Jun 14, 2020
ஆசிரியர் பக்கம்
அன்பு நண்பர்களே! அருமைத் தமிழோரே!
அனைவரையும் அடுத்த மின்னிதழின்
வழியாகச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இலக்கணம் மீறப்பட்டாலோ பின்பற்றப்படாமல்
போனாலோ ஒன்றின் தனித்தன்மையும் அது எழுந்த காரணமும் வரலாறும் காணாமல் போய்விடும். தொல்காப்பியம்
நமக்குக் கிடைத்த மிகப்பெரிய வரமாகும். பிற்காலத்தில் வடவெழுத்துகளையும் தமிழோடு சேர்க்க
வேண்டும் என்ற கொள்கையெல்லாம் நிற்காது தொல்காப்பியம் சொன்ன வழியே தமிழ் இன்றளவும்
வழங்கிவருகிறது. இலக்கணத்தை மீறி வடமொழி ஒலிகளை ஏற்றுக்கொண்டவை இன்று வெவ்வேறு மொழிகளாயின
என்பதே இதற்குச் சான்றாம். தமிழ் எழுத்துகள் முப்பஃதே. தமிழைத் தவிர மற்ற இந்திய மொழிகள்
எல்லாம் சற்றேறக்குறைய ஐம்பது எழுத்துகளைக் கொண்டவை. இதிலிருந்தே தமிழின் தனித்தன்மை
விளங்கும். தமிழைச் சிதையாமல் காக்கும் வழி இலக்கணத்தைக் கடைப்பிடிப்பதே ஆகும்.
அண்மையில் நம் தமிழகத்து அரசு
ஊர்ப் பெயர்களை ஆங்கிலத்தில் எழுதும்போது தமிழின் ஒலிப்பு மாறாமல் எழுத வேண்டும் என்னும்
ஆணை பிறப்பித்து, ஒரு பட்டியலையும் தந்துள்ளது. இது வரவேற்கத்தக்கதே. ஆனால் மிகவும்
தேவையான மற்றொன்றையும் அரசு கருத வேண்டும். அஃதென்னவெனில், தற்போது பல ஊர்ப் பெயர்கள்
பேச்சுவழக்கால் பொருள் புரியாத அளவுக்கு மாறிவிட்டன. இதனால் அவ்வூர்களின் பெயர்க் காரணமும்
வரலாறும் மறக்கப்பட்டு மறைந்து போகின்றன. இவற்றை மீட்டெடுக்கும் பொருட்டு ஊர்களின்
பெயர்களைச் சரியாக எழுத வேண்டும். காட்டாகச், செங்கழுநீர் நிறைந்திருந்த பகுதி செங்கழுநீர்பட்டு
என்றிருந்தது. இன்று செங்கற்பட்டு ஆகி நிற்கிறது. மயிலாப்பூர் - மயில் ஆர்ப்பு ஊர்
- மயிலார்ப்பூர் என வழங்க வேண்டும். இத்தகு
மாற்றத்தால் மறைந்துபோன நம் வரலாற்றை மீட்டெடுப்பது நம் கையில்தான் உள்ளது.
என்றும்
தமிழன்புடன்,
பாவலர்
மா.வரதராசன்
மரபைக் காப்போம்!
பாவலர்
கருமலைத்தமிழாழன்
1. மரபு பாட்டே தமிழ்ப்பாட்டு
தாலாட்டும் ஒப்பாரிப் பாட்டும்
வாழ்ந்த
தமிழர்தம் பண்பாட்டைக் கூறும் பாட்டு
காலாட்டிக் கையாட்டி வயலில்
வேலை
களைப்பின்றிச் செயப்பாடும் நாற்றுப் பாட்டும்
கோலாட்டிக் கிணற்றுநீரை
இறைப்ப தற்குக்
கோவணத்தில் நின்றிசைக்கும் ஏற்றப் பாட்டும்
நூலாக வாராமல் வரலா றாக
நின்றொலித்து நமைமயக்கும் நாட்டுப் பாடல்! 1
ஆயிரங்கள் இரண்டிங்கே கடந்த
பின்பும்
ஐந்துபெரும் காப்பியங்கள் உள்ள தின்றும்
பாயிரமாய்ச் சங்கத்துப்
பாக்க ளெல்லாம்
பைந்தமிழின் பெருமையினைச் சொல்லு தின்றும்!
