'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

திருமுருகாற்றுப்படை - உரையாடல்

பகுதி - 7

பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் 


புலவர்: இன்னும் வேறு எங்கெல்லாம் திருமுருகப்பெருமான் உறைகிறார் ஐயனே?

நக்கீரர்: மற்றுமொரு சிறப்பான இடத்தைக் காணலாமா புலவரே?

புலவர்: ஆம் ஐயனே! அறிவுறுத்தி அகம் குளிரச் செய்க!

நக்கீரர்: அறுவகைப் பணிகளைச் செய்வோர் யாவர்?

புலவர்: அறுவகைப் பணிகளா? அவற்றைப் பற்றிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஏற்றல், ஈதல் ஆகியன.

புலவர்: ஓ! நூல்களைக் கற்றல், கற்பித்தல், வேள்வி செய்தல், ஏனையோரின் நன்மைக்காக வேள்வி செய்வித்தல், மற்றவர்களிடமிருந்து பொருளைப் பெறுதல், மற்றவர்களுக்குப் பொருளைக்கொடுத்து உதவுதல் என்பன.

நக்கீரர்: ஆம். அந்த ஆறு வகைப் பணிகளையும் தவறாமல் நிறைவேற்றுபவர்கள் அந்தணர்கள்.

புலவர்: அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

நக்கீரர்: அவர்கள் பழம்பெரும் குடியில் தோன்றியவர்கள்; நாற்பத்தெட்டு ஆண்டுகள் திருமணம் புரியாது வாழ்பவர்கள்; அறம் பொருந்திய கோட்பாடு உடையவர்கள்; மூவகைத் தீயால் வேள்வி செய்து பெறும் செல்வத்தை உடையவர்கள்; இயற்கையாகப் பிறக்கும் பிறப்போடு, கல்வியறிவு, அறிவுமுதிர்ச்சி ஆகியவற்றை எய்திய பிறகு 'மீண்டும் பிறத்தலால்' 'இரு பிறப்பாளர்' என அழைக்கப்படுபவர்கள்; ஒவ்வொரு நாளுக்கும் உரிய நல்ல நேரத்தைக் கணித்து மற்றவர்களுக்குத் தெரிவிப்பவர்கள். ஒவ்வொரு புரியிலும் மூன்று நூல் இழைகளைக் கொண்ட புரிகள் மூன்றால் ஆகிய ஒன்பது நூலிழைகளைக் கொண்ட பூணூலை அணிந்து கொண்டிருப்பவர்கள்.

புலவர்: அவர்கள் என்ன செய்கிறார்கள்?

நக்கீரர்: நீராடிய பின்னர் ஈரமான அந்த ஆடையையே அணிந்து தலையுச்சி மீது இரு கைகளையும் குவித்து, ஆறெழுத்து மந்திரத்தைச் சொல்லித், தம் நாவினால் மென்மையாகவும் இனிமையாகவும் பாடி நறுமணமுடைய மலர்களைத் தூவித் திருமுருகப் பெருமானை வழிபடுகின்றார்கள்.

புலவர்: அருமை அருமை!

நக்கீரர்: அத்தகு அந்தணர்கள் வாழ்ந்துவரும் திருவேரகத்திலும் திருமுருகப் பெருமான் மன மகிழ்வோடு அமர்ந்திருக்கிறார். அதுமட்டுமா…

புலவர்: அடடா! இன்னும் வேறு யாரெல்லாம் திருமுருகனை வணங்குகிறார்கள் ஐயனே!

நக்கீரர்: வேலனின் குரவைக் கூத்தைக் கண்டீரா?

புலவர்: குரவைக் கூத்தா? அஃது என்னவென்று அறியத் தருவீர் ஐயனே!

