'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

விருந்தாய் விளைந்த வித்து

(மாறுரையும்  நேருரையும்)

கவிஞர் பொன். இனியன்

+91 80157 04659

தமிழரின் பண்பாட்டுக் கூறுகளில் தலையாய விழுமியமாகக் கருதப்படுவது யாதெனின் விருந்தோம்பலாகும்.

விருந்து எனற்கு விரும்புவது என்னும் சொல்லை வேரடியாகக் குறிக்கிறார் மொழியாய்வியல் அறிஞர் பாவாணர். சிறப்புறு தருணங்களில், அதாவது மணவினை போன்ற விழாப்போதுகளில் கொள்ளும் கூட்டுணா மற்றும் நண்பர் உறவினர் போன்றோரைச் சிறப்பிக்க வேண்டி ஏற்பாடு செய்யப்படும் பேருண்டியைக் குறிப்பதாக விருந்து எனுஞ் சொல்  இற்றை நாள் வழக்கில் உள்ளது.  தொன்தமிழ் வழக்கில்  விருந்து என்பது புதுமை - புதியவர் எனப் பொருள் படுவதாயிருந்தது. விருந்தினர்க்கு அளிக்கப்படும் உணவு விருந்துணவாயிற்று. அதுவே வழக்காற்றில் விருந்து எனவுமாயிற்று.

விருந்தோம்பல் என்பதனை ஒரு சமுகவியற் கூறாகக் கொண்டு உபசரிப்பு (Hospitality) என்பதாக மட்டுமே உலகில் பிறவினத்தாற் பயிலுவதாயிருக்கத் தமிழினத்தார் மட்டிலும் இதனை இல்வாழ்க்கையின் நெறியாகவும் குறியாகவும் கொண்டு ஓம்புகின்றனர். 

இருந்தோம்பி யில்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி 
வேளாண்மை செய்தற் பொருட்டு
எனக் குறிக்கிறார் வள்ளுவர்.

தம்மக்கள் தங்கிளை தங்கேளிர்பால் அன்புடைய ராதலும் விருப்புடையராதலும் எவர்க்கும் இயல்பே. தன்னோடு தொடர்பற்ற ஏதிலராய புதியவர்பால் அன்பும் பரிவும் காட்டுதல் மனித மாண்பாகிறது. இதைத் தன் மரபாக்கிக் கொண்டது தமிழினம். அதனாலேயே விருந்தினர் எனப்பட்ட புதியவர்களைப் போற்றுவதை இல்வாழ்வானின் தவிர்க்க வொண்ணாத ஒரு கடமையாகக் கொண்டிருந்தனர் நம் முன்னோர். 

இத்தகைய ஒரு கடப்பாடுடைய வேளாளன் ஒருவனின் உள்ளத்து உணர்வைக் காட்சிப்படுத்துகிறது.
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில்  மிசைவான்  புலம்                    (85)                  
என்னும்  குறள்.

தமிழ்ச் சமூகத்தின் தலைமைப் பண்புகளில் ஒன்றான விருந்தோம்பல் பற்றிய இப்பாடலுக்கு அமைந்த உரைகளைக்  குறித்த ஓர் அலசலாக அமைகிறது இக்கட்டுரை.

விதை - நிலம் – விருந்து

இப்பாடலுக்கான உரைகள் பலவற்றையும் உற்றுக் கருத விருந்தினரை உபசரித்த பின்பே உண்ணும் ஒருவன் என்பதில் மட்டும் எல்லாரும் ஒன்றுபட்ட கருத்துடையவராயுள்ளதும் வித்து மற்றும் புலன் குறித்த கருத்தில் சற்றே மாறுபட அமைகின்றதும் தெரிகிறது. அவற்றை  மூவகைப்படுத்தலாம்.

இடல் என்று ஒரு சிலரும் மிடல் என ஒரு சிலரும் வைத்துப் பொருள் காட்டினர். மூன்றாமவர் நிலத்தில் விதைப்பான் என்னாது விருந்தினர்க்கு இடுவான் எனக் காட்டினர்.

முதல் வகையினருள்ளும், விதைக்கப்படுத லின்றியே விளையும் எனவும், பிறர் விதைத்து உதவுவர் எனவும் மாறுபட உரை செய்துள்ளனர். இரண்டாம் வகையின ருள்ளும் அவன் நிலம் காவல் தேவையின்றியே நல்ல விளைச்சல் காணும் எனவும், பிறர் காவலாயிருந்து உதவுவர் எனவும், இருவாறாக உரைத்தனர். மூன்றாவதாக, விருந்தோம்பலை முதன்மையாக் கருதும் ஒருவன் வித்தையும் விருந்தினர்க்கு இடுவான் எனுமாறு கருத்துரைப்பாராயினர்.

