'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 24

 வெண்பா

1. கவிஞர் செல்லையா வாமதேவன்

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

அந்தமிழ் மாண்பை அயன்மொழி முந்துமா?

சந்தமும் சாந்தமும் சார்ந்ததெந் தாய்மொழி

சிந்தையும் சீர்பெறுந் தேர்.


2. கவிஞர் த.கி.ஷர்மிதன், ஈழம் 

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

சந்தத் தமிழினைச் சார்கவே - எந்நாளும்

நற்றமிழ் நன்றாய் நவின்றால் நலமேநீ

வற்றாத் தமிழினை வாழ்த்து.


3. கவிஞர் பா.இந்திரன்

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

விந்தை யுலகில் விரைவாகும் - சிந்தனையும்

நற்கவி யாகுமே நாளெல்லாம் கூடிடக்

கற்றவர் கல்வியே காண்


கலிவிருத்தம்

செந்தமி ழோடுளம் சேர்தலே இன்பமாம்

சொந்தமா யாயிரம் சோர்விலா நற்கவி

தந்தவ ராகுவர் தங்கமாய்ப் போற்றவே

சிந்தையை வென்றுடன் சீரென வாழ்கவே


4. கவிஞர் சுந்தரா

அந்தமி ழோடுள மாழ்தலே நல்லறம்!

செந்தமி ழோடுளஞ் சேர்தலே யின்பமாம்!

நந்தமி ழோடுளம் நண்ணுதல் நற்பொருள்!

எந்தமி ழோடுள மின்புறல் வீடதே!


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 

பகுதி – 1

குரல்வழிக் கவியரங்கம்

தலைப்பு: கதவைத் திறந்துவை

 

திருவள்ளுவராண்டு 2052 சுறவத் திங்கள் முதல் நாளிலிருந்து பைந்தமிழ்ச் சோலை முகநூல் குழுவில் வெளியிடப்பட்ட குரல்வழிக் கவியரங்கம். கவிதையை அவரவருடைய குரலில் கேட்கக் கீழுள்ள இழையைச் சொடுக்குக.

 

தலைமை

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

 

பங்கேற்போர்

1.      பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்

 

2.      பைந்தமிழ்ச்செம்மல்  தமிழகழ்வன் சுப்பிரமணி

 

3.      பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா ராஜசேகர்

 

4.      பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து

 

5.      பைந்தமிழ்ச்செம்மல் பரமநாதன் கணேசு

 

6.      பைந்தமிழ்ச் செம்மல் சாமி.சுரேஷ்

  

7.      பைந்தமிழ்ச்செம்மல் நெடுவை இரவீந்திரன்

 

8.      பைந்தமிழ்ச்செம்மல் செல்லையா வாமதேவன்

 

9.      பைந்தமிழ்ச் செம்மல் இரா.கண்ணன்

 

10.   பைந்தமிழ்ச்செம்மல் உமாபாலன் சின்னதுரை

 

11.   பைந்தமிழ்ப் பாமணி மதுரா

 

12.   பைந்தமிழ்ப் பாமணி இரா.அழகர்சாமி

 

13.   பைந்தமிழ்ப் பாமணி ஷேக் அப்துல்லா அ

 

14.   பைந்தமிழ்ச் சுடர் ஜோதிபாஸ் முனியப்பன்

 

15.   பைந்தமிழ்ச் சுடர்  சோமு சக்தி

 

16.   பைந்தமிழ்ச் சுடர் விசு. இம்மானுவேல்

 

17.   கவிஞர் சொ..சாந்தி

 

18.   பைந்தமிழ்ச் சுடர் வே.அரவிந்தன்

 