நக்கீரர்: பசுமையான கொடியால் நறுமணமுடைய சாதிக்காயையும் அழகான புட்டில் போன்ற தக்கோலக்காயையும் நடுவில் வைத்துக் காட்டு மல்லிகை மலருடன் வெண்கூதாள மலரையும் சேர்த்துத் தொடுக்கப்பட்ட கண்ணியைத் தலை முடி மீது அணிந்திருப்பான் வேலன். அவன் நறுமணம் பொருந்திய சந்தனம் பூசப்பெற்ற மஞ்சள் நிறத்தால் விளங்கும் மார்பினை உடையவன். கொடிய வில்லால் விலங்குகளை வேட்டையாடிக் கொடுமையான கொலைத் தொழிலைச் செய்பவன். அவன், நீண்ட மூங்கிற் குழாயில் முற்றி விளைந்த தேனாலான கள்ளின் தெளிவை மலையில் சிற்றூரில் வாழும் தம் சுற்றத்தாருடன் உண்டு மகிழ்ந்து தொண்டகப் பறையின் தாளத்துக்கு ஏற்பக் குரவைக் கூத்தாடுவான்.

புலவர்: குரவைக் கூத்தைப் பற்றி இன்னும் விளக்கிச் சொல்லுங்கள் ஐயனே!

நக்கீரர்: விரல்களால் அரும்புகளைத் தொட்டு அலைத்து அலர்த்தப்பட்டமையால் பல்வேறு வகை நறுமணம் வீசுவதும், ஆழமான சுனையில் மலர்ந்த மலர்களால் தொடுக்கப்பட்டதும், வண்டுகள் மொய்ப்பதுமான மாலையையும், தொடுக்கப்பட்ட ஏனைய மாலைகளையும் சேர்த்துக் கட்டிய கூந்தலையும் உடையவர்களாகவும், இலையைத் தலைமுடி மீது அணிந்த கஞ்சங் குல்லையையும் நறிய பூங்கொத்துகளையும் கடம்பு மரத்தின் மலர்க்கொத்துகளை இடையே இட்டுக் கட்டிய பெரிய குளிர்ந்த அழகிய தழையையும் வடங்களோடு கூடிய அணிகலன்கள் அணியப் பெற்ற இடுப்பில், ஆடையாக உடுத்தியவர் களாகவும், மயிலைப் போன்ற சாயலை உடையவர் களாகவும் விளங்கிய மகளிரொடு ஆடுவான் வேலன்.

புலவர்: ஓ! மகிழ்ச்சியோடு ஆரவாரிக்கும் கூத்தாக இருக்குமோ?

நக்கீரர்: ஆமாம் புலவரே! திருமுருகனே உள்ளத்தில் புகுந்தவனாக வேலினைக் கையில் கொண்டு ஆடுவதால் அவன் வேலன் ஆவான். 

புலவர்: கேட்கவே ஆவலாக உள்ளதே! நேரில் கண்டால் எப்படி இருக்கும்..?

நக்கீரர்: இன்னும் சொல்கிறேன். கேளுங்கள் புலவரே! அந்த வேலன் சிவந்த மேனியனாகக் காட்சியளிப்பவன்; சிவப்பு நிற ஆடையை அணிந்துள்ளவன்; அசோக மரத்தின் குளிர்ச்சி பொருந்திய தளிர்களை இரு காதுகளிலும் அணிந்துள்ளவன்; இடையில் கச்சை அணிந்துள்ளவன்; கால்களில் வீரக் கழல்களை அணிந்துள்ளவன்; சிவந்த வெட்சி மலர்களைத் தலைமுடியில் கண்ணியாக அணிந்துள்ளவன்; புல்லாங்குழல், ஊதுகொம்பு, இன்னும் பல இசைக் கருவிகளை உடையவன்; ஆடு, மயில், அழகிய சேவல் கொடியை உடையவன்; உயரமானவன்; 'தொடி' எனப்படும் அணிகலன் அணியப்பெற்ற தோள்களை உடையவன்; நரம்பாலாகிய இசைக் கருவிகளின் இசையை ஒத்த இனிய இசையோடு வருகின்ற மகளிர் குழாத்துடன் வருபவன்; சிறிய புள்ளிகளும் நறுமணமும் குளிர்ச்சியும் அழகும் உடையதாக, நிலத்தில் தோய்கின்ற ஓர் ஆடையை அணிந்திருப்பவன். குரவை ஆடவிருக்கும் பெண்மானைப் போன்ற மகளிரை முழவு போன்ற பெருமையுடைய தன் கைகளால் பொருந்தத் தாங்கித் தோளைத் தழுவியவாறு தன் பெருமை பொருந்திய கையை முதற் கையாக அம் மகளிர்க்குத் தந்து, ஒவ்வொரு குன்றின் மீதும் திருமுருகனைப் போல ஆடுவான்.

