'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

3. பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்


• இதுவரை 1800 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். ‘எழுத்து.காம்’ வலைத்தளத்தில் பதிந்துள்ளார்.

• சிறுகதைகள் எழுதுவார். வாரமலர்,  மங்கையர் மலர்,  அவள் விகடன் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளாய் வெளிவந்துள்ளன. 

• தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். முகநூல் குழுமங்களில் பல விருதுகள் பெற்றுள்ளார்.

• பரிசுக்காக அன்றிப் புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்றே முன்வந்து கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.

• மரபு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.


கவிஞர் அழைப்பு


வண்ணம் மிளிரும் இவர்கவியில் 

    மகிழ்ந்து நிற்பாள் தமிழன்னை

கண்கள் வியக்க நற்கவிகள்

    கன்னல் மொழியில் பலதருவர்  

பண்பில் சிறந்த கவியரசி 

    பாசம் பொங்கும் இவர்பேச்சில்  

எண்ணம் மகிழ அழைக்கின்றேன் 

    இனிதே வந்து பாடுங்கள் !


வண்ணப்பா அரசியே வருக 

வண்டமிழ்க் கவிதை தருக


தமிழ் வாழ்த்து

உள்ளம் நிறைந்தாய் உவப்பளித்தாய் இன்றமிழே!

கள்ள மழித்தாய் கனிவுடனே! - பிள்ளைநான்

கற்றோர் அவையில் கவிபாட வந்தேனுன் 

வற்றா வருட்பொழிய வா.


அவை வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை வாசம்

     பாரெலாம் மணந்து வீசும்!

சந்தமும் கொஞ்சி யாடும் 

     சந்ததம் பாக்கள் கூடும்

வந்தவர் யாவ ருக்கும் 

     மரபிலே பயிற்று வித்துச்

சொந்தம்போல்  அரவ ணைக்கும்

     சோலையின் வரதன் வாழி !!


தலைமை வாழ்த்து

சந்தக் கவிமணி நின்றன் தலைமையில் 

    தங்கக் கவியரங்கம் 

சிந்தை குளிர்ந்திடும் கவிதைப் பொழிவிது 

    செந்தேன் தமிழ்ச்சுரங்கம் 

சொந்த நாட்டினை விடுத்தே வாழினும்

     சொக்கத் தமிழ்மணக்கும் 

சந்தித் திடவுளம் விழைந்தேன் கவிதையில்

      தந்தேன் முதல்வணக்கம் !!


கதவைத் திறந்து வை


மனக்கதவைத் தாழிட்டுப் பூட்டிக் கொண்டால் 

    வருந்துன்பம் தட்டாமல் திரும்பிப் போமோ ?

இனம்புரியா அச்சத்தி லுறையு முள்ளம்

    இளைப்பார வழியின்றிச் சோர்ந்து போகும்!

கனவிலேனும் இன்பத்தைக் கண்கள் தேடும்

    கலைந்தமுகிற் கோலமென நிலையா தோடும்!

முனம்செய்த வினைப்பயனால் பிறப்பெடுத்தோம்

   முடிவொன்று மறியாமல் மயங்கு கின்றோம்!


வருவதெல்லாம் வரட்டுமெனத் துணிந்தி ருப்பாய் 

  வழிபிறக்கும் தைபிறந்தால் நம்பி நிற்பாய்!

இருக்குமட்டும் பிறர்க்குதவி செய்தி ருப்பாய்

  எப்போதும் ஆசைகளைக் குறைத்துக்கொள்வாய்!

கரும்பாக இனிக்குமோஎல் லோர்க்கும் வாழ்வு

  கவலைகளால் கசந்தாலும் பொறுமை காப்பாய்!

மருந்தாகிக் காலமொன்றே காய மாற்றும்

  மனக்கதவைத் திறந்துவைத்துக் காத்தி ருப்பாய்!


(வேறு)

நெஞ்சக் கதவைத் திறந்தேவை  

   நெடுநாள் புழுக்கம் மறையட்டும்!

