பைந்தமிழ்ச்செம்மல்
கவிஞர் மன்னை வெங்கடேசன்
அன்னைத் தமிழின் அரும்பாடல் யாவையும்
மின்னி யொளிர வியப்புடன் - ஒன்றியே
ஆயிர மாயிரமாய் அள்ளிக் கொடுத்துநீ
பாயிரமாய் வாழ்க பணைத்து!
மன்னை யளித்தநன் மாக்கவியே பண்பினா
லென்னைக் கவர்ந்திழுத்த வேந்தலே - என்றுமுள
நற்றமிழின் சீராய் நலஞ்சேர விப்புவியி
லெற்றைக்கும் வாழ்க வினி(த்)து!
என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன்
அவர்களால் பாராட்டப் பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், மடக்கணி வேந்தர், பைந்தமிழ்ச்
சோலையின் தமிழ்த் தும்பி, தமிழ்ப்பா வித்தகர், பைந்தமிழ்ச்செம்மல் திரு மன்னை வெங்கடேசன்
அவர்கள்.
அவர் மன்னார்குடியில்
02-06-1970 அன்று பிறந்தார். அவருடைய பெற்றோர் வீ.சீனிவாச கோபாலன் – வேதவல்லி அம்மையார்
அவர்கள். அவர் மன்னார்குடி தேசிய மேநிலைப்
பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புவரை கல்வி பயின்றார். பின்னர் சென்னை குருநானக் கல்லூரியில்
இளங்கணிதம் பயின்றார்.
அவர் 1990 முதல் 1996 மார்ச் வரை
தென்னக ரயில்வேயில் பணி புரிந்தார். 1996 மார்ச் முதல்
இன்றுவரை மத்திய சுங்க, கலால் மற்றும் சேவை வரித்துறையில் பணிபுரிந்து வருகிறார்.
அவர் பத்தாம் வகுப்பில் படித்துக்
கொண்டிருந்த போது வெண்பா எழுதும் அவருடைய நண்பர் இரவீந்திரன் அவர்கள் மூலம் சிலவற்றைக் கற்றுக்கொண்டு
வெண்பாக்கள படைக்கத் தொடங்கினார்.
பைந்தமிழ்ச் சோலை தொடங்கப்பட்ட
முதல் ஆண்டிலேயே (2015) அதனுடன் இணைந்து பல்வகைப் பாக்கள் எழுதப் பழகினார். அவ்வாண்டின்
இறுதியில் (2015-2016) உலக அளவில் பைந்தமிழ்ச் சோலை நடத்திய பாவலர் பட்டத் தேர்வில்
உயர்சிறப்பு வகுப்பில் தேர்ச்சியும், பைந்தமிழ்ச் செம்மல் பட்டமும் பெற்றார். இவரே பைந்தமிழ்ச்சோலையின்
முதல் 'பைந்தமிழ்ச் செம்மல்' என்ற பெருமைக்கு உரியவர் ஆவார்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை
இரண்டாம் ஆண்டு விழாவில் சிறப்பு வாய்ந்த ஆசுகவிப் பட்டம் பெற்றார்.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற பைந்தமிழ்ச்சோலை
மூன்றாம் ஆண்டு விழாவில் ஆசுகவிப் போட்டியைத் தலைமையேற்று நடத்தினார். அது மட்டுமன்றிப்
பைந்தமிழ்ச் சோலையின் பாட்டியற்றுக பயிற்சிகளைத் திறம்படத் தந்து நற்றமிழாசான்
என்னும் பட்டம் பெற்றார்.
2019ஆம் ஆண்டு நடந்த ஆசுகவிச்சுழல்
போட்டியில் அமர்வின் தலைமைப் பொறுப்பேற்றுச் சிறப்பாகச் செயலாற்றியும், விரைந்து கவிதையியற்றியும்
வெற்றி பெற்று விரைகவி வேந்தர் என்னும் சான்றிதழ் பெற்றார். சந்தம் பாடுக, வண்ணம்
பாடுக, முயன்று பார்க்கலாம் ஆகிய பயிற்சிகளை உள்ளடக்கிய கடின யாப்புகளைப் படைக்கும்
விதமாக நடந்த தேர்வில் வெற்றிபெற்றுச் சந்தக் கவிமணிப் பட்டம் பெற்றார். ஈரோடு
தமிழ்ச் சங்கத்தின் 30-ஆவது ஆண்டு விழாவில் பாவலர் மா.வரதராசன் அவர்களின் தலைமையில்
நடைபெற்ற கவிதைப் பட்டிமன்றத்தில் “கவிதையின் வெற்றிக்குப் பெரிதும் காரணம் - சொற்சுவையே” - அணிக்குத் தலைமையேற்று வழிநடத்திக்
கவியொளி விருது பெற்றார். காரைக்குடியில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார்
நூற்றாண்டு விழாவில் வீறுகவியரசர் முடியரசன் விருது பெற்றார்.
