'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Jan 14, 2019

பாவை முப்பது


பாவை முப்பது

பைந்தமிழ்ச் செம்மல்
மன்னை வெங்கடேசன்

சென்ற இதழ் தொடர்ச்சி ...


நாயகனாய் நின்றவொரு நந்தகோ பன்தன்இல்
வாயிற்கண் சென்றங்கு வாய்மொழிந்த ஆயர்குலச்
சிட்டுரைப் பாவதுவும் செந்தமி ழன்னைக்குப்
பட்டியைந்த நல்லம் பரம்.                       16.
(ஆயர்குலச் சிட்டு = ஆய்ச்சிப் பெண் ;
அம்பரம் = துணி)

அம்பரம் தண்ணீர் அனைத்தும் தருவாயே
எம்பெருமான் நந்தனே என்றேத்தி உம்பர்கோன்
தன்னையும் போற்றியவன் தாளணையும் கோதையுரை
உன்னியே வாழ்வினை உந்து                   17.

உந்து மதகளிற்றன் உண்ணினையும் நப்பின்னாய்
வந்து திற;கதவை வாவென்று நந்த
மகனுடைய வாயிலில் மன்னியே நின்று
புகன்றதனை நெஞ்சிற் புகுத்து.                  18.

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டிலுறை
மத்தக வேழமொத்த மாயவனை வித்தகமாய்
வாழ்த்து முரைநெஞ்சில் வைத்தவரை எஞ்ஞான்றும்
வாழ்த்துவர்முப் பத்துமூ வர்.                   19.

முப்பத்து மூவர்க்கும் முன்னிற்கும் தேவனை
நப்பின்னை தன்னொடு நன்கழைத்துச் செப்பிடு
வாரதைக் கோதையெனும் வார்குழலாள் தந்திட்டாள்
ஏருற ஓர்கவி யே!                              20.

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கப் பால்சுரக்கும்
ஆற்றலுடை யாவினங்கொள் ஆயவனைப் போற்றி
விளித்துரைத்த பாவியந்தேன் வேண்டினேன் கண்டு
களித்திருக்க வாயிரங் கண்.                    21.

அங்கண்மா ஞாலத் தரசின்கீழ் சிற்றரசர்
சங்க மிருப்பார்போல் தாமங்குச் செங்கண்மால்
பொன்னடிக்கீழ் ஆய்ச்சியர் போந்ததனைக் கோதையுன்சொல்
மன்னுமனம் தாருமம் மா!                      22.

மாரி மலைமுழைஞ்சில் மன்னிய சிங்கம்போல்
மூரி நிமிர்ந்து முழங்கிடெனச் சீரிய
சிங்கமாய் ஏகும் திருமாலைக் கோதையும்
அங்ஙனே வேண்டினாள் அன்று.                        23.

அன்றிவ் வுலக மளந்த பெருமானைச்
சென்றங்குப் பாடித் திருமாலே குன்றெடுத்தாய்
இன்றுன்னைப் பாட இரங்கென்றாய் கோதையே
உன்றனுக்(கு) என்னே ஒருத்து.                  24.
(ஒருத்து மன ஒருமைப்பாடு)

ஒருத்தி மகனாகி ஓரிரவில் மற்றை
யொருத்தி குடிலில் வளர்ந்த திருமறு
மார்பனைப் போற்றிய மாதவள் தாள்பணி
வார்தமை யொன்றுவான் மால்.                         25.

மாலே மணிவண்ணா வாராய் அருள்தாராய்
பாலன்ன சங்கொடு மற்றெல்லாம் ஆலின்
இலையாய் அருளென் றியம்பிய கோதை
குலமகளின் பாதமதைக் கூடு.                  26.