தாயினுடைப் பால்போன்ற குறளின்
முப்பால்
தமிழுக்கு வலுவூட்டி நிற்கு தின்றும்
சேயிக்கு நாளையுமே சொல்லும்
வண்ணம்
செம்மாஅந்(து) இருப்பதெல்லாம்
மரபு பாட்டே! 2
காட்டாகச் சொல்வதெல்லாம்
பத்தை எட்டை
கண்முன்னே காட்டுவது கம்பன் பாட்டை
ஊட்டுதற்கே அறவொழுக்க நூல்க
ளாக
உரைப்பதெல்லாம் பதினென்கீழ்க் கணக்கைத் தானே !
ஏட்டினிலே இருந்தபோதும்
புதுமை ஐக்கூ
எடுத்துரைக்க இயலாத சொற்கோ லங்கள்
நாட்டினிலே என்றென்றும்
வரலா றாக
நமக்குதவ நிற்பதெல்லாம் மரபு பாட்டே ! 3
2. மரபே மாத்தமிழின் மாண்பு
படித்தவுடன் நெஞ்சத்தை
ஈர்க்க வேண்டும்
பதிந்துநெஞ்சில் கல்வெட்டாய்த் திகழ வேண்டும்
இடித்துரைக்கும் கருத்தெனினும்
இனிய சொல்லில்
இதமாக எடுத்துரைத்தே உணர்த்த வேண்டும்
வடிக்கின்ற சொல்லெல்லாம்
பொருள்பொ திந்து
வாழ்க்கைக்கு நல்வழியைக் காட்ட வேண்டும்
படித்தவரும் பாமரரும் புரிந்து
கொள்ளும்
படிச்சொற்கள் எளிமையாக இருக்க வேண்டும்!
4
புதுக்கவிதை எனவிங்கே எழுத்தைக்
கூட்டிப்
புரியாமல் எழுதுவது கவிதை யன்று
மதுக்கவிதை எனமரபில் சொன்ன
போதும்
மயக்கத்தைத் தாராத தெளிவு வேண்டும்
எதுகவிதை மரபுபுது எதுவென்
றாலும்
எழுச்சியுடன் வீச்சினிலே தைக்க வேண்டும்
பொதுமையெனும் பயிர்வளர்த்துப்
புரட்சி செய்யும்
போர்ப்பாட்டே கவிதையாக நிலைத்து நிற்கும்!
5
சொந்தக்கால் இல்லாமல் நடத்தல்
போல
சொல்யாப்பில் அமையாமல் எழுதும் பாக்கள்
செந்தமிழ்க்குச் செம்மொழியின்
தகுதி யெல்லாம்
செம்மையாப்பு சங்கத்துப் பாக்க ளாலே
எந்தமொழி வந்தபோதும் இலக்க
ணத்தின்
எயிலாலே தனித்தமிழாய் உள்ள தின்றும்
நந்தமிழா யாப்பறிந்து கவிதை
பாடு
நறுந்தமிழும் வாழுமுன்றன் பெயரும் வாழும்! 6
3. மரபு கவிதையே மாத்தமிழைக் காக்கும்
முகநூலில் நட்புதனை வளர்த்தல்
போல
மூத்தமொழி முத்தமிழை வளர்க்க வேண்டும்
அகநூலில் அன்புதனை வளர்க்கும்
போதே
அகிலத்தார் மனிதரென்று மதிப்பர் ஏற்பர்
தகவுடைய இலக்கணத்தில் எழுதும்
போதே
தரமான கவிதையென உலகோர் சொல்வர்
நகமகுடம் விரற்களிக்கும்
உறுதி போல
நல்யாப்பே கவிதையினை நிலைக்க வைக்கும்!
7
சங்கத்துப் பாட்டெல்லாம்
கட்ட மைப்பில்
சருக்காமல் சாயாமல் அமைந்த தாலே
பொங்குகடல் அழித்தபோதும்
களப்பி ரர்கள்
பொலிவிழக்க வைத்தபோதும் மாய்ந்தி டாமல்
செங்கதிராய் இன்றளவும்
ஒளிர்ந்து நின்று
செம்மொழியாய் உலகோரை ஏற்க வைத்தும்
மங்காத முதன்மையினம் தமிழ
ரென்று
மார்தட்டிச் சொல்வதற்கும் நிற்கு திங்கே!
8
புதுக்கவிதை என்பதெல்லாம்
அகவல் தானே
புதுமையெனச் சொல்கின்ற ஐக்கூ கூட
முதுகுறள்பா வடிவம்தான்!
