'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

பாட்டியற்றுக 26

அன்பான கவிஞர்களே!

இதோ உங்களுக்காக ஒரு போட்டி. கொடுக்கப்பட்ட குறிப்புகளுடன் பாடலை எழுதி tamilkudhir@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்

1.       ஒருவர் ஒருபாடல் மட்டும் எழுத வேண்டும்.

2.       பிழையற்ற பாடல் அடுத்த இதழில் “குறித்தபடி தொடுத்த பாடல்கள்” என்ற பகுதியில் வெளியிடப்படும்.

3.       பிழையான பாடல்கள் வெளியிடத் தேர்வாகாது. பிழைகள் அடுத்த இதழில் குறிக்கப்படும்.

4.       கொடுக்கப்பட்டுள்ள அடியை நான்கடியின் ஓரடியாகக் கொண்டு மீதமுள்ள அடிகளையும் எழுதிப் பாடலின் வகையைக் குறிப்பிட்டு எமது மின்னஞ்சலுக்கு அனுப்புக.

நச்சரவு போல்வார் நசுக்கு

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 25

 

எழுசீர் விருத்தம்

 

1.       கவிஞர் பா.இந்திரன்

 

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

பாதி யுடல்கொண்டு பாகம் தனைவென்ற

    பாவை உமையாளைப் போற்றுவமே

வீதி நிறைவாக விண்ணும் மகிழ்திடவே

    வீடும் அன்பதனைக் கொண்டிடவே

சாதி இரண்டெனவே சாரும் மனிதனென

    சான்றாய் வளர்ந்திட நிற்போமே/

 

2.       கவிஞர் வசந்தன்

 

ஆதி முதலான ஆய தலைவனாலே

    ஆகும் பணிகளும் அருமைதானே

ஏதி லாதவர்கள் ஈயும் நன்மைபெற்றே

    ஏகி வாழ்ந்திட எண்ணிநாமும்

சோதி யாயுலகில் தூவித் தொழுகின்ற

    சோக மேயிலாச் சுந்தரனாய்

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

 

3.       கவிஞர் தில்லைவேந்தன்

 

மோதும் அலையாடும், மோன நிலைதேடும்,

    மூன்றும் கூடிடும் வீட்டுடனே.

கோதும் அகன்றோடும், கோளில் குணம்நாடும்.

    கோரும் யாவையும் வந்திடுமே,

மாதர் இருவோரும் சேர்ந்து மிசைமேவி

    வாழும் சீர்மிகு செந்திலிலே,       

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே!

 

( மூன்றும் - அறம், பொருள், இன்பம்)

 

4.       கவிஞர் நெடுவை இரவீந்திரன்

 

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

காதி நெய்வானை ஆழி சுழல்வானை

    காணி உழுவானை எண்ணுவமே

வேதி அமர்வானை வேடம் இடுவானை

    வீணே திரிவானை விலக்குவமே

வாதி தொடுப்பானை வாய்மை மறுப்பானை

    வாழ்க்கை கெடுப்பானைச் சுளிப்போமே

                              வேதி - திண்ணை.

 

5.       கவிஞர் சின்னத்துரை உமாபாலன்

 

பாதி யொருமங்கை யாதல் முறையென்றே

    பாதை நாட்டிடுந் நாயகனே

யாதி யொருநாளில் காளி யொடுகூடி

    யாடல் காட்டிடுந் தாயவனாம்

சோதி யெனவாகி சொக்கத் திருவாகி

    சோகந் தீர்த்திடுஞ் செம்பொருளை

நீதி தவறாத ஊழி புகழ்கின்ற

    நேயன் றாளிணை நண்ணுவமே

வினாதலும் விடுத்தலும்

அடுக்குத் தொடரில் ஒற்று மிகாது என்று ஒரு விதி இருக்கிறது. இதன் விதிவிலக்குகளைக் கொஞ்சம் விவரமாகச் சொல்ல முடியுமா? 

- கவிஞர் சுபாஷினி ரமணன்

அடுக்குத்தொடராவது பெயர்ச்சொல்லோ வினை முற்றோ பிறவோ சில குறிப்புக்காய் அடுக்கி வருவதாம்.

