'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

3. பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்


• இதுவரை 1800 கவிதைகளுக்கு மேல் எழுதியுள்ளார். ‘எழுத்து.காம்’ வலைத்தளத்தில் பதிந்துள்ளார்.

• சிறுகதைகள் எழுதுவார். வாரமலர்,  மங்கையர் மலர்,  அவள் விகடன் போன்ற இதழ்களில் பரிசு பெற்ற கதைகளாய் வெளிவந்துள்ளன. 

• தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகைகளில் பல பரிசுகள் பெற்றுள்ளார். முகநூல் குழுமங்களில் பல விருதுகள் பெற்றுள்ளார்.

• பரிசுக்காக அன்றிப் புலமைக்கும் திறமைக்கும் போட்டி என்றே முன்வந்து கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவார்.

• மரபு கவிதைகள் எழுதுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.


கவிஞர் அழைப்பு


வண்ணம் மிளிரும் இவர்கவியில் 

    மகிழ்ந்து நிற்பாள் தமிழன்னை

கண்கள் வியக்க நற்கவிகள்

    கன்னல் மொழியில் பலதருவர்  

பண்பில் சிறந்த கவியரசி 

    பாசம் பொங்கும் இவர்பேச்சில்  

எண்ணம் மகிழ அழைக்கின்றேன் 

    இனிதே வந்து பாடுங்கள் !


வண்ணப்பா அரசியே வருக 

வண்டமிழ்க் கவிதை தருக


தமிழ் வாழ்த்து

உள்ளம் நிறைந்தாய் உவப்பளித்தாய் இன்றமிழே!

கள்ள மழித்தாய் கனிவுடனே! - பிள்ளைநான்

கற்றோர் அவையில் கவிபாட வந்தேனுன் 

வற்றா வருட்பொழிய வா.


அவை வாழ்த்து

பைந்தமிழ்ச் சோலை வாசம்

     பாரெலாம் மணந்து வீசும்!

சந்தமும் கொஞ்சி யாடும் 

     சந்ததம் பாக்கள் கூடும்

வந்தவர் யாவ ருக்கும் 

     மரபிலே பயிற்று வித்துச்

சொந்தம்போல்  அரவ ணைக்கும்

     சோலையின் வரதன் வாழி !!


தலைமை வாழ்த்து

சந்தக் கவிமணி நின்றன் தலைமையில் 

    தங்கக் கவியரங்கம் 

சிந்தை குளிர்ந்திடும் கவிதைப் பொழிவிது 

    செந்தேன் தமிழ்ச்சுரங்கம் 

சொந்த நாட்டினை விடுத்தே வாழினும்

     சொக்கத் தமிழ்மணக்கும் 

சந்தித் திடவுளம் விழைந்தேன் கவிதையில்

      தந்தேன் முதல்வணக்கம் !!


கதவைத் திறந்து வை


மனக்கதவைத் தாழிட்டுப் பூட்டிக் கொண்டால் 

    வருந்துன்பம் தட்டாமல் திரும்பிப் போமோ ?

இனம்புரியா அச்சத்தி லுறையு முள்ளம்

    இளைப்பார வழியின்றிச் சோர்ந்து போகும்!

கனவிலேனும் இன்பத்தைக் கண்கள் தேடும்

    கலைந்தமுகிற் கோலமென நிலையா தோடும்!

முனம்செய்த வினைப்பயனால் பிறப்பெடுத்தோம்

   முடிவொன்று மறியாமல் மயங்கு கின்றோம்!


வருவதெல்லாம் வரட்டுமெனத் துணிந்தி ருப்பாய் 

  வழிபிறக்கும் தைபிறந்தால் நம்பி நிற்பாய்!

இருக்குமட்டும் பிறர்க்குதவி செய்தி ருப்பாய்

  எப்போதும் ஆசைகளைக் குறைத்துக்கொள்வாய்!

கரும்பாக இனிக்குமோஎல் லோர்க்கும் வாழ்வு

  கவலைகளால் கசந்தாலும் பொறுமை காப்பாய்!

மருந்தாகிக் காலமொன்றே காய மாற்றும்

  மனக்கதவைத் திறந்துவைத்துக் காத்தி ருப்பாய்!


(வேறு)

நெஞ்சக் கதவைத் திறந்தேவை  

   நெடுநாள் புழுக்கம் மறையட்டும்!

தஞ்ச மடைந்த தீக்குணங்கள்

     தானாய் வெளியே செல்லட்டும் !

வஞ்சம் விட்டு விலகட்டும்

     வந்த வழியே போகட்டும் !

கஞ்சம் போலும் மலரட்டும்  

   கனிவில் விரிந்து மணக்கட்டும் !


உள்ளே பொறாமை புகுந்துவிட்டால் 

     உன்னைக் கனலாய்ப் பொசுக்கிவிடும் !

கள்ளம் தானே குடியேறும்

     கருணை விடைபெற் றோடிவிடும்!

முள்ளாய்த் தைக்கும் பெருஞ்சினமும் 

     மூர்க்கத் தனமாய்க் குதித்தாடும்!

அள்ளிக் கொடுத்து மகிழ்ந்தமனம் 

     அமைதி இழந்து தவித்திருக்கும்!

இதயக் கதவைத் திறந்துவிட்டால்

    இருளும் விலகி ஒளிபிறக்கும்!

இதமாய்த் துடிப்பின் இசைகேட்கும் 

     இறையு மங்கே குடியிருக்கும்! 

உதய மாகும் புதுவிடியல்

     உறவின் பலத்தில் நலம்விளையும் !

புதைந்த நச்சு வெளியேறப்

     பூக்கும் வாழ்வு பொலிவுடனே!


வாழ்த்து


நெஞ்சக் கதவைத் திறந்துவைக்க 

    நெடுநாள் புழுக்கம் மறையுமென்றார் 

அஞ்சி நடுங்கத்  தேவையில்லை 

    ஆசை ஒழித்து விட்டுவிட்டால் 

வஞ்ச மின்றி அறிவுரைகள் 

    வகையாய் அடுக்கித் தானீந்தார்

கொஞ்சும் தமிழால் போற்றுவமே 

    கூடி  நின்று வாழ்த்துவமே  


No comments:

Post a Comment