகாத அரிய என்று
இல்லை பொச்சாவாக் கருவியால் போற்றிச் செயின் (537) எனக் குறிக்கிறார். அருவினையும்
ஆள்பவராகிய (631) அமைச்சர்க்கு அது எத்துணை இன்றியமையாது வேண்டப்படுவ தென்பது சொல்லாமலே
பெறப்படும்.
அரசியலில் பொச்சாவாமைக்கென ஓரதிகாரம்
வைத்துக் காட்டியுள்ளதையும் உட்கொண்டு இக்குறளை
அணுகினால் நான்காவது மற்றும் ஐந்தாவது
சீர்களின் (Phonotic) ஒலிக்கூறுகளோடு இயல்பாய்ப் பொருந்தி நிற்பதாக, ‘ஆள்வினையோர் வைந்துடன்’ எனப் பாடங் கொள்ளுதற்குரிய
ஏரணம் எவர்க்கும் எளிது விளங்கும்.
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோர்
வைந்துடன் மாண்ட தமைச்சு
(ஆள்வினை + ஓர்வு + ஐந்துடன் - ஆள்வினையோர்வைந்துடன்)
எண்திடம், மக்கள்நலம், கல்வியறிவு,
செயல்திறன், ஓர்ந்துசெயல் ஆகிய ஐவகையாலும் அமைச்சரின் பணி மாண்புற்று விளங்கும் என்பது
இதன் நேரிய நிரை பொருளாயமைகிறது.
ஓர்வு - ஓர்தல் எனற்கு (கற்றது
மறவாமை) நினைவு கொளல் என்பது பொதுக் கருத்து. ஆழ்ந்து நினைதல், அறிந்து ஆய்ந்து உணர்தல்
என்பது சிறப்புப் பொருள். ஈண்டு ‘ஓர்வு‘ என்றது அறநூல் மற்றும் ஆட்சி நூல் பற்றிய நுண்ணறிவைக்
குறித்தது.
இது பாட பேதம் காட்டும் முயற்சியன்று
என்பதும் இப்பாடலுக்கு உரை கொள்வதில் முன்னிருந்த முட்டு நீக்குவான் பொருட்டு வேண்டியதொன்றா
யாதலுங் கருதுக. இப்பாடத்தால் குறளின் சீர்மை மிகுதலன்றி அதன் சிறப்பு கெடுதல் இல்லையாம்.
இதற்கான தகவும் தரவும் தருவது குறளேயாவதால் இதைப் பாடமாற்றம் எனக் கொள்ளாமல் பாடமீட்சி
எனக் கருதுமாறு குறளாய்வாளர்களையும் அறிஞர்களையும் வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment