'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

முகிலில்லா வானம்


பைந்தமிழ்ச் செம்மல்
ஆதி கவி சாமி சுரேஷ்

  
ஒரு ஊரில் செல்வன், பைரவன், குமரன் என்கிற மூன்று பேர் உயிர் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.

இவர்களுக்கு உரிய பருவத்தில் இவர்களுடைய பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப் பெற்றனர்.

இவர்களும் இல்லற வாழ்க்கைக்குத் தேவையான அளவிற்குப் பொருள் ஈட்டும் தொழிலை மேற்கொண்டு வாழ்க்கையைச் செவ்வனே நடத்தி வந்தனர்.

சிறுசிறு ஏற்ற-இறக்கங்களோடு சீராகச் சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கைக்  கடிகாரம் 75 ஆண்டுகளைக் கடந்தன.

மூவருமே தத்தமது குடும்ப வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றும் ஓரளவிற்குப் போதுமான பொருளாதாரத்தை மேம்படுத்தியும் அவரவர் பிள்ளைக்குத் தரமான கல்வியையும் செல்வத்தையும் சேர்த்து வைத்திருந்தனர்.

கால ஓட்டத்தில் கரைந்து போகாமல் தனித்தனியே மூவரும் தமக்கென்று சமூகத்தில் மதிப்புடைய செல்வாக்கையும் சேகரித்து வைத்திருந்தனர்.

இந்த நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தில் மூவரும் நல்ல நட்புப் பாராட்டியே வந்தனர். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மூவரும் கூடிக் கலந்து பேசி மகிழவும் மறந்திலர். ஆனாலும் வயோதிகத்தின் வாசலில் நின்றிருந்த அவர்களுக்குத் தாம் தம்முடைய வாழ்க்கையைத் திருப்திகரமாக வாழவில்லையோ என்கிற ஏக்கம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து தீராக் குடைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொருவருடைய முகமும் வறண்ட பாலைவனம் போன்றும் இறுகிய பனிப்பாறைகள் போன்று அவர்களுடைய கண்களும் காணப்பட்டன.

வயோதிகத் தனிமை அவர்களை வாட்டி எடுத்தது. இவர்கள் எப்படி தன் குடும்பம் தன் பெண்டு தன் பிள்ளை தன் சம்பாத்தியம் என்று வாழ்க்கையில் ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு தனிமை தவம் இருந்தனரோ, அவ்வழியே இவர்களுடைய பிள்ளைகளும் பேரன்களும் பேத்திகளும் சென்றுவிட இவர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக வெறுமை குடிகொண்டிருந்ததை முற்றாக உணர்ந்தார்கள்.

ஒரு மாலை வேளையில் மூவரும் கூடி மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தனர். முடிவில், இந்த வாழ்க்கை சாரமற்றது என்பதில் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர். இந்தச் சந்திப்பு அவர்கள் வாழ்க்கையின் வசந்த காலத்தை மீண்டும் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி மேலும் வாழ்க்கையின்மீது இருந்த பிடியை தளர்த்தவே செய்திருந்தது.

அவ்வமயம் அவ்வூருக்கு இமயமலை அடிவாரத்தில் இருந்து சாது ஒருவர் வந்துள்ளதாகவும் அவரைச் சந்தித்தால் ஏதாவது அமைதியைப் பெறலாம் என்றும் மூவரும் கூட்டாக முடிவு செய்து அச்சாதுவைச் சந்தித்தனர்.

மூவரில் சற்று மூத்தவரான பைரவர் பேசத் தொடங்கினார். 'ஐயா, நாங்கள் மூவரும் அறநெறிக்கு உட்பட்டு சமூகத்திற்குத் தொந்தரவில்லாமல் குடும்பத்திற்கு இடையூறு இல்லாமல் எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். எங்களால் சமூகத்திற்குக் குறிப்பிடத்தக்க பயனில்லை; அதாவது நேரடியாகப் பயன் இல்லை என்றாலும் கூட ஒரு தீங்கும் இல்லாமல்தான் நாங்கள் வாழ்ந்து வந்திருக்கிறோம். நல்லவை செய்ய முடியாவிட்டாலும் அல்லவை செய்யாமல் வாழ்ந்து வந்திருக்கின்றோம். இருந்தாலும் எங்கள் வாழ்க்கையில் ஏதோ தவறவிட்டதாக; ஒரு முழு வாழ்க்கை வாழாமல் விட்டதாக எங்கள் மூவருக்கும் ஒரு மனக்குறை உள்ளது. தக்க ஆலோசனை கூறி நீங்கள்தான் எங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் ஐயா' என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தார்.

அந்தப் பெரியவர் இவர்கள் மூவரையும் ஊடுருவிப் பார்த்து விட்டுக் குறுநகை முகத்தில் படரப் பேசத் தொடங்கினார்.

உங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு எந்த தீங்கும் இழைக்காதவர்கள் என்று என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள் உங்களுக்கே தீங்கு செய்துகொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதுதான் கசப்பான உண்மை என்றார். இதைக்கேட்ட மூவரும் ஒவ்வொருக்கொருவர் கலவரப் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.

சிறிய புன்னகையோடு அந்தப் பெரியவர் மேலும் தொடர்ந்தார். நீங்கள் மூவருமே நண்பர்களாக இருந்து வருகின்றீர். ஆனால் மூவரும் ஒத்திசைவாக ஒருங்கிணைந்து வாழாததுதான் இந்த மன சஞ்சலத்திற்குக் காரணம் என்றார். மூவரின் முகக்குறிப்பைக் கண்ட பெரியவர் மேலும் தொடர்ந்தார்.

'உங்களுடைய முதல் 25 ஆண்டு காலம் கல்விக்கு என்று விடப்பட்டன. அப்போது உங்களிடம் இளமை இருந்தது; செலவழிக்கச் செல்வம் இல்லை; செலவழிக்க நேரமும் இல்லை. அதனால் இளமையில் துய்க்கும் இன்பத்தை நீங்கள் ஒருவரும் துய்க்கவில்லை என்று உணர முடிகிறது. இரண்டாவது 25 ஆண்டு காலத்தில் உங்களிடம் போதுமான செல்வம் இருந்தது இளமை இருந்தது ஆனால் அதைச் செலவழிக்க நேரம் இன்றித் தொழிலாற்றினீர். மூன்றாவது 25 ஆண்டு கால வாழ்க்கையில் உங்களிடம் நேரம் இருக்கிறது; செல்வம் இருக்கிறது; அதையெல்லாம் அனுபவிக்க உடலில் இளமை அற்றுப்போய்விட்டது.

எல்லாவற்றையும் பெற்றுவிட்ட பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்கிற உங்களுடைய இந்த எந்திரத்தனமான மனப்பாங்கு உங்களை எதையுமே பார்த்துக் கொள்ளாமல், அனுபவிக்க முடியாமல் செய்துவிட்டது. அதனுடைய உள்ளார்ந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடுதான் இப்பொழுது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை தவறு என்று சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறது. வாழ்வு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரம். அதை எந்தவொரு புறவயமான வெற்றிக்காகவும்  பலியிடக் கூடாது. தேக்கி வைத்துப் பிறகு பயன்படுத்திக் கொள்ள நாம் ஒன்றும் நீர்த்தேக்கங்கள் அல்ல; ஒவ்வொரு கணமும் வாழ்க்கையைக் கொண்டாட்டத்தோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஓடும் நதியில் இருமுறை ஒருவர் கால்வைக்க முடியாது என்றார் ஹிராக்கிளிடிஸ்‌ .ஆம் ஓடும் நதியில் நாம் ஒருமுறைகூட கால் வைக்க முடியாது. ஏனெனில், அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயங்கிக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் நாம் கொண்டாட்டத்தோடு வாழத் தலைப்பட்டிருந்தால், வாழ்நாளின் இறுதிக் காலத்தில் அல்லல்பட வேண்டிய அவசியம் இல்லை.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
என்று சொல்கிறாரே வள்ளுவரும்.

 இன்பத்தில் ஆகச் சிறந்த இன்பம் ஈந்துவப்பதே. இனியேனும் இருப்பதைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக இன்பம் பொழிவதை உணர்வீர்கள்' என்று ஆசிர்வதித்து அனுப்பினார் அந்தப் பெரியவர். மூவர் கண்களிலும் வெளிச்சத்தைக் கண்டார் அப்பெரியவர். காலநதி வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது‌.

தாய்மொழி தமிழாய் இருக்காது!



மரபு மாமணி
பாவலர் மா.வரதராசன்

(தெம்மாங்குக் கண்ணிகள்)

கொத்தித் திரியும் கோழிக ளுக்குக்
    குறிக்கோள் எதுவு மிருக்காது - தமிழ்
நத்திப் பிழைக்கும் நாய்களுக் கிங்கே
    நன்மனம் துளியு மிருக்காது!                                   1

தன்மொழிப் பற்றைத் தவறியும் மறவான்
    தமிழில் பற்றே பிறக்காது - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!                           2

வள்ளுவம் எங்கள் வாழ்வியல் என்றால்
    மறுப்பான் துடிப்பான் பரிதவிப்பான் - பின்
வள்ளுவன் எங்கள் சாதியே என்பான்
    வண்ணம் பூசி மகிழ்ந்திடுவான்                             3

தமிழில் பிறமொழிச் சொற்களை எந்தத்
    தயக்கமும் இன்றிக் கலந்திடுவான் - அது
தமிழை வளர்க்கும் வழியே என்பான்
    சரம்சர மாய்ப்பொய் அளந்திடுவான்!                  4
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

மரபைப் போற்றும் செயல்கள் எவையும்
    மதிக்கவும் மாட்டான் சிதைத்தொழிப்பான் - தமிழ்
மரபு கவியிலும் பிழையைச் செய்வான்
    மரபைக் கொன்று புதைத்தொழிப்பான்!              5

வலிமிகும் என்றால் மிகாமல் எழுதி
    வழக்கப் படுத்துவோம் எனச்சொல்வான் - அவன்
    வலிமிகா தென்றால் "நல்லா யிருக்கே"
மிகுந்தால் என்ன கேடென்பான்!                               6
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

யாப்பில் பலவிதப் பிழைகளைச் செய்வான்
    அதனால் என்ன இழப்பென்பான் - நீள
ஆப்பை வைப்பான் ஆலாம் தமிழை
    அசைத்துத் தள்ள முயற்சிப்பான்!                            7

அரைகுறை யாகக் கற்றுக் கொள்வான்
    அதற்குள் ஆசான் ஆகிடுவான் - புகழ்
விரைவாய்ப் பெறுவான் சான்றிதழ் விருதை
    விலைகொடுத் தேதான் வாங்கிடுவான்!                 8
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

இலக்கிய வட்டம் பேரவை என்பான்
    இலக்கோ எதுவும் இருக்காது - பணம்
பலப்பல வாகச் சுருட்டிக் கொழுப்பான்
    பைந்தமிழ்த் தொண்டே நடக்காது!                         9

தமிழ்தமிழ் தமிழ்தமிழ் தமிழ்தமிழ் என்பான்
    தன்பிள் ளைக்குத் தரமாட்டான் - அவன்
தமிழை விடுத்துத் தன்வீட் டிற்குள்
    தாய்மொழிப் பற்றை விடமாட்டான்!                    10
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

தையே எங்கள் புத்தாண் டென்றால்
    தைதை தைதை எனக்குதிப்பான்! - மிகு
பொய்யைப் புரட்டைச் சேர்த்துச் சித்திரை
    புத்தாண் டென்று கதையளப்பான்!                       11

வாழ்க்கை நடத்தத் தமிழைப் பேசி
    மானங்கெட்டு வாழ்ந்திடுவான் - இழி
சீழ்க்கை யாகப் புழுத்து நெளிந்து
    சீரழி வாக வீழ்ந்திடுவான்!                                      12
( - அந்தத்
தன்னலக் கயவனின் பின்னணி ஆய்ந்தால்
    தாய்மொழி தமிழாய் இருக்காது!)

தம்பீ தம்பீ விழித்துக் கொள்வாய்
    தமிழின் புண்ணை ஆற்றிடுவாய் - உன்னை
நம்பி இந்தத் தமிழினம் இருக்கு
    நாட்டை உலகில் ஏற்றிடுவாய்! - தமிழ்
    நாட்டை உலகில் ஏற்றிடுவாய்!                              13

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 10


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

போக்குவரத்து

இந்நாட்டில் மருத்துவம், கல்வி என்பன எப்படி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதோ அதே போன்று போக்குவரத்தும் உள்ளகப்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து என்பது மக்களுக்கானது. ஒவ்வொருவரும் பயணத்திற்காகப் பயன்படுத்தும் மகிழுந்து, அரசப் போக்குவரத்துப் பேருந்து, தொடர்வண்டி போன்றவை பயணப்படும் பாதைகளும் அரசினால் சரியாகப் பேணப் படுகின்றது.

