'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 17, 2020

நெய்தல் நிலம்


பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்

விடிகாலைக் கதிரவனின் கதிர்கள் மின்ன
    மெல்லென்று பூங்காற்றுத் தவழ்ந்து செல்லும்
கடலலைகள் காதலொடு கரையைத் தொட்டுக்
    கடலுக்குள் மீண்டெழுந்து பாய்ந்து செல்லும்
படருகின்ற கொடியெல்லாம் மணலில் சாயப்
    பசுமையாகக் காட்சிதரும் நெய்தல் மண்ணும்
மடல்களினுள் வண்டினமும் மொய்த்து நிற்கும்
    மதிமயங்கித் புன்னைமரம் தலையை ஆட்டும்  1

ஆடியோடும் சிறுவரெல்லாம் கூடி நின்றங்(கு)
    அசைந்தோடும் நண்டுகளை விரட்டி யோடப்
பாடியாடி மணலினிலே செய்த வீடு
    பாதங்கள் பட்டதுமே இடிந்து வீழும்
ஓடியோடி உழைப்போரும் கரையில் தங்கி
    ஓய்வெடுத்தே அமர்ந்திருப்பர் இன்பம் பொங்க
நாடிவரும் கொக்குகளும் வட்ட மிட்டு
    நண்டுகளை மெல்லெனவே தூக்கிச் செல்லும்   2

செல்கின்ற படகுகளை அணியஞ் செய்யச்
    செங்கதிரும் மேற்கினிலே மறைந்து போகும்
புள்ளினங்கள் சிறகடித்துக் கூட்டை நோக்கிப்
    புடைசூழப் பறந்திடுமே மெல்ல வானில்
சில்லென்று வீசுகின்ற தென்றல் காற்றும்
    சிந்தைதனை மகிழ்வித்துத் தழுவிப் போகும்
ஒல்லென்று கடலலைகள் ஒலித்துப் பாய
    உறங்காமல் மீனவர்கள் செல்வர் சேர்ந்து            3

துன்பங்கள் சூழ்ந்துவரும் பரவர் வாழ்வில்
    துணிவுடனே மீன்பிடிக்க நாளும் செல்வர்
கண்களிலே உறக்கமின்றி உள்ளம் வாடக்
    காத்திருப்பர் கரையினிலே பெண்க ளெல்லாம்
விண்மீன்கள் கண்சிமிட்டும் வானில் நின்று
    விரைவாக நகர்ந்துசெலும் நிலவும் நீந்தி
வெண்ணிறத்து முகிலெல்லாம் சூழ்ந்து நின்று
    விழிக்கின்ற மங்கையரைக் காத்து நிற்கும்     4

நிற்கின்ற நேரமெல்லாம் இறையை வேண்ட
    நெஞ்சமது நிம்மதியைத் தொலைத்து நிற்கும்
பொற்கரங்கள் நீட்டுகின்ற பரிதி வானில்
    பொன்னிறமாய் மின்னிவரும் வேளை தன்னில்
வெற்றியுடன் திரும்பியவர் பாய்ந்த ணைத்து
    விருப்புடனே காட்டிடுவார் மீன்கள் கூடை
சுற்றிவரும் காகங்கள் வட்ட மிட்டு
    துடிக்கின்ற மீன்களதைக் கவ்வ எண்ணும்           5

எண்ணிறைந்த மீனவரின் நெஞ்சில் என்றும்
    ஏக்கங்கள் வேதனைகள் படர்ந்து நிற்கும்
கண்காணா இடங்களிலும் படகு போகும்
    கலக்கமுடன் அலைந்திடுவார் கரையைத் தேடி
உண்ணாமல் உறங்காமல் மனத்தில் தாக்கம்
    உள்ளமெல்லாம் கலங்கிடவே கண்கள் ஏங்கும்
கண்மயக்கம் அடைந்திடவே கிடப்பர் வீழ்ந்து
  கண்டவர்கள் உதவிவிட்டால் கிடைக்கும் வாழ்வு 6

வாழ்வினிலே போராட்டம் தொடரும் நாளும்
  வருணதேவன் துணையிருப்பான் என்று நம்பி
ஆழ்கடலில் மீன்பிடிக்கத் துணிந்து செல்வர்
  ஆபத்து வரும்போது தம்மைக் காப்பர்
கீழ்வானம் சிவந்திடவே வலையில் பட்ட
  கெண்டைமீன்கள் சுறாக்களுடன் வந்து சேர்வர்
வாழ்வரசி வரவேற்று வாழ்த்துக் கூற
  மகிழ்ச்சிபொங்க அணைத்திடுவார் உள்ள மேவ 7

உள்ளத்தை மகிழ்விக்க இசைப்பர் நற்பாட்(டு)
  உன்னதமாய் வாசிப்பர் விளரி யாழை
கள்ளவிழிப் பார்வையினால் துணையை பார்த்துக்
  காதலினைச் சொல்லிடுவார் மகிழ்ச்சி பொங்கப்
பிள்ளைகளைக் கற்பிக்கப் பணமும் சேர்ப்பர்
  பிள்ளைநிலை உயரவைக்கப் படுவார் பாடு
கல்வியிலே சிறப்புறவே தம்மை வாட்டி
  காலமெல்லாம் உழைத்திடுவார் கடலில் என்றும் 8
  
என்றென்றும் கருவாட்டைக் காய வைப்பர்
  ஏற்றுமதி வியாபாரம் செய்வர் நன்கு
புன்னைமர நிழலினிலே உப்பும் விற்பர்
  பூக்கின்ற பூக்களையும் பறித்து நிற்பர்
துன்பங்கள் வரும்போது கண்ணீர் சிந்தித்
  துயரதனைத் துணிவுடனே கடந்து செல்வர்
இன்பங்கொண் டாடிடுவார் விழாக்கள் யாவும்
  இன்னிசைகள் பாடியாடிப் போற்று வாரே             9

ஏற்றங்கள் இறக்கங்கள் வருமே வாழ்வில்
    இதயங்கள் புண்ணாக்கி மகிழ வேண்டா
ஆற்றல்கள் யாவரிடம் உண்டு காணீர்
    அகத்தினிலே தீங்குகளை எண்ண வேண்டா
வேற்றுமைக ளின்றிவாழ்வோம் பாரில் இன்றே
    விழுமியங்கள் பின்பற்றி நகர்வோம் நாமும்
சோற்றுக்காய்ப் பாடுபடும் ஏழை மக்கள்
    சோர்வின்றி வாழ்வதற்கு வழிசெய் வோமே      10

1 comment:

  1. நெய்தல் நில வர்ணனை மிகவும் சிறப்பு அம்மா ! கடற்கரையைக் கண்ணிலே காட்டிய உமது பாட்டின் திறம் போற்றத்தக்கது.

    ReplyDelete