'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

கால் முளைத்த கல்


(மாறுரையும் நேருரையும்)

கவிஞர்பொன். இனியன்

kuralsindhanai@gmail.com

8015704659

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப்  பேதை  புகல்                                840
என்னும் இக்குறள் பேதைமை அதிகாரத்தின் ஈற்றுப் பாடலாக அமைந்துள்ளது.

இக்குறட்பாவுக் கமைந்துள்ள உரைகள் யாவும் அறிவிலியான ஒருவன் அறிஞரவையுட் புகுதலை இழிபு காட்டுமாறாக(வே) அமைந்துள்ளன. இது வள்ளுவர் தம்  கருத்தாதல் கூடுமா என்பது குறித்த ஓர் அலசலாகவும் இக்குறட்பாவின் உட்கிடக்கை என்னாம் என்பதை அறியும் ஒரு முயற்சியாகவும் அமைகிறது  இக்கட்டுரை.

முதலில், சில உரைகளைத் தொகுத்து அவற்றின் கருத்துகள் எத்துணையளவு குறளின் நுவல்பொருட்கு  இயைபு காட்டியும் அல்லது முரண்படவுமாயுள்ளன என்பது  காண்போம்.

மணக்குடவர்: கழுவாத காலைப் பள்ளியின்கண் வைத்தாற் போலும், சான்றோர் அவையின்கண் பேதை புகுந்து கூடி யிருக்கை.
பரிமேலழகர்: சான்றோரவையின்கண் பேதையா யினான் புகுதல் தூயவல்ல மிதித்த காலை இன்பந்தரும் அமளியின்கண்ணே வைத்தாற் போலும். இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம்.
குழந்தை: சான்றோரது அவையின்கண் அறிவில்லாதவன் புகுதல் கழுவாத காலைப் படுக்கையின்மேல் வைத்தாற் போலும். அதனால் அப்படுக்கை இழிவுபடுவது போலப் பேதையால் சான்றோர் கூட்டம் இழிவு படும்.
காளிங்கர்: ஒருவன் மாசறக் கழுவாத காலைத் தூவெண்துகில் விரித்த சிறந்த படுக்கைமேல் வைத்த அத்தன்மைத்து; கல்வியால் மாசற விளங்கிய மனத் தூய்மையுடைய சான்றோர் அவையுள் நெஞ்சு அழுக்குடைய பேதை புகுதல்.
பாவாணர்: பேதையானவன் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோரவையின்கண் புகுதல்; கழுவித் துப்புரவு செய்யாத காலை தெய்வநிலையமான கோவிலுக்குள் வைத்தாற் போலும்.
நாமக்கல் கவிஞர்: அறிவாளிகள் கூடியுள்ள சபையில்  ஒரு முட்டாள் புகுவது, கழுவாமல் அசுத்தமுள்ள கால்களைச் சுத்தமான ஆலயத்துக்குள் வைப்பது போல. (நல்லவர்கள் முட்டாளின் சகவாசத்தை அழுக்காகக் கருதுவர்).
வ சுப மாணிக்கனார்: அறிஞரின் அவைக்கு அறிவிலி போதல் கழுவாத காலைத் தவப் பள்ளியில் வைப்பது போல்.
து அரங்கன்: அறிவற்ற ஒருவன் கற்ற சான்றோர் அவையில் புகுதல் மிதிக்கத்தகாதவற்றை மிதித்துக் கொண்டு அக்காலைக் கழுவாமல் தூய்மையுள்ள பள்ளியில் புகுந்து மிதித்தல் போலாம்.
ச வே சுப்ரமணியன்: அறியாமை உடையவன் அறிவுடையோர் அவையில் இருத்தல் கால் கழுவாத ஒருவன்  நடுவீட்டுப் படுக்கையில் இருந்ததை ஒக்கும்.
ப முருகன்: கற்றோர் கூடிய சபையில் கல்லாத அறிவிலி ஒருவன் புகுதல் காலினைச் சுத்தம் செய்யாமல் படுக்கை யறைக்குள் புகுவதைப் போன்றது.
மேற்கண்ட உரைகள் எவ்வாறு குறளின் நுவல் பொருட்கு மாறுபடவும் இயைபின்றியும் அமைந்துள்ளன என்பது ஒன்றன்பின் னொன்றாகக் காண்போம்.