டென்மார்க் நாடு, பல சிறு தீவுகளைக் கொண்ட நாடாகும். இவற்றுள் ஜேர்மன் நாட்டுடன் நிலத்தொடர்புள்ள பகுதி இரு பெரும் தீவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனியுடன் இணைந்துள்ள நிலப்பகுதியும் அதற்கு அருகிலுள்ள தீவும் பல்லாண்டுகளுக்கு முன்பே மேன்பாலம் மூலமாக இணைக்கப்பட்டு நேரடியான பயணங்களுக்கு வழி செய்யப் பட்டுள்ளது. இதன் மூலமாக மகிழுந்துகளும், தொடர் வண்டிகளும் இடையூறின்றிப் பயணிக்க ஏதுவாயிற்று. இப்பகுதியும் தலைநகர் கொப்பன்கெகன் அமைந்துள்ள தீவுப் பகுதியும் இணைப்பின்றி இருந்ததனால் கப்பல் மூலமே செல்ல வேண்டியிருந்தது. அதாவது மகிழுந்து களும், தொடர்வண்டிகளும், பேருந்துகளும், மக்களும் கப்பல் மூலமாக அடுத்த பகுதியினைச் சென்றடைய வேண்டியிருந்தது.




இந்நாட்டிற்கு 1991-ஆம் ஆண்டு வந்தபோது இவ்வாறே நானும் பயணித்தேன். ஆயினும் சில ஆண்டுகளின் பின் இரு மேன்பாலங்கள் மூலமாகவும் நீரடிச் சுரங்க வழி மூலமாகவும் 18 கிலோமீற்றர் போக்குவரத்துப் பாதைகள் அமைக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டு இவ் வழியானது பாவனைக்காகத் திறந்துவிடப்பட்டது. தொடர்வண்டியினைத் தவிர அனைத்து வாகனங்களும் இப்பாதையினைப் பயன் படுத்துவதற்காகப் பணம் செலுத்த வேண்டி யுள்ளதினையும் குறிப்பிட்டே யாக வேண்டும்.

இங்குச் சாலை விதிகள் மிகவும் கடுமையானதாக இருக்கின்றது. மக்கள் குடியிருப்புப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும்போது 50 கி.மீ/மணி வேகமும், குடியிருப்புகளைத் தாண்டி 80 கிமீ/மணி வேகமும், நெடுஞ்சாலைகளில் அதியுயர்வேகம் 130 கிமீ/ மணியாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இவ் வரம்பினை மீறி வண்டியில் செல்வோர்கள் வாகனப் பகுதிக்குப் பொறுப்பான பாதுகாவலர் களினால் தடுக்கப்பட்டுச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதோடு தண்டப் பணமும் அறவிடப்படும். இதனை எதிர்த்து நீதிமன்றம் சென்றாலும் 99% எமக்குச் சார்பான முடிவு கிட்டாது என்பதனையும் குறிப்பிடலாம்.

அனைத்து வாகன உரிமையாளர்களும் ஆண்டுதோறும் வாகனத்தின் தன்மையினைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட தொகையினை அரசிற்குச் செலுத்த வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் ஏற்படும் இடங்களில் தாமதமின்றி மேலதிகப் பாதைகள் அமைக்கப் பட்டு நேர தாமதம் சரி செய்யப்படுகின்றது. போக்குவரத்துச் சட்டத் திட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆட்சியாளர்க ளாயினும், அரச குடும்பத்தவராயினும் தவறிழைத்தால் வேறுபாடு இன்றித் தண்டிக்கப்படுவார்கள்.  இந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் மதுபோதையில் மகிழுந்து செலுத்தியதற்காக தண்டிக்கப்பட்டதையும், பதவியிலிருந்து விலகியதையும் இதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.

விடுதி வாழ்க்கை

மணிமாறன் கதிரேசன்
பட்டயக் கணக்காளர்
(Chartered Accountant)

பள்ளியில் ஆண்டுத் தேர்வு முடிந்தது. பள்ளிக்கு ஒரு மாத காலம் விடுமுறை என்பதால் பள்ளியில் இருக்கும் விடுதிக்கும் விடுமுறை விடப்பட்டது. விடுதியில் தங்கி 8-ஆம் வகுப்புப் படிக்கும் யாழினிக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. இந்த ஒரு மாதக் காலத்தை எப்படி எப்படி கழிக்க வேண்டும் எனவும், என்ன உணவுகளை அம்மாவிடம் வாங்கி உண்ண வேண்டும் எனவும் கற்பனை வளர்த்துக் கொண்டாள். அது மட்டுமல்ல, அவளுடைய  நண்பர்களையும் உறவினர்களையும் பார்ப்போம் என்ற மகிழ்ச்சி வேறு. முக்கியமாக அவளுடைய  பாட்டியைப் பார்த்துப் பலவிதமான பலகாரங்களை செய்து கொடுக்கச் சொல்ல வேண்டுமென பட்டியலிட்டுக் கொண்டிருக்கிறாள்.

