'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

அன்னை அந்தாதி – 2


பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


நின்னைச் சரணடைந்து நெஞ்சுருகி வேண்டியும்
இன்னு மிரங்காத தேனம்மா - நுண்மியால்
இம்மா நிலம்படு மின்னலைக் கண்டும்நீ
சும்மா விருப்பதேன் சொல்                                              1

சொல்லியழ யாருமில்லை துன்பந் தொடராமல்
வெல்லும் வழிகாட்டி மீளச்செய் - வல்லாளே
உன்னால் முடியாத தொன்றுண்டோ? தாமத
மின்னுமேன்? சூல மெடு                                                 2

எடுத்துன்ற னாட்டத்தை யின்றே தொடங்கு
நடுநடுங்கி யோடவிடு நச்சை - அடங்காமற்
குத்தாட்டம் போடும் கொரோனாவைச் சூலத்தால்
குத்தி நசுக்கியே கொல்                                                 3

கொன்று குவித்துக் குலைநடுங்கச் செய்யுமி(து)
என்று மடியுமென் றேங்குகிறோம் - உன்பதம்
பற்றி யுளமுருகிப் பாடினும் காவாக்கால்
தொற்றால் தொலையு முயிர்                                         4

உயிராய் உறவாய் உணர்வில் நிறைந்தாய்
தயைபுரிய வேனோ தயக்கம் - துயர்துடைப்
பாயோ? தவிக்கவிட்டுப் பார்ப்பாயோ என்செய்வோம்
நோயோடு போரிடுவோம் நொந்து                                 5

நொந்துமனம் வாடுமுன் நோக்கி யிதமளிக்க
முந்திவர வில்லையெனில் மூச்சடங்கும் - சந்ததமும்
உன்னைத் தொழுவோரை உய்விப்ப துன்கடனே
மின்னலாய்ப் பூத்துவந்து வெட்டு                                  6

வெட்டித்தான் சாய்த்துவிடு வெந்தழலால் சுட்டுவிடு
கட்டுக்குள் பூட்டிவிடு காளியம்மா - சட்டென்று
செந்நாவை நீட்டிச் சினத்துடன் கண்ணுருட்டி
வந்தவழி யோட்டிட வா                                                  7

வாராது போனாலோ வையந் தனிலுன்னை
யாராரோ கண்டபடி யேசுவர் - பாராளுந்
தாயே! அதுகேட்டுத் தாங்கிடுமோ வென்னுள்ளம்
நீயே புகல்வாய் நெறி                                                     8

நெறியோடு வாழ்ந்தும் நிலத்தினைச் சுற்றும்
வெறிகொண்ட தொற்றை விரட்டி(டு) - அறியாமற்
செய்த பிழைபொறுத்துச் சீராக்க மாகாளி
தெய்வமே வாராய் சிலிர்த்து                                       9

சிலிர்த்த படிநீயும் சிம்மத்தி லேறி
உலகை வலம்வர வோடும் - நிலத்தை
உலுக்கிய தொற்று மொழிந்திட வெங்கும்
நிலைத்திடும் நிம்மதி நின்று                                     10

No comments:

Post a Comment