தஞ்ச மடைந்த தீக்குணங்கள்

     தானாய் வெளியே செல்லட்டும் !

வஞ்சம் விட்டு விலகட்டும்

     வந்த வழியே போகட்டும் !

கஞ்சம் போலும் மலரட்டும்  

   கனிவில் விரிந்து மணக்கட்டும் !


உள்ளே பொறாமை புகுந்துவிட்டால் 

     உன்னைக் கனலாய்ப் பொசுக்கிவிடும் !

கள்ளம் தானே குடியேறும்

     கருணை விடைபெற் றோடிவிடும்!

முள்ளாய்த் தைக்கும் பெருஞ்சினமும் 

     மூர்க்கத் தனமாய்க் குதித்தாடும்!

அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தமனம் 

     அமைதி இழந்து தவித்திருக்கும்!

இதயக் கதவைத் திறந்துவிட்டால்

    இருளும் விலகி ஒளிபிறக்கும்!

இதமாய்த் துடிப்பின் இசைகேட்கும் 

     இறையு மங்கே குடியிருக்கும்! 

உதய மாகும் புதுவிடியல்

     உறவின் பலத்தில் நலம்விளையும் !

புதைந்த நச்சு வெளியேறப்

     பூக்கும் வாழ்வு பொலிவுடனே!


வாழ்த்து


நெஞ்சக் கதவைத் திறந்துவைக்க 

    நெடுநாள் புழுக்கம் மறையுமென்றார் 

அஞ்சி நடுங்கத்  தேவையில்லை 

    ஆசை ஒழித்து விட்டுவிட்டால் 

வஞ்ச மின்றி அறிவுரைகள் 

    வகையாய் அடுக்கித் தானீந்தார்

கொஞ்சும் தமிழால் போற்றுவமே 

    கூடி  நின்று வாழ்த்துவமே  


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

4. பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து


தமிழாசிரியர்

பைந்தமிழ்ச் செம்மல், ஆசுகவி, நற்றமிழாசான் எனும் பட்டங்களைப் பெற்றவர்.

தற்காலக் காளமேகப் புலவர். சிலேடை இவருக்குக் கைவந்த கலை. 

வெளியீட்ட  நூல்கள் - காக்கை விடு தூது, எழிற்பாவை, 'இரட்டுற மொழிதல் நூறு'

கற்பனைத் திறன் மிகுந்த இயற்கைக் கவிஞர். 

கவித்துவத்தை அள்ளிக்கொட்டும் கம்பன்


கவிஞர் அழைப்பு


இயற்கை கொஞ்சும் அழகெல்லாம் 

    இவரின் கவியில் புரண்டோடும் 

வியக்க வைக்கும் காட்சியெலாம்  

    விழிகள் முன்னே நிறுத்திடுவார்  

தயக்க மின்றித் தூதனுப்பித்

    தமிழின் சுவையில் மகிழ்வுறுவார்   

நயந்து வடித்த கவிதைதனை  

    நவின்று  ரைக்க  வாருங்கள்  


பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து  வருக!

வண்டமிழ்க் கவியைத் தருக


வணக்கம்


வற்றாத் தமிழமுதை வகைவகையாய்ச்

       செய்துதரும் 

    பைந்தமிழ்ச் சோலைக்கு வணக்கம்

கற்ற அறிவமுதைக் கண்விரிய யாவருக்கும்

    ஓதுகின்ற பாவலருக்கு வணக்கம்

பற்றித் தமிழ்பயின்று பைந்தமிழின் செம்மலான 

    நிர்மலா சிவராச சிங்கம்

இற்றைக் கவியரங்கை இன்முகத்தால்

                தலைமையேற்று 

நடத்துகின்ற அம்மையார்க்கும் வணக்கம்..!


கதவைத் திறந்துவை


ஏர்பிடித்துத் தொழிகலக்கிக் 

  கொழுமுனையால் பசிபோக்கும் 

    உயர்கவியை வயல்வெளியில் எழுதினோம்..!