அவளுடைய நண்பர்களை எல்லாம்  இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அவர்களுடைய   பெற்றோர்கள் அழைத்துச் செல்லத் தன்னை அழைத்துப்போகத் தன் பெற்றோர் வருவார்கள் என வழிமேல் விழிவைத்துக் காத்துக் கொண்டிருக்கிறாள். இருப்பினும் ஏமாற்றமே. அவளுடைய தந்தை, தொலைப்பேசி மூலம் தொடர்புகொண்டு தான் தம் சொந்தக்காரரை அனுப்புவதாகவும் அவருடன் வீட்டிற்கு வரவும் கூறிவிட்டு வைக்கிறார்.

அப்பா கூறியதுபோல் அவரது சொந்தக்காரர் கூட அல்ல, அவர் வீட்டிற்குப் பக்கத்தில் வசிக்கும் அவர் அவரது கடை வேலையை முடித்துக்கொண்டு இரவு 10.30 மணிக்கு  விடுதியை அடைகிறார். விடுதியில் அவளை அழைத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்று பேருந்தில் ஏறி உட்கார்ந்து கொண்டனர்.

இவளோ, பேருந்தில் ஏறியதிலிருந்து அவரிடம் கேள்விகளைத் தொடுக்க முயல, அவரோ சற்றும் பதில் சொல்ல முற்படாமல் வேலை அசதியில் உறக்கத்திற்குச் சென்றுவிட்டார். அவளோ அவளுக்கான விடை கிடைக்காத நிலையில் செய்வதறியாது புலம்பிக் கொண்டும், அவளது வீட்டின் நினைவுகளை நினைந்தும் பயணிக்கலானாள். அவளது எண்ணமெல்லாம் அவளது வீட்டையும், அவளுடைய பெற்றோரையும் சுத்திச் சுத்தி வந்துகொண்டிருக்கிறது, அவளுக்கு இந்தப் பயண தூரம் பல வருட காலம் போல சென்று கொண்டிருந்தது. எப்பொழுது தனது வீடு வரும் என்ற எண்ணமே மேலோங்கியது, தனது வீடு வரவில்லையென நினைந்துகொண்டே தன்னையும் அறியாமல் தூங்கினாள்.

அதிகாலை 3.45 மணிக்கு அவளையும் அறியாமல் எழுந்தாள், ஆம். அவளுக்குள் ஒரு வித சந்தோஷம் மற்றும் மனத்தில் மிகப்பெரிய கொண்டாட்டமே பூத்துக் குலுங்கியது. காரணம் அவளது ஊர் வருகின்ற சந்தோஷம். அவளுக்கு மனத்தளவில் தெரிந்திட அவளாக விழித்துக் கொண்டாள், அவள் அந்த பக்கத்து வீட்டுக்காரரையும் ஆவலோடு எழுப்புகிறாள்.

சரியாகக் காலையில் 4 மணியளவில் பேருந்து அவளது ஊருக்கு வந்து சேர்ந்தது. காலையில் பேருந்து நிலையத்தில் அவளுடைய கண்கள் தனது அப்பாவைத் தேடியது. ஆனால், அவளுடைய அப்பா இங்கும் அவளை அழைத்துச் செல்ல வரவில்லை. என்னைக் கூப்பிட இங்கும் வரவில்லையா என மனத்திற்குள் புலம்பியபடி, வீட்டில் அவரிடம் பேசப் போவதில்லை என விளையாட்டுச் சபதம் எடுத்தவாறே அவருடன் அவளது வீட்டிற்குச் செல்ல ஆரம்பித்தாள்.

சரியாக 4.10 மணிக்கு அவள் அவளது வீட்டை அடைந்துவிட்டாள். வீட்டின் வாசலில் ஆவலுடன் தன்னுடைய அப்பாவும், அம்மாவும் தன்னை அழைக்கக் காத்திருப்பார்கள் என்று எண்ணி வந்தவளுக்கு ஏமாற்றம். அவள் வீடோ பூட்டியிருந்தது.