                                                                                                                               தொடரும்…

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 22

 சந்தக் கலிவிருத்தம்

1. கவிஞர் மதுரா

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டிக்

கருவாயெனை மகிழ்வோடொரு கனவாயவ ளேற்றே

உருவாக்கிய உறவேயிது உயர்வானது மென்பாள்

வரமேயவ ளெனையீன்றவ ளமுதூட்டிய தாயே!


2. கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை. 

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

வருபோழ்தினில் மாறாதெனும் நிலைமாறிடத் தீட்டித்

தருவாழ்வினில் தீராத்துயர் தடம்மாறிட வேண்டித்

திருவாழ்ந்திடும் சீரார்பதம் தொழுதேத்திடு வேனே.


3. கவிஞர் இல.சுந்தரா

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

இருபோழ்தினி லீராயிர மெனவேயருள் மாலின்

திருவேயுறை மார்பாமதி லெளியேனுறை வெய்த

அருமாமறை நாலாயிர மதுவேவழி யாமே!


4. கவிஞர் வசந்தன் குருக்கள்

தெருவோரமாய்த் திரிவோர்தனைச் சிறப்பாய்நிலை பேண

வருவார்சிலர் இவரின்வழி  மலரும்பலர் வாழ்வு

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டித்

தருவார்பலன் நிறைவாய்வரச் சரியாய்வரு மன்றே!


5. கவிஞர் வ.க.கன்னியப்பன்

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டி

விரைந்தோடிடும் கருணையுள விலையேயிலா வாழ்வாய்த்

தருவேனென இறையேசொலும் தகையாயுள கல்வி!

வருமோயினி அரிதாகிய வளமாயுள செல்வம்? 


6. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம்

ஒருபோழ்தினி லோராயிர முணர்வாயன காட்டித்

திருவாக்கினைத் தந்தாயுனைத் தினம்வாழ்த்திடத் தானே

இருள்சூழ்ந்திடு மிவ்வாழ்வினி லிடையூறுகள் போக்கி

யருள்தந்தெனை யாட்கொண்டிடு மரன்தாள்களே போற்றி!


7. கவிஞர் கேசவதாஸ்

திருவாகிய ஒருபொருளெனத் திண்மதியினை ஊட்டி

ஒருபோழ்தினி லேரோயிர முணர்வாயன காட்டி

அருவாகியே கருவானவா உத்தமாயுனைப் பாடக்

குருவாயெனக் கொருவழியினைக் குவலயத்தினில் காட்டு.

பாட்டியற்றுக 23

அன்பான கவிஞர்களே! 

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும். 

2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும். 

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தாம்”

பிறன்மனை நோக்காப் பேராண்மை

இந்தத் தலைப்பில் எழுந்த கும்மிச் சிந்துப் பாக்களுக்கான காரணத்தை இன்னும் அறியாதவர் கவிஞர் தங்கமணி சுகுமாறன் அவர்களிடம் கேட்டறிந்துகொள்ளுமாறு இதனால் யாவருக்கும் தெரிவிக்கப்படுகிறது.

கும்மிச் சிந்து

தங்கமணி சுகுமாறன்

பெண்களி லேஅவள் பேரமு தம் - அவள்

   கண்களில் நானதைக் கண்டுகொண் டேன்


பாவலர் மா.வரதராசனார்

கண்களில் காட்டிய சாடைமொழி - அந்தக்

    காட்சியின் ஆட்சியில் வீழ்ந்தனடி.!               1


தங்கமணி சுகுமாறன்

வீழ்ந்துவிட் டேநானும் வீழ்ந்துவிட் டேன் - அந்த

  வெண்ணில வுமுகப் பெண்ணழ கில்

வாழ்ந்தது போதுமிப் போமரிப் பேன்- அந்த

   வஞ்சிக்கு நேரில்லை மூவுல கில்               2


பாவலர் மா.வரதராசனார்

மூவுல கத்திலும் மொய்க்கும் அழகுள்ள

    மோகினி யோவிவள் ஊர்வசி யோ?