கவியரங்க நிறைவு கவிதை

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

கவியரங்கத் தொடக்கக் கவிதை


பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


 தமிழ் வாழ்த்து

முத்தமிழே செம்மொழியே தமிழத் தாயே 

   முன்னவர்கள் முத்தென்றே உன்னைக் காத்தார்

தித்திக்கும் இன்தமிழாற் கவிதை பாடத்    

   தீந்தமிழின் சொற்களினைத் தேடி வந்தேன்

சித்திக்க வந்தென்றன் அருகில் நின்று   

   சிறப்பாக  அருள்தந்து வாழ்த்த வேண்டும்

எத்திக்கும் முழங்கட்டும் உன்றன் மாட்சி

   எழிலாக எனைக்காத்தே அருளு வாயே


ஆசான் வாழ்த்து

தரணியினில் சிறக்கின்ற மரபு பாக்கள் 

   தனித்துவமாய் மிளிர்கின்ற சோலை கண்டேன்

கரங்கொடுத்து வழிநடத்தும் ஆசான் நாடிக்

   கனிவாக என்விருப்பம் சொல்லி நின்றேன் 

குருவருளின் கருணையோடு மரபைக்  கற்கக்

   குதூகலத்தில் நாள்தோறும் வடித்தேன் பாக்கள் 

வரந்தந்தப்  பைந்தமிழின்  சோலை தன்னை

    மகிழ்வாகக் கரங்குவித்துப் போற்று வேனே


நற்றமிழின் சொற்களினால் மாலை கோத்து

    நறுந்தமிழால் பாவகைகள் கற்றுத் தந்தார்

ஒற்றுக்கள் வருமிடமும் வகையாய்ச் சொல்லி 

    உன்னதமாய்ப் பாட்டியற்றும் பயிற்சி தந்தார் 

பற்றுடனே திருத்தங்கள் செய்தே எம்மைப்

    பாவகைகள் பாங்காக வடிக்கச் செய்தார் 

குற்றமறக் கற்பித்த நல்ல ஆசான் 

    குருவருளின் துணையோடு தொடரு கின்றேன்


அவை வாழ்த்து

பைந்தமிழின் சோலையினுள் நுழைந்து நானும்   

    பாங்காகக் கதவுதனைத்  திறந்து வைத்தேன்

செந்தமிழின் சொற்களினால்  மாலை கோத்துச்

    சிறப்பாகக் கவிபாட மகிழ்வாய் வாரீர் 

அந்தமிழா லனைவருக்கும் வணக்கம்சொன்னேன்

    அகமகிழ்வாய் எண்ணமதைப் படைக்க வாரீர் 

செந்நெறியில் விருப்புடனே திறந்த தாளைச்  

    சிந்தையுடன் படைத்திடுவீர் மகிழு மாறே



தொடக்கம்

கதவுதிறந் துவையென்னும் தலைப்புத் தந்து

கவியரங்கத் தலைமையினைத் தாங்கச்

சொன்னார்

உதயமாகும் கற்பனைகள் பலவும் கண்டே

    உள்ளத்தின் கதவுதனைத் திறந்து விட்டேன் 

விதவிதமாய்க் கதவுகளும் இருக்கக் கண்டு 

    வியப்புற்று மகிழ்வுற்றேன் தலைப்பில் நானும்

மதுவருந்தும் வண்டாகச் சுவைக்க எண்ணி 

    மகிழ்வுடனே கவிதைகளைப் பார்க்க வந்தேன் 

புதுமையான கருத்துதன்னைப் படைக்க வாரீர்

  புறப்படட்டும் புதுப்புதிதாய்க் கவிதைப்பாய்ச்சல்


நெஞ்சமெலாம் நிறைந்திருக்கும் வலிகள் தன்னை 

    நேர்மையாக எடுத்துரைக்க வலிகள் மாறும்

பஞ்சமின்றி வாழ்வதற்கு வழிகள் கூறப்  

