'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

ஆசுகவி விருந்து

தமிழிலக்கிய வரலாற்றில் ஒரு சாதனை விருந்தாகப் பைந்தமிழ்ச் சோலையில் 08.03.2020 அன்று ஒருமணி நேரம் நடைபெற்ற 'ஆசுகவி விருந்து'.

விருந்து படைத்தோர்:
ஒற்றை இலக்கப் பாக்கள்: பைந்தமிழ்ச்செம்மல் விவேக்பாரதி
இரட்டை இலக்கப் பாக்கள்: பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து

அறநெறிப் பாடல்கள்

குறள் வெண்பா – அந்தாதி


அறநெறி என்பதி யாதெனில் நன்மை
பிறழாத வாழ்க்கைப் பிழைப்பு!                   (1)

புலனைந்தும் காத்தால் புகழ்மணக்கும் இஃதை
நலமுடன் உள்ளத்தில் நாட்டு                         (2)

நாட்டின் இனத்தின் நலம்காத்தால் தன்னாலே
வீட்டில் அறம்வளரு மாம்!                               (3)

அறம்வளர்ந்தால் நாட்டில் அமைதிவரும் இன்பத்
திறமென்னும் ஓடுமாம் தேர்                          (4)

தேர்வாய் மனமே தெளிவே அறவடிவம்!
யார்சொல்லும் ஆராய்வாய் ஆம்!                 (5)

ஆமென்(று) எதற்கும் அடிக்கடி ஆட்டாதே
தீமையறிந் தாட்டு தலை                                (6)

தலைவன் எனப்படுவான் சார்ந்தார் அறத்தை
நிலையாகக் காப்பான் நிலத்து!                    (7)

துக்கம் எனும்பாவி தூக்கம் தொலைப்பனவன்
பக்கம் வராமல் பழக்கு                                  (8)

பழகும் குணத்தில் பயன்படுத்தும் சொல்லில்
அழகாய்த் தெரிவ தறம்!                                (9)

அறமெனப் பட்டதே இல்வாழ்க்கை என்ற
குறள்வழி வாழ்வே உயர்வு                             (10)

உயர்விலும் தாழ்விலும் ஊன்றாத நெஞ்சம்
அயர்வினைக் காணா தறி                             (11)

அறிவால் உலகம் அகல்விரியும் என்ற
நெறியை உளத்தால் நினை                           (12)

நினைப்பால் செயலால் நிலைத்தல் அறமாம்
முனைப்பாய் அதையே முடி!                         (13)

முடிவும் தொடக்கமும் முற்றுணர்ந்(து) உன்றன்
அடியைவை வெற்றி உனக்கு                        (14)

உனக்கெனக் கென்றே உளபேதம் எல்லாம்
அனைவர்க்கு மாவ தறம்                                (15)

அறமென்ப(து) ஆய்ந்தால் அனைத்துயிரும் இன்பம்
நிறைபெறச் செய்வதே ஆம்                          (16)

செய்யும் தொழிலும் செயல்பயனாய்த் தோன்றுவதும்
உய்யுமதன் வாழ்வும் அறம்!                          (17)

அறத்தால் அகிலம் தழைக்கும் அதைத்தான்
திறவோர் நினைப்பர் தினம்                          (18)

தினமும் அறஞ்செய்தல் சான்றோர் கடனாம்
மனத்தில் பதித்திதை வை!                            (19)

இதைவை இதைவை எனஒன்றைச் சொன்னால்
அதைவை அதுவேஉண் மை                         (20)

மையாய்க் கருத்த மனத்தில் அறமொன்றே
மெய்யாய் விளங்கும் விளக்கு!                      (21)

குடியது நாளும் குடியைக் கெடுக்கும்
குடிவிட ஓங்கும் குலம்                                     (22)

குலம்வாழ நாட்டின் குடிவாழக் காக்கும்
தலைவனது கோலே அறம்                             (23)

அறமென வாழும் அறிவரசன் நாட்டில்
திறமுடன் நீக்குவன் தீது                                 (24)

தீதை விலக்கித் திசையொளிர நன்மைசெயப்
போதை நினைக்காதே போ!                         (25)

போபோபோ கள்காமம் பொய்யென்னும் மூன்றுவிட்டு
வாவாவா இன்பம் வரும்                                 (26)

வருவதை நாளும் வறியோர்க் களித்தால்
பெறுவ தறமெனும் பேறு                                (27)

பேறுகளில் மிக்க பெரும்பேறி யாதென்றால்
ஊறில்லா உள்ளமே ஊன்று                           (28)

ஊன்றிய தர்மத் துயர்வழியில் செல்லுங்கால்
தோன்றும் அறமே இறை                                (29)