ஏழு சீரில்
முழுக்கருத்தைச் சொல்வதுபோல் சொல்லும் பாதான்
எதுகுறும்பா குறுந்தொகையின்
பாட்டெல் லாமே
எடுத்துரைக்கும் குறும்பாவின் வடிவ மென்றே
மதுமயக்கி அறிவிழக்க வைத்தல்
போன்று
மாத்தமிழை வெறுஞ்சொல்லால் தாழ்த்திடாதீர்! 9
கணினிக்கே ஏற்றமொழி என்று
ஞாலக்
கல்வியாளர் போற்றுகின்ற செம்மைத் தமிழை
மணியான அறிவியலின் கருத்தொ
லிக்கும்
மணித்தமிழைக் காப்பதுநம் கடமை யன்றோ
திணித்தபோதும் வடமொழியைத்
தூக்கெ றிந்து
திகழ்கின்ற தனித்தமிழை நலிவு செய்து
பிணிசெய்யும் ஆங்கிலத்தைக்
கலந்தி டாமல்
பிற்காலம் போற்றுமாறு மரபைக் காப்போம்! 10
மாடல்ல மாண்பு
கவிஞர் பொன். இனியன்
kuralsindhanai@gmail.com
8015704659
மாறுரையும் நேருரையும்)
கேடில் விழுச்செல்வங்
கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை (400)
எனுங் குறட்பாவுக்கான
பல உரைகள் மாடு என்ற சொற்குச் செல்வம் என்ற பொருள் காட்டியவா றாகவே எழுதப் பட்டிருக்கின்றன.
வெகு சிலரால் அது பெருமை சிறப்பு எனவும் காட்டப்பட்டுள்ளது. இதுகுறித்த ஓர் அலசலாக
அமைகிறது இக்கட்டுரை.
முதற்கண் நாமறிந்த
உரைகள் சிலவற்றைத் தொகுத்துக்கொண்டு அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துகளைக் குறித்துச்
சிந்திப்போம்.
மணக்குடவர்: ஒருவனுக்குக் கேடில்லாத சீரிய பொருளாவது கல்வி, மற்றவையெல்லாம் பொருளல்ல.
குழந்தை: கல்வியே சிறந்த பொருளாகும். மற்றவை யெல்லாம் பொருளல்ல.
பரிமேலழகர்: ஒருவனுக்குச் சீரிய செல்வமானது
கல்வி; அஃதொழிந்த மணியும் பொன்னும் முதலாயின செல்வமல்ல.
பாவாணர்: ஒருவனுக்கு அழிவில்லாத சிறந்த செல்வம் கல்வியே; மற்ற பொருட்செல்வங்க
ளெல்லாம் சிறந்த செல்வங்களாகா.
க ப அறவாணன்
: கல்வி யல்லாத ஏனைய மண்ணும் பொன்னும் செல்வங்களல்ல.
வ சுப மாணிக்கனார்: அழியாத சிறந்த செல்வம் கல்வியே; பிற பொருட்கள் செல்வமல்ல.
முனுசாமியார்: ஒருவனுக்கு அழியாத சீரிய செல்வமானது கல்வியேயாகும். அஃதல்லாமல் மற்றைய
செல்வங்களெல்லாம் பெருமையானவை யல்ல.
ஞா மாணிக்கவாசகன்: ஒருவர்க்கு நிலையான செல்வம் கல்வியறிவேயாகும்; மற்ற செல்வங்க ளெவையும்
அத்தகைய சிறப்புக்குரியவை ஆகா.
‘மாடல்ல’ மற்றையவை
என்பதனை மற்றவை யெல்லாம் பொருளாகா என மணக்குடவரும், மணியும் பொருளும் முதலாயின செல்வமாகா எனப்பரிமேலழகரும்,
மற்ற செல்வங்களெல்லாம் பெருமையானவையல்ல என முனுசாமியாரும், சிறப்புக்குரியனவாகா என
மாணிக்கவாசகனும் குறித்திருக்க இவற்றின் தொகுப்பே போல மற்ற பொருட்செல்வங்களெல்லாம்
சிறந்த செல்வங்க ளாகா என்கிறார் பாவாணர்.
மற்ற செல்வங்கள்
தன்னிடம் நிலைக்க மாட்டா என வெ.ராமலிங்கமும் தொடர்ந்து துணை செய்வன அல்ல என மு வரதராசனும்
குறித்தனர்.