இவனால் அவ்வவையும் இழிக்கப்படும் என்பதாம் என்கிறார் பரிமேலழகர். அதனால் அப்படுக்கை இழிவுபடுவது போலப் பேதையால் சான்றோர் கூட்டம் இழிவு படும் என்பது குழந்தை உரை. கழுவாத கால் அதன் மாசினாலும் துர்மணத்தாலும் அறியப்படும். ஆனால் அவையுள் நுழைபவன் பேதை என்பது எதனால் / எவ்வாறு அறியப்படும் என்பது எவருரையிலும் காட்டப்படவில்லை.

நேர்ந்த இடங்களிலெல்லாம் இலக்கணக் குறிப்பு களையும் இலக்கிய நயங்களையும் குறளின் நுவல்பொருளுக்கான காரண நிமித்த வரையறை களையும் விரித்துச் சொல்லும் பாங்கினரான பரிமேலழகர் உரை உள்ளிட்ட எவருரையிலும் பேதை புகுவதால் சான்றோரவைக்கு நேரும் இடையூறு அல்லது இழுக்கு  என்னாம்  என்பது காட்டப்படவில்லை.

குறள் குறிப்பாகிய சான்றோன் மற்றும் பேதை என்பவற்றை எவரும் தக்கவாறு பொருள்படுத்திக் காட்டினாரில்லை என்றே தோன்றுகிறது.

பரிமேலழகர், அறவாணன், செம்பியன் நிலவழகன், சுப்பு ரெட்டியார், கோபால கிருட்டிணன், ஆ நா வாய்மை, ஆவெ இரா,  மு பெரி மு ராமசாமி, பாலசுப்ரமணியன் போன்ற பலரும் சான்றோர் என்பதற்குத் தக்கவாறு பொருள் காட்டாது குறள் மூலத்தில் உள்ளவாறே உரையில் வைத்தாண்டு கொண்டனர்.

பெரியோர், கற்றறிந்த அறிஞர், அறிவுடையோர் என்றெல்லாம் பிறர் பலவாறாக் குறித்திருக்கக் கல்வியால் மாசற விளங்கிய மனத் தூய்மையுடைய சான்றோர் எனக் காலிங்கரும் அறிவொழுக்கங்களால் நிறைந்த பெரியோர் எனப் பாவாணரும்  விரித்துக் காட்டுவர்.

பேதை எனும் குறள் குறிப்பை அறிவிலி என வ சுப மாணிக்கனாரும் அறிவில்லாதவன் எனக் குழந்தையும் அறியாமையுடையவன் என சா வே சுவும்  குறித்துள்ளனர். நெஞ்சு அழுக்குடைய பேதை என  விரித்துரைக்கிறார் காலிங்கர்.

மேற்குறித்த உரைகள் எல்லாம்  ஏதோ கற்றவர் மட்டுமே  மாசறு மனந்தூயராயும் ஒழுக்கமுடையராயும்இலங்குதல் போலவும் பேதையரெல்லாம் நெஞ்சழுக்குடையவர் என்பது போலவும் ஒரு பொருந்தாத பொய்யான  கற்பிதத்தைக்  காட்டுவனவாயுள்ளன.

கல்வியால் பெறுவது அறிவு; தான் பிறந்த குடியான் உறுவது ஒழுக்கம்.
காண்க:
கற்றனைத்தூறும் அறிவு (936),
இற்பிறந்தார் கண்ணல்ல(து) இல்லை இயல்பாகச் 
செப்பமும் நாணும் ஒருங்கு (951),
 இவை யெல்லாவற்றையும் விஞ்சியவாறாக,
அங்கண்  விசும்பின்  அகனிலாப்  பாரிக்கும்
திங்களுஞ் சான்றோரு  மொப்பர்மன் – திங்கள்
மறுவாற்றுஞ் சான்றோரஃ தாற்றார் தெருமந்து
தேய்வர் ஒருமா சுறின்
எனும் நாலடியார்ப் பாடலைச் சுட்டிக் காட்டி, இதனால்     சான்றோரின் தெய்வத் தன்மை உணரப்படும் என்கிறார் பாவாணர். 