ஆமாம்அவளுடைய  பெற்றோர் இருவரும் வேலை செய்துவிட்டு வந்த அசதியில் தூங்கி விட்டார்கள். மேலும் அவளது அம்மா தன்மகள் வருகிறாள் என்பதற்காக இரண்டு நாள் விடுமுறை எடுப்பதால் தன்னுடைய வேலையை இரவு பகலாக முடித்துவிட்டு வரவேண்டிய நிலை.  அவள் வீட்டிற்கு வந்து தனது பெற்றோரை அழைக்க, அவளது தாயார் ஓடி வந்து தன் மகளை அள்ளிக்கொண்டு கட்டியணைத்து முத்த மிடுகிறாள். இவளோ தன் தாயிடம் அவளைக் கூப்பிட யாரும் வரவில்லையெனச் செல்லமாகக் கோபித்துக் கொள்கிறாள். அப்பாவிடம் இனிமேல் நான் பேசப் போவதில்லை என்றும், பரவாயில்லைஉன்னிடம் பேசிக் கொள்கிறேன் என்றும் வந்தவுடன் சட்டம் போட்டாள்.

வண்டியில் வந்த அசதியில் தனது அறைக்குச் சென்று தூங்க ஆரம்பித்தாள். அவளது தந்தையைக் கண்டும் காணாமல். அவளது தந்தையும் தன்னிடம் உள்ள கோபத்தைக் குறைத்துக் கொள்ளும்படியும், இனிமேல் இப்படி நடக்காது எனவும் ஒப்புதல் தந்து மகளைச் சமாதானப்படுத்துகிறார். மகளும் சற்றும் யோசிக்காமல் தந்தையின் பாசத்தில் மூழ்கிக் கன்னத்தில் முத்தமிட்டுப் படுக்கைக்குச் செல்கிறாள்.

மறுநாள் காலையில் அவளுடைய அம்மா அவளுக்குப் பிடித்த பலகாரங்களைச் செய்ய ஆரம்பித்தாள். ஆம். அதற்காகத் தானே இரண்டு நாள் பணிக்கு விடுமுறை விடுத்திருந்தாள். வழக்கம்போல அவளுடைய  அப்பா அதிகாலையில் வேலைக்குக் கிளம்பிவிட்டார்.

காலையில் எட்டு மணிக்கு எழுந்து வந்தாள் யாழினி. எழுந்து வந்ததும் தன் அப்பா எங்கே என வினவச் சற்றே சில பல பொய்களைச் சொல்லிச் சமாளித்தாள். அதனைக் காதில் வாங்கியும் வாங்காதவளுமாய் அம்மாவிடம் தேநீர் வேண்டுமெனக் கேட்டுத் தன் விடுதிக் கதையை மீண்டும் நேரில் சொல்லிக் கொண்டிருந்தாள்.

விடுதியில் கிடைக்கும் தேநீர் பற்றியும், உணவுப் பண்டங்களைப் பற்றியும், அவளுடைய நண்பர்களின் ஆர்ப்பரிப்பு, அலப்பறையென அடுக்கிக் கொண்டே சென்றாள். இன்னும்  அவளது அட்டவணை குறையவில்லை. ஆம். பல் துலக்கப் பலதூரம் போக வேண்டுமெனவும், குளிப்பதற்கோ கும்பலில் நின்று அசைய வேண்டுமெனவும், கழிவறைக்குச் செல்வதில் கஷ்டகாலந்தான் என அவள் அனுபவித்த  துன்பத்தை அனுபவக் கூற்றாகக் கூறிக்கொண்டிருந்தாள்.  அம்மாவும் அவளைச் சரிசரியெனத் தேற்றியவாறு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். தன் மகள் வந்திருக்கிறாள் என்பதற்காக அவள் அப்பா காலையிலேயே அவளுக்குப் பிடித்தமான பண்டங்களையும் அவள் விரும்பும் மீனும் வாங்கி அம்மாவிடம் கொடுத்துவிட்டே வேலைக்குச் சென்றார். அவளுக்கோ அளவற்ற மகிழ்ச்சி. இருப்பினும் அப்பாவிடம் சேர்ந்து சாப்பிட முடியாமல் போனதில் வருத்தமே.