அடுக்குத் தொடரில் வலி மிகாது எனப் பொத்தாம் பொதுவாகச் சொல்லலாகாது.

 

·        பாம்பு பாம்பு

·        நின்றன நின்றன

·        தீ தீ

·        சீ சீ

இவை இயல்பு

 

·        கொத்துக் கொத்தாக

·        பூப்பூவாய்

·        திரும்பத் திரும்பச் சொன்னேன்

·        படித்துப் படித்துத் தெரிந்துகொண்டேன்

·        தேடித் தேடிக் களைத்தேன்

இவ்வாறு மிகும்

 

·        பலபல, பலப்பல, பல்பல, பற்பல

·        சிலசில சிலச்சில, சில்சில, சிற்சில

இவ்வாறும் வரும்.

 

இவற்றை விதி விலக்குகள் என்று சொல்லாமல் அவ்வவற்றின் இலக்கணக் குறிப்புகளைக் கண்டு அவ்வாறே கொள்க.


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 7.       பைந்தமிழ்ச்செம்மல் நெடுவை இரவீந்திரன்

கவிஞர் அழைப்பு

முயற்சி நாளும் எடுக்குமிவர்

    முத்தாய்ப் பாக்கள் பலதருவார் 

பயிற்சி தொடர்ந்து செய்வதனால்

    பட்டம் பெற்றுச்  செம்மலானார்

வியக்க வைத்த பாவலரே

    விரைந்து வருக கவிபாட

உயர்ந்த அரங்கில் உம்கவிகள்

    ஒலித்து முத்தாய் ஒளிரட்டும்

 

நெடுவை ஐயா வருக !

நெஞ்சம் மகிழக் கவிதருக!

 

தமிழ் வாழ்த்து

பொங்கல் கவியரங்கம் போற்றும் முகநூலில்

சங்கக் கவிகளைப்போல் தண்டமிழ் -பொங்கிவர

எந்நாவில் ஏறி யிசையோடு கேட்போரின்

செந்தமிழாய்க் காதேறிச் சிந்து.

 

தலைமை மற்றும் அவை வாழ்த்து

நேர்போற்றும் பாவலர் நிர்மலாவின் பாட்டரங்கில்

தார்சாற்றி வாழ்த்தித் தலைசாய்த்துச் - சீர்கோத்துப்

பாடவந்தேன். பைந்தமிழ்ப் பாக்களைக் கேட்கவந்த

ஊடகத்தோர் வாழ்க; உவப்பு!

 

கதவைத் திறந்து வை

பற்று மற்ற ஆளுங் கொற்றன்

    பற்றி யேந்திப் போவார்

எற்ற முள்ள வீரக் கோனும்

    ஏழ்மைப் பக்கம் சார்வார்

குற்றஞ் செய்து மாட்டிக் கொண்டால்

    கொள்ளும் வீடு நீயே

உற்றார் என்று பாரா தோரை

    உன்றன் கூட்டில் சேர்ப்பாய்

 

ஏட்டை மாற்றிச் சட்டம் செய்தும்

    ஏழை வாழ்வை நைப்பார்

வேட்டை செய்து சேர்த்த சொத்தை

    வீணாய் ஏற்றி வைப்பார்

கோட்டை ஒன்றே கொள்கை யென்று

    கூட்டுச் சேர்ந்து நிற்பார்

நாட்டில் கொள்ளை கொண்ட தெல்லாம்

    நாடு மாற்றி விற்பார்

 

ஆறு கொள்ளும் மண்ணை வெட்ட

    ஆழ மாகிப் போகும்

ஆறு மின்றி நீரும் மாறி

    அத்து மீறி ஏகும்

சோறு தந்த ஏரோன் இல்லம்

    சோகத் தோடு வாடும்

மீறு கின்ற தீய சக்தி

    மெல்ல மாட்டக் கூடும்

 