இம்மூவகைக் கருத்துகளும் குறள் குறிப்போடு எவ்வாறு பொருந்தியும் முரண்கொண்டும் நிற்கின்றன என்பது காண்போம்.

மாறுபடும் உரைக் கூறுகள்

விருந்தினரை ஊட்டி மிக்க உணவை உண்ணுபவர் புலத்தின்கண் விளைதல் பொருட்டு விதைக்கவும் வேண்டுமா? தானே விளையாதோ? என்கிறார் மணக்குடவர். முன்னே விருந்தினரை மிசைவித்துப் பின் மிக்கதனைத் தான் மிசைவானது விளைபுலத்திற்கு வித்திட வேண்டுமோ? (வேண்டா). தானே விளையும் என்பது குறிப்பெச்சம் என்கிறார் பரிமேலழகர், அதையே ஒற்றி யெடுத்தவாறாகத் தமதுரையில், அறுவடை நாளில் வயலிற் சிந்திய மணிகள் களந்தூர்க்கப் படாமலேயே கிடந்து அடுத்துப் பெய்த மழையால் முளைத்து விளைந்திருக்கலாம் என ஒரு மேல் விளக்கத்தையும் வைக்கிறார் பாவாணர். அவன் விதைக்க வேண்டுவதில்லை ஊரார் விதைத்து உதவுவர் எனக் காட்டுகிறார் ஆ வே இரா .

எந்நிலமாயினும் அது எவருடையதாயினும் வித்திடாமல் முளையாது என்பதும் விரையொன்று போடச் சுரையொன்றாய்க் காய்க்காது என்பதும் இயற்பு. தானே விளையும் என்பது அதீதம்; வெறுங் கற்பனை. ‘ஊரார் விதைத்து உதவுவர்’ என்றதும் உலகியல் நடைமுறைக்கு மாறானது. தானே விளைவது என்பதை உயர்வு நவிற்சியாகக் கொள்ளினும் அது ஓரோக்கால் நிகழுமெனக் கொளற்காவதன்றி அடுத்தடுத்துத் தொடர்ந்து நிகழ்தற்காமா என்பது எண்ணற்குரியது. மேலும், தூர்க்கப்படாத மணிகள் விளைவது அனைவரின் நிலத்திலும் ஆவதொன்றே என்பது கருத இதில் அறவாணன் நிலத்துக்காம் தனிச்சிறப்பு என்னாம் எனும் கேள்விக்கும்  இடமாகிறது.

திருக்குறள், வையத்து(ள்) வாழ்வாங்கு மக்கள் வாழ்தற்கான வழிகாட்டு நூல். அறம், அறிவு, ஒழுக்கம், ஊக்கம், தன்மானம் என்பவற்றோடு மனித இனத்தை மாண்புறுத்த எழுந்த பேரிலக்கியம் திருக்குறள். கவிநயம் என்பது கொண்டு இயற்புக்கும் அறிவுக்கும் பொருந்தாத எதுவும் குறளுக்குள் இல்லை என்பது  துணியலாம்.

காவல்  வேண்டா

பிற எல்லா உரைகளும் விதைப்பதைப் பற்றிய கருத்துடையனவாயிருக்கக் காவலைப் பற்றிய ஒரு நோக்குடையவராகிறார் பெருஞ்சித்திரனார். பிறரெல்லாம் இடல் எனக் கொண்டதை இவர் மிடல் எனக் கொள்கிறார். மிடலை வலிமையெனப் பொருள்படுத்தி  அதைக் காவலுக்காக்குகிறார். அவன் விளைபுலத்திற்கு மேய வரும் கால்நடைகளுக்கு ஊரவர் காவலாயும் இருப்பர் என்கிறார். காவல் என்பது விளைந்து முற்றிய கதிருக்கே வேண்டப்படுதலன்றி வித்துக்கு அன்றாம் என்பதும் ஊன்றியுன்னுக.  விதைப்பித்த வித்து என உரையில் குறித்தபின் மீண்டும் வித்து எனற்கு விளைந்து நிற்கும் கதிர் மணிகள் என வலிந்து நீட்டுகிறார் பெருஞ்சித்திரன். விதைப்பித்த வித்தே கதிராய் விளந்து நிற்பதாயினும் வித்து எனும் குறள் குறிப்பை விளைப்பித்ததாகக் கொள்வதா அன்றி விளைந்து நிற்பதாகக் கொள்வதா எனும் பொருள் மயக்கு தருவதாகிறது அது.

