'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

காக்கைவிடு தூது - 1


பைந்தமிழ்ச் செம்மல்
வள்ளி முத்து
   
                                                                    காப்பு
திங்கள் முகத்தாளைச் சேர வழியின்றிப்
பொங்கும் கடல்போல் புலம்புகின்றேன் - எங்கள்
பழுதில்லாக் காதல் பகர்தற்குத் தோதாய்க்
கழுகுமலை வேலவனே காப்பு..!

அவையடக்கம்
அலையடிக்கும் முந்நீர்போல் ஆன்றதமிழ்ச் சான்றோர்
கலைமிகுத்த நம்மொழியைக் கண்டேன் - நிலைதெரிந்தேன்
புன்மேல் பனித்துளிபோல் நானும் புலவரென்று
சொன்மாலை தந்தேன் துணிந்து

தூதின் தொடக்கம்
நோக்கும் திசையெல்லாம் நொந்துயிர் சாகும்படி
பார்க்கும் பொருளெல்லாம் பாதகத்தி போல்தெரிய                                      1

யாக்கை ஒடுங்கி எதையோ நினைத்திருத்தேன்
ஆக்கம் தொலைத்தவர்க்கு ஆறுதல் போலவே                                                 2

காக்கையொன்று வந்திறங்கும் காட்சிகண்டேன் வாயிலிரை
தேக்கிவைத்துத் தம்மிணைக்குத் தேர்த்தூட்டும் அன்புகண்டேன்             3

ஆம்பல் மலரிரண்டு அல்லிரவை மேல்பூண்டு
வேம்பில்  விளையாடு  தென்றே வியந்துநின்றேன்..!                                       4

வாட்டும் பசித்தீயில் மக்கள் வருந்திநிற்கக்
கூட்டும் பொரியலும் கோனுன்னும் கோலம்போல்                                           5

வாயூட்டி அன்பை வலுப்படுத்தும் காக்கையால்
நோயூட்டிப் போனவளை நொந்து நினைத்துநின்றேன்..!                                6

இன்பனி நீங்கி இளவேனில் வந்துவிட்டால்
வெண்பனி  போலவே வேம்பெங்கும் பூப்பூக்கும்.!                                            7

தந்தை வளர்த்தமரம் தாங்கிக் கிளைபரப்ப
விந்தைப் பறவையெல்லாம் வீட்டில் இளைப்பாறும்.!                                      8

ஒற்றைக்கால் பந்தர்போல் ஓங்கும் மரத்தின்கீழ்
சற்றே துயரோடு சாய்ந்திருந்த போதில்தான்                                                    9

கள்ளமில்லாக் காக்கையின் காதல் கரைபுரளத்
துள்ளி எழுந்தஎன்னுள் தூதெண்ணம் தோன்றியது..!                                     10

அன்ன நடைபயிலச் சின்ன இடைநொடுங்கப்
பின்னல் அசைந்தாடப் பேரழகி செல்லுவழி                                                     11

உள்ளம்  உடைந்தழிந்து ஓடியதை ஊரறியார்
கள்ளம் மறைத்திருந்தால் காதலிலே வெற்றியுண்டோ..!                               12

நெற்றிப் பிறையிலே நித்திலத்தைத் தோற்றுவித்து
முட்டும் கரைபோல் முழுநீள் புருவத்தாள்                                                          13

பாற்கடலில் பள்ளிகொண்ட பாரளந்தான் போலவே
வேற்கண்ணாள் மையென்னும் நஞ்செழுதும் வாட்கண்ணாள்                                                                                                           14

கொல்லுகின்ற யானைபோல் கோல முலையிரண்டை
மெல்லிய கச்சால் மீறாது  கட்டிவைப்பாள்..!                                                       15

வில்விழியாள் மென்மொழியாள் கார்குழலாள் வற்றாது
கள்வடிக்கும் காம அதரத்தாள் பெண்மயிலாள்..!                                              16

காமன் வகுப்பறையில் காதல்  தெரிந்தவள் 
ஈம விறகடுக்கி என்னுயிர் எ...ரிப்பவள்..!                                                               17
  
அந்த அணங்கவளின் ஆவல்  மொழிகேட்க
நொந்து உடலொடுங்கி நூல்போல் இளைத்திருந்தேன்..!                                 18

ஆறிரண்டு திங்கள் அவள்முகம் காணாமல்
நூறிரண்டு  ஆண்டாய் நுடங்கியது போல்நொந்தேன்..!                                  19

பேச்சழகும் வாள்விழியின் வீச்சழகும் கண்டுகேட்டு
மூச்சிறைந்தே வீட்டில் முடங்கிருந்த போதில்தான்                                          20

காகாகா என்றே கரையுமொலி கேட்டேன்னைக்
காகாகா என்றே கசிந்துருகிக்  காக்கையிடம்                                                    21

பேசலானேன் பெருந்துயரை வார்த்தையில் அள்ளியள்ளி
வீசலானேன் மென்மொழியில் தேனள்ளிப் பூசலானேன்..!                              22

                                                                                      தூது  தொடரும்..!

No comments:

Post a Comment