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தன் தன்னையே
வாடாத சொற்கொண்டு பாடியே மாடா
மனைத்தும் தரவேண்டி மன்னியகோ தைப்பா
மனத்துச் செருக்கற வை.                       27.
.
கறவைகள் பின்சென்று கானேகும் ஆயர்
குறைவிலாக் கண்ணனைக் கூவிச் சிறுபேர்
அழைப்பதனைப் பாடும் ஆண்டாள் அடிசேர்ந்(து)
இழைபவர் ஆவர்மா சிற்று                     28
 (மாசிற்று = மாசு இற்று = அழுக்கின்றி)
.
சிற்றஞ் சிறுகாலே சென்றவனைக் கும்பிட
லுற்றநல் லாய்ச்சியர் ஓதியதைக் குற்றமிலாப்
பாகெனவே கோதையுரை பாவெள் ளமதற்கீ(டு)
ஆகிடுமோ வங்கக் கடல்.                       29

வங்கக் கடல்கடைந்த மாதவனை நாடியே
அங்கப் பறைகொண்ட வாற்றினை இங்குரைப்பார்க்
கின்பம் பயக்கு மெனவுரைத்த நற்கோதாய்
மன்னுயிர் காத்திடம் மா!                       30.


தீட்டு


தீட்டு
 
  ன்னை ஜீவிதாஅரசி

    ங்க ... இவளுக்கும் வயசு ஏறிக்கிட்டே போகுதே.. இந்த வருடமாவது மாப்பிள்ளை பேசி முடிச்சிடனும்.. அந்த புரோக்கர் சொன்ன இடம் ரொம்ப வசதியான இடம்னு சொன்னாரே..
     ஆமாம்மா .. பேசிப் பாப்போம் ரொம்ப எதிர்பார்த்தா இருக்கும் தென்னந்தோப்ப வித்தாவது தடபுடலா கல்யாணத்த நடத்திட
வேண்டியதுதான்...!!
   இந்த மூனாவதும் வேற சடங்காகி நிக்குது .இருக்கறதும் ஒரே தோப்பு அதையும் வித்துபுட்டா சோறுக்குதான் கையேந்தனும். பாத்து யோசிச்சு செய்யுங்க..
     எல்லாம் கடவுள் பாத்துக்குவாரு கவலைப்பாடாத ...
அங்க மாடு வேற தண்ணிக்குக் கத்துது பாரு ... !!
     ஆமாங்க...
சின்னவ வேற அந்த குச்சு வீட்ல தனியா இருக்கா சாப்பாடு கொடுத்துட்டு.. மாடுகளுக்கும் தண்ணியைக் காட்டிட்டு வாரேன்.. நீங்க சாப்பிட்டுக் கிட்டிருங்க.
   அம்மாடி செய்தியையும் செத்த வையுடா ராசாத்தி..
(என்ற அப்பாவின் அடுத்தச் சொல்லில்..
    சரிப்பா என செய்தி பக்கம் வைக்க..
இவள் கூறியது போல் அனைத்து சேனலிலும்..
புயலில் முன்னெச்சரிக்கையாக ஆதார் அட்டை
குடும்ப அட்டை
பணம் எடுக்கும் பேங்க் அட்டை மற்றும் அத்யாவ்சய பொருட்களை எடுத்துக் கொண்டு.... மின்சாதனங்களை நிறுத்தி வைத்து.. சிலிண்டர் எல்லாம் மூடி வைத்து ..
நிவாரண முகாமிற்கு செல்லும்படி ..மாற்றி மாற்றி அறிவுரைகள்..!!)
     அப்பா.. பாத்தியா நா அப்பவே சொல்லல இந்தா வருது அந்தா வருதுன்னு நாளு நாளா இதே நியூஸூதான்.
யப்பா .. நா ஜெயாக்கா வூடு வரைக்கும் போய்ட்டு வாரேன் அம்மா கிட்ட சொல்லிடுங்க.. நீங்களாம் இந்த நியூஸையே கட்டிக்கிட்டு அழுவுங்க...
( அடியே சாப்ட்டு போடி...
வேலை முடித்து வீட்டிற்குள் வந்தபடியே அம்மா குரல் கொடுக்க..)
    அதெல்லாம் வேண்டாம் அக்கா வீட்லயே சாப்பிட்டுக்கறேன்.. நா போற போ...
      (எனப் பொய் சொல்லி..
குச்சிற்குள் தனியாக இருக்கும் தங்கைக்கு துணையாக வந்தமர்ந்து.. . சோகமாக அமர்ந்திருக்கும் தங்கையிடம்.. )
     
