'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

13. பைந்தமிழ்ப் பாமணி ஷேக் அப்துல்லா அ

 

கவிஞர் வரவேற்றல்

உண்மை நிலையை உலகத்தார்

    உணரும் கருத்துப் பலதருவார்

பண்பில் சிறந்த கவிஞரிவர்

    பணிவாய்ப் பயிற்சி தினம்பெறுவார்

எண்ணம் எண்ணும் கருத்துகளை

    எளிதாய்ப் பாவில் எடுத்துரைப்பார்

அன்பாய் அவையில் கவிபாட

    அன்னைத் தமிழால் அழைக்கின்றேன்

 

ஷேக் அப்துல்லா ஐயா வருக

அன்னைமொழி சிறக்கும் பாக்கள் தருக

 

கதவைத் திறந்து வை

ஒன்றென்ற உண்மையதை உள்ளுணர வேற்றுமை

நன்மனத்துள் ஓடிவிடும்! நன்மைகளே ஊற்றெடுக்கும்!

எண்ணம் விழிப்பில் எழுதுவதே வாழ்க்கையதில்

கண்கொண்டு பார்க்க, கதைகளல்ல; காணும்

பிரபஞ்சம் ஒன்று பிறவியின் தூக்கங்

கரவொலி கேளாக் கடுமுறக்கங் கொண்டின்

இறந்தபின் எவ்விதமும் இல்லை! அதுபோல்

திறனெல்லாம் வாரா! திகழ்ந்ததுவே காண்பாய்!

அருளிருந்தால் பேரின்பம்! அன்றேல் உணர்வில்

இருக்கும் எரிநெருப்பின் எல்லாங் கொடுக்கும்!

விழித்து வதைக்கும்! விரைக! கிடைத்த

செழிப்பான தோற்றத்தில் செம்மை மனிதனாய்ச்

சீர்தூக்கி மேம்படுத்து! செய்திடாதே துன்பங்கள்!

பாரதனில் பாழான பண்பில்லாப் பார்வையால்

நிம்மதி கெட்டு நிலத்திலும் வானிலும்

உம்மதியாற் சீற்றங்கள் உண்டாக ஏது

புரியாமற் சூழ்வெள்ளம் போன்ற  பலவும்

தெரிந்து விடாநிலையில் துன்பத்தில் ஆழ்த்திவிடும்!

போதையில் மூழ்கிப் புரியும் புதுமைகள்

காதைத் திருகிக் கருணைகாட்டாக் கூட்டத்தில்...

எப்படி? எல்லா இருப்பில் இருப்பதெல்லாம்

ஒப்பில்லா வொன்றென உன்னுள் உணர்வாய்!

நிலையில்லாத் தோற்றத்தில் நேரான பார்வை

நிலையதைக் கொள்ளத் திறந்துவிடு நின்னுள்!

மனக்கதவைப் புத்தாண்டு மத்தாப்புப் பூக்க!

மனத்துள் மனிதம் மலரட்டும் மாண்புடன்!

மானிடர் தைத்திருநாள் மண்வளங்கள் கொண்டாட்டம்!

காணிகள் தோறும் கலைநிகழ்வின் காட்சிகள்!

கண்கொள்ளா ஆட்டங்கள்! கற்பித்துப் போனதிற்

கொண்டே மனிதனாகிக் கொள்!

 

வாழ்த்து

மனத்தில் மனிதம் மலர்ந்துவிட்டால்

    மண்ணில் புனிதம் பிறந்துவிடும்

சினத்தில் செய்யும் செயலெல்லாம்

    திருத்தம் காணும் என்றுரைத்தார்

நினைவில் வந்த கருத்துகளை

    நிறைவாய்த் தந்தார் மன்றினிலே

இனிதாய்க் கேட்டு மகிழுங்கள் 

    இன்பம் பொங்க வாழ்த்துவமே

Feb 13, 2021

தமிழ்க்குதிர் - சுறவம் 2052 - மின்னிதழ்

 


ஆசிரியர் பக்கம்

 அன்புக்குரியோர்க்கு வணக்கம்.


அறிவியலின் வீச்சு உலகைத் தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டிருக்கும் இக்கணினிக் காலத்தில், பல்வேறு கலைச்சொற்களையும் பயன்படுத்த வேண்டிய சூழலில் உலகப் பொதுவாய் ஆங்கிலத்தைப் பயன்கொள்வதும், அதற்கு அம்மொழியைக் கற்றலும், பணியில் சேர்தலும் வழக்கமாகிவிட்ட செயலாயிற்று.


