'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

கதி


கவிஞர் ஜெகதீசன் முத்துக் கிருஷ்ணன்
  
தமிழுக்குக் கதியெனக் கம்பனையும், திருவள்ளுவனையும் குறிப்பிடுவா்.
“திருக்குற ளுறுதியும் தெளிவும் பொருளின்
ஆழமும் விாிவும் அழகும் கருதியும்
எல்லையொன் றின்மை எனும்பொருள் அதனைக்
கம்பன் குறிகளால் காட்டிட முயலும்”
என்ற பாரதியின் பாடல் வாிகள், திருக்குறளின் உறுதிப் பொருள், தெளிவு, ஆழம், விாிவு போன்றவற்றைக் கம்ப ராமாயணத்தில் காட்டிட இயலும் என்பதை உணா்த்துகிறது.
முன் இலக்கியங்களில் அமையும் கருத்துக்களையும், கவிஞன் பயன்படுத்திய வாிகளையும் கையாளுதல் என்பது ஒருவகை
இலக்கிய உத்தியாகும்.
இக்கட்டுரையில் உலகப் பொதுமறையான திருக்குறளின் தாக்கம், கம்ப ராமாயணத்தில் எந்த அளவுக்கு உள்ளது என்பதைக் காண்போம்.
இராமனுக்கு முடிசூட்டுவதைப் பற்றி அமைச்சா்களிடம் தயரதன் கேட்கின்றான். அதற்கு அவா்கள் ஊருணி நீா் நிறைந்திருப்பதும், கனிமரம் பழுத்து ஊா் நடுவேயிருப்பதும், வயலுக்கு ஆற்றிலே தண்ணீா் வருவதும், மேகம் மழைபொழிந்து மண்ணை வளப்படுத்துவதையும் யாா் வேண்டாவென்று கூறுவா் என்று கேட்டு, அதைப்போல இராமனுக்கு முடிசூட்டுவதும் நன்மையானது; அதை மறுப்பாா் யாா்? என்று
கேட்கிறாா்கள். இதைக் கம்பன்,
"ஊருணி நிறையவும் உதவும் மாடுயா்
பாா்கெழு பழுமரம் பழுத்து அற்றாகவும்
காா்மழை பொழியவும், கழனிபாய் நதி
வாா்புனல் பெருகவும் மறுக்கின்றாா்கள் யாா்"
என்று பாடுகின்றான். இக்கருத்தினைக் கம்பன்,
"ஊருணி நீா்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. " (215 )
"பயன்மரம் உள்ளூா்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின் . " ( 216 )
என்ற இரு குறட்பாக்களிலிருந்து எடுத்துக் கொண்டான்.
அழுக்காறாமை:
மூன்றடி மண் கேட்ட வாமனனுக்கு, அதைக் கொடுக்கத் துணிகிறான் மாவலி மன்னன். இடையிலே புகுந்து கொடுக்க வேண்டா என்று தடுக்கிறான் வெள்ளி. இத்தடையை விரும்பாத மாவலி மன்னன்,
"எடுத்தொருவருக்கொருவா் ஈவதனின் முன்னம்
தடுப்பது நினக்கழகி தோதகவில் வெள்ளி
கொடுப்பது விலக்கு கொடியோ யுனதுசுற்றம்
உடுப்பதாவு முண்பதுவு மின்றி விடுகிறாய்"
“தானத்தைத் தடுக்கின்ற கொடியவனே! கொடுக்கும் முன்பே தடை செய்வதினால், உனது சுற்றம் உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாதபடி ஆக்கி விடுகிறாய்" என்று சீறுகிறான். இக்கருத்து,
"கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும் . ( 166 )
என்ற குறளின் கருத்தையே எதிரொலிப்பதாய் உள்ளது.

