'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

குறிஞ்சி நிலம்

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்



வெற்பு நிறைந்த இடங்களெல்லாம்
    மெல்லப் பாயும் சுனையருவி
ஒற்றைப் பாதை வழியெல்லாம்
    ஓங்கி வளரும் மூங்கில்கள்
பற்றைப் பூக்கள் மலர்ந்திருக்கும்
    பார்க்கப் பார்க்க எழில்தருமே
பொற்றைக் காடு வரைகளுமே
    பொன்னாய் மின்னும் குறிஞ்சியிலே        1

ஏரி சுனைகள் பலவாகும் 
    எங்கும் அருவி பாய்ந்தோடும்
மாரிக் காலம் மாறியதும்
    மண்ணில் நீரும் வற்றிவிடும்
ஊரில் பஞ்சம் வருகையிலே
    உண்ண உணவு கிடைப்பதில்லை
சோரி யின்றி மக்களெல்லாம்
    சோர்ந்து விடுவார் கோடையிலே              2

ஏற்ற நிலத்தைத் தேர்ந்தெடுக்க
    ஏறு நிலத்தைப் பண்படுத்தும்
சேற்று மண்ணில் கால்வைக்கச்
    சேயோன் அருளை வேண்டுவார்கள்
நாற்றுப் போடும் வேளையிலே
    நாதம் இசைத்து மகிழ்வார்கள்
காற்றில் மிதக்கும் ஓசையிலே
    காதல் செய்யும் பைங்கிளிகள்                  3

கிளிக ளெல்லாம் வட்டமிட்டுக்
    கீச்சுக் கீச்சென் குரலெழுப்பும்
ஒளிந்து வாழும் பூச்சியெல்லாம்
    ஒலியைக் கேட்டு மகிழ்ந்திருக்க
நெளிந்து செல்லும் புழுக்களெல்லாம்
    நிரையாய் ஊர்ந்து நடனமாடும்
தொளியில் நடக்கும் காட்சியெல்லாம்
    துயரம் மறக்க வைத்திடுமே                       4

மேட்டு நிலத்தில் தலையசைக்கும்
    வேங்கை மூங்கில் மரங்களெல்லாம்
காட்டில் குரங்கு கரடியெல்லாம்
    கலக்க மின்றித் திரியுமன்றோ
ஆட்டம் போட மயிலெல்லாம்
    அசைந்து களிக்கும் பைங்கிளிகள்
கூட்டி லிருக்கும் தேனீக்கள்
    குறிஞ்சி மலரில் மொய்த்திடுமே               5
  
மேவிச் செல்லும் மேகங்கள்
    மெல்லத் தூவும் மழைத்துளிகள்
காவிச் செல்லும் தேனீக்கள்
    காத்து நிற்கும் தேன்கூட்டை
நாவி லூறும் தேன்துளியை
    நாடும் குறிஞ்சி மக்களெல்லாம்
வௌவிச் செல்ல முனைவதற்கு
    வளைத்துக் கலைத்தே எடுப்பாரே            6

எடுத்த தேனில் விதவிதமாய்
    இன்ப மதுவும் வடித்திடுவர்
தொடுக்கும் நாணில் அம்பேற்றித்
    துரத்தி விலங்கை வேட்டையாடி
அடுப்பில் வைத்துச் சுட்டதனை
    ஆசை தீரப் புசித்திடுவார்
படுகல் லருகில் குடிசைகளைப்
    பாங்காய் அமைத்து வாழ்வாரே                7

வாழ்தல் வேண்டி வேளாண்மை
    வகையாய்ச் செய்வர் குறவர்கள்
சூழ்ந்து நிற்கும் குறமகளிர்
    சுழன்று சுழன்றோ டித்திரிந்து
மாழ்த லின்றித் தினைப்புனத்தை
    மகிழ்வு பொங்கப் பாட்டிசைத்துக்
கேழ்பு பயக்கும் நெல்வகையைக்
    கெடுத லின்றிக் காத்துநிற்பர்                    8

காக்கும் கந்தன் துணையிருக்கக்
    கலக்க மின்றிக் குறிஞ்சியிலே
தாக்கும் விலங்கை மோதிவீழ்த்தித்
    தயக்க மின்றி மனைவாழ்ந்தார்
ஊக்கம் கொடுக்கும் பெண்களெல்லாம்
    உதவி செய்தே இல்லறத்தை
ஓக்க நெறியில் என்றென்றும்
    உலகம் போற்ற வாழ்ந்தனரே                     9

வாழ்க்கை என்றால் குறைநிறைகள்
    வந்து மறையும் உலகினிலே
தாழ்தல் என்பது குறையல்ல
    சகிப்பு வேண்டும் உள்ளத்தில்
ஏழ்மை என்று கலங்காமல்
    எதிலும் நிறைவு கண்டதனால்
போழ்த லின்றிக் குறிஞ்சியினில்
    புதுமை வாழ்வு வாழ்ந்தாரே                       10

No comments:

Post a Comment