'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

1. பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்


பெயர் : மன்னை வெங்கடேசன்

பணி : மைய அரசு பணி 

• பைந்தமிழ்ச்சோலை நிறுவிய காலந்தொட்டு உறுப்பினர். 

•பைந்தமிழ்ச்சோலை இணைஆசிரியர் 

• சோலையின் ஆண்டுத்தேர்வில் முதல் 'பைந்தமிழ்ச் செம்மல்' பட்டம் பெற்றவர்

• நற்றமிழாசான், ஆசுகவி பட்டங்கள் பெற்றவர். 

• மடக்கு, சிலேடைக் கவிதைகளில் ஆர்வமிக்கவர்.


கவிஞர் அழைப்பு

பண்பில் சிறந்த கவிஞரிவர் 

    பாங்காய்க் கவிகள் பலதருவார்    

எண்ண மதனில் தோன்றுவதை  

    எளிதாய் மடக்கில் வடித்திடுவார் 

கன்னல் மொழியால் கவிபாடக் 

    கனிவு பொங்க அழைக்கின்றேன் 

இன்பத் தமிழால் இவ்வரங்கும்  

    எழிலாய் முழங்கி அதிரட்டும்  


பைந்தமிழ்ச் செம்மல்  வெங்கடேசன் ஐயா வருக !

செந்தமிழ்ப் பாக்கள் அள்ளித் தருக !


தமிழ் வணக்கம் (நேரிசை வெண்பா)

மற்ற மொழியெலாம் வந்து வணங்குமால்

உற்ற சிறப்புடை ஒண்டமிழே - சற்றே

கதவைத் திறக்கக் கவிபாட வந்தேன்

உதவுவாய் சொற்கள் உதிர்த்து


தலைவர் - அவை வாழ்த்து (எழுசீர் விருத்தம்)

பைந்தமிழ்ச் செம்மல் நிருமலா இங்குப்

    பாங்கொடு தலைமையை ஏற்கப்

பைந்தமிழ்ச் சோலைத் தளத்தினில் உள்ள

    பழகுநல் அவையினர் முன்னே

ஐந்திணைத் தமிழில் அகமகிழ் கவிகள்

    அளிப்பதற் கென்றுநான் வந்தேன்

மைந்தனைக் கண்ட தாயென மகிழ்ந்து

    வருபிழை பொறுத்திடு வீரே


கதவைத் திற (அறுசீர் விருத்தம்)

அன்பே உலகில் அனைவர்க்கும்

    ஆணி வேராய் இருப்பதனால்

என்பும் உருக்கும் அன்பதனை

    எப்போ தும்கை விடவேண்டா

பண்பாய்ப் பழகி வேண்டுமட்டும்

    பலரும் மகிழ்ந்து வாழ்வதற்காய்க்

கண்போல் அன்பைக் கடைப்பிடிக்கக்

    கதவைத் திறப்பாய் என்மனமே!


உன்னைப் போலே பிறருக்கும்

    உணர்ச்சி உண்டென் றறிந்தாலே

தன்னால் பணிவும் உண்டாகும்

    தானென் றெண்ணல் மறைந்தோடும்


இன்னார் அணுவும் செருக்கில்லார்

    என்றே உலகோர் உனையுவப்பர்

கன்னல் பணிவை வெளிக்காட்டக்

    கதவைத் திறப்பாய் என்மனமே


அறிவே உலகில் உனைக்காட்டும்

    அதனால் அதுவே தலையாகும்

அறிவைப் பெருக்கிக் கொள்வதனால்

    ஆன மட்டும் பயன்பெறலாம்

அறிந்த வற்றை வெளிப்படுத்தி

    அனைவ ருக்கும் உதவிடலாம்

கறையில் லாத அறிவுபெறக்

    கதவைத் திறப்பாய் என்மனமே


உயர்த்தும் குணங்கள் பலவிருக்க

    உன்னைக் குழியில் விழவைக்கும்

கயமைக் குணங்கள் பலவுண்டாம்

    களிப்பைக் கொடுத்துக் கெடுத்துவிடும்

அயர்ந்தால் உன்னை அழித்துவிடும்

    அதனால் அவற்றை வெறுத்தொழித்துக்

கயமைக் குணங்கள் வெளியேறக்

    கதவைத் திறப்பாய் என்மனமே


கதவைத் திறந்து வைப்பதனால்

    களவும் போக வாய்ப்புண்டே

கதவைத் திறக்க மறுப்பாயேல்

    காற்றும் வாரா நிலையுண்டே

கதவைத் திறந்து நல்லவற்றைக்

    கண்டு கொண்டு வரவேற்பாய்

கதவைத் திறந்து தீயெண்ணம்

    காணா வண்ணம் ஒழிப்பாயே


நன்றி நவிலல் (அறுசீர் விருத்தம் - வேறு)


இதுவரை என்றன் நெஞ்சில்

    இருந்தவை கொட்டி விட்டேன்

மதுவிலே மயக்கம் கண்ட

    வண்டென மகிழ்வுற் றோர்க்கும்

இதுபுது வகையென் றெண்ணி

    இதுவரை கேட்ட வர்க்கும்

பொதுவிலே என்றன் நன்றி

    புகல்கிறேன் வணக்கம் வாழ்க!


வாழ்த்து

உயர்த்தும் குணங்கள் பலவற்றை 

    உலகோர் அறிய வைத்தீர்கள் 

மயக்க  வைக்கும் அன்புடனே

    வாழ்தல் உலகில் பண்பாகும் 

வியக்க வைக்கும் வரிகளினால் 

    விருந்தை அளிக்க மகிழ்ந்தோமே 

வயங்க வைத்தார் வெங்கடேசர் 

    வாழ்த்தி வணக்கம் சொல்வோமே 


No comments:

Post a Comment