புகழ்:
போாில் தோற்ற இந்திரசித்து, இராவணனிடம் சீதையை விட்டுவிடுவது நல்லது என்று கூறுகிறான். அதற்கு இணங்காத இராவணன்
தன்வீரம் பற்றி
"வென்றில னென்ற போதும்
    வேதமுள் ளளவு யானும்
நின்றுள னன்றோ மற்றவ்
    விராமன்போ் நிற்கு மாயின்
பொன்றுத லொருகா லத்துத்
    தவிருமோ பொதுமைத் தன்றோ
இன்றுளாா் நாளை மாள்வாா்
    புகழுக்கு மிறுதி யுண்டோ "
வெற்றி பெற்றிலேனாயினும் இராமன் போ் நிலைத்து நிற்குமாயின், யானும் வேதம் உள்ள அளவும் நிலைபெறுவேன். இன்று உள்ளோா் நாளை மாள்வா், ஆனால் புகழுக்கு அழிவு உண்டாகுமோ? என்று கூறுதல்,
ஒன்றா உலகத்து உயா்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். ( 233 )
தனக்கு இணையற்றதாகிய ஓங்கிய புகழல்லாது உலகத்தில் இறவாது நிற்பது பிறிதொன்றும் இல்லை என்ற குறளின் கருத்தையே பறை சாற்றுகிறது.

வாலியின்வாதம்:
இராமனின் அம்பால் அடிபட்டு வாலி, குற்றுயிரும், குலையுயிருமாக வீழ்ந்து கிடக்கின்றான்.
இருவா்போா் எதிரும் காலை
    இருவரும் நல்லுற் றாரே
ஒருவா்மேல் கருணை தூண்டி
    ஒருவா்மேல் ஒளித்து நின்று
வாிசிலை குழைய வாங்கி
    வாயம்பு மருமத் தெய்தல்
தருமமோ பிாிதொன் றாமோ
    தக்கில தென்னும் பக்கம் .
என்று இராமனை, வாலி சொல்லம்புகளால் கடுமையாகத் தாக்குகிறான் .
"ஐயனே! நல்லவை புாியும் நீயே, வில்லறம் துறந்த பின்னா், அல்லவை புாியும் அரக்கா்கோன் இராவணன், அறநெறி திறம்பினானென்று அறைவது வியப்பன்றோ? என்று வாலி இடித்துரைத்தான்.
இறைவ நீ என்னைச் செய்தது
    ஈதெனில் இலங்கை வேந்தன்
முறையல செய்தான் என்று
    முனிதியோ முனிவு இலாதாய் !
என்ற வாலியின் சீற்றத்தில்
ஏதிலாா் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிா்க்கு .
என்ற திருக்குறளின் தெள்ளிய மணம் கமழக் காணலாம்.

சீதையின் சீற்றம்:
அடக்கமுடைய அஞ்சன வண்ணனின் ஆண்மையைப் பழித்த, அரக்கன் இராவணனின் சிறுமையை நினைத்துச் சீறினாள். அவனைக் கண்ணெடுத்து நோக்கவும் மனமின்றி, முன்னே கிடந்த சின்னஞ்சிறு துரும்பை நோக்கி முறையாக மொழியலுற்றாள்.
"அந்தோ! பெருந்தவம் இழக்கும் பேதாய்!
நஞ்சுடைய நாகமும் நிறைமொழி மாந்தா் அருளிய மறைமொழியாய மந்திர ஆணையில்
அடங்கி நிற்கும். மதுவுண்டு மயங்கும் இயல்பினனாய உனக்கு நன்னெறியை எடுத்தோதும் மந்திரத் தலைவா் இந்நாட்டில் எவருமில்லை. இது அடுக்கும், இது அடாதென்று இடித்துரைக்கும் அமைச்சரும், அறிஞரும் இலங்கை மாநகாில் இல்லை. உன்
மந்திரச் சுற்றமாய் அமைந்துள்ள மாக்கள் நீ எண்ணியவாறே எண்ணுகின்றாா். குணம் நாடிக் குற்றமும் நாடி உண்மையை அஞ்சாது எடுத்துரைக்கும் ஆன்றோா் இந்நாட்டில் எவருமில்லை"
கடிக்கும் வல்லரவும் கேட்கும்
    மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும் ஈதடா தென்று
    ஆன்ற ஏதுவோ டறிவுகாட்டி
இடிக்குநா் இல்லை உள்ளாா்
    எண்ணிய தெண்ணி யுன்னை
முடிக்குநா் என்ற போது
    முடிவன்றி முடிவ துண்டோ ?
என்ற சீதையின் சீற்றத்தில்
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பாா் இலானும் கெடும்
என்ற திருக்குறளின் கருத்தைக் காணலாம்.

நன்றிக்கோா் வித்து:
அறநெறி துறந்த அரக்கா்கோனை விட்டு, இராமனைச் சோ்ந்து வாழ்தலே ஏற்றதாகும் என்று வீடணன், கும்பகா்ணனிடம் கூறுகிறான். இதற்குக் கும்பகா்ணன் கூறும் மொழிகள், அழியாத அழகு வாய்ந்தனவாம். தாரை தாரையாய்க் கண்ணீா் வடித்து எதிரே நின்ற தம்பியை நோக்கி, "ஐய! நீா்க்குமிழி போல் நிலையற்றதாய இவ்வுலக வாழ்வை விரும்பி இராவணன் செய்த பெருநன்மையை மறப்பேனோ? பன்னாள் போற்றி வளா்த்துப் போா்க்கோலம் புனைந்தனுப்பிய மன்னனைத் துறந்து மாற்றாருடன் சோ்வேனோ? மலரோன் வரத்தால் நீ மாயா வரம் பெற்றாய். உன் செயல் உனக்குத் தக்கதேயாம். புலையுறு மரணம் எய்தலே எனக்குப் புகழாகும். அரணமைந்த இலங்கையின் அளவிறந்த செல்வத்தை விரும்பி என் தமையனைக் கொல்ல வந்த பகைவனை வாழ்த்தி அவன் அடிபணிந்து வாழ்வேனோ?"
செம்பிட்டுச் செய்த இஞ்சித்
    திருநகா்ச் செல்வம் தேறி
வம்பிட்ட தொியல் எம்முன்
    உயிா்கொண்ட பகையை வாழ்த்தி
அம்பிட்டுத் துன்னம் கொண்ட
    புண்ணுடை நெஞ்சோ டைய
கும்பிட்டு வாழ்கிலேன் யான்
    கூற்றையும் ஆடல் கொண்டேன்
என்ற கும்பகா்ணனின் மொழிகளில்
எந்நன்றி கொன்றாா்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு .
என்ற குறளின் சாரம் வழியக் காணலாம்.
கம்பாின் அரசியல் செய்திகளில், திருக்குறளின் பொருட்பாலின் தாக்கம் காணப்படுகிறது. திருக்குறளின் தொடா்கள், சொல்லாட்சி போன்றவற்றைக் கம்பா் சில இடங்களில் அப்படியே எடுத்துக் கையாளுகின்றாா்.

திருமுருகாற்றுப்படை - பகுதி - 1


உரையாடல்

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன்

புலவர்: வணங்குகிறேன் நக்கீரரே!

நக்கீரர்: வருக புலவரே! வணங்குகிறேன். நலந்தானே!

புலவர்: உடலம் நலமாயிருக்க உள்ளம் நலமாயிருக்க வேண்டுமன்றோ? உடலமும் உள்ளமும் நலமாய் இருந்தால்தானே நலம் என்று பொருள். அந்த உளநலத்தை அளிக்க வல்ல அருளாளனாகிய உம்மையே நாடி வந்தோம்.

நக்கீரர்: புலவரே! புகழ்ந்தது போதும். அந்த உளநலத்தை அளிக்க வல்லவன் யான் அல்லன். பேரொளி வடிவமாய் விளங்கும் எம்பெருமானே!

புலவர்: ஆம்… நக்கீரரே! அப்பெருமான் உமது வழியே எனக்கு அதை அருள்வான் என்று நம்புகிறேன். அதனால் அவ்வருளை அளிப்பவர் நீர்தாமே!

நக்கீரர்: புலவரே! போதும் போதும்! நீர் என்ன கேட்க வருகிறீர் என்பது எனக்குப் புரிகிறது. வாருங்கள் கடற்கரைக்குச் செல்வோம்.

புலவர்: கடற்கரையில் காலாற நடந்து செல்வது எவ்வளவு மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. சிந்தனை செம்மைப்படச் செவியினிக்கச் சேதி சொல்லும் ஐயனே!

நக்கீரர்: அதோ! குணகடலில் தோன்றிக் கதிர் வீசிக் கொண்டிருக்கும் அந்தக் கதிரவனைப் பாரீர்.