     ஓய் என்னடி காலைலேர்ந்து இங்கேயே கெடக்குறியே போரடிக்கலையா..??
    அடப் போக்கா.. ஏந்தான்.. இந்த சடங்கு சம்ப்ரதாயம்னு இந்த காலத்திலும் படுத்தறாங்களோ.. ??
   ம்ம் .. உண்மை தான் டி .. எவ்ளோ தான் நாடு ஹைடெக்கா ஆனாலும் பழக்க வழக்கம் மாறாதுல்ல அதுலயும் நம்ம ஊரு இன்னும் அந்த காலம்..
இங்க வரவே கூடாதுன்னு அம்மா சொன்னுச்சு இருந்தாலும் செத்த உங்கூட பேசிட்டுறுக்கலாம்னு வந்தேன்.. ஜெயாக்கா வீட்டுக்கு போறேன்னு பொய் சொல்லி விட்டு.
    ம்ம் ..ஆமாம் கா செம பயம்.. இந்த வயித்து வலி வேற ரொம்ப முடியலக்கா.. . !!
... ..ச்சோ இதுக்கெல்லாம் பயப்படலாமா.. சாப்ட்டியா இல்லையா .. ??
    அடப்போக்கா.. டெய்லி உளுந்தங்களி..முட்டையே கொடுத்துப் படுத்துறாங்க..
செம போர்...அம்மா வேற "சாப்பிடல அடி விழும்னு" சொல்லித் திட்டிட்டுப் போயிருக்கு..

  "ஏய் அதெல்லாம் சாப்ட்டாதான்டா வலி வராது."
  ம்க்கும் நீயே சாப்பிடு எனக்கு வேண்டாம்..
      ம்ஹூம் அதான ஆகாது அம்மா பாத்தா அடிப்பாங்க வா இரண்டு பேரும் சேர்ந்து சாப்டலாம்..

அக்கா நானிருக்கேன்ல அப்றம் என்ன.. கவலை விடு.. சாப்பிடு..!!என
அந்த குட்டிக் குடிசைக்குள் அம்மாவின் கண்ணில் படாது தங்கைக்குத் துணையாக வந்தமர்ந்து..
தங்கையை சாப்பிட வைத்துப் ..
போனை வைத்துக் கொண்டு பாட்டு  கேம்ஸ்..விளையாட்டென நேரம் போனதே தெரியாதிருக்க......!!)
          
   " இவல்லாம் உருப்படவா போறா.. என்னைக்கு இவள தொலைச்சி தலைமுழுகறேனோ அப்பதான் மத்ததுங்களுக்கு வழி பொறக்கும்" மத்தியானம் போனவள இன்னும் காணோம் பாரு ..!!
   என்று அம்மாவின் கத்தல் கொல்லைப்புறம் கேட்க..   " சரிடி பத்திரமா இரு அம்மா இனி பத்ரகாளியாய்டும் நா போறேன் சரியா..!!??
     ம்ம் சரிக்கா அம்மா கிட்ட மாட்டிக்காத"

   ம்ம் சரிக்கா ..நீ பத்ரமா போ ..அம்மாகிட்ட மாட்டிக்காதன்னு கூறியவளைப் பார்த்துச் ...சிரித்தபடியே "சரிசரி பாட்டியம்மா நீங்க பத்ரமா இருங்க "
என்றபடி கிளம்பியவள் ..
மெல்ல எட்டிப் பார்த்து அம்மா இல்லை என உறுதி செய்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து வருபவளை நோக்கி
    
"எரும எரும.. பொட்டக் கழுதைக்கு இத்தனை மணி நேரம் அடுத்த வீட்டில் என்னடி வேலை"
   எனத் திட்டத் துவங்கிய
அம்மாவின் திட்டலைக் காதில் வாங்காமல்  ரசித்தபடியே.. பாடப்புத்தகங்களை எடுத்துக் கொண்டு..ரூமிற்குள் சென்றாள்.

     "அம்மா.. சீக்கிரம் சாப்பிட்டு எல்லாம் கெளம்புங்க நிவாரண முகாமுக்குப் போய்டுவோம்". என அண்ணன் கூறியபடியே வேக வேகமாக வந்தான்..  