நார்முடிச்சை உடனவிழ்து 

  நடுவையெனும் பெயர்தொடுத்து  

    வளர்கோலப் புள்ளிகளாய் எழுதினோம்..!!

கார்விடுத்த நெடும்புனலைக் 

  கரைதடுக்க மதகுவழி 

    மடைமாற்றிக் கழனிவயல் செலுத்தினோம்..!

வேர்பிடித்துச் சுருள்விரித்து 

  வெளிர்மஞ்சள் நிறமகல 

    எருவதனைத் தேர்ந்தெடுத்துப் புகுத்தினோம்..!


நண்டுழக்கும் பயிரிடையே 

  நகராமல் மிதந்தபடி

    பலகுரலில் தவளையது  பாட்டிசைக்கும்

வண்டுழக்கும் பூவினம்சூழ் 

  வரப்பமர்ந்து கொக்கினங்கள் 

பண்ணிசையைக் கண்மயங்கிக் கேட்டுறங்கும்...!

பெண்டுழக்கிக் களைபறிக்கப் 

  பெருஞ்சாரை சரசரத்துப் 

    பேரிரைச்சல் அலையெழுப்பி இடம்பெயரும்..!

உண்டுழக்கி வாழுகின்ற 

  நத்தையெலி ஆமையுடன் 

    ஊர்க்குருவி கழனிதனில் வாழ்ந்துவரும்..!


பயிர்முற்றிச் சூல்வெடித்த 

  பசுங்காய்கள் பால்பிடித்துப் 

    பளபளக்கும் செந்நெல்லாய்க் கதிர்விளையும்...!

உயிரொட்டி உடலியங்க 

  உணவாகும் கதிரடித்து  

    உழவர்பொலி  தூற்றலின்றேல் என்னாகும்..!

தயிர்முற்றிக் கடைகின்ற 

  மத்தொலியாய்ச் சலசலக்கும் 

    மீன்புரளும் கழனியிலே உழைக்கின்றோம்..!

வயிறொட்டிக் கிடந்தாலும் 

  வளமிக்க உலகதனை 

    ஏர்க்கலப்பை முனையாலே படைக்கின்றோம்..! 


வியர்வையாலே உடல்குளித்து

  விளைச்சலெல்லாம் பெருகவைத்துக்  

    கதிரறுத்துப் பொலிதூற்றி வருகின்றோம்..!


வயல்முத்தால்  வறுமைபோக 

  வளமெல்லாம் செழிக்கவைத்த 

    இயற்கைக்கு நன்றிசொல்லிப்

          பொங்கவைப்போம்...!

புயல்பொழியும் கண்ணகற்றிப் 

  புவியெங்கும் புன்னகையே 

    மலர்கவென்று குலவையிட்டுப்

      பொங்கவைப்போம்..!.

கயல்புரளும் விழியழகீர்

  கதவையெல்லாம் திறந்துவைப்பீர்..!

    கருணையன்பு கரும்பைப்போல் 

       இனிக்கட்டும்...!


சாதிமதம் புதைக்கின்ற 

  சமத்துவத்தைப் பொங்கவைப்போம்

    ஆணுக்குப் பெண்சமமாய் அங்குவைப்போம்..!


பாதியிலோ வந்துதித்த 

  பழமைமூடத் தனமொழித்துப்

    பகுத்தறிவை ஊரெல்லாம் ஏற்றிவைப்போம்


ஆதிக்கச் சுரண்டலெல்லாம் 

  அடுப்பெரித்துப் பாரிலுள்ள 

    அத்தனையும் பொதுவுடமை ஆக்கிவைப்போம்..


நாதியற்று நிற்பவரை 

  நமதென்போம் பசியில்லா

    நாடென்றி தயக்கதவைத் திறந்துவைப்போம்..!


வாழ்த்து


சாதி மதத்தைப் புதைக்கின்ற

    சமத்து வத்தை வேண்டுமென்றார்

நாதி யற்றோர் நலம்பெற்றால் 

    நாட்டில் நீதி கிடைக்குமென்றார்

ஓதிச் சென்ற வரியெல்லாம் 

    உலகில் நடக்கும் அநீதிகளே 

காதில் மெல்ல ஒலிக்கவிட்டார் 

    கரங்கள் தட்டி வாழ்த்துவமே


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

5. பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு

 

• பிறந்த இடம் ஈழம். வாழ்விடம் டென்மார்க்கு.