    பட்டினியால் வாழ்வோரின்  உள்ளம் ஆறும்  

வஞ்சமின்றி அறிவுதனைப் பகிர்ந்து  விட்டால்   

    வளத்துடனே வாழ்வார்கள் உலகில் மாந்தர் 

கொஞ்சிடுமே விழுகின்ற சொற்க ளெல்லாம்

    குதூகலமாய்க் கவிவரியாய் வந்து துள்ளும் 


முத்தமிழ்ச் சொற்களால் முத்தாய்த் தொடுத்துத்

தித்திக்கும் மனத்தைத் திறக்க லாமே 


உரிமை தன்னை உரத்துக் கேட்டு  

விரைவாய்ச் சொல்லி வேட்கை தணிப்பீர்   


அறிவு கத(வு)அ னைத்தையும் திறக்கச் 

செறிவாய் ஓடும் அந்தமிழ்ச் சொற்கள்  


அன்பைக் காட்டும் அறவழி திறக்க

நன்றே தெரியும் நல்லோர் வழிகள்   


எண்ணக் கதவைத் திறந்து வைத்துப் 

பண்பாய் வந்து பகரு வீரே


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

1. பைந்தமிழ்ச்செம்மல் மன்னை வெங்கடேசன்


பெயர் : மன்னை வெங்கடேசன்

பணி : மைய அரசு பணி 

• பைந்தமிழ்ச்சோலை நிறுவிய காலந்தொட்டு உறுப்பினர். 

•பைந்தமிழ்ச்சோலை இணைஆசிரியர் 

• சோலையின் ஆண்டுத்தேர்வில் முதல் 'பைந்தமிழ்ச் செம்மல்' பட்டம் பெற்றவர்

• நற்றமிழாசான், ஆசுகவி பட்டங்கள் பெற்றவர். 

• மடக்கு, சிலேடைக் கவிதைகளில் ஆர்வமிக்கவர்.


கவிஞர் அழைப்பு

பண்பில் சிறந்த கவிஞரிவர் 

    பாங்காய்க் கவிகள் பலதருவார்    

எண்ண மதனில் தோன்றுவதை  

    எளிதாய் மடக்கில் வடித்திடுவார் 

கன்னல் மொழியால் கவிபாடக் 

    கனிவு பொங்க அழைக்கின்றேன் 

இன்பத் தமிழால் இவ்வரங்கும்  

    எழிலாய் முழங்கி அதிரட்டும்  


பைந்தமிழ்ச் செம்மல்  வெங்கடேசன் ஐயா வருக !

செந்தமிழ்ப் பாக்கள் அள்ளித் தருக !


தமிழ் வணக்கம் (நேரிசை வெண்பா)

மற்ற மொழியெலாம் வந்து வணங்குமால்

உற்ற சிறப்புடை ஒண்டமிழே - சற்றே

கதவைத் திறக்கக் கவிபாட வந்தேன்

உதவுவாய் சொற்கள் உதிர்த்து


தலைவர் - அவை வாழ்த்து (எழுசீர் விருத்தம்)

பைந்தமிழ்ச் செம்மல் நிருமலா இங்குப்

    பாங்கொடு தலைமையை ஏற்கப்

பைந்தமிழ்ச் சோலைத் தளத்தினில் உள்ள

    பழகுநல் அவையினர் முன்னே

ஐந்திணைத் தமிழில் அகமகிழ் கவிகள்

    அளிப்பதற் கென்றுநான் வந்தேன்

மைந்தனைக் கண்ட தாயென மகிழ்ந்து

    வருபிழை பொறுத்திடு வீரே


கதவைத் திற (அறுசீர் விருத்தம்)

அன்பே உலகில் அனைவர்க்கும்

    ஆணி வேராய் இருப்பதனால்

என்பும் உருக்கும் அன்பதனை

    எப்போ தும்கை விடவேண்டா

பண்பாய்ப் பழகி வேண்டுமட்டும்

    பலரும் மகிழ்ந்து வாழ்வதற்காய்க்

கண்போல் அன்பைக் கடைப்பிடிக்கக்

    கதவைத் திறப்பாய் என்மனமே!