யாழினி அம்மாவை அழைத்தாள். அவள் அம்மாவிடம், “அம்மா இன்றிலிருந்து என்னுடைய துணிகளை நீயே துவைத்துத் தந்துவிடு, நான் ஒருமாத காலம் நிம்மதியாக இருப்பேன்என்றாள். அவள் மறுபடியும் துணியைத் துவைப்பதில் நடக்கும் கேலிகளையும், கஷ்டங்களையும் அவள் அம்மாவிற்கு எடுத்துக் கூறினாள்.

அது மட்டுமா… “நீயெல்லாம் விடுதியில் இப்படித்தான் கஷ்டப்பட்டாயாஎனக் கேட்க, அவளுக்கு தூக்கிவாரிப்போட்டது. தாம் விடுதியில் எங்கே தங்கினோம் என்று மனத்திற்குள் குற்ற உணர்ச்சியுடன் சிந்தித்துக்கொண்டிருந்தாள். அது மட்டுமாஅவள் விடுதியில் என்னவெல்லாம் அழுந்தினாலோ அவற்றை எல்லாம் அம்மாவிடம் சொல்லி அவளுக்கெனத் தனி இரக்கத்தைச் சம்பாதித்தாள். இவள் பேசுவதைக் கண்டு, அவள் அம்மாவும்சரிநான் பார்த்துக்கொள்கிறேன்என்று உறுதி கூறினாள். அம்மாவிடம் சொன்ன  கதையை மீண்டும் பாட்டியிடமும் சொல்லிப் பாட்டியிடமும் நல்ல வேலை வாங்கினாள்.

இப்படியே காலைப் பொழுது கடக்க, யாழினியின் அம்மா, அவளுடைய அப்பாவிற்குத் தொலைப் பேசியில் தொடர்புகொண்டு, “உங்களைச் சீக்கிரமாக வரச்சொல்கிறாள்என்றாள். அவனும் சரியெனச் சொல்லி வைக்கிறான். வந்த பிறகு இருவரும் தன் குழந்தையிடம் பேசி மகிழ்ந்து அவளுடன் வெளியே சென்று அவளுக்குப் பிடித்த இடத்திற்குச் சென்று வருகின்றனர். இவ்வாறு அந்நாள் நன்னாளாக முடிந்தது.
இரவு உறங்கப் போகுமுன் யாழினியின் அம்மா அவள் விடுதியில் படும் சிரமத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். எப்போதும் சீக்கிரமே தூங்கப் போகும் யாழினி அன்று வழக்கத்துக்கு மாறாகத் தூங்காமல் தன் அறையில் படுத்துக் கிடந்தாள். வழக்கம்போல் அவள் பெற்றோர் இருவரும் சண்டை போட்டுக்கொள்ள ஆரம்பித்தனர். ஆம்எல்லாம் அவளை விடுதியில் சேர்த்ததன் காரணமாகத்தான். அவளை விடுதியில் சேர்த்ததில் துளியும் அவள் அம்மாவிற்கு விருப்பமில்லை, அவள் அப்பாவிற்கும். இருப்பினும் யாழினியின் அம்மா வேலைக்குச் செல்வதால் அவள் அப்பா இம்முடிவை எடுத்தார். இம்முடிவை அவள் அம்மா மாற்றச் சொல்லியும் கேட்டபாடில்லை. அவள் அப்பாவிற்கு, அவள் அம்மா வேலைக்குப் போய்கொண்டே தன் மகளைப் பார்த்துக்கொள்ள முடியாதென முடிவெடுத்து விட்டார். அவள் அம்மாவோ, “என்ன வேலை இருப்பினும் என் மகளை நான் நன்றாகப் பார்த்துக்கொள்வேன்என்ற கூற்றைப் பல முறை சொல்லியும், கெஞ்சிக் கேட்டும், அவள் அப்பாவிற்குப் புரியவைக்க முடியவில்லை.

மேலும் அவள் அம்மா தம் குழந்தைக்கு இன்னும் விவரம் பத்தாது எனவும் அதுவும் அந்த மூன்று நாட்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டு மெனவும்,  என்னென்ன செய்ய வேண்டும், எவை செய்யலாம், எவை செய்யக் கூடாது என்பதுகூட அவளுக்கு தெரியாது, இந்த மாதிரியான நேரங்களில் அவள் தன்னிடம் வளர்வதே சிறப்பு எனவும், மேலும் அவளுக்குத் தேவையானது எவையெனவும் தன்னால் மட்டுமே அறிய முடியுமெனக் கூறியும் எந்தப் பயனுமில்லை, அவள் அப்பா காதில் வாங்கவும் இல்லை, அதற்கு மாறாக அவளுக்கு எல்லாம் தன் மகள் கற்றுக் கொள்வாள் என்று கூறி விடுதியில் சேர்த்தார்.