• சிறுவயதிலிருந்தே கவிதை எழுதுபவர்.

• மூன்று மரபு கவி நூல்களை வெளியிட்டுள்ளார்

• பெற்ற பட்டம்: பைந்தமிழ்ச்செம்மல்,

• பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் மின்னிதழில் ‘புலம்பெயர் நாடும் வாழ்வும்’ என்னும் தலைப்பில் தொடர்கட்டுரை எழுதியுள்ளார்.


கவிஞர் அழைப்பு


நற்கவி படைக்கும் செம்மல்

    நயத்துடன் மிளிரும் பாக்கள்

சொற்சுவை செறிவாய் மின்னும்

    சுடரென ஒளிரும் பாக்கள்

நற்றமிழ்க் கவிதை பாட

    நாட்டமாய் வரவேற் கின்றேன்

பற்றுடன் வருக மன்றம் 

   பாக்களைத் தருக நன்றே


பரமநாதன் ஐயா வருக!

பைந்தமிழ்ச் சொட்டும் பாக்கள் தருக !


கதவைத் திறந்து வை!


தமிழ்வாழ்த்து

நேரிசை வெண்பா


செந்தமிழே! சிங்காரச் சீரெழிற் கோபுரமே!

சந்தனமே! சங்கத் தமிழ்த்தாயே! - வந்தேன்

கவியரங்கில் பாமாலை கட்டியுன் தாளில்

குவியலாய் இட்டேன் குழைந்து!


நேரிசை ஆசிரியப்பா


தலைமைக் கவியே! தகைசார் அவையே!

உலகார் போற்றும் உன்னதச் சோலையில்

வந்தேன் கவிப்பூ மணக்கத்

தந்தேன் வணக்கம் தமிழால் இனிதே!



எண்சீர் ஆசிரிய விருத்தம்


புத்தாண்டே வந்திந்தப் பூமிப் பந்தில்

    பொங்கியின்பம் பெருகியோட வைத்தே நிற்பாய்!

புத்தொளியில் உலகத்தார் சிலிர்த்துப் பூத்துப்

    புரண்டுகிடந்(து) ஆடநீயும் வழிகள் செய்வாய்

இத்தரையில் வாழுமுயிர் அத்த னையும்

    இன்புற்றி ருக்கவாசை கொண்டேன் மண்ணில்

தித்திக்கும் எந்நாளும் திண்ணம் வாரீர்

    திறந்துவைப்பீர் நெஞ்சமெனும் கதவைத் தானே!


