பைந்தமிழ்ச் செம்மல்
ஆதி கவி சாமி சுரேஷ்
ஒரு ஊரில் செல்வன், பைரவன், குமரன்
என்கிற மூன்று பேர் உயிர் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்.
இவர்களுக்கு உரிய பருவத்தில் இவர்களுடைய
பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப் பெற்றனர்.
இவர்களும் இல்லற வாழ்க்கைக்குத்
தேவையான அளவிற்குப் பொருள் ஈட்டும் தொழிலை மேற்கொண்டு வாழ்க்கையைச் செவ்வனே நடத்தி
வந்தனர்.
சிறுசிறு ஏற்ற-இறக்கங்களோடு சீராகச் சென்று கொண்டிருந்த
அவர்களுடைய வாழ்க்கைக் கடிகாரம் 75 ஆண்டுகளைக்
கடந்தன.
மூவருமே தத்தமது குடும்ப வாழ்க்கையில்
குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றும் ஓரளவிற்குப் போதுமான பொருளாதாரத்தை மேம்படுத்தியும்
அவரவர் பிள்ளைக்குத் தரமான கல்வியையும் செல்வத்தையும் சேர்த்து வைத்திருந்தனர்.
கால ஓட்டத்தில் கரைந்து போகாமல்
தனித்தனியே மூவரும் தமக்கென்று சமூகத்தில் மதிப்புடைய செல்வாக்கையும் சேகரித்து வைத்திருந்தனர்.
இந்த நீண்ட நெடிய வாழ்க்கைப் பயணத்தில்
மூவரும் நல்ல நட்புப் பாராட்டியே வந்தனர். வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் மூவரும்
கூடிக் கலந்து பேசி மகிழவும் மறந்திலர். ஆனாலும் வயோதிகத்தின் வாசலில் நின்றிருந்த
அவர்களுக்குத் தாம் தம்முடைய வாழ்க்கையைத் திருப்திகரமாக வாழவில்லையோ என்கிற ஏக்கம்
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து தீராக் குடைச்சலை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. ஒவ்வொருவருடைய
முகமும் வறண்ட பாலைவனம் போன்றும் இறுகிய பனிப்பாறைகள் போன்று அவர்களுடைய கண்களும் காணப்பட்டன.
வயோதிகத் தனிமை அவர்களை வாட்டி
எடுத்தது. இவர்கள் எப்படி தன் குடும்பம் தன் பெண்டு தன் பிள்ளை தன் சம்பாத்தியம் என்று
வாழ்க்கையில் ஒரு வழி ஏற்படுத்திக் கொண்டு தனிமை தவம் இருந்தனரோ, அவ்வழியே இவர்களுடைய
பிள்ளைகளும் பேரன்களும் பேத்திகளும் சென்றுவிட இவர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக வெறுமை
குடிகொண்டிருந்ததை முற்றாக உணர்ந்தார்கள்.
ஒரு மாலை வேளையில் மூவரும் கூடி
மனம் திறந்து பேசிக் கொண்டிருந்தனர். முடிவில், இந்த வாழ்க்கை சாரமற்றது என்பதில் ஒத்த
கருத்துடையவர்களாக இருந்தனர். இந்தச் சந்திப்பு அவர்கள் வாழ்க்கையின் வசந்த காலத்தை
மீண்டும் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பைப் பொய்யாக்கி மேலும் வாழ்க்கையின்மீது இருந்த
பிடியை தளர்த்தவே செய்திருந்தது.
அவ்வமயம் அவ்வூருக்கு இமயமலை அடிவாரத்தில்
இருந்து சாது ஒருவர் வந்துள்ளதாகவும் அவரைச் சந்தித்தால் ஏதாவது அமைதியைப் பெறலாம்
என்றும் மூவரும் கூட்டாக முடிவு செய்து அச்சாதுவைச் சந்தித்தனர்.
மூவரில் சற்று மூத்தவரான பைரவர்
பேசத் தொடங்கினார். 'ஐயா, நாங்கள் மூவரும் அறநெறிக்கு உட்பட்டு சமூகத்திற்குத் தொந்தரவில்லாமல்
குடும்பத்திற்கு இடையூறு இல்லாமல் எங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தோம். எங்களால் சமூகத்திற்குக்
குறிப்பிடத்தக்க பயனில்லை; அதாவது நேரடியாகப் பயன் இல்லை என்றாலும் கூட ஒரு தீங்கும்
இல்லாமல்தான் நாங்கள் வாழ்ந்து வந்திருக்கிறோம். நல்லவை செய்ய முடியாவிட்டாலும் அல்லவை
செய்யாமல் வாழ்ந்து வந்திருக்கின்றோம். இருந்தாலும் எங்கள் வாழ்க்கையில் ஏதோ தவறவிட்டதாக;
ஒரு முழு வாழ்க்கை வாழாமல் விட்டதாக எங்கள் மூவருக்கும் ஒரு மனக்குறை உள்ளது. தக்க
ஆலோசனை கூறி நீங்கள்தான் எங்களைத் தெளிவுபடுத்த வேண்டும் ஐயா' என்று கேட்டுக்கொண்டு
அமர்ந்தார்.