 டேய் ...அதெல்லாம் வேண்டாம் டா நம்ம வீடு அந்த கால பரம்பரை வீடு எத்தனை வெயிலு மழையும் தாங்கும் இந்த புயலையா தாங்காது...?
    புயலெல்லாம் வராது போ போய் வேலைய பாரு.. சின்னவ வேற குச்சுக்குள்ள இருக்கா அவள எங்க அழைச்சுப் போறது எனக் கூறும் அம்மாவிற்கு பதில் கூற இயலாது .. டேங்கில் தண்ணீர் நிரப்பி . விறகு எடுத்து வைத்து.. மெழுகுவர்த்தி..கொசுவர்த்தி என வாங்கி வரும் மகனிடம்..

      டேய் நடுவுளவளுக்கு ஒரு போன போட்டு கொடுடா.. எப்படி இருக்கானு கேக்கனும்... நீ செய்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எல்லாம் கண்டாத்தான் பயமாருக்கு...எனச் சொல்லும் அம்மாவிற்கு போன் செய்து தந்து விட்டு... அலைபேசியை  திறந்தவனுக்கு..
நக்கலும் கேலியுமாக வந்திருந்த புயலுக்கான விமர்சனங்களைப் படிக்க படிக்க ...
இன்று இரவு புயல் வருமா வராதா என்ற..சந்தேகமும் தொற்றிக் கொண்டது

யோசனையோடு நடந்தபடி இருக்கும் அப்பாவிடமும் அதேசந்தேகம் .. முகத்தில்.. தோன்றுவது நன்கு தெரிய...
நிமிடங்கள்.. மணிகளாக.. எட்டு மணிதொடும் நேரம்.. லேசான காற்றுடன் மழையும் துவங்கிட.. ... 110 கிமீ வேகத்தில் காற்று வீசும் .. பத்திரம் பத்திரம் என மாற்றி மாற்றி அறிவிப்பு..!!
வந்திட வந்திட.. கொஞ்சம் பயமும் கவலையும் அனைவருக்கும் தொற்றிக்கொள்ளவே செய்தது...

   அப்பா.. இன்று புயல் வருமா வராதா..??
     தெரியலைப்பா.. ஆனா கொஞ்சம் பயமாத்தான் இருக்கு ..!!

    சரி சரி அனைவரும் சீக்கிரம் சாப்பிட்டு படுங்கள் நான் போய் சின்னபாப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து வருகிறேனெனச்   சொல்லி அம்மா செல்ல.
   அப்பா நிஜமாவே புயல் வருமா.. புயல் வந்தால் எப்படிப்பா இருக்கும்.. கூரை லாம் பறக்குமாப்பா..??   110 கிமீ வேகத்தில் காத்து வீசும்ன்னு சொல்றாங்கம்மா .. கொஞ்சம் பயமாதாம்மா இருக்கு ..   பாத்துக்கலாம்மா பயப்படமா போய் தூங்குமா..!!

     அங்க தங்கச்சியே தனியாருக்கா இங்க எல்லோர் கூட இருக்கும் உனக்கென்னடி.. ?
எப்பப்பாரு தொணதொணன்னுட்டு
    எனச் சொல்லியபடியே மீண்டும் வந்த அம்மா அனைவருக்கும் உணவெடுத்துப் பரிமாற.. புயலோடு கொஞ்சம் வெட்டிக் கதைகள் பேசியபடி அனைவரும்  சாப்பிட்டு முடிக்கவும் கரெண்டு போகவும் சரியாக இருக்க..!!

காற்றின் வேகம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாக அதிகமாக அனைவரின் வயிற்றிற்குள்ளும் பயப்பந்து கொஞ்சம் கொஞ்சமாக சுழலத் துவங்கியது. ஆனால் ராசாத்திக்கோ தங்கை எப்படி இருப்பாளோ எனக் கவலை மட்டும் நெஞ்சிற்குள் அதிகமாக...
    அம்மா தங்கச்சிய வீட்டுக்குள்ள அழைத்து வந்தரலாமாமா ..??
   ஏய் அவ தீட்டுடி உள்ள வரக்கூடாது.. காத்து நின்னுடும் கொஞ்ச நேரத்தில்.. அவ பத்ரமாதான் இருப்பா.. மகமாயி காப்பாத்துவா..
     எனச் சொல்லும் அம்மாவிடம் பேசி ஜெயிக்க முடியாது என்று அப்பாவும் அண்ணனும் அமைதியாக இருக்க ..  