எப்படித் துருவினாலும் தெய்வத்தன்மை யெனுங்கருத்தை நாலடியாரில் நம்மால் காண முடியவில்லை. அப்படியே இருப்பதாகக் கண்ணை மூடிக்கொண்டு நம்புவதானாலும் அது நாலடியின் கருத்தாவதன்றி குறளின் குறிப்பாகவோ கூற்றாகவோ அதைக் கொள்ளக் கூடுவ தெப்படி?

அன்புடமை பண்புடைமை யிவ்விரண்டும் ஆன்ற குடிப்பிறத்தல் (992) ஒழுக்கமுடைமை குடிமை (133) என்பவற்றால் கல்லாதவரிலும் மனந்தூய்மையும் ஒழுக்கமும் உண்டென்பது பெறப்படும். ஓதியும் பிறர்க்குரைத்தும் தான் உணர்ந்தடங்காப் பேதையரும் (834) உண்டென்பது கொண்டு, கற்றது ஒழுகாதவரும் உண்டு என்பதை அறியலாம். அதனால் சால்புடைமையைக் கற்ற அறிவுடையார்மாட்டு மட்டும் தொடர்புபடுத்திக் காட்டுதல் பொருந்துவதின்றாம்.

சாலுதல் - நிறைதல்;  சால்புடைமை - நிறையுடைமை. சாலுவது சால்பு; சால்புடையவர் சான்றோர். சான்றோர் எனற்கு நேரிய பொருளாகச் சால்புடையவர் என எளிமையாகக் காட்ட இயலும். ஆனால் எவருரையிலும் இது காணப்படாதது வியப்பை அளிக்கிறது.

பொறையுடைமையைப் போற்றி யொழுகுபவரே நிறையுடையராவார் (154) ஆதலின் பேதையர்  தம் அவை புகினும் அதைச் சான்றோர் பொறுத்துக் கொள்ளுவர்  எனலாம்.

பள்ளி என்பதை மடப்பள்ளி தவப்பள்ளி பள்ளிக் கூடம் தேவாலயம் கோயில் அமளி படுக்கை என ஒவ்வொருவர் ஒன்றைக் குறித்திருக்க, வெ ராமலிங்கம் பிள்ளை, படுக்கை மடப்பள்ளி பள்ளிக்கூடம் தேவாலயம் முதலிய பரிசுத்தமான இடங்களெல்லாம் கொள்ளலாம் எனக் குறிக்கிறார்.

மேற்கண்ட உரைகள் யாவிலும் காணப்படுவதாகிய ஒரேயொரு ஒற்றுமை அறிவிலி சான்றோர் அவை புகுதலை இழிக்கத் தக்கதாகக் காட்டியிருப்பதேயாகும். முட்டாள் முன் பின் சொல்லாமல் புகுந்து விடுவது எனச் சற்று நீட்டுகிறார் க பா அறவாணன்.

இதிற் குறித்துள்ள பள்ளி எனற்குப் பலரும் குறித்துள்ளவற்றைக் கோயில் கருவறை, படுக்கையறை என இரு வகைப்படுத்தலாம். புகல் என்பதற்கு உட்புகுதல் நுழைதல் என்பதில் மட்டும் பலரும் ஒன்றுபட நிற்பாராயினர். வெகு அரிதாக ஞா மாணிக்க வாசகன் மற்றும் தங்க. பழமலை போன்ற ஓரிருவர் மட்டிலும் பேச முற்படுவது எனக் குறித்துள்ளனர். சான்றோர் என்பதைக்  கற்றார் எனவும் பேதை என்பதைக் கல்லாதவன் எனவும் பலருரைகளில் காட்டப்பட்டுள்ளது. பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை அதனால் ஒவ்வொருவனும் செய்க பொருளை என்றது போலவே, கற்றவரே கண்ணுடைய ராவர்; அதனால் கற்க என அனைவரையும் ஏவுகிறார் வள்ளுவர். உண்மை இவ்வாறிருக்கக் கற்றாரவை அவனுக்குக் கதவடைக்குமானால் எங்குப் போய்க் கேட்பான்? எவரிடம் போய்க்கேட்பான்? வாய்ப்பற்றவனைக் கற்றிலனாயினுங் கேட்க (414) எனப் பரிந்துரைத்த வள்ளுவரே கற்றாரவையில் கல்லாதவன் புகுவதை இழிவு காட்டுவார் எனக் கருதுதற் கிடமில்லை  என்க. குணநலனே சான்றோர் நலன் (982) என்பதும் சான்றோர்க்குக் கடன் என்ப நல்லவையெல்லாம் (981) என்பதும் கருதின் கல்லாத பேதையரைச் சான்றோர் இழிவுபடுத்தார் என்பதும் பெறப்படும்.

