'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

இலக்கியக் கூடல் - 13



பைந்தமிழ்ச் சோலையின் இலக்கியக் கூடல் - 13 23.02.2020 (ஞாயிறு) அன்று மாலை 4:30 மணியளவில் பைந்தமிழ்ச் சோலையின் நிறுவனர் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களது இல்லத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்
என்ற குறளுக்கிணங்க இந்நிகழ்ச்சி நெஞ்சில் இனித்தது. ஆம்… நிகழ்வு முடிந்தும் பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம் என்பதே அப்பழுக்கற்ற உண்மை.

வழக்கமான முறையில் சடங்கைப் போல இலக்கிய நிகழ்வுகள் நடைபெறாமல் உயிரோட்டமாகவும் உணர்வோட்டமாகவும் இருந்தது என்பதைப் பங்கு கொண்டோர் அறிவர்.

தொடக்க நிகழ்வாகத் திரு.பொன்.இனியன் ஐயா அவர்கள், திருக்குறளில் "மாறுருரையும் நேருரையும்" என்ற தலைப்பில் அவருக்கே உரிய ஒயிலில் தனது கருத்தை முன்வைத்தார்‌. எல்லோரும் தத்தமது ஐயங்களை எழுப்பி விளக்கங் கேட்டு அமைய, முதனிகழ்வு சிறப்பாகத் தொடங்கி முடிந்தது.

அடுத்ததாகத், திரு. ஆவடி க.பூபதி அவர்கள், "திருக்குறளில் பெண்ணடிமைத்தனமா?" என்கிற பொருளில் சுவையான கருத்துகளை எடுத்துத் தந்தார்.

தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில் அனைவரும் கவிபாடி அசத்தினர். இஃதொரு பல்சுவைக் கவியரங்கமாக அமைந்து செவிக்கு இன்பம் பயத்தது.

பாவலர் மா.வரதராசன் அவர்கள், நிகழ்ச்சியை நெறிபடுத்தியும் ஐயங்களைந்தும் தலைமை யேற்றும் ஆற்றுப்படுத்தினார். பாவலரின் துணைவர் அவர்கள், வந்திருந்தவர்களை விருந்தினரைப் போல் விழுந்துவிழுந்து கவனித்துக் கொண்டார்கள். சியாமளா அம்மாவின் சுவையான மசால் வடையும் கூடுதல் சுவையை வழங்கிற்று.

இயற்கையோடியைந்த நல்ல சூழலில் மனத்திற்கு இதமாக நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வின் அனைத்துப் பரிணாமங்களும் ,பரிமாணமாகப் படப்பதிவு செய்யப்பட்டன. இன்னும் சுவையான அடுத்த நிகழ்வில் வாய்ப்புள்ளோர் வருகை புரியும்படி கேட்டுக் கொள்கிறோம். நன்றி… வணக்கம்!
                                       -பைந்தமிழ்ச் செம்மல் சாமி சுரேஷ்

No comments:

Post a Comment