மேவும் திரிபுர சுந்தரி யோ - தம்பி

   மேனியில் காய்ச்சலும் கொண்டனை யோ?         3 


தங்கமணி சுகுமாறன்

காய்ச்சலைக் கண்டிவ்வு யிர்துறந் தேன் - அவள்

   கண்மருந் துண்டுபி றந்துவந் தேன்

மோச்சம டைந்திட எண்ணியெண்ணி - அவள்

   முந்தானை யில்குடி கொண்டுவிட் டேன்               4

பாவலர் மா.வரதராசனார்

முந்தானை யாஅது நம்மைந சுக்கியே

   மூச்சைய டக்கிடும்  காலன்வலை 

முந்தானை தந்தவள் மூச்சென வாகிடில்

    மூவே ழுலகிலும் வெற்றிநி லை               5


தங்கமணி சுகுமாறன்

நன்றாய்ப்பு ரிந்தது பாவல ரே- நான்

   நல்லபிள் ளையுங்கள் செல்லப்பிள் ளை

கன்றாயி ருந்தெந்தன் காதற்ப சுவினைக்

   காலமெல் லாம்சுற்று வேன்பொய்யில் லை          6


பாவலர் மா.வரதராசனார்

காலமெல் லாம்சுற்றி வந்திட வேயுன்னைக் 

   கைப்பிடித் தாலவள் வீட்டிருக் க

வேலைகெட் டுப்பிற பெண்களை "நோக்குதல்" 

    மேன்மையோ நீவிடை சொல்லுதம் பீ               7


தங்கமணி சுகுமாறன்

மேன்மையில் லையையா உள்ளம்தெ ளிந்தேனே

   மீண்டுமித் தப்பினைச் செய்யமாட் டேன்

ஆண்மைக்கி ழுக்குப்பி றன்மனை நோக்குதல்

   ஆதலால் வீட்டிலி ருந்திடு வேன்               8


பாவலர் மா.வரதராசனார்

வீட்டிலி ருப்பவள் வேதம டாதம்பி 

    வீட்டுத்தெய் வத்தினைப் போற்றிடு வோம்.

நாட்டும்வ ளத்துடன் வாழ்ந்திட வேநாமும்

   நங்கைய ரைப்போற்றி வாழ்குவ மே.!               9


தங்கமணி சுகுமாறன்

ஆகட்டும் ஆசானே உங்கள்சொல் லைப்போல

   அன்புசெய் வோமிந்த நங்கைகள் பால்

போகட்டு மேபெண்கள் கண்டதுன் பங்களும்

   போற்றிடு வோம்புகழ் நாட்டுவோ மே             10

 

உன்னையே அறிவாய்

கவிச்சுடர் இளவல் ஹரிஹரன், மதுரை


உற்றார் எவருள ரோவெனில் சிந்தை

உற்றார் பெற்றோர் உறவோர் நெஞ்சில்

உற்றார் நட்பால் உள்ளக் கோவிலில்

உற்றார் தெய்வம் உறுதுணை கொண்டார். 


மற்றோர் போவார் வாழ்க்கை வழியில்

மற்றோர் மாற்றார் வழித்துணை எனினும்

மற்றோர் கடைவழி மயங்கிட நிற்பார்

மற்றோர் உற்றார் மனமிக ஆகார்


விற்றார் கொள்வார் விலைமுதல் சரக்கை

விற்றார் உடம்பை வினைவழி மயக்கை

விற்றார் புலன்களை விதிவழி பெருக்கி

விற்றார் கொள்ளார் விழைமன மடக்கி 


முற்றார் துறந்தார் முனிவதை மறந்தார்

முற்றார் மனத்தில் முழுது மிறந்தார்

முற்றார் இருவினை முடித்தார் பிறந்தார்

முற்றார் சொல்லற முயன்றார் பயின்றார்


கற்றார் மனமதைக் கண்டார் அடக்கக்

கற்றார் நானுள் கண்டார் நானதைக் 

கற்றார் புலன்வழிக் கடந்தார் முழுவதும்

கற்றார் தாமே கடவுள் ஆனார்.