அம்மாவின் மேல் அதீத கோபத்தில்  முறைத்தப்படி படுத்திருந்தவளுக்குப்
புயலின் வேகமும் speedo meter போல்... எகிறிக் கொண்டே சென்றிடக்.. கொல்லைப் புறம் ஒடிந்து விழுந்திடும் மரங்களின் சத்தமும்....வீட்டில் ஓடுகள் ஒவ்வொன்றாக நொறுங்கிக் கீழே விழத் துவங்கவும் ...?,
அதற்குமேல் பொறுக்க மாட்டாது

      அம்மா நான் போய் தங்கச்சிய கூப்ட்டு வாரேன் சொல்லி ஓட..   ஏய் போவதடி அவ வீட்டுக்குள்ள வரக்கூடாது டி .. அம்மாவின் குரல்  துரத்த..
   அவ வரக்கூடாது என்றால் நானும் வரல வாமா போய் கூப்பிட்டு வருவோம்
   என துணையாக அண்ணனும் கிளம்பக்...கதவைத் திறக்க முடியாதபடிக்குத் தள்ளிடும் காற்றைத் தள்ளியபடி இருவரும் தங்கை இருக்குமிடம் ஓடப் பயந்து நடுங்கியபடி கோழிக்குஞ்சாய் நின்ற தங்கை...
இருவரையும் கண்டதும் ...   அக்கா.......ஆஆஆ..  எனக் கட்டிப்பிடித்துக் கதறியழுதாள்.!!

அழுதவளைத்..தேற்றி
.. அழைத்து வருவதற்குள் அடுத்த பேய்க்காற்று சுழன்று சுழன்று அடிக்க.. !.தங்கையையும் அண்ணனையும் முன்னே அனுப்பி கடைசியாக உள்ளே நுழைய முயன்ற ராசாத்தி மீது தென்னை மரம்  அப்படியே வீழ்ந்து நசுக்கிட..,,
அம்மா...ஆஆஆஆஆ
     என்று அலறியபடி வீழ்ந்திட்ட ராசாத்தி.. தங்கை அண்ணனைக் காப்பாற்றிய மகிழ்ச்சியோடு மரத்தின் அடியில் நசுங்கி மடிந்தாள்.

    வெளியேயும் வரமுடியாது.. உள்ளேயும் நிற்க முடியாது பறக்கும் ஓடுகளும்.. தொப் தொப்பென்று .. சிதறி விழும் ஓடுகளும்..ஆங்காங்கே முறிந்து விழும் மரங்களுமெனக்...
கர்ணக் கொடூரச் சத்தத்தை எழுப்பியபடி விடாது சுழன்றடிக்கும்... பேய்க் காற்றில்.. சுவரோடு சுவராகத்.
    தீட்டென்று ஒதுக்கி வைத்த சின்னவளை... இறுக அணைத்தப்படி.. அனைவரின் அழுகைக் குரலும்... காற்றிலே  கரைந்தது.

     .. கண்ணீர் வடித்தபடி.... நின்றிட்ட நிமிடங்கள் யுகங்களாகிட...ஓடுகளற்ற வெற்றுச்சாளரங்களூடே
யாருக்கும் வந்திடக் கூடாது இப்படியோர் விடியலென்றபடி ... விடிந்திட்ட கோர விடியலின்...காட்சியின் சாட்சியாய்..!!
வெளிச்சப்புள்ளி தெரிந்து காற்றின் வேகம் சற்றுக் குறைந்ததுமே...

