'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் காரைக்குடி கிருஷ்ணா

பட்டதாரி தமிழாசிரியர், அரசு மேல்நிலைப் பள்ளி, கல்லூர், புதுக்கோட்டை மாவட்டம்
• கல்வித் தகுதி: எம்.ஏ.,பி.எட்.,எம்.ஃபில்
• பெற்ற விருதுகள்: 
1. கவியருவி
 
2. கவிச்சாகரம்
3. கவிமணி
4. கவிமாமணி
5. கவிச்சோலை
6. சங்கப் புலவர்
7. நல்லாசிரியர் விருது.
8. நகைச்சுவைப் பேச்சாளர்
கவிஞரை வரவேற்றல்

காரைக் குடியார் முகில்மழை பெய்தெனக்
காரைக் குடியார் கவிசெய்வார் - காரைத்
தகர்க்கின்ற மீனெனத் தன்னொளி கட்டிப்
பகர்வார்பார் ஓங்கும் படி

காரைக்குடி கிருஷ்ணா அவர்களே வருக 
கற்பனை மழைசொட்டக் கவிதை தருக

*** *** *** ***

இப்படித்தான் விடியும் (குறள் வெண் செந்துறை)

விண்ணவர் தொழுதிடும் வியத்தகு உலகம்
பெண்மை காக்கும் பெருந்தகை ஆடவர்

பொருள்கள் எல்லாம் பொதுவில் இங்கே
அருகனும் வந்தால் அதிசயம் கொள்வான்

கலைகள் நிறைந்த கவின்மிகு வீடுகள்
விலைகள் இல்லா வியத்தகு இயற்கை

சிட்டுக் குருவிகள் சிணுங்கும் ஓசை
பட்டுத் தெறித்தது பரிதியின் சுடரொளி

அருகில் வெள்ளிய ஆற்றின் ஓசை
மருண்டே ஓடும் மான்கள் கூட்டம்

உழைப்பைப் போற்றும் உழவர் மக்கள்
உழைப்பின் பயனை உதவி நின்றனர்

மரும மில்லை மறைத்தலு மில்லை
தரும மொன்றே தலைமைக் கடனாம்

அகில மெங்கும் அன்பாய் மக்கள் 
நெகிழிகள் இல்லா நெடிய வழிகள்

இயற்கை சார்ந்த இயல்பு வாழ்க்கை
வயல்வெளி எங்கும் விளைந்த நெற்கதிர்

கொத்தித் தின்னும் குருவிகள் கூட்டம்
எத்தனை கோடி இன்பம் இங்கே

காலை வேளை களைந்த(து) இருட்டு
கனவும் இங்கே கலைந்து போனது

விழிகள் இரண்டை வியப்பில் ஆழ்த்தி 
விழித்துப் பார்த்தேன் விடியவே இல்லை

*** *** *** ***

வாழ்த்துரை

இன்பம் கோடி இனிதே பாடித்
துன்பம் தீர்க்க வந்த கவிதை
 
கனவாய்ப் போனதில் கலக்கம் பிறக்க
நனவாய் மாற்றல் நங்கட னேயென
 
உணர்த்தும் உயர்ந்த கவிதை
 
வணக்கம் அம்மா வாழ்கபல் லாண்டே!

சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் அதிராம்பட்டினம்
ஷேக் அப்துல்லாஹ் அ


கவிஞரை வரவேற்றல்

எல்லாம் வல்ல இறைவனைப் பற்றிச் 
சொல்லில் அடங்காச் செய்திகள் எல்லாம்
 
உள்ளே வைத்துப் போற்றி இன்பம்
 
கொள்ளும் கவிஞர் அபுதுல் லாஅ
வருக வருக செந்தமிழ்த் தேனைப்
பருகத் தருக பண்புயர்ந் தோரே

வாழ்த்து

உதிப்பாகு மெண்ணங்க ளுயரும் வண்ணம்
... உயிரான தமிழன்னை யருளாற் றிண்ணம்
பதிப்பிக்கும் பண்புடையோர் படையின் முன்னால்
... பாவலரின் தமிழகழ்வன் பார்வைப் பொன்னாள்
மதிமிக்க பாவலரின் பார்வை சூழ்ந்தே
... மாசற்ற வழிகாட்டும் மாண்பில் ஆழ்ந்தே
அதிவீரர் பட்டினத்திற் காளா யாக்கி
... ஆண்டவனே உன்கருணை மனத்தின் வாழ்த்தே !

இப்படித்தான் விடியும்

நடந்துவிட்ட நிகழ்வுகளில் நல்ல பாடம்
... நாம்கற்க வாழ்நாளில் நன்மை கூடும்
கடந்துவிட்ட காலங்களில் கற்ற வுண்மை
... கசப்புகளு மினிப்புகளும் காட்டும் தன்மை
தொடர்ந்துவரும் நாள்களிலே தூணாய்க் கொண்டு
... துவளாதே வாழ்தலிலே சொர்க்கம் காண்பாய்
சுடர்ந்துவிடும் வாழ்நாள்கள் சுகத்தைக் கொண்டு
... சுயத்தினிலே உணர்ந்திடவே சோக மேது ?