இறையினைத் தேடுவோர் யாவருக்கும் உண்ண
இரைதரும் ஏரோன் தலை                              (30)

தலைவன் இறைவனின் தாள்போற்றிச் செய்யும்
உலக அறமே உயர்வு!                                      (31)

உயர்வில் உயர்வறம் ஒன்றுண்டு மாற்றார்
துயரினை நீக்கல் அது                                    (32)

துன்பம் துடைத்தெறியும் தோன்ற வலுசேர்க்கும்
இன்பம் அறத்தின் இயல்பு!                            (33)

புவியை நலமாக்கும் புத்தொளிர் பாட்டே
கவியுள் சிறந்த கவி                                        (34)

விந்தைப் பிறப்பில் விளைபயனோ மற்றவர்க்
கிந்தா பிடியெனல் ஈ!                                      (35)

ஈசல் இரையாகும் எவ்வுயிர்க்கும் அஃதேபோல்
வாழ்வை பிறிதோர்க்காய் வை                     (36)

வைதாரைக் கூட மனத்தினில் வைத்திடுவார்
உய்தாரெல் லார்க்கும் உயர்வு!                      (37)

உயர்வினை நோக்கி உயர்ந்தெரியும் தீப்போல்
முயற்சியை வைக்க முனை                          (38)

முனைந்துவிட்டால் போதும் முயற்சி அளிக்கும்
வினைக்குரிய உற்ற விளைவு                        (39)

விளைவறிந்து செய்தாலே வெற்றியுனைச் சேரும்
தளர்வகற்றல் இன்னும் தரம்                          (40)

தரத்தினைச் சோதித்துத் தக்க படிக்குச்
சிறந்ததை மட்டுமே செய்!                             (41)

செய்க செயற்கரிய செய்கைதனைச் செய்திறத்தால்
உய்வாஅய் நாளும் உயர்ந்து                          (42)

துவளுதல் விட்டுத் தொடர்ந்து முனைந்தால்
தவத்தினுக் குண்டு தயை                              (43)

தயையுனக்கு நாளும் தகுதி வளர்க்கும்
அயர்வின்றிச் செய்வாய் அதை                    (44)

தைப்பாய் மனத்தினில் தைரியத்தை அத்துடன்
வைப்பாய் அறத்தையும் மேல்!                     (45)

மேலென்றும் கீழென்றும் யாரையும் பார்க்காதே
நாளும் சமத்துவம்வ ளர்                                (46)

வளர்க்கும் குருவை வடிவுதந்த தாயை
அளத்தல் அறமன் றது!                                   (47)

அதுவிது வென்னும் அகத்தடு மாற்றம்
புதுமை தடுக்கும் புரி                                      (48)

புரியும் பணியால் புவிக்குநலம் சேரும்
வரைதூக்கம் தூரத்தில் வை!                         (49)

வைவைவை நன்மைகல்வி வாய்மையென இம்மூன்றும்
செம்மையைச் செய்யும் அறி                        (50)

அறிவினுக் கொவ்வாத அத்தனையும் குப்பை
செறிவுன்றன் பார்வையில் சேர்                    (51)

சேர்த்தலும் நீக்கலும் செய்தொழிலில் ஆராய்ந்தால்
ஆர்த்தலே வேண்டாம் அறி                            (52)

வேண்டாப் பொருள்களை வாங்கிக் குவிக்காதே
நீண்டால் அகலும் நெருப்பு!                           (53)

புல்லர் மிதித்தாலும் புல்லோ தலைநிமிரும்
உள்ளேநம் பிக்கை உயர்த்து                          (54)

துணிவே பெருந்துணையாய்த் தோன்றும் பொழுதில்
அணியா யுதவும் அறம்                                  (55)

அறத்துடன் அன்பும் அணிசேர்ந்தால் வாழ்க்கை
திறத்துடன் ஓங்கும் தெளி                              (56)

தெளிவே அறமாகும் தேடல் அறமாம்
அளித்தலும் ஆகும் அது!                                 (57)

துடித்தழுது நண்பன் துயரத்தில் நிற்க
விடுத்தகல் நண்பனென்றும் வீண்                (58)

வீண்பேச்சு துள்ளல் விளையாட்டெல் லாம்வேண்டா
ஆண்மை அறமே அணை!                             (59)

அணைப்பதுவோ என்றும் அறமாய்நிற் கட்டும்
இணையில்லை பாரில் இதற்கு                     (60)

குணமே அறம்வாழும் குன்றம்! அதனை
வணங்கக் கிடைக்கும் வரம்                          (61)

வரம்ஒன்று கேட்டு வணங்கிநான் நிற்பேன்
அறவுள்ளம் வேண்டி அதற்கு                         (62)

No comments:

Post a Comment