பைத்தியம் போல்..
தலைவிரிக் கோலமாய்...
வீழ்ந்து கிடக்கும் தென்னை மரங்களினடியில் தன்னை மறந்து தன்னிலை மறந்து வந்தமர்ந்தவளுக்குத்
தீட்டும் சம்பிரதாயமும் மடிந்திட..
கைகள் மட்டும்
தங்கையை அணைத்தப்படி..விடாது பற்றியிருக்க.. ..!!
    அந்த கழுத எங்கப் போச்சு.. இத்தனை மணியாகியும் இன்னும் வரல... வரட்டும் இன்னைக்கு காலிலேயே சூடு வைக்கிறேன்
  என்று புலம்பியபடி ...தன்னை மறந்து தன்னிலை மறந்து புலம்பியபடி ... காற்றோடு பேசியபடி வெறித்த பார்வையோடு அம்மாவும்... அழுது அரற்றியபடி .. தங்கையும் ...!!

     இவளைத் தொலைச்சி தலைமுழுகுனாதான்.. மத்ததுங்களுக்கு வழிபொறக்கும் என்ற அம்மாவின் வார்த்தையை மெய்யாக்கியிருந்தது.!!
கஜாப் புயலில் மடிந்தவர்களுக்கு பத்துலெட்சம் நிவாரண உதவியாமுல.. முதல்வர் அறிவிச்சிருக்காராம்
 



முதல் பூ!


முதல் பூ!

கவிஞர் தமிழ்வேலி (நித்தியானந்தம்)

தோட்டத்தில் மலர்கின்ற பூக்க ளெல்லாம்
...தொடுக்கின்ற மாலையென அதுவே மாறும்
சூட்டுகின்ற கோலமிங்கு அழகைக் காட்டும்
...சுந்தரமாய் இதழங்குச் சிந்தை யள்ளும்
காட்டுகின்ற கோலங்கள் எல்லா மிங்கே
...கவருகின்ற விதமாக இருந்துங் கூட
வாட்டுகின்ற வெப்பமது வந்தா லிங்கே
...வனப்பிழந்து சருகெனவே வாடிப் போகும்!

வாசமில்லா மலர்கின்ற பூக்க ளெல்லாம்
...வளத்துடனே வளர்கின்ற வடிவ முண்டு
வாசமில்லா வகைதனிலே அதுவும் இங்கு
...வளர்வதிலே எவர்க்குமிங்கே பயனே இல்லை
நேசமுடன் சிலபேரும் அதனை நாளும்
...நேர்த்தியாக பூங்காவில் வளர்க்கக் கூடும்
வாசமின்றிப் பூக்கின்ற கோலங் கண்டு
...வாங்கியுடன் எவருமே சூட லில்லை!

எத்தனையோ பூவினங்கள் புவியில் பூத்து
...எழிலாகக் காட்டுகின்ற அழகின் கோலம்
அத்தனையும் ஒருநாளில் அழித லுண்டு
...அன்றாடம் மானத்தைக் காக்க வேண்டி
இத்தரையில் பூக்கின்ற பருத்திப் பூவே
...இங்குள்ள ஆடைக்கு மூலம் தானே
முத்திரையாய்  மாறுகின்ற ஆடைப் பூவே
...முகிழ்கின்ற பூக்களிலே முதலே என்பேன்!

சாமி சரணம்


சாமி சரணம்

பைந்தமிழ்ப் பாமணி
தர்மா
  
வரமருளும் ஐயப்பன் கோயி லுக்குள்
~~மங்கையரை வரவேண்டா மென்று ரைத்தோம்
அருள்வடிவாய் ஐயனுக்காய் மஞ்சள் மாதா!
~~அங்கிருப்பார்! நாம்மட்டும் போக லாமோ?
பருவமுள்ள பெண்களுக்குப் பாது காப்பைப்
~~பலப்படுத்தும் நாள்வரையில் பொறுங்க ளென்று
தரமாக எடுத்துரைக்க முயல வேண்டும்,.
~~தடம்பதித்தால் தீட்டென்று சொல்லல் பாவம்! 

கணவனவன் இறந்துவிட்டால் மனைவி யைத்தான்
~~கண்முன்னே தீயிலிட்டுப் பொசுக்கி னாரே!
மனைவியவள் இறந்துவிட்டால் கணவன் ஓடி
~~மரித்ததாகச் சான்றேதும் உண்டா சொல்வீர்!
முன்னழகை மறைப்பதற்காய் ஆடை யிட்டால்,
~~முலைவரியைத் தாவென்று சொன்னோர் ஆண்கள்!
தென்னாட்டின் மன்னவனின் சேயைப் பெண்கள்
~~தேடிப்போய் வழிபட்டால் குற்றம் என்ன! ...