புலவர்: ஆம்.. அக்கதிரோன் இவ்வுலகத்து உயிர்கள் மகிழ்வதற்காகவே தோன்றி வலம் வருகின்றானே!

நக்கீரர்: ஆம்.. அந்த அழகிய காட்சியைப் பாரீர்! அவன் தன்னுடைய பேரொளியை இடைவிடாது வழங்கி இவ்வுலகத்தை இருளிலிருந்து மீட்டுக் கொண்டிருக்கின்றான்.

புலவர்: அது மட்டுமா? எழுக! இவ்வுலகம் இனி உம் கையில்!” என்று நம்மை எழுப்புபவன் அவன்.

நக்கீரர்: இடைவிடாது உழைக்கச் சொல்லி நம்மை ஊக்குவிப்பவனும் அவனே!

புலவர்: அவனை யாவரும் புகழ வேறு கரணியம் வேண்டுமோ?

நக்கீரர்: அத்தகைய பேரொளி வடிவாய் விளங்கி, இடைவிடாது அருள்புரிந்து இவ்வுலகைக் காப்பவன் எம்பெருமான் முருகக் கடவுள்.

புலவர்: அடடா… என் மனக்கண்ணில் அவன் தோன்றும் செந்நிறக் காட்சி கண்டு மெய்ம்மறந்து போகிறேன். செந்நிறம் பொருந்தியவனாதனால் அவன் ‘சேயோன்’ எனப் பட்டானோ?

நக்கீரர்: சரியாகச் சொன்னீர்! செம்மை சேரச் சேரக் கருமை விலகுந்தானே. அகத்தில் அறிவு பெருகப் பெருக அறியாமை விலகுந்தானே.

புலவர்: ஆம். அடடா... அதைத்தான் காண்கிறேன். அக்கதிரவன் ஒளிபடக் கொஞ்சங் கொஞ்சமாய் இருள் விலகுவதுபோல என் மனத்துள் முருகனைச் சிந்திக்க என் அகத்திருளாகிய ஆணவம் அழிகிறது. ஆம்… அவன் எனக்குப் பேரின்பம் நல்குகிறான்.

நக்கீரர்: புலவரே! மற்றொரு காட்சியையும் கண்டீரா? கடலின் பசுமையும் கதிரின் செம்மையும் எப்படி நமக்குப் புலப்படுகிறதோ அவ்வாறே முருகனைக் கண்குளிரக் காணும் நமக்கு மயிலின் பசுமையும் அவனுடைய திருமேனிச் செம்மையும் விளங்குகின்றன அல்லவா?

புலவர்: அடடா! என்னே அருமையான காட்சி!

நக்கீரர்: தனக்குவமை இல்லாதான் முருகன். பிறகு ஏன் இவ்வாறு உவமையாக்கிக் கூறுகின்றேன்? புரிகிறதா உமக்கு?

புலவர்: புரிகிறது நக்கீரரே! இது புரியாமலா யானும் புலவனாகி விட்டேன்? வெறுமனே 'ஒளி வடிவானவன் முருகன்' என்று நீர் சொன்னாலும், என் மனக்கண்ணில் 'ஒளி எப்படி இருக்கும்' என்று நான் கற்பனை செய்துதானே ஆக வேண்டும். அப்போதுதானே அது விளங்கும். அதைத்தானே தாங்களும் விளக்கியுள்ளீர். அறிவேன் அறிவேன்.

நக்கீரர்: நன்று நன்று. உலக உயிர்களை மகிழச் செய்யப் பேரொளி வடிவந் தாங்கி இடைவிடாது ஒளிவீசிக் கொண்டிருப்பவன் சிவந்த திருமேனியன் முருகன்.
                                                                                                                (தொடரும்)

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 15

நேரிசை வெண்பா

1.       கவிஞர் நடராஜன் பாலசுப்ரமணியன்  

நாலும் தெரிந்தவனாய் நல்லது செய்வதற்கும்
காலங் கருதிக் கடனாற்று - ஞாலம்கைக்
கொள்ள யிதுவே குறிப்பென் றிருத்திடு
வள்ளுவன் வாக்கை மனத்து!