அந்தப் பெரியவர் இவர்கள் மூவரையும்
ஊடுருவிப் பார்த்து விட்டுக் குறுநகை முகத்தில் படரப் பேசத் தொடங்கினார்.
உங்களைப் பார்த்தால் சமூகத்திற்கு
எந்த தீங்கும் இழைக்காதவர்கள் என்று என்னால் அறிந்து கொள்ள முடிகிறது. ஆனால், நீங்கள்
உங்களுக்கே தீங்கு செய்துகொண்டவர்களாக இருக்கிறீர்கள் என்பதுதான் கசப்பான உண்மை என்றார்.
இதைக்கேட்ட மூவரும் ஒவ்வொருக்கொருவர் கலவரப் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
சிறிய புன்னகையோடு அந்தப் பெரியவர்
மேலும் தொடர்ந்தார். நீங்கள் மூவருமே நண்பர்களாக இருந்து வருகின்றீர். ஆனால் மூவரும்
ஒத்திசைவாக ஒருங்கிணைந்து வாழாததுதான் இந்த மன சஞ்சலத்திற்குக் காரணம் என்றார். மூவரின்
முகக்குறிப்பைக் கண்ட பெரியவர் மேலும் தொடர்ந்தார்.
'உங்களுடைய முதல் 25 ஆண்டு காலம்
கல்விக்கு என்று விடப்பட்டன. அப்போது உங்களிடம் இளமை இருந்தது; செலவழிக்கச் செல்வம்
இல்லை; செலவழிக்க நேரமும் இல்லை. அதனால் இளமையில் துய்க்கும் இன்பத்தை நீங்கள் ஒருவரும்
துய்க்கவில்லை என்று உணர முடிகிறது. இரண்டாவது 25 ஆண்டு காலத்தில் உங்களிடம் போதுமான
செல்வம் இருந்தது இளமை இருந்தது ஆனால் அதைச் செலவழிக்க நேரம் இன்றித் தொழிலாற்றினீர்.
மூன்றாவது 25 ஆண்டு கால வாழ்க்கையில் உங்களிடம் நேரம் இருக்கிறது; செல்வம் இருக்கிறது;
அதையெல்லாம் அனுபவிக்க உடலில் இளமை அற்றுப்போய்விட்டது.
எல்லாவற்றையும் பெற்றுவிட்ட பிறகு
பார்த்துக் கொள்ளலாம் என்கிற உங்களுடைய இந்த எந்திரத்தனமான மனப்பாங்கு உங்களை எதையுமே
பார்த்துக் கொள்ளாமல், அனுபவிக்க முடியாமல் செய்துவிட்டது. அதனுடைய உள்ளார்ந்த மன அழுத்தத்தின்
வெளிப்பாடுதான் இப்பொழுது நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை தவறு என்று சுட்டிக் காட்டிக் கொண்டே
இருக்கிறது. வாழ்வு என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு வரம். அதை எந்தவொரு புறவயமான
வெற்றிக்காகவும் பலியிடக் கூடாது. தேக்கி வைத்துப்
பிறகு பயன்படுத்திக் கொள்ள நாம் ஒன்றும் நீர்த்தேக்கங்கள் அல்ல; ஒவ்வொரு கணமும் வாழ்க்கையைக்
கொண்டாட்டத்தோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். ஓடும் நதியில் இருமுறை ஒருவர் கால்வைக்க
முடியாது என்றார் ஹிராக்கிளிடிஸ் .ஆம் ஓடும் நதியில் நாம் ஒருமுறைகூட கால் வைக்க முடியாது.
ஏனெனில், அது இயங்கிக்கொண்டே இருக்கிறது. இயங்கிக் கொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அந்த
வாழ்க்கையை ஒவ்வொரு கணமும் நாம் கொண்டாட்டத்தோடு வாழத் தலைப்பட்டிருந்தால், வாழ்நாளின்
இறுதிக் காலத்தில் அல்லல்பட வேண்டிய அவசியம் இல்லை.
பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பார் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.
என்று சொல்கிறாரே வள்ளுவரும்.
இன்பத்தில் ஆகச் சிறந்த இன்பம் ஈந்துவப்பதே. இனியேனும்
இருப்பதைப் பிறருக்குப் பகிர்ந்து கொடுங்கள். உங்கள் வாழ்க்கையில் படிப்படியாக இன்பம்
பொழிவதை உணர்வீர்கள்' என்று ஆசிர்வதித்து அனுப்பினார் அந்தப் பெரியவர். மூவர் கண்களிலும்
வெளிச்சத்தைக் கண்டார் அப்பெரியவர். காலநதி வற்றாமல் ஓடிக் கொண்டே இருக்கிறது.
இளமையும், செல்வமும், யாக்கையும் நிலையற்றவை. அவை இருக்கும்போதே உலக இன்பங்களைத் துய்க்கப் பழகிக் கொள்ளவேண்டும். அன்றறிவாம் என்னாது, இன்றே அறம் செய்யவேண்டும்.அதுவே முதுமைக்கண் ஒருவனுக்கு நிலையான அமைதி தரும்.
ReplyDelete