'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

திருமுருகாற்றுப்படை - பகுதி - 1


உரையாடல்

பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன்

புலவர்: வணங்குகிறேன் நக்கீரரே!

நக்கீரர்: வருக புலவரே! வணங்குகிறேன். நலந்தானே!

புலவர்: உடலம் நலமாயிருக்க உள்ளம் நலமாயிருக்க வேண்டுமன்றோ? உடலமும் உள்ளமும் நலமாய் இருந்தால்தானே நலம் என்று பொருள். அந்த உளநலத்தை அளிக்க வல்ல அருளாளனாகிய உம்மையே நாடி வந்தோம்.

நக்கீரர்: புலவரே! புகழ்ந்தது போதும். அந்த உளநலத்தை அளிக்க வல்லவன் யான் அல்லன். பேரொளி வடிவமாய் விளங்கும் எம்பெருமானே!

புலவர்: ஆம்… நக்கீரரே! அப்பெருமான் உமது வழியே எனக்கு அதை அருள்வான் என்று நம்புகிறேன். அதனால் அவ்வருளை அளிப்பவர் நீர்தாமே!

நக்கீரர்: புலவரே! போதும் போதும்! நீர் என்ன கேட்க வருகிறீர் என்பது எனக்குப் புரிகிறது. வாருங்கள் கடற்கரைக்குச் செல்வோம்.

புலவர்: கடற்கரையில் காலாற நடந்து செல்வது எவ்வளவு மகிழ்ச்சியைக் கூட்டுகிறது. சிந்தனை செம்மைப்படச் செவியினிக்கச் சேதி சொல்லும் ஐயனே!

நக்கீரர்: அதோ! குணகடலில் தோன்றிக் கதிர் வீசிக் கொண்டிருக்கும் அந்தக் கதிரவனைப் பாரீர்.

புலவர்: ஆம்.. அக்கதிரோன் இவ்வுலகத்து உயிர்கள் மகிழ்வதற்காகவே தோன்றி வலம் வருகின்றானே!

நக்கீரர்: ஆம்.. அந்த அழகிய காட்சியைப் பாரீர்! அவன் தன்னுடைய பேரொளியை இடைவிடாது வழங்கி இவ்வுலகத்தை இருளிலிருந்து மீட்டுக் கொண்டிருக்கின்றான்.

புலவர்: அது மட்டுமா? எழுக! இவ்வுலகம் இனி உம் கையில்!” என்று நம்மை எழுப்புபவன் அவன்.

நக்கீரர்: இடைவிடாது உழைக்கச் சொல்லி நம்மை ஊக்குவிப்பவனும் அவனே!

புலவர்: அவனை யாவரும் புகழ வேறு கரணியம் வேண்டுமோ?

நக்கீரர்: அத்தகைய பேரொளி வடிவாய் விளங்கி, இடைவிடாது அருள்புரிந்து இவ்வுலகைக் காப்பவன் எம்பெருமான் முருகக் கடவுள்.

புலவர்: அடடா… என் மனக்கண்ணில் அவன் தோன்றும் செந்நிறக் காட்சி கண்டு மெய்ம்மறந்து போகிறேன். செந்நிறம் பொருந்தியவனாதனால் அவன் ‘சேயோன்’ எனப் பட்டானோ?

நக்கீரர்: சரியாகச் சொன்னீர்! செம்மை சேரச் சேரக் கருமை விலகுந்தானே. அகத்தில் அறிவு பெருகப் பெருக அறியாமை விலகுந்தானே.

புலவர்: ஆம். அடடா... அதைத்தான் காண்கிறேன். அக்கதிரவன் ஒளிபடக் கொஞ்சங் கொஞ்சமாய் இருள் விலகுவதுபோல என் மனத்துள் முருகனைச் சிந்திக்க என் அகத்திருளாகிய ஆணவம் அழிகிறது. ஆம்… அவன் எனக்குப் பேரின்பம் நல்குகிறான்.

நக்கீரர்: புலவரே! மற்றொரு காட்சியையும் கண்டீரா? கடலின் பசுமையும் கதிரின் செம்மையும் எப்படி நமக்குப் புலப்படுகிறதோ அவ்வாறே முருகனைக் கண்குளிரக் காணும் நமக்கு மயிலின் பசுமையும் அவனுடைய திருமேனிச் செம்மையும் விளங்குகின்றன அல்லவா?

புலவர்: அடடா! என்னே அருமையான காட்சி!

நக்கீரர்: தனக்குவமை இல்லாதான் முருகன். பிறகு ஏன் இவ்வாறு உவமையாக்கிக் கூறுகின்றேன்? புரிகிறதா உமக்கு?

புலவர்: புரிகிறது நக்கீரரே! இது புரியாமலா யானும் புலவனாகி விட்டேன்? வெறுமனே 'ஒளி வடிவானவன் முருகன்' என்று நீர் சொன்னாலும், என் மனக்கண்ணில் 'ஒளி எப்படி இருக்கும்' என்று நான் கற்பனை செய்துதானே ஆக வேண்டும். அப்போதுதானே அது விளங்கும். அதைத்தானே தாங்களும் விளக்கியுள்ளீர். அறிவேன் அறிவேன்.

நக்கீரர்: நன்று நன்று. உலக உயிர்களை மகிழச் செய்யப் பேரொளி வடிவந் தாங்கி இடைவிடாது ஒளிவீசிக் கொண்டிருப்பவன் சிவந்த திருமேனியன் முருகன்.
                                                                                                                (தொடரும்)

No comments:

Post a Comment