உன்னைப் போலே பிறருக்கும்

    உணர்ச்சி உண்டென் றறிந்தாலே

தன்னால் பணிவும் உண்டாகும்

    தானென் றெண்ணல் மறைந்தோடும்


இன்னார் அணுவும் செருக்கில்லார்

    என்றே உலகோர் உனையுவப்பர்

கன்னல் பணிவை வெளிக்காட்டக்

    கதவைத் திறப்பாய் என்மனமே


அறிவே உலகில் உனைக்காட்டும்

    அதனால் அதுவே தலையாகும்

அறிவைப் பெருக்கிக் கொள்வதனால்

    ஆன மட்டும் பயன்பெறலாம்

அறிந்த வற்றை வெளிப்படுத்தி

    அனைவ ருக்கும் உதவிடலாம்

கறையில் லாத அறிவுபெறக்

    கதவைத் திறப்பாய் என்மனமே


உயர்த்தும் குணங்கள் பலவிருக்க

    உன்னைக் குழியில் விழவைக்கும்

கயமைக் குணங்கள் பலவுண்டாம்

    களிப்பைக் கொடுத்துக் கெடுத்துவிடும்

அயர்ந்தால் உன்னை அழித்துவிடும்

    அதனால் அவற்றை வெறுத்தொழித்துக்

கயமைக் குணங்கள் வெளியேறக்

    கதவைத் திறப்பாய் என்மனமே


கதவைத் திறந்து வைப்பதனால்

    களவும் போக வாய்ப்புண்டே

கதவைத் திறக்க மறுப்பாயேல்

    காற்றும் வாரா நிலையுண்டே

கதவைத் திறந்து நல்லவற்றைக்

    கண்டு கொண்டு வரவேற்பாய்

கதவைத் திறந்து தீயெண்ணம்

    காணா வண்ணம் ஒழிப்பாயே


நன்றி நவிலல் (அறுசீர் விருத்தம் - வேறு)


இதுவரை என்றன் நெஞ்சில்

    இருந்தவை கொட்டி விட்டேன்

மதுவிலே மயக்கம் கண்ட

    வண்டென மகிழ்வுற் றோர்க்கும்

இதுபுது வகையென் றெண்ணி

    இதுவரை கேட்ட வர்க்கும்

பொதுவிலே என்றன் நன்றி

    புகல்கிறேன் வணக்கம் வாழ்க!


வாழ்த்து

உயர்த்தும் குணங்கள் பலவற்றை 

    உலகோர் அறிய வைத்தீர்கள் 

மயக்க  வைக்கும் அன்புடனே

    வாழ்தல் உலகில் பண்பாகும் 

வியக்க வைக்கும் வரிகளினால் 

    விருந்தை அளிக்க மகிழ்ந்தோமே 

வயங்க வைத்தார் வெங்கடேசர் 

    வாழ்த்தி வணக்கம் சொல்வோமே 


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

2. பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி

புனைபெயர்: தமிழகழ்வன்

படிப்பு: இளநிலை - தகவல் தொழில்நுட்பம், இளநிலை - தமிழிலக்கியம்

பணி: மென்பொறியாளன்.


கவிஞர் அழைப்பு


சுடராய் மின்னும் தமிழ்க்குதிரில் 

    சுழலும்  இவரின் பணியெல்லாம்  

இடர்கள் சுமையைக் கொடுத்தாலும்

    எழிலாய்  இதழ்கள் பளபளக்கும்

மிடுக்காய்க் கவிதை மழைபொழிவர்   

    விருப்பாய்க் கேட்க வாருங்கள்  

அடுக்காய்ப் பாக்கள் ஒளிரட்டும் 

    அரங்கம்  அதிர்ந்து நிற்கட்டும் 


பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் வருக 

தண்டமிழ்க் கவிதை தருக 


தமிழ் வாழ்த்து

அன்னைத் தமிழே! அமிழ்தாய் இனிப்பவளே!