பாவலர் மா.வரதராசன் அவர்களின்
வழிகாட்டலில் ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, இரட்டை மணி மாலை, மும்மணி மாலை, பல்சந்த
மாலை, தூது எனப் பலவகைச் சிற்றிலக்கியங்களைப் படைத்துள்ளார்.
பைந்தமிழ்ச்சோலையைச் சுறுசுறுப்பாக
இயங்க வைப்பதில் இவருக்குப் பெரும்பங்கு உண்டு.
பட்டறிவும் பகுத்தறிவும் இணைந்த தாலே
பக்குவமாய்ப் பழகுகின்ற
இனிய நண்பர்
எட்டாத கவியென்பார் தமிழின் யாப்பை
எளிதாகக் கற்றதுடன் எல்லோ
ருக்கும்
கிட்டுவிதஞ் செய்கின்ற அறிவு பேழை
கேளிரென அனைவரையும் அணைக்கும்
செம்மல்
மட்டில்லா அன்புகொண்ட வெங்க டேசன்
மன்றத்தில் கவிபாட அழைக்கின்
றேனே!
என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன்
அவர்கள் இவரைக் கவிபாட அழைப்பார்.
மடக்கணி அமைந்த பாடல்களும், இரட்டுற
மொழிதல் வெண்பாக்களும் இவருக்கு உகந்த பாவகைகளாகும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதற்குச்
சான்றாக அவருடைய மடக்கணி கலந்த இரட்டுற மொழிதல் பாடல் ஒன்றை இங்கே காண்போம்.
(பெண்ணும் கட்டளைக் கலித்துறையும்)
காரிகை தன்னோ டிலங்குவதால் நாமமும்
காரிகை தன்னோ டிலங்குவதால் – ஈரெட்டில்
நேர்வந்து நிற்கு மழகினால் இவ்விரண்டும்
நேர்வந்து நிற்கு மழகு.
பெண்: அழகுடன் இருப்பாள், காரிகை என்ற பெயரும் உண்டு, பதினாறு வயதில் எந்தப்
பெண்ணும் அழகாய் விளங்குவாள்.
கட்டளைகலித்துறை: அழகுடன் விளங்கும், காரிகை என்ற பெயரும் உண்டு, பதினாறு எழுத்துக்கள்
வந்தால் நேரசை அழகாய் முன்வந்து நிற்கும்.
இவ்வாறாய இவருடைய ஓயாத மடக்கு,
சிலேடை வெண்பாப் பதிவுகளைப் பார்த்து, அதனால் மகிழ்ந்த பாவலர் மா.வரதராசனார் அவர்கள்
இவருடைய தமிழ்ப்பணிக்குப் படையலாகச் செய்த
இரட்டுற மொழிதல் இதோ.
வெங்கடேசனுக்கும் - மீனுக்கும்
(இன்னிசை வெண்பா)
ஊனடங்கும் தோல்மிளிரும் ஓய்வின்றிக் கண்டுஞ்சாத்
தான்மடங்கிச் சேர்ந்திரட்டும் தண்ணென் றமிழ்தமாம்
பொங்குகடல் தானீந்தும் பொற்சிலையே இப்பாரில்
வெங்கடேசன் மீனாம் விளம்பு
வெங்கடேசனார்: உண்ணுதல் மறந்து பா வடிப்பார், அவருடைய பாக்கள் (தோலெனின் பாட்டு) மிளிரும்,
கண்ணுறக்கம் துறந்து பாவடிப்பார். மடக்குப் பா, இரட்டுற மொழிதல் எழுதுவார், தமிழ்க்
கடலில் (அவருள்ளம்) நீந்தும்.
மீன்: உணவில் உண்ணுமாறு அடங்கும், மேல்தோலாகிய செதிள் மிளிரும், கண்கள் மூடாது.
(எப்போதும்), மடங்கி, வளைந்து நீந்தும், துணையுடன் இணைந்து இரண்டாகக் காட்சி தரும்,
குளிச்சியான கடலில் வாழும்.
பைந்தமிழ்ச் சோலையின் இணையாசிரியராகவும்
எண்பேராயத்தின் தலைவராகவும், தமிழ்க்குதிர் மின்னிதழின் துணையாசிரியராகவும் பொறுப்பு ஏற்று எண்ணற்ற பணிகளுக்கு உறுதுணையாக இருந்து
வருகிறார் இவர்.
இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில்
யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய
வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.
பண்பினி லோங்கிய பைந்தமிழ்ச் செம்மலிவர்
பண்ணையார் நற்றமிழ் மன்னையார் - அண்ணுதற்
கென்று மினிய தமிழ்போல் எளியவர்க்கு
நன்றாய் நடக்கும் மடக்கு
-
தமிழகழ்வன் சுப்பிரமணி
No comments:
Post a Comment