உரைக்கருத்தினூடே,
கு.ச.ஆனந்தன், குழந்தை போன்றோர் மாடு=பொருள் எனவும், மாடல்ல= செல்வமாகா என கோபாலகிருட்டினன்
முதலானோர் குறித்துக் காட்டியிருக்க, முற்காலத்தில் ஆவுங் காளையும் எருமையும் ஆகிய
‘மாடுகளே’ செல்வமாகக் கருதப்பட்டதினால் மாடு எனும் பெயர் செல்வப் பெயராயிற்று எனும்
விளக்கத்தையும் வைக்கிறார் பாவாணர்.
இக்கருத்தியல்
ஏற்புடையதாகவே தோற்றினும் மாடு என்ற சொல், வள்ளுவம் எழுந்த காலத்தில் செல்வம் என்ற
பொருளில் வழக்கு பெற்றிருந்ததா என்பது தனி ஆய்வுக்கு உரியதாகிறது. `
சங்க இலக்கியங்கள்
பிற எதனிலும் மாடு என்பது செல்வம் எனப் பொருள் குறித்தவாறு ஆளப்பட்ட தாகத் தெரியவில்லை.
அத்துடன் தமிழகராதிகள் அல்லது நிகண்டு ஆகிய எதனிலும் அவ்வாறான பொருள் குறிப்பில்லை என்பதும் நினைதற்குரியது.
இவை யிவ்வாறாக,
இக்குறட்பாவை நமக்குத் தெரிந்தவாறாக அணுகுவோம்.
கேடில் விழுச்செல்வங்
கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை
கல்வி என்பது
ஏகாரந் தொக்கது.
இக்குறளில் குறித்த
மாடு என்பதன் பொருள் கோபால கிருட்டினன் போன்றோர் காட்டிய செல்வம் என்பதோ, குழந்தை,
கு.ச.ஆனந்தன் முதலானோர் காட்டிய பொருள் என்பதோ அன்றாம்.
ஞா மாணிக்கவாசகன்
மற்றும் முனுசாமியார் போன்றோர் குறித்த பெருமை / சிறப்பு எனும் பொருள் பற்றியதாம்
என்க.
கோணல் / கோணிய
/ வளைந்த எனும் பொருள்படக் கூர்ங் கோட்டது யானை (599), யாழ்கோடு (279) என்றும் கோணாமை
/ சாயாமை எனலை கோல் கோடாது (549) என்பதுங் காண்க.
கம்பராமாயணம்
(மந்திரப்படலம் 1483) ‘உதவும் மாடுயர் பார்கெழு
பழமரம் பழுத்தற்றாகவும்’ என்பதில்
‘ஓங்கி யுயர்ந்த’ பழமரம் எனப் பொருளாதலை ஒப்பு நோக்குக. மாட்சியாவது உயர்வு மேன்மை பெருமை எனும் பொருள் பற்றியாம்.
கோணு(தல்) - கோடு(தல்) என்பது போல மாணுதல் மாடுதலாயிற்று.
மாணுதல் மதிக்கப்பெறுதல்.
சிறப்பெய்துதல் எனும் பொருள். செய்த நன்றி சிறிது எனினும் காலத்தினால் மாண ஞாலத்தின்
பெரிது (102) என்பதில் காலத்தைக் கொண்டு மதிப்பிட எனும் பொருளாதலை உன்னுக.
அவ்வாறாகவே இக்குறளில்
மாணல்ல என்பதும், கேடில் என்ற முதற்சீருக்கு எதுகை நயந்தோன்ற வலித்து மாடல்ல என நிற்பதாயிற்று.
கல்வி(யே) ஒருவர்க்கான
அழிவற்ற சிறந்த செல்வமாகும். மற்ற எதுவும் (அவ்வாறு) மதிக்கத்தக்கனவன்றாம் என்பது இதன்
நேரிய பொருளாகிறது.
பெறத்தக்க செல்வங்களை,
நோயின்மை, கல்வி, தன, தானியம், அழகு, புகழ்,
பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலி, துணிவு, வாழ்நாள், வெற்றி, ஆகுநல்லூழ், நுகர்ச்சி
பதினாறு பேறும் எனத் தொகைப்படுத்துகிறது அபிராமி அந்தாதி பதிகப் பாடலொன்று.
