பைந்தமிழ்ச்
செம்மல்
இணுவையூர் வ-க-பரமநாதன்
”செங்கழு மலரின் மென்மை
தேங்கனிச் சுவையின் தேறல்
திங்களின் ஒளியாய்த் தோற்றம்
சீர்கவி வழங்கும் ஊற்றம்”
என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களால் பாராட்டப்படுபவர்; கடல் கடந்து தமிழைப் பரப்பிக் கொண்டிருப்பவர்; தமிழுணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்; தன்னுடைய நூல்களின் வழியாக உணர்வையும் உந்துதலையும் மற்றவர்களுக்குச் சேர்க்கும் விதமாகத் தமிழ்ப்பணியாற்றி வருபவர் பைந்தமிழ்ச்செம்மல் இணுவையூர் வ.க.பரமநாதன் அவர்கள்.
இவர் ஈழத்தின் வடபகுதியில் அமைந்த, வரலாற்றுச் சிறப்புடைய ஊரான இணுவில் என்னும் ஊரில் 23-02-1955-இல் பிறந்தார்.
இப்பகுதி விவசாய மக்களைக் கொண்ட பூமியாகும். இவருடைய பெற்றோர் கணேசு – தவமணி ஆவர். இவருடைய தாயாரின் தந்தை வி.எம்.நாகலிங்கம் அவர்கள் 1930களில் மிகச்சிறந்த நாடக நடிகராக விளங்கினார். இவரை அண்ணாவி நாகலிங்கம் என்றே அழைப்பர்.
கல்வி: சிங்கள அரசின் தரப்படுத்தல் முறைக்குள் சிக்கிப் பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பினை இழந்ததால் இவரது படிப்பு 12-ஆம் வகுப்போடு நின்று போனது.
தொழில்: மருத்துவமனையில் படப்பிடிப்புப் பகுதியில் (X-ray department) எக்ஸ்-கதிரியலாளராகப் (Radiographer) பணிபுரிந்தார்.
போர்ச்சூழல்
காரணமாக மனைவி பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்து டென்மார்க் வந்தடைந்தார். அங்கு அதே கதிரியலாளர் (Radiographer) வேலையைத் தொடர்ந்தார். தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
குடும்பம்: இவருடைய மனைவி அந்நாட்டில் முதியவர்களைப் பராமரிக்கும் அரச நிர்வாகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் கனிணித் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுப் பணிபுரிகிறார். மற்ற இருவரும் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். இரண்டு பெயரன்மார் உள்ளனர்.
இலக்கிய ஈடுபாடு: சிறுவயதிலிருந்தே தமிழ்மீது பற்றுக் கொண்டவர். இவர் முதலில் தொடராகப் படித்த நூல் பொன்னியின் செல்வன். கவிதையில் மிகுந்த நாட்டமுடையவர். இவருடைய உறவினர் பண்டிதர் கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்களிடம் கவிதை கற்றார். அவரோடு பல நூறு கவியரங்குகள் கண்டார். 20ஆவது அகவையில் இவரது கவிதைகள் ஈழத்து்ப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அங்கு நிலவிய போர்ச்சூழல் அவருடைய கவிதை கற்கும் வாய்ப்பினைப் பறித்துக் கொண்டது.
டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இந்நாள்களில் பைந்தமிழ்ச்சோலையின் வழியாகப் பல்வேறு மரபு பா வகைகளைப் பாவலர் மா.வரதராசன் அவர்களிடம் கற்று வருகிறார்.
பைந்தமிழ்ச் சோலையின் பல கவியரங்கங்களில் பங்கேற்று வருவதுடன் பைந்தமிழ்ச் சோலையின்
மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியிலும் பங்கு கொண்டுள்ளார். மேலும், பைந்தமிழ்ச்சோலை எண்பேராயத்தில் பங்கு வகிக்கிறார். தமிழ்குதிரில் புலம்பெயர் வாழ்வியலை - டென்மார்க் நாட்டின் வாழ்வினை - வாய்ப்பினைப் ’புலம்பெயர் நாடும் வாழ்வும்’ எனும் தொடராக எழுதி வருகிறார்.
இவர் பெற்ற பட்டங்கள் / விருதுகள்:
·
பைந்தமிழ்ப் பாமணி
·
பைந்தமிழ்ச் செம்மல்
·
சந்தக் கவிமணி
·
பைந்தமிழ்க்குவை
·
நற்றமிழாசான்
இவரது நூல்கள்:
1. காலம் தந்த வலிகள் (2016)
2. எண்ணச்சிதறல் (2017)
3. பரல்கள் (2018)
இவருடைய ஈழத்துப் போர் பற்றிய
பாக்கள் நெஞ்சை உருக்குவன. ஈழத்துப் போரின் இன்னல்களைப்
பாடும் கவிஞர் இணுவையூர் வ-க-பரமநாதன் அவர்களைப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம்.
No comments:
Post a Comment