வஞ்சனையில் கிடந்துழலும் வாழ்க்கை யாலே

    வரும்காலம் என்னாகும் எண்ணிப் பாரீர்

கொஞ்சிக்கு லாவிமக்க ளோடு நாளும்

    கூடிக்க ளித்தாட வேண்டி நிற்பீர்

நெஞ்சுக்குள் நீள்பகையும் சேரா தென்ற

    நிறைவினைக் கொண்டாலே இன்பம் தேங்கும்

விஞ்சிடுமாம் அத்தனையும் வீடு வந்தே

    விரைந்தெழுந்து திறந்துவைப்பீர் கதவைத் தானே


பகையோடு வன்மத்தைக் கூட்டுச் சேர்த்துப்

    பாரிதிலே நடக்கலாமோ எண்ணிப் பாரீர்

நகையில்லா முகம்காட்டல் நன்றா சொல்வீர்

    நடத்தையிலும் அழுக்காமே அகற்று வீரோ

சிகரங்கள் தொடுதற்காய்த் தகாத தெல்லாம்

    செய்திடுதல் திறம்தானோ மறப்பீர் எல்லாம்

பகருங்கள் நன்மொழிகள் பண்பாட் டோடு

    பயணிப்போம் திறந்துமனக் கதவைத் தானே


கொடுநோய்கள் சூழ்வதுவும் வீட்டுக் குள்ளே

    குந்தாமல் கண்ணீரில் குளிக்க லாமோ

தடுக்கவழி யில்லையென்று தவிக்க லாமோ

    தகர்த்திடுவோம் துயரனைத்தும் ஓடி வாரீர்

தொடுக்கவேண்டும் போர்பலவாம் கண்ணின் முன்னே

    தோற்றவரைக் காத்திடலே சிறந்த எண்ணம்

நடுங்கலாமோ தொல்லைகண்டு சுரக்க அன்பு

    நல்லோராய் மனக்கதவைத் திறந்து வைப்பீர்


வாழ்த்து

நெஞ்ச மதனில் நிறைவிருந்தால்

    நினைவு நன்றே சிறக்குமென்றார்

வஞ்சம் தீர்க்க நினைப்பதெல்லாம்

    மகிழ்வைக் கெடுத்து மாய்க்குமென்றார்

செஞ்ச முறவே  இவ்வரங்கில் 

    சிறப்பா னதொரு கவிதந்தார் 

கொஞ்சும் தமிழில் வாழ்த்துவமே 

    கூடி நின்று போற்றுவமே 


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

6. பைந்தமிழ்ச்செம்மல் சாமி.சுரேஷ்

 • புனைபெயர் - ஆதி கவி

• படிப்பு - முதுகலை வரலாறு

• பணி - நடுவணரசு துறை, பாதுகாப்புப் பிரிவு

• பட்டம் - பைந்தமிழ்ச் செம்மல்  (பைந்தமிழ்ச் சோலை), கவியருவி ( தடாகம் கலை இலக்கிய வட்டம், இலங்கை)