சேவை செய்வேன் என்று சொல்லித்

    தேடித் தேடிப் பார்ப்பார்

ஆவ லோடு மாடு சேர

    அண்டை நாட்டில் சேர்ப்பார்

சேவ லன்ன கூண்டி லேற்றித்

    தேரி லுன்னில் சாய்ப்பார்

காவல் காக்கும் நீயும் வாசற்

    கால்தி றந்து வைப்பாய்

 

நன்றி

பூவேறும் வண்டுகளாய்ப் பொங்கிவரும் பைந்தமிழில்

பாவேறும் பாவரங்கில் பாக்கேட்க வந்தோரே

நாவேறும் தீந்தமிழை நன்மரபில் தந்தவரே

யாவர்க்கும் கைகுவித்(து) எந்நன்றி சொல்வேனே

 

வாழ்த்து

உலகில் நிலவும் அநீதிகளை

    ஒதுக்கி வைத்தல் நலமென்றார்

கலக்க மின்றி ஏழைவாழக்

    கதவைத் திறக்க வேண்டுமென்றார்

நிலவும் குறைகள் பலவற்றை

    நெஞ்சம் வருந்தக் கவிதந்தார்

பொலிவாய்க் கொடுப்போம் வாழ்த்துதனைப்

    புகழ்ந்து போற்றி  மகிழ்வோமே  

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 8. பைந்தமிழ்ச்செம்மல் செல்லையா வாமதேவன்

• பிறப்பிடம் இலங்கை மட்டக்களப்பிலே பெரிய கல்லாறு. 

• உளநல மருத்துவராக மட்/போதனா வைத்தியசாலையிலே பணிபுரிகின்றார்.

• பதினேழு வயதிற் பாடசாலை மாணவனாயிருக்கும்போதிருந்து கவிதைகள்

எழுதிவருகின்றார்.

• ஓசைநயத்தோடு ஆரம்பத்திலிருந்தே எழுதினாலும் யாப்பிலக்கணப் பயிற்சி

பெற்றுப் பிழையற மரபு கவிதைகள் எழுதுவதில் பெருவிருப்பம் கொண்டு

முனைந்து வருகின்றார்.

 

கவிஞர் அழைப்பு

செந்தமிழ்ப் பாக்களைச் சிறப்பாய் வடிக்கும்

பைந்தமிழ்ச் செம்மலே! பணிவாய் அழைக்கிறேன்

அந்தமிழ்க் கவியினை அமுதெனப் படைக்க

எந்தமிழ் ஒளிரும் இக்கவி யரங்கிலே

 

செல்லையா வாமதேவன் ஐயா வருக

செந்தமிழ்ப் பாக்களை அள்ளித் தருக

 

தமிழ் வாழ்த்து

அந்தமிழே அறம்வளர்த்த அமுதே தேனே

  ஆதிசிவன் அருளியநல் லழகின் பேறே

செந்தமிழே தமிழ்மூவர் ஏத்தும் சீரே

  திருவாச கத்தேனாய் உருகும் தேசே

சந்தநிறை திருப்புகழும் குறளின் மாண்பும்

  சங்கமுறை இலக்கியமும் காப்பி யங்கள்

சொந்தமென மூவேந்தர் போற்றும் எங்கள்

  தூமணியே தமிழ்த்தாயே வணங்கு கின்றேன்.

 

பாவலர், அவை, தலைவர் வாழ்த்து

சோலையிலே கவியரங்கத் தலைமை தாங்கும்

 சோதரிநிர் மலாவம்மா வணக்கம் சொன்னேன்

சோலையிலே தமிழ்வளர்க்கும் மரபின் ஆசான்

  சுடர்வரத ராசனுக்கும் வணக்கம் சொன்னேன்

காலைமுதல் மாலைவரை கதவை மூடாக்

  கவிராசர் அவையோரே சிரத்தைத் தாழ்த்திப்

பாலையிவன் புலமையிலே, கரங்கு வித்தே

  பாடவந்தேன் கதவைத்தி றவென்று தானே.