இன்று மட்டுமல்லஇப்படி ஒவ்வொரு நாளும் தன் மகளை விடுதியில் சேர்த்ததைப் பற்றி அவள் தந்தையிடம் குறை சொல்லிக் கொண்டிருப்பாள். சிலநேரங்களில் இருவரிடையே வாக்கு வாதங்களாகவும் இருக்கும், சில சமயம் அவை சண்டையில் முடியும். வழக்கம்போல ஆரம்பித்த பேச்சுவார்த்தை இன்று அவள் வந்ததுகூட நினைவில்லாமல் சண்டைக்கு வழிவகுத்தது. இப்படியே தொடர்ந்த சண்டையைக் காதில் வாங்கியும் வாங்காமலும் இருந்த யாழினிக்கு அவளால் பொருத்துக்கொள்ள முடியாதவளாய் இருவரின் முன் வந்து  நின்றாள்.

அம்மா, அப்பா! நான் விடுதியில் தங்கிய ஒவ்வொரு நாளும் எனக்கு மட்டுந்தான் நரகம் என நினைத்தேன். ஆனால், நான் இல்லாமல் இருக்கும் உங்களுக்கும் இங்கே நரகம் சூழ்ந்துள்ளது என்பதை இன்றே அறிவேன். விடுதியில் வாழ்ந்த வாழ்க்கை எனக்கு என்னை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டுமென கற்றுக் கொடுத்துள்ளது. ஆகவே, என்னுடைய வேலைகளை நானே பார்த்துக் கொள்கிறேன். என்னை இந்த வீட்டில் தங்க அனுமதியளியுங்கள்என்று மன்றாடினாள். “உங்களுக்கும் தேவையில்லாத பிரச்சினைகளை நான் கொடுக்க விரும்பவில்லை. என்னால் உங்களுக்கு எந்தத் தொந்தரவும் வராது”, என்று கூறினாள். இதைக்கேட்ட அவள் அப்பாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திக்குமுக்காட வாயிலிருந்து பேச்சு வந்தும் வராததுமாய்அடுத்த வருடத்தில் இருந்து நீ நம் வீட்டிலேயே தங்கி படி, விடுதியில் தங்க வேண்டாஎன்று கூறிய அந்த நொடி அவள் அம்மாவிற்கு சொர்க்கத்திற்கே சென்றதாய் ஒரு உணர்வு. அவள் அம்மாவின் ஆனந்தக் கண்ணீர் யாழினியின் துயரத்தைத் துடைத்தது.

அவள் அம்மா மீண்டும் அப்பாவிடம், “விடுதியில் தங்குவது என்பது தவறில்லை, இருப்பினும் குழந்தைகள் நம்மிடம் வளர்வதே பள்ளிக்காலம் மட்டுந்தான். அக்காலத்திலும் நாம் விடுதிக்கு அனுப்பிவிட்டால் நம் குழந்தைகள் நம்மிடம் வளரும் பாக்கியத்தை இழந்து விடுகிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள் இக்காலங்களில் மட்டுமே பெற்றோரின் அரவணைப்பில் வளர்கிறார்கள், இந்த அரவணைப்பு மிக முக்கியம். இக்காலங்களில் விடுதியில் தங்குவது அவ்வளவு நல்லதில்லை. அம்மாவின் அன்பிற்கு ஈடாக எதுவும் உண்டோ இவ்வுலகில். ஆகவே நம் குழந்தை நம்மிடம் வளரட்டும். வளர்ந்த பிறகு அவர்களே நம்மை விட்டு விலகுவார்கள். நாம் அவர்கள் வளர்ச்சிக்கு உதவுவோம். மாறாக, விடுதியில் போட்டு அவர்களின் கனவையும் அடைத்து வைத்து அவர்களின் எண்ணத்தைச் சிதைக்க வேண்டாஎனக் கூறினாள்.

விடுதி குழந்தைகளுக்கு விருப்பமல்ல
விடுதி குழந்தைகளுக்கு சுகமல்ல
விடுதி குழந்தைகளுக்கு ஏற்றதல்ல

குழந்தைகள் வளரட்டும் பெற்றோரிடம், பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் குழந்தைகளுக்குத் தேவை. அவை விடுதியில் கிடைப்பதில்லை; கிடைத்தாலும் பெற்றோருக்கு ஈடாவதில்லை.