நேரிசை ஆசிரியப்பா

2.       கவிஞர் பூங்கா சண்முகம், புதுச்சேரி

ஆலமாய் மாய்த்திடும் கடுங்கொரோனா மாய்க்கச்
சால  நன்றாம்  தனித்தல்  மக்காள்
காலம்  கருதிக்  கடனாற்று
கோலம்  சிறந்து  குவலயம்  மகிழவே.!

அறுசீர் விருத்தம்

3.       கவிஞர் வ.க.கன்னியப்பன்

ஆல காலம் போலநம்மை
    ஆட்டி வைக்கும் கொரோனாவை
ஓலை கொடுத்த னுப்பிவைப்போம்;
    ஒழிந்து போகச் செய்திடுவோம்!
வேலன் என்றுந் துணையிருப்பான்:
    வெற்றி நமக்கு விளைத்திடுவான்!
காலங் கருதிக் கடனாற்று;
    கவலை யெல்லாந் தீர்ந்திடுமே!

4.       கவிஞர் சோமு.சக்தி 

காலங் கருதிக் கடனாற்று 
    காயம் விரைவில் கரைந்தோடும்
ஓல மிடலால் ஒழிந்திடுமா
    ஓயாக் கொரோனா வொட்டுதலும்
ஞால நடப்பில் நாம்கண்ட
    ஞானம் சமூக விலகலுமாம்
சாலப் பொருளைத் தந்துதவி
    சாவைத் தடுத்தாற் சரிதானே !

வஞ்சி விருத்தம்

5.       கவிஞர் அபூ முஜாஹித்

தூல மொருநாட் தேயாதோ?
கோலம் மாறிப் போகாதோ?
ஞாலத் திருளிற் கரையேறக்
காலங் கருதிக் கடனாற்று

6.       கவிஞர் செல்லையா வாமதேவன் 

ஞாலம் புகழ நடைபோடு
காலங் கருதிக் கடனாற்று
ஆலக் கிருமி அதையோட்டச்
சீலந் தனிமை செயலாற்று.

குறுக்கெழுத்துப் போட்டி


ஆக்கம்: பைந்தமிழ்ச்சுடர்
நடராஜன் பாலசுப்பிரமணியன்

அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஓர் இலக்கணக் குறுக்கெழுத்துப் போட்டி. இது யாப்பிலக்கணத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட குறுக்கெழுத்துப் போட்டி.  தங்கள் விடையை 31.05.2020க்குள் tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். சரியான விடை எழுதியவர்கள் பெயருடன் விடை அடுத்த இதழில் வெளியாகும்.


குறுக்காக:
1. ஓர் அடியன் 1, 2, 3 சீர்களின் முதல் எழுத்து ஒன்றி வருதல்
2. ஓர் அடியின் முதலிரு சீர்களும் முரண்பட இணைந்து வருந்தொடை
4. ஓர் அடியின் அனைத்துச் சீர்களின் முதலெழுத்து ஒன்றி வருதல் _____ மோனை
5. சீர்கள் ஒன்றுடனொன்று இயைந்து கட்டுப்பட்டு நிற்பது
6. பாடல் - வேறு சொல்                                                  
10. குறள் வெண்பாக்கள் என்று அறியப்படுபவை  ________ சீர் வெண்பாக்கள்
11. முக உறுப்பு. வேற்றுமை உருபு                              
12. ஒரு வகை சிந்துப்பா                                                
13. வெண்பா ஓசை                                                        
14. 4 சீர்கள் கொண்டால்  ______________
                             
நெடுக்காக:
1. நேர் நிரை நேர்                                                           
2. ஈரசைச் சீர்                                                                 
3. இரு சீர்களின் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது
5. நான்கசைச் சீர்களின் மூன்றாமசை நேர் என்பதைக் குறிக்கும் சொல்
7. 6, 7, 8 சீர்கள் கொண்டவை ____________________ எனப்படும்
8. ஆசிரியப்பா ஓசை                                                    
9. கட்டளைக் கலித்துறை                                              
10. எழுத்தை _______ணி யாப்பது கட்டளை கலித்துறை

பாட்டியற்றுக 16

அன்பான கவிஞர்களே! இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
  1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.
  2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும்.
  3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.
  4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.
"எண்ணத் தெழுவஃ தெழுத்தா யெழுவஃ தினிமையதே"