'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

காதல் காதல் என்குதே


கவிஞர் மதுரா

எழுசீர் சந்த விருத்தம்

தென்ற லாக வீசுங் காற்று
    தேக மெங்கு மீர்க்குதே
மென்மை யாக மேனி மீது
    மின்ன லொன்று தீண்டுதே
சன்ன மாக நீல வானில்
    சந்தி ரன்மேல் தோன்றுதே
அன்பி லாடு முள்ள மொன்று
    ஆசை யோடு வேண்டுதே            1.

மாலை யோடு வந்தி ருந்த
    மன்ன னைக்கண் தேடுதே
காலை மாலை கண்டு பேசக்
    கன்னி யுள்ள மேங்குதே
சாலை யோரப் பூவு மெல்ல
    சாடை பேசிப் பார்க்குதே
சோலை யெங்கும் தேடிப் பார்த்து
    சோர்ந்து சோர்ந்து போகுதே       2

உள்ள மெங்கும் பொங்கு மாசை
    ஊஞ்சல் கட்டி ஆடுதே
வெள்ளம் போலப் பெருக்கெ டுத்து
    வேகம் கொண்டு பாயுதே
கள்ளம் கொண்ட நெஞ்ச மின்று
    காதல் காதல் என்குதே
பள்ளம் நோக்கிப் பாயு மாறாய்ப்
    பாச உள்ளம் ஏங்குதே                  3

No comments:

Post a Comment