கல்லாத அறிவிலி கற்றாரவை புகலாகாது அல்லது புகுவது இழிக்கத்தக்கது எனுங்கருத்து திருக்குறள் நெறிக்கு மாறானதாகும். கல்லாதவன் கேட்டல் வேண்டிக் கற்றாரவை புகுதலை வள்ளுவர் தடைசெய்தாரில்லை.  கல்லாதவர் சொல்லின் வகை அறியார் (713), சொல்லின் நடைதெரியார் (712) அதனால் மன்ற பல சொல்லக்  காமுறுதல் (649) வேண்டா. கற்றார்முன்  சொல்லா திருக்கப் பெறு (403) எனக் கூறுகிறார்.
கற்றார் முன் சொல்லாதிரு என்றதன்றி கற்றாரவை செல்லாதிரு எனலன்றாம். புகல் என்பதற்குப் போகலாகாது என்பதைவிட போய்க் கிளத்தலாகாது எனப் பொருள் கொள்வதே பொருத்தமாகும்.

மேலும், பேதைமை என்பது ஏதம் ஒன்று கொண்டு ஊதியம் போகவிடல் (831) என்பதனால், வேண்டத்தக்கன விலக்கத்தக்கனவற்றை அறியமாட்டாதவனாகி அவை யறிந்து இடையறிந்து சொல்ல வேண்டுவனவற்றைச் சொல்லத் தெரியாமல் கூடாதனவும் கூறுவானாதலின் அவன் அவையில் புகலுதல் விரும்பத்தக்கதன்றாயிற்று. அதாவது பேதை அவை புகுதலை ஊக்குவிப்பதும் அவையிற் புகலுதலை விலக்கச் சொல்வதுமே  குறள் நெறியாகிறது.

இப்பாடலின் மூலப்படியில்,
கழாஅக்கல் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப்  பேதை  புகல் 
என்றே இருந்திக்க வேண்டும்.

கழாக்கல் என்பது பாடம். இப்பாடலின் ஈற்றுச்சீர் புகல் என்றது கழறுதலை. புகலுதல் என்பதைப் புகுதலாகப் பிறழப் பொருள் கொண்டவாறாக உரையாசிரியர் எவராலோ (அது கால் கொண்டு் நிகழ்த்தப் பெறுதலால்) கல் என இருந்ததைக் கால் என மாற்றியிருக்கக் கூடும்  என எண்ண வேண்டியுள்ளது.

கழுவுதல் எனற்கு நீரூற்றித் தூய்மை செய்தல் என்பது நேர்ப்பொருளாயினும்,  துவைத்தல்,  துடைத்தல்,   மாசு நீக்கல், செம்மைப்படுத்தல் என்பன துணைப் பொருளுமாம். வட்டாக உருக்குதல் என்பதையும் இதற்குப் பொருளாக அகராதிகள் கூறுகின்றன. கழாக்கல் என்றது திருவுருவாகச் செம்மையாய் வடிக்கப்பெறாத வெறுங்கல் என்பதாகும்.
காண்க:
ஆங்கொரு கல்லை வாயிலிற் படியென்                    
றமைத்தனன் சிற்பி  மற்றொன்றை
யோங்கிய பெருமைக் கடவுளின் வடிவென்
றுயர்த்தினன்                            - பாரதியார்

தூவாத நீக்கியும் தொகுத்துச் சொல்லவும் வல்லவனல்லாத பேதை சான்றோரவையில் பேச முற்படுதலானது செவ்விதாய் தெய்வச் சிலையாய் வடிக்கப் பெறாத வெறும் கல்லைப் பள்ளியுள் வைத்தற்கு ஒப்பானதாகும் என்பது இப்பாடற் கருத்தாகிறது.

No comments:

Post a Comment