ஊரார் விதைத்து உதவுவர் என ஆ.வே.இரா காட்டியதும் ஊரவர் காவலாயிருப்பர் என பெருஞ்சித்திரன் காட்டுவதும் நடைமுறைக்கு எட்டாதனவாம். மேற்காணுமாறு உரை செய்தாரெல்லாம், தாள்தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு ஆற்றி வேளாண்மை செய்தற் பொருட்டே (212) என்றும், தாளாண்மை இல்லாதான் வேளாண்மையை பேடிகை வாளாண்மைக்கு (614) ஒப்பு காட்டியும் வள்ளுவர் குறித்துள்ளவற்றை உணராதும் ஓராதும் போனார் என்க.

(விருந்தோம்பல் தடைப்பட்டபோது) தன் நிலத்தில் விதைக்க வைத்திருந்த நெல்லினை விதைக்கவும் விரும்புவானோ? (விரும்பமாட்டான் அதையும் விருந்தினர்க்கு ஆக்குவான்) என்கிறார் மு.பெரி.மு.ராமசாமி. தன் நிலத்திற்கு விதை போடுவதையும் விரும்பான் (விதைக்க வைத்திருந்த வித்தாலும் விருந்தோம்புவான்) என்கிறார் இளங்குமரனார்.

விதைப்பதற்கென வைத்திருந்த  விதை என்பதிலேயே  விதைக்க வேண்டும் என்பதும் (விதையாமல் விளையாது) என்பதும் வெளிப்பட்டுத் தோன்றுகிறதே. பின், விதைக்க வேண்டியதில்லை எனும் கூற்று உரையன்மையாகாதா. முரண்பாட்டின் முடிச்சே போல, விருந்தினரை உபசரித்து மீதியிருப்பதையே உண்பவனுடைய நிலத்திற்கு விதையிடுதலும் வேண்டுமோ (வேண்டியதில்லை) என முதல் வகையினரைப் படியெடுத்தவாறாகவும், விதைக்க (விதையாக) வைத்திருப்பதையும் சமைத்து உணவளிப்பான் என முடிபு காட்டுகையில் மூன்றாம் வகையினரைச் சார்ந்து கொண்டவாறும் உரை செய்துள்ளார் முனிசாமி. இவருரையை நான்காம் வகையெனக் கருதலாம்.

விருந்தினரை உண்பித்த பின் மிச்சத்தை உண்ணுவோன் நிலம் ஒன்றுக்கு ஆயிரமாகச் செழித்துப் பலன் தரும் எனும் ச.வே.சுவின் உரை குறளிற் குறித்துள்ள  ‘வித்துமிடல்’ என்பதைச் சற்றும் பொருள்படுத்தாதவாறும் குறளின் நுவல் பொருட்குத் தொடர்பேயில்லாத விளைச்சல் பெருக்கத்தைத் தாமே புறத்திருந்து தருவித்துப் பொருத்தியதாகவும் உள்ளது.

இவை இவ்வாறாக, இக்குறட்பாவின் கருத்தினைக் காணும் முயற்சியாக முதற்கண் இக்குறட்பாவில் பயின்றுள்ள சொற்களுக்கான பொருளையும் அறிந்து கொள்வோம்.

விருந்தோம்பி: செல்விருந்து ஓம்பி என வினை தொக்கி நின்றது 

மிச்சில்: மிச்சு இல் எனும் சொற்பகுப்பில் மிஞ்சாத, மீதமில்லாத எனப் பொருள் கொள்ளற் குறியதாகிறது.

மிசை > மிசைதல் > மிசைவான்: மிசைதல் என்றது மேற்படுதல் - ஊங்குதல் என்றதாம்.

காண்க:
பொழிந்தினிது நாறினும் பூமிசைதல் செல்லாது இழிந்தவை காமுறூஉம் ஈ – நாலடியார் (259)

மீன் நொடுத்து நெல் குவைஇ
மிசை அம்பியின் மனை மறுக்குந்து – புறம்34.

மேலும் தொடரக் கருதுவது என்றது (வரு) விருந்து
ஓம்பலை.

