'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

தனிமை


கவிஞர் சரஸ்வதிராசேந்திரன்

ஊரே அல்லோல கல்லோலப் பட்டது.

“தெரியுமா உனக்கு? நம்ம  பெரிய மனிதர் திருமேனிக்குக் கொரொனாவாம்”

“என்ன ரூமரை கிளப்புறே?”

“சே… நல்ல மனிதர், ஊரிலே எத்தனை பேருக்கு நன்மை செய்திருக்கிறார். அவருக்கா வரணும்”

“அவரேதான் சந்தேகப்பட்டு டாக்டரிடம் போயிருக்கிறார். விடுவாங்களா… ஆம்புலன்ஸிலே ஏத்தி அப்பல்லோவிற்கு கொண்டு போயிட்டாங்களாம்”

“ஆமாம், பெரிய மனிதர், அதான் அப்பல்லோ. நீயும் நானுமின்னா அரசாங்க ஆஸ்பத்திரிதான்”

திருமேனி ஆஸ்பத்திரிக்குப் போனாலும் போனார், ஊர் மக்களுக்கு வெறும் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரிதான்.

“என்ன இருந்தாலும் நம்ம ஊர்ப்பெரியவர் செய்தி கேட்டும் சும்மா இருக்க முடியுமா? போனிலாவது நலம் விசாரிப்போம். ஆளாளுக்குப் போன் பண்ணிப் பேசியது திருமேனிக்கு ஒரு தெம்பே கிடைச்ச மாதிரிதான் இருந்தது. நல்ல வேளை பத்து தினங்களில் நலமாகி வீடு வந்தார். போனில் கரிசனமாய்ப் பேசியவர்களில் ஒருவர்கூட நேரில் வந்து நலம் விசாரிக்க வராதது அவருக்கு ஆச்சரியமாக இருக்க, மனைவி சொன்னாள் “உலகமே அவ்வளுதாங்க”.

“என்ன சொல்றே ?”

“கொரோனா சரியாப் போனாக்கூட மறுபடியும்  வரலாம்னு டிவியிலே சொன்னதைக்கேட்டு ஏன் நாமாகப் போய் அவரைப் பார்த்து நோயை வரவழைச்சிக்கணும்? யாரும் அவர் வீட்டுக்குப் போகாதிங்கன்னு ஊரிலே கட்டுப்பாடு வச்சிருக்காங்களாம். அதான் வேலைக்கு வரலேன்னு வேலைக்காரி போன் பண்ணி சொன்னாங்க”.

“அடக்கடவுளே… நம்மைத் தனிமைப் படுத்திட்டாங்களே. நல்லது கெட்டதுன்னா யாரும் வர மாட்டாங்களே. இதுக்கு நான் கொரானாவிலேயே செத்துப்போயிருக்கலாம் போல”, நொந்துபோனார் திருமேனி.

No comments:

Post a Comment