கவிஞர் அழைப்பு


பண்பில் சிறந்த கவிஞரிவர்

    படைக்கும் பாக்கள் அனல்கக்கும்

கன்னற் சுவையில் பாவிருக்கும்  

    கனலும் பாய்ந்து தெறித்தோடும்

அன்னைத் தமிழாள் மகிழுமாறே

    அவைக்கு வருக ஆதிகவி

மன்றம் சிறக்கும் உம்வரவால்

    மகிழ்வாய்க் கவிதை தாருங்கள்


கதவைத் திறந்து வை


தமிழ் வாழ்த்து

வானி லுறையும் மீன்களெல்லாம் - நாளை

வளரும் வெடிக்கும் வடிவிழக்கும்

தேனி லுறையும் இனிப்பெல்லாம் - ஓர்நாள்

தேயும் திகட்டும் சிறப்பிழக்கும்


காயுங் கதிரும் நிலவொளியும் - என்றோ

கருமைக் குழியில் புகுந்தொழியும்

தாயாய்த் திகழுந் தமிழ்மொழிதான் - பல

தடையை உடைத்துப் புகழடையும்


தலைமை வாழ்த்து

சோலை மலரில் வீற்றிருந்து - தமிழ்த்

தேனைச் சொரியும் வண்டமிழாள்

காலைப் பனிபோல் கள்ளமில்லாப் - பெருங்

கருணை விரியும் பெண்டகையாள்


குடியை இயக்கும் அரும்பணிபோல் - தமிழ்க்

குதிரை இயக்கும் நேரிழையே

அடியும் தொடையும் அணிவகுக்கும் - கவி

அழகு தலைமை வாழியவே

கதவைத் திறந்து வை

யாப்பில் சொல்லைக் கட்டிவிட்டால் - சில

எதுகை மோனை ஒட்டிவிட்டால் - பாட்டு

எல்லாம் தெரியும் என்கின்ற - மன

இருண்ட கதவைத் திறந்துவிடு


தோப்பில் பழங்கள் விளைந்திருக்கும் - அதன்

தோலும் அழகாய் சிவந்திருக்கும் - எல்லாத்

தோட்டக் கனியும் இனிக்குமென்ற - உன்

தொல்லைக் கதவைத் திறந்துவிடு


மூப்பில் திளைக்கும் முதியவர்க்கு - வெள்ளை

முடியைக் கொண்ட கிழவருக்கு - அட

மூன்று காலமும் தெரிந்திருக்கும் - எனும்

முட்டாள் நினைவை மறந்துவிடு


காப்பில் நிலத்தைக் கன்னியரைப் - பல

காளை மேய்ந்து தின்னவரும் - உன்

காவல் ஒன்றே உயர்ந்ததெனும் - சிறு

கன்றின் குணத்தைக் கழட்டிவிடு


பாட்டில் வீரம் காட்டிவிட்டுப் - பின்னால்

பம்மி வாலை ஆட்டிவிட்டு - நான்

பாயும் புலியினம் என்பவரின் - கொடும்

பசப்புச் சொற்களைக் கொன்றுவிடு


நாட்டில் நடக்கும் கொடுமைகளைக் - கண்டும்

நடித்துப் பிழைக்கும் அடிமைகளை - நம்

நலத்தைக் காக்கும் தெய்வமென - நீ

நம்பும் மடமையைக் கொளுத்திவிடு


ஆக்கங் கருதி உடனிருக்கும் - நாம்

அசந்த போதில் படையெடுக்கும் - சில

ஐயப் பிறவியை நம்புதற்கு - நீ

ஆற்றில் மூழ்கிப் பிறந்துவிடு


நோக்கம் தெளிவாய் இருந்தாலும் - உடல்

நோகும் வண்ணம் உழைத்தாலும் - நீ

நொண்டிக் குதிரை ஏறிவிட்டுக் - குறை

நொட்டைச் சொல்லைக் களைந்துவிடு


தத்தித் தவழும் கிள்ளைகளை - மடியில்

தாவிப் பரவும் பிள்ளைகளைக் - கல்விச்

சாலையில் தந்தால் போதுமென்றே - எண்ணும்

சள்ளை அறிவைக் கிள்ளிவிடு


அத்தி மலர்போல் அரிதனெவே - சில

ஆன்றோர் சான்றோர் வாழுகிறார் - நீ

அவரைப் புரத்தல் இல்லெனினும் - அவர்

அறிவைப் புறத்தலைத் தள்ளிவிடு


பச்சைக் குழந்தை போல்முகத்தை - இப்

பாரில் காட்டும் கருஞ்சிறுத்தை - நீ

பதிந்த கருத்தே உண்மையெனும் - உன்

பாழு மனத்தைக் கொட்டிவிடு


நச்சிப் பிழைத்து நலம்பெற்றுப் - பின்

நடையைக் கட்டும் குலமுண்டு - தெரு

நாயைப் பொன்னால் அலங்கரித்தும் - அது

நம்மைக் குரைக்கும் அவிழ்த்துவிடு


எரியுந் தழலைக் கொண்டுவந்து - இழி

எண்ணக் கனவை எரித்துவிடு - இன்னும்

எழுத முடியா இருள்வெளுக்க - உன்

இடுக்குக் கதவைத் திறந்துவிடு


அரிய வாழ்வை வாழ்கின்றாய் - ஏன்

அடிமை போலச் சாகின்றாய் - உன்

அடியைக் கவனி நிமிர்ந்துவிடு - நல்

ஆற்றல் மதகைத் திறந்துவிடு


வாழ்த்து

உள்ளம் வருந்த உரைத்த யாவும்

உன்னதக் கருத்தாய் எடுக்கின்றோம் - அதில்

அள்ளித் தெளித்த அநீதி யெல்லாம்

அகத்தில் ஏற்றுத்  தடுக்கின்றோம்


எரியுந் தழலை எடுத்து வந்தே

இடுக்கண் அனைத்தையும் வீழ்த்துகிறோம்- அதை

அறியத் தந்த ஆதிகவி பாடலை

அனைவரும் சேர்ந்து வாழ்த்துகின்றோம்


பாட்டியற்றுக 25

 அன்பான கவிஞர்களே! 

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1. ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும். 

2. பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும். 

3. பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4. கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

“நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

நேயன் றாளிணை நண்ணுவமே”