புலன்: புலம் எனற்கு உணர்வு எனும் பொருளுமுண்டாதலை அறிக. புலப்படுதல் - உணர்வுக்கெட்டுதல். அதாவது உணர்தல்.

வேண்டுங்கொல்: கொல் என்றது வினவுப் பொருளது. விரும்புவான் போலும் என்றது. வித்தும் இடுவான் விருந்துக்கே.

வித்திடலும் என்னாது வித்தும் இடல் என்றதன் நுட்பத்தை ஊன்றி யுன்னுக. இக்குறட்பாவின் கருத்து விதைத்தலைக் கருதியதாயின் வித்து இடலும் (விதைத்தலும்) என அமைத்திருப்பார். ஆனால் வித்தும்  இடல் (வித்தினையும் இடற்கு) என்றதால் முன்னர் இட்டது பிறிதொன்று என்பதும் இப்போது வித்தினையும் இடுதற்கு விரும்புவானோ என்றதன்  நுண்மையை ஓர்க. அதில் உள்ள உம்மை அவர்க்குள்ள உறுதிப்பாட்டைக் குறித்ததாம். வித்தும் இடல் என்றது என்பும் உரியர் பிறர்க்கு (72) எனும் நடையது. வித்து வேளாளன் தன் உயிர்க்கு ஒப்பானது. அதையும் விருந்தினர்க்கு இடத் தயங்கான் போலும் என்றவாறு. இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் (218)  என்றது போலப் (பொருள்) மிச்சு இல் என்பதை உணர்ந்தும் (If need be) விருந்தோம்பற்கு மேற்படுவான் என்றது. அவ்வாறு மிசைபவன் விதைக்காகத் தன்னிடமுள்ள தானியத்தையும் உணவாக்குவான் போலும் என்றது.  இது கொடைமடம் பட்டதாம். போற்றி வழங்கு நெறியறியாது விருந்தோம்பும் ஒருவனை விதந்தேத்திய பாடல் எனலாம்.

பொருள்கோள் வைப்பில், விருந்தோம்பி  மிச்சில் புலம் மிசைவான் வித்தும் இடல் வேண்டுங் கொல் என நிற்பது.  ஓ அசைநிலை.  கொல் என்றது ஐயக் குறிப்பு. அதற்கான பொருள் இருப்பு தன்னிடம் மிச்சமில்லை என்பதை அறிந்தும் மேலும் விருந்தோம்பலில் விருப்புடையானாகில் தன்னிட முள்ள வித்தையும் விருந்துக்கு இடுவான் போலும்  என்பது  இதன்  பொருளாகிறது.

இக்கருத்துக்கு ஒத்தவாறாக, விதைக்க வைத்திருந்த வித்தாலும் விருந்தோம்புவான் என இளங்குமரன் உரைப்பினும் அதனை உறுதிபடக் குறிக்காமல் அடைப்புக்குள் வைத்துக் காட்டியுள்ளார். அதையும் விருந்துக்கு ஆக்குவான் என மு.பெரி.மு.ராமசாமியும் பொருள் முடிபாகக் காட்டியிருப்பினும் தன் நிலத்துக்கு விதை போடுவதை விரும்பான் எனவும் விதைக்க வைத்திருந்த நெல்லை விதைக்கவும் விரும்புவானோ எனக் குறித்ததும் வேண்டற் பாலதன்றாம்.

இப்பாடல், தான் சந்தித்த ஒருவனின் விருந்தோம்பலைக் குறளாசான் விதந்த தற்கூற்றாகக் கொள்ளத் தகுவதாகும்.

குறளின் குறிப்பாவது விருந்தோம்பலை மிகுதியும் விரும்பி  மேற்கொள்ளும் இவன் பொருள் முட்டு நேர்ந்த விடத்து என் செய்வான்? தன்னிடம் உள்ள வித்தையும் விருந்துக்கே இடத்துணிவானோ? ஆற்றின் அளவறிந்து ஈதலைப் பொருள் போற்றி வழங்கு (477) நெறியெனக் கருதாதவாறா அத்துணை மிகுதியாக இருக்கிறதே இவனின் விருந்தோம்பல் என விதந்தவாறாவது இது.
 
புகழெனின் உயிரையும் கொடுப்பர் எனும் புறனாநூற்றுப் பாடலைப் போல விருந்துக்கெனின் வித்தையும் இடுவர் எனுமாறாவது.

No comments:

Post a Comment