'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே வணக்கம்!

மரபு கவிதைகள், இலக்கண, இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள் எனப் பல பயனுள்ள தகவல்களைத் தாங்கிவரும் பைந்தமிழ்ச் சோலையின் தமிழ்க்குதிர் - பதினைந்தாவது மின்னிதழ் வழியாக உங்களைச் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

உலகமெல்லாம் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் செய்தி கொரோனா (Corona) என்னும் தொற்றுநுண்மி தொற்றிப் பரவுதலைப் பற்றியே. உலகச் சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) செய்திப்படி இதுவரை 148 நாடுகளில் இது பரவியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,68,000+. இறந்தவர்களின் எண்ணிக்கை 6,600+. மக்கள் தத்தம் வீடுகளிலேயே முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இத்தொற்று நுண்மியினும் விரைவாகப் பரவுவது அதைப் பற்றிய செய்திகளே.  அதிலும் போலிச் செய்திகள் பலவும் விரைவாகப் பரவித் தொல்லையை ஏற்படுத்துகின்றன. சமூக வலைத்தளங்கள் நன்மை தருவனவாயிருந்தாலும் அந்த அளவுக்குக் கெடுதலைச் செய்யவும் வழி செய்கின்றன.

சிலப்பதிகாரத்தில் உள்ளதாகக் குறிக்கப்பட்டுப் பாடல் என்ற பெயரில் புலனத்திலும் முகநூலிலும் சுற்றிக் கொண்டிருக்கும் ஒரு போலிச் செய்தி மேலும் வெறுப்பைக் கூட்டுகிறது. அதைப் பற்றிச் சிந்திக்காமல் பகிர்வோரின் அறியாமையை என்னவென்று சொல்வது? நம் மக்களுக்கு அவ்வளவு இலக்கிய அறிவு இல்லாமால் போய்விட்டதா? இது போன்ற போலிச் செய்திகளைச் சற்றும் சிந்திக்காமல் பகிரும் அளவுக்கு நம்முடைய சிந்தனை வளம் தேய்ந்துபோய்விட்டதா? ஒரு செய்தியைப் பகிரும் முன், அதன் உண்மைத் தன்மையை ஆய்ந்து பகிர்தல் நலம். அல்லது பகிராதிருத்தல் நலம்.

சிந்தித்துப் பகிர்வோம்! சிறப்பாக வாழ்வோம்!

தமிழன்புடன்
மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

No comments:

Post a Comment