இவற்றுள் ஒன்றாகிய கல்வியின் சிறப்பு, பிற எல்லாச் செல்வங்களினும்
மேலானதாக இப்பாவில் விதந்தோதப்பட்டது.
பிற செல்வங்களின்
போக்கு கூத்தாட்டு அவைக் குழாத்தற்றாம் (332). அருகுவதும் அரும்புவதுமாக (248) மாறி
மாறி வருவன. ஆனால் ஒருமைக்கண் கற்ற கல்வி எழுமையும்
ஒருவற்கு ஏமாப்புடையது (398) என்பதனால் கேடிலதாகக்
குறிக்கப்பட்டது.
இதன் கேடின்மையை,
வெள்ளத்தா லழியாது வெந்தழலால் வேகாது வேந்தராலுங்
கொள்ளத்தா னியலாது கொடுத்தாலுங் குறைபடாது கள்ளத்தா ரெவராலுங் களவாட முடியாது கல்வி’
என்னும் விவேக சிந்தாமணிப் பாடல் நன்கு காட்டும். கேடறியாதது எனும் விழுப்பத்துக்குரியது
கல்விச் செல்வமே.
‘பொருளில்லார்க்
கிவ்வுலகமில்’ என்பதும் ‘பொருளல்லவரை(யும்) பொருளாகச் செய்வது பொருள்’ என்பதும் உலகியன்
நடையே. ஆயினும், செல்வர்க்காம் சீர்த்தி மற்றும் சிறப்பினும் மேலாயதான பேரும் புகழும்
கற்றவர்க்குண்டாம்.
மற்ற செல்வங்கள்
ஒருவனின் துய்ப்புக்கும் அநுபோகத்துக்கும் துணையாயிருப்பினும் கல்வியே அவன் செல்லு
விடமெல்லாம் சிறப்பை யீட்டுதலான் அது மாட்சியுடையதாயிற்று.
நலன் உடைமை என்னும்
நாநலம் அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று (641) என்றது போல, இக்குறட்பா மற்ற செல்வங்கள்
எதனாலும் எய்தற்- கரிதான மாட்சியைத் தருவது கல்வி எனக் காட்டுகிறது.
இக்குறட்பாவிற்குரிய
நேர்ப்பொருள், நண்ணுதற்கு உரிதான (171) செல்வங்கள் அனைத்தினும் கல்வி(யே) பெரிதும்
மதித்துப் போற்றுதற்குரிய தொன்றாம் (என்றவாறு).
மாரீசன் கூடலிலே
கவிஞர் அபூ முஜாஹித்
மாரீசன் கூடலிலே மாஞ்சோலைச் சந்தியிலே
மாதாவின் மணியோசை
கேட்கும்
தேரூரும் வீதியிலே தெம்மாங்குப் பாடலிலே
தேனாறு வந்து
செவியேறும்
நீராழி மண்டபத்தில் நீலாட்சம் வந்தமர்ந்து
நீலாம்பரி யிசைத்துக்
களிக்கும்
நீராம்ப லிதழ்தழுவி
நின்றாடும் வண்டிரண்டு
நெஞ்சார நின்றுகவி
படிக்கும்
செந்தாழை மொட்டெடுத்துச் செந்தூரப் பொட்டுவைத்து
வந்தாயென் வாசலுக்கு
வடிவே
முந்தானை காற்றசைய முந்நூறு பாடல்வர
முன்னாடி வந்ததென்ன
முகிலே
சிந்தாத செம்பவழஞ் சிரித்தாடுஞ் செங்கரும்பு
தந்தாயே தங்கரதத்
தமிழே
எந்நாளு முன்னையெண்ணி யென்வான மெங்குமள்ளி
ஏலேலோ பாடுவதென்
எழிலே
பேராலைப் பெருநிழலில் பெருமாளு னைநினைத்து
பேரோதிப் பெருந்தவத்தில்
கிடப்பேன்
பேராசை யறுத்தெறிந்து பேறாக உனையடைய
பெருஞ்சோதி உன்நினைவில்
பொழிவேன்
போராடும் மனத்தினிலே பூவான கருணையினால்
பூந்தா(து) ஊற்றுகநீ
பொலிவே
மாராட்டம் மண்டியிட மகிழ்ந்தோடி மாலைவர
மாவேந்தே மடிவரித்துக்
கிடப்பேன்.
Subscribe to:
Posts (Atom)