அயல்நாட்டிற்குப் பணிசெய்ய வேண்டித் தாய்மொழி தமிழையொதுக்குவது ஓரோவழி ஏற்கலாம்... ஆனால், இங்கிருக்கும் தமிழாசிரியர், முனைவர் உள்ளிட்ட துறைசார்ந்த 'வல்லுநர்' யாருக்கும் முழுமையான தமிழிலக்கணம் தெரியவில்லை என்பதைக் கண்ணுறும்போது உள்ளம் பதைக்கிறது.


எப்படி படித்துப் பணியில் சேர்ந்தார்கள்?  இவர்கள் பங்கேற்கும் பாடநூல் தயாரிப்பின் தரம் எப்படியிருக்கும்? இனிவருங் காலங்களில் தமிழிலக்கணத்தைக் கற்பிக்கக் கூடிய யாரேனும் மிஞ்சுவரா? இவர்கள் நிலையே இப்படியென்றால் இவர்களிடம் படித்த இனிவரும் தலைமுறை எப்படியிருக்கும்? அவர்கள் கல்வித்துறையில் அமர்ந்து தமிழுக்கு என்ன செய்யப் போகிறார்கள்? பாடநூல்களிலாவது மரபு பாடல்களும், இலக்கணமும் அச்சேறுமா? அல்லது வசனக்கவிதை மட்டுமே இடம்பெறுமா? தமிழின் தொன்மை மண்ணாகிப் போமா? இன்னும் ஏராளமான வினாக்கள் எட்டிப் பார்த்துக் குட்டு வைக்கின்றன. 


இன்றைக்கு என்னைப் போன்ற சிலரிடம் மரபையும், இலக்கணத்தையும் கற்கும் அனைவரும் இதே கற்பிக்கும் கடமையைக் கண்ணெனக் கொண்டு  அவரவர் திறனுக்கேற்ற மாணவர் கூட்டத்தைப் பெருக்கி வருங்காலத்தில் தமிழ் மங்கிவிடாதிருக்கச் செய்ய வேண்டுகிறேன்.


ஓ... என் தமிழ்த்தாயே! எங்களை மட்டுமல்ல... உன்னையும் நீயே காப்பாற்றிக் கொள்.


வருத்தத்துடன்

பாவலர் மா.வரதராசன்


கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

 பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பகுதி – 10


கண்விசிறித் தென்றலெண்ணிக் காதல் நெடுந்துயரால்

மின்விசிறிக் காற்றில் மிகநொந்நு வாடுகின்றேன்..!


ஆந்தை நிலவுடனே ஆங்கலையும் வாவல்போல்

கூந்தல் இருளெண்ணித் தூக்கம் தொலைக்கின்றேன்..!


கண்மீனை எண்ணியெண்ணி நள்ளிரவில் தூங்காது

விண்மீனை எண்ணியெண்ணி வேதனையில் தீய்கின்றேன்..!


பூவாய் மொழிகேளேன் கோரப் புயற்கடலில்

நாவாய் எனச்சிக்கி நாளும் நடுங்குகின்றேன்..!


பூக்காட்டைச் சூடும் பொழிலாளை உள்நினைத்துத்

தீக்காட்டில் நைந்துருகும் தேன்கூட்டைப் போலானேன்..!


வில்லம்பு தோற்கும் விழியாளைக் காணாது

புள்ளம்பால் மண்ணில் புரள்நிலை எய்துகின்றேன்..!


மாடன் பலிகடா மண்டையின்றித் துள்ளல்போல்

கேடோ பலவுற்றுக் கெண்டைவிழி தேடுகின்றேன்..!


அல்லும் பகலும் சமமென்று சொன்னதுயார்?

கொல்லும் இரவின்னும் கோடி மடங்காமாம்


வெண்பஞ்சு மெத்தையெல்லாம் முள்நெருஞ்சி போல்தைக்கக்

கண்துஞ்சல் நீக்கிக் கனவால் அழிகின்றேன்


ஆசை முகத்தாளை அப்படியே காட்டுவதால்

தோசை உணவதனைத் தொட்டுண்ண ஏலவில்லை..!


நெல்லரிசிச் சோறெல்லாம் முல்லையதைப் போல்தெரியப்

பல்வரிசை எண்ணிப் பசிபோக்கல் ஆகவில்லை..!


வேய்ங்குழலும் வேனில் இளங்குயிலும் வெண்ணிலவும்

பூங்குழலாள் காதல் புலப்படுத்தத் தூங்கமில்லை..!


பாற்சோறும் பச்சைப் பயறும் பசிமாற்றும்..!

நாற்சுவருள் நைந்தவென் காதலைத் தேற்றுமா..!