நன்னடத்தை பேணுகின்ற நல்ல வுள்ளம்
... நாற்புறமும் பாதுகாவல் நன்றாய்க் கொள்ளும்
அன்னமிட்ட கைகளுக்கே அருளும் சூழும்
... அத்தனையும் கண்டுமனம் வைத்து வாழும்



புண்படாத செய்கையினால் புகழி லாளும்
... புரிந்துகொண்ட வுள்ளமதைப் போற்றும் நாளும்
கண்டுகொண்டும் கேடுசெய்யும் கள்வ ராட்டம்
... காலத்தில் துன்பத்தைக் காணும் கூட்டம் !

அடித்தபுயல் வந்தவழி யதனின் திட்டம்
... ஆராய்ந்து பார்த்திடவே யங்கு நுட்பம்
துடித்துமாண்டோ ரிழந்துவிட்டோர் துன்பம் கொண்டோர்
... தொலைவில்லா வன்மத்தோர் தொடாதே சென்றே
வடித்துவிட்ட கோலமதில் வகுத்துப் பாராய்
... வதைபட்டோர் படாதோர்கள் மண்ணில் யாரு ?
குடித்துவிட்டும் கெடும்புசெய்தும் குழப்பம் தந்தோர்
... கொண்டதுன்பம் தெரியாதிக் கொடுமை விந்தை!

நியாயநேர்மை பேணுவதால் நிலைக்கும் சாந்தி
... நினைவில்கொள் செயல்களிலே நிறுத்து வாய்நீ
அயராவன் பைப்பொழிந்தே அணைத்துக் கொள்வாய்
... மகவுணர்வும் மகிழ்ச்சியிலே மனத்தில் துள்ளும்
தயாளவழி வழக்கமாகின் தாக்கும் துன்பம்
... தலைவிட்டு நகர்ந்துபோகும் தன்னை யென்றும்
மயானமாகு முண்மைகளை மறுத்து வாழ !
... மறந்துவிட விப்படித்தான் விடியும் நாளே !



வாழ்த்துரை

கடந்த காலம் காட்டும் உண்மை 
தொடரும் நாளில் தூணாய்க் கொள்க!
 
நடக்கும் நிகழ்வி னின்று கற்க!
நடத்தும் நம்மை நல்ல வழியில்
 
மிடிமை நீக்கச் சுடராய் எழுக!
 
விடியல் இப்படி வேண்டும் என்று
 
கடமை உணர்த்திய கவிஞர் வாழ்க
 

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச் சுடர் கவிஞர் "இளவல்" ஹரிஹரன் , மதுரை.


·         ஊர்: மதுரை
·         மதுரை அமெரிக்கன் கல்லூரியில் முதுநிலை வணிகவியல் படித்துள்ளார்.
·         ‘குரல்’ இதழின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார் 
·         1980-ல் பத்திரப் பதிவு துறையில் சார்பதிவாளராகப் பணியில் சேர்ந்து, 2014-ல் மதுரை டி.ஐ.ஜி.யாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்
·         தாகூரின் கவிதைகளை மொழிபெயர்த்து நூலாக வெளியிட்டுள்ளார். 
12 நூல்களை வெளியிட்டுள்ளார்.

கவிஞரை வரவேற்றல்

அரியும் அரனும் ஒருவரே! உலகுக்(கு)
அறிவிக் கின்ற அரியர னாரே!
 
திரிவி ளக்காய்த் தெளிபொருள் காட்டி
 
இருளிரி விக்கும் இன்கவி செய்ய
 
வருவீர் வருவீர் வணங்குகின் றோமே!




கவியரங்கக் கவிதை

இறையவனே தமிழுக்கே என்றி ருக்கும்
... இறையவனே குறிஞ்சிக்கோ என்ற ழைக்கும்
இறையவனே மூதாட்டி ஔவை பாட்டி
... இறையவனே என்றழைக்கக் கிளைய மர்ந்த
இறையவனே நாவலினை உதிர்த்துப் போட்ட
... இறையவனே சுட்டதனைச் சுடாத தாக
நிறையவனாய் ஔவைக்குச் சுட்டிக் காட்டி
... நிறைதமிழை எடுத்தியம்ப நின்றான் காப்பே

இப்படித்தான் விடியுமெனில் விடிவெ தற்கோ!
... இங்கிருக்கும் குருடருக்கு விளக்கெ தற்கு
தப்படியாய்த் தடமெனிலோ பயணம் ஏனோ
... தாங்குதற்குத் துணையிலையேல் வாழ்வெ தற்கோ
எப்படியும் வாழ்வதெனில் என்ன வாழ்வோ
... ஏனிந்தப் பