அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!
அனைவரையும் அடுத்த மின்னிதழின்
வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடையும் அதே வேளையில், கொரோனா என்னும் நுண்மீயால்
மக்கள் கொத்துக்கொத்தாக மடிந்து கொண்டிருப்பதை நினைந்து உள்ளம் நைந்துபோகிறது.
எங்குத் தோன்றியது? எவரால் தோன்றியது?
என்பதையெல்லாம் விடுத்து, என்ன செய்ய வேண்டும்? என்பதில் முழுமூச்சுடன் ஈடுபட வேண்டிய
கட்டாயச் சூழலில் நாமிருக்கிறோம். அரசு எத்தனை செயல்பாடுகளை முன்னெடுத்தாலும் அவை மக்களின்
நடத்தையால்தான் வெற்றிபெற முடியுமென்பதை அனைவரும் உணர வேண்டிய தருணமிது. இந்நுண்மீயை
அழிக்கும் மருந்தோ, தடுக்கும் மருந்தோ இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதை நம் உள்ளத்தில்
பதித்துக் கொண்டு அதன் தாக்கத்திலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதே சிறந்தவழி என்பதை
உணர்வோம்.
வீட்டிலிருந்து வெளியே செல்ல வேண்டிய
தேவையேற்பட்டால் முகக்கவசம் அணிந்தும், கையுறையணிந்தும் தேவையான சமூக இடைவெளியைக் கடைபிடித்தும்
நம்மைக் காத்துக் கொள்வதுடன் மற்றவர்க்கும் காவலாக இருப்போம். வீட்டிற்கு வந்தவுடன்
முகக்கவசம், கையுறைகளை வெளியிலேயே வைத்துவிட்டு, முகம், கை, கால்களை நன்றாகச் சோப்பு
போட்டுக் கழுவியோ அல்லது குளித்தோ நம்மையும், நம் வீட்டாரையும் கொரோனா தொற்றிலிருந்து
காப்போம்.
விலகியிருப்போம்!
விழித்திருப்போம்!
தனித்திருந்து வெல்வோம்.
என்றும் தமிழன்புடன்,
பாவலர் மா.வரதராசன்
No comments:
Post a Comment