உன்றன் அருளால் உயிர்வாழ்வேன் - என்றும்

இயக்குங் கதிரே! இருந்தென்றன் நாவில்

நயக்கும் படிமொழிய நாட்டு


ஆசான் வாழ்த்து

பாமணியால் பண்புடைத்தால் பைந்தமிழச் சோலையினால்

மாமனித! மன்னவனே! மாமணியே வாழியவே! 


கவியரங்கத் தலைமை வாழ்த்து

தூயநற் பாக்களால் துன்பம் துடைக்கின்ற

மாயஞ்செய் நிர்மலா மாதவத்தாள் வாழியவே!


அவையடக்கம்


தோப்புக்குள் ளேபுகுந்து தோரணங்கட் டத்துணிந்தேன்

யாப்புக் கவிஞர்காள்! ஏற்றருள்வீர் எம்பாவை!



கதவைத் திறந்து வை

எல்லை இலாத வெளியெங்கும் உம்முடைய

எல்லை விரித்தலுக் கேற்பனசெய் - முல்லை

அரும்பி அழகாகும் அம்மாலை போலத்

திருந்துக எண்ணத்தைத் தேர்ந்து 1


தேர்ந்தன எண்ணங்க ளாய்மட்டும் நில்லாமல்

ஆர்ந்தின்னும் சொல்லில் அமைத்தலொடு-நேர்ந்து

செயலாய் முறையாய்ச் செதுக்கத் திடமாய்

முயல்வாய் முயற்சி முதல் 2


முதலொடு திட்டம் முழுதும் வரைந்து

பதமாய்ப் பகுத்துப் பழக - விதமாய்க்

குறுக்கம் நெடிதெனக் கொள்க குறிக்கோள்

நறுக்கிச் செயலாற்று நன்கு 3


நன்கு விரிவுசெய் நல்லறிவை நானிலத்தின்

நன்மை விரிவுசெய் நாடியது - பொன்னும்

பொருளும் பெரிதுசெயப் போராடா தேயங்(கு)

இருளே இருக்கும் இரி 4


இரிப்பாய் முதலில் இதுவேண்டா இன்றென்

அரிப்பாய் அரிக்கும் பழக்கம் - சிரிப்பாய்த்

தொடங்கின்றே இல்லை தொடலாகா என்றும்

வடம்பிடிப்பாய் தேர்நகர வாய்ப்பு 5


வாய்ப்புகள் வாய்ப்பதில்லை வாய்திறவாதாருக்கு

வாய்ப்புகள் தானே வருவதல்ல - போய்ப்புகல்

போய்ப்புகல் இவ்விரண்டும் பொய்யாக்கா

துன்வாய்ப்பை

ஏய்ப்புகள் ஏமாற்றி ஏறு 6


ஏற்றமே உன்வாழ்வில் எள்ளளவும் ஐயமில்லை

மாற்றம் மனக்கத வைத்திறக்க - ஊற்றாய்

உலக நலன்போற்றும் உன்றன் அறிவுக்(கு)

உலகம் தலைவணங்கும் ஓர்ந்து 7


ஓர்ந்துயரும் நோக்கம் உடைத்தாயி னுன்வாழ்வில்

ஆர்ந்துயரும் ஆக்கம் அதன்வழியில் –

 தேர்ந்தமைந்(து)

எல்லாம் இயங்குமுன் எண்ணம் வழிநடத்த

எல்லார்க்கும் நீயாவாய் எல். 8


வாழ்த்துப்பா !

நல்ல வழிகள் பற்பலவும் 

    நயமாய் உரைத்தார் வெண்பாவில் 

வெல்லும் உலகில் வாழ்வதற்கு  

    விரைந்து வாய்ப்பைத்  தேடென்றார்  

எல்லை இலாத வெளியெங்கும் 

    எல்லை வகுத்துச் செய்யென்றார் 

சொல்லிச் சென்ற  செம்மலுக்குத் 

    தூவி விடுவோம் நல்வாழ்த்து