ஐங்கூந்தல் நின்றே அழகொளிரும் பூநாற்றம்.!

பைங்காற்றுத் தாங்கும் பலமலரும் தந்திடுமா.!?


எக்கள்ளும் போதைதரும் என்னவளின் பல்லொழுகும்

அக்கள்ளின் கால்தூசிக்(கு) ஆங்கவை ஈடாமா.!


நெய்யொழுகும் சோறும் பிடிக்கவில்லை நேற்றுவரை

பொய்யெழுதும் பாட்டும் பிடிக்கவில்லை வேறென்ன


மையெழுதும் கண்ணாளின் மையல் புயலடிக்க

மெய்யழ(கு) எல்லாம் மிகநைந்து போனதனால்...!


தண்ணீர் அடிக்காமல் கஞ்சா குடிக்காமல்

என்னுடல் இன்னும் இளைத்துருகக் காணுகின்றேன்..!


சொல்நட்டுப் பாட்டெழுதிச் சுந்தரிக்கு நானனுப்பக்

கல்நட்ட பின்னால்தான் காண வருவாளோ...!


அத்தி மரம்பழுக்க ஆங்கமரும் புள்ளினம்போல்

கத்திக் கதறுகிறேன் காதலிக்கோ கேட்கவில்லை


புத்திதடு மாறிப் புலம்புவதைக் கண்டுமக்கள்

எத்தனெனப் பார்த்திருக்க எம்வீட்டு முல்லைகூடக்


கோடி மலர்பூத்துக் கொல்லெனச்..சி ரிக்குதையே

வாடுநெஞ்சம் காணாமல் வண்டமர்ந்து பாடுதையே..!


பூக்குளம் வற்றியதால் பொய்கை வெடித்ததுபோல்

பாக்குளம் வற்றிநான் பால்நிலவுக்(கு) ஏங்குகின்றேன்..!


தூது தொடரும்...


உற்ற துணை நீயே!

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


தனதனன தனதனன தந்தந்த தத்ததன

தனதனன தனதனன தந்தந்த தத்ததன

தனதனன தனதனன தந்தந்த தத்ததன

                                                        தத்த தனதானா


அருவியென விழிபெருக நின்றன்றி ருப்புகழை 

மொழிகுழற வுளமுருகி மன்றந்த னிற்பொழிய

அகமகிழு மறுமுகவ இன்பங்க ளைச்சொரிய

                                                            இத்த ருணம்வாராய்!

    அழகனுன திருவடியை யென்றுந்து திக்குமடி

    யவரிதய நிறையுமொளி பொங்குந்த மிழ்க்கடவுள்

    அமரர்களும் முனிவர்களும் வந்தன்பி னைப்பொழிய

                                                                உற்ற துணைநீயே!

குருபரனு னருமழையி லங்கஞ்சி லிர்ப்படைய 

நதிதவழு மலைகளென நெஞ்சம்ப னிக்கவொரு

குளிர்மதியி னொளிபடர விஞ்சுங்க விப்படைய

                                                                    லிட்டு மகிழ்வேனே !

    குறுநகையு மிதழ்களிடை சிந்துங்க னிச்சுவையு

    மினியதென நெகிழமன மெங்குந்தெ ளிக்குமது

    கொடியிடையு மசையநடை கொஞ்சுங்கு றத்திமகள்

                                                                மெட்டி யொலிகேளாய் !

வருகவென உயிர்விழைய வந்திங்கு நற்றமிழில் 

இனியகவி நெயுமெழில்வ ரந்தந்து முத்தமிழின்

மணம்நுகரு மெளியவழி யுஞ்சிந்தை யிற்பதிய

                                                                        வைத்த குருநாதா !

    மதுரமொழி யிலழகிய சந்தங்க ளைப்பழக 

    ஒருநொடியி லெழுதிடநெ கிழ்ந்திங்கு  நட்புமிக

    மலரடியை யுரிமையில்வ ணங்குஞ்சி றப்பினையெ

                                                                    னக்க ருளவேணும்!

இரவுபகல் நினைவினில்நி றைந்தன்பு மிக்கவனை

நொடியளவு பிரியமன மின்றிங்கு விக்கவுயிர்

இளகுமுனம் மயிலினில்ந டங்கொஞ்சி முத்தியருள்

                                                                    வெற்றி வடிவேலா!

    எழுகதிரி னொளியெனவி ளங்குந்தனிப்பொருளை

    உடலிலுயி ருளவரையி லன்றன்று பற்றிடவும்

    இருபுறமு மிணையரொடு வந்திங்கெ னைப்பரிவ

                                                                    ளிக்கும் முருகோனே !!