 

கதவைத் திறந்துவை

வெளியேவா தோழாநீ தையாள் வந்தாள்

  விருந்தோம்பத் திருவோடு செய்யாள் வந்தாள்

களிபாடிக் காரோடும் வானம் கொய்தாள்

  கரும்போடும் நெல்லோடும் களத்தை நெய்தாள்

உளிதாங்கும் கல்தானே சிலையாய் மாறும்

  உடையாதே துயரத்தைப் படியாய் மாற்றித்

தெளிவோடும் துணிவோடும் வாராய் தோழா

  திகைத்தோடும் கொறோனாவும் பாராய் நீயே!

 

உள்ளத்தின் கதவுதனை இறுக்கி மூடி

  உனக்குள்ளே புழுங்குவதால் என்ன லாபம்

பள்ளத்தை நாடித்தான் வெள்ளம் பாயும்

  பண்பட்டால் உள்ளந்தான் உயர்ந்து மேவும்

வெள்ளந்தான் வந்தாலும் விரைந்தே ஓடும்

  வியர்த்தாலோ உள்ளத்தில் வியாதி கூடும்

கள்ளத்தைக் கரவுதனை வெளியே போக்கிக்

  காற்றுவரத் திறந்துவிடு வெளிச்சந் தானே.

 

புறங்கூறிப் பொறாமையிலே வெந்தாற் தொல்லை

  புகழ்போதை தலைக்கேறின் தொல்லை தொல்லை

அறமாண்பு தென்றலென வீசும் போது

  அன்பாளும் உள்ளத்தில் தொல்லை இல்லை

மறம்வேண்டும் என்றுந்தன் மானம் வேண்டும்

  மடிமிடியில் உழல்வோர்க்குன் தானம் வேண்டும்

துறந்தாரை முதியோரை மதிக்க வேண்டும்

  துணிவோடுன் உளத்தின்தாழ் திறக்க வேண்டும்.

 

சீர்நிறைந்த தமிழ்போற்றும் ஒழுக்கம் நேர்மை

  திக்கெட்டும் பரவும்நாள் தூரம் இல்லை

கார்சூழ்ந்த மொழித்திணிப்பும் எம்மை விட்டுக்

  கதிகலங்கி ஓடும்நாள் தூரம் இல்லை

மார்கழியாள் சென்றுவிட்டாள் மாற்றங் கொண்டு

  மதியோடு தைமகளும் வந்து விட்டாள்

பார்வெளியே தாழ்திறந்து வாராய் நீயே

  பகலிரவும் மாறுவதிற் புதுமை என்னே!

 

கல்லாதார் இல்லையென்ற சொல்லைக் கேட்கக்

  கதவுதிற கனிவுடனே ஏழைப் பிள்ளை

இல்லாமை இல்லாமற் கல்வி கற்க

  இயன்றவரை உதவிபுரி தர்மம் காக்கும்

கொல்லாமை கள்ளாமை கள்ளுண் ணாமை

  கோடாமை வாய்மையுரை கர்மம் போக்கும்

நில்லாத காலத்தும் நிலைக்கும் நட்பு

  நிதியாகும் ஏன்தயக்கம் வாராய் நீயே!

 

புத்தாடை புதுப்பானை வாசற் கோலம்

  புலர்காலை அழகான வாசக் காலம்

மத்தாப்புப் பூச்சொரியும் மயிலின் ஆட்டம்

  மகிழ்ந்துறவு குதூகலிக்கும் மழலைக் கூட்டம்

வித்தாரம் ஆயகலை சித்தர் யோகம்

  விரிவான அறிவறமும் கொண்டோம் அன்றே

பத்தோடு பதினொன்றாய்ப் போவ தற்கா

  பார்வந்தோம் விதிமாற்ற விரைவாய் நீயே!

 

வாழ்த்து

புறங்கூறும் மானிடர்கள் பேச்சைக் கேட்டால் 

  பொல்லாங்கு வாழ்வினிலே சூழு மென்றார் 

அறம்கூறும் வழியினிலே நடந்து சென்றால்

  அகிலத்தில் நல்லவைகள் நடக்கு மென்றார்

இறையருளால் தீயவைகள் நீங்கிச் செல்ல

  எழில்மிக்க காலமது வந்து சேரும்

குறையின்றிக் கூறியவை நன்று நன்று

  குதூகலமாய்த் தருகின்றோம் வாழ்த்து வாழ்த்து