வருமானப் பேராவ லுற்று வந்து
~~வழிவழியாய் வந்திருந்த மரபை மாற்றி
இருக்கையிலே குற்றங்கள் இல்லை யென்றோர்,
~~இருமுடியைக் கட்டிவந்த பெண்ணி னத்தை 
இருவேறு குழுக்களாகப் பிரிக்க லாமோ
~~ஏனென்று கேட்போர்கள் வரலாற் றைத்தான்
தெரியாமல் உலவினரென் றேநான் சொல்வேன்..!
~~தெளிவுற்றால் ஒருமதத்தைக் காக்க லாமே.. 

மாட்டுக்குப் பூசைசெய்ய வழிகள் உண்டு!
~~மாந்தருக்குள் பிரிவினைகள் இன்னும் ஏனோ!
தீட்டென்ற சொல்லேதும் இல்லை ஐயா
~~தேவைக்குக் கருத்துரைத்தல் கேட்டை நல்கும்!
ஓட்டுக்காய்ப் பிரிவினையை ஊக்கு வித்தால்,
~~ஒருநாளும் முன்னேற்றம் கிட்டா தென்றும்,
வாட்டத்தைப் போக்குதற்கு வழியைக் கண்டு
~~வழிமொழிந்த சான்றோரைப் போற்றல் நன்றே..

ஆண்கடவுள் கட்காக ஆண்கள் கூடி,
~~ஆலயத்தில் வழிபாட்டைச் செய்கின் றோமே!
மாண்புள்ள பெண்கடவுள் கட்கா யந்த
~~மதிப்புள்ள பெண்ணினத்தை விடாத தேனோ!
தீண்டாமைக் கொடுமைகளை ஒழித்தோ மென்று,
~~தெருவெங்கும் மார்தட்டிப் பயனே இல்லை !
ஆண்களுக்கோ ரொப்பாகப் பெண்ணி னத்தை,
~~அறவழியிற் போற்றிவரின் எவர்க்கும் நன்றே...


ஆசிரியர் பக்கம்


ஆசிரியர் பக்கம்


அன்பானவர்களே! வணக்கம். 

உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவருவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்;வாழ்த்துகள்.

   ஏன். . .அப்படியானால் சித்திரை . . .?இதற்குப் பெரியதொரு விளக்கமாக நம் தமிழறிஞர் பலரும் தங்கள் ஆய்வு முடிவுகளை நிறுவியிருக்கின்றனர். அதற்கு மறுப்பாகப் பல கூற்றுகள் இருப்பினும்…

   யாம் அதன் ஆழத்திற்குள் செல்லாமல் பண்டைய தமிழ் மாந்தர்தம் வாழ்வியலில் மிகமுதன்மையான இடம்பிடித்;த தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் திருநாளை மட்டுமே பொருண்மையடிப்படையிலான நேர்வாகவும், தீர்வாகவும் கொண்டு தமிழ்ப் புத்தாண்டாக ஏற்கிறோம்.

   விரைவில் தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டாகத் தமிழர் ஏற்கும் நாள்வரும் என்ற நம்பிக்கையுடன்… 

தைத்திங்கள் முதல்நாளே தமிழ்ப்புத் தாண்டு
   தமிழர்திரு நாளொன்றே சான்றாய்க் காணீர்
வைத்திங்கே இழப்பதற்கும் ஏது மின்றி
   மறத்தோடும் அறத்தோடும் மானங் கெட்டோம்
iநாய்த்திண்ண வந்திணைந்த நுளம்பு கூட்டம்
   நோயாகித் தமிழ்நாட்டைபி பிடித்து வாட்டி
பொய்த்தேராய் பண்பாட்டைப் புதைத்து விட்டார்
   பொய்யாக்கித் தமிழாண்டைப் புதுக்கு வோமே!  

                தழிழன்புடன்
பைந்தழிழரசு பாவலர் மா.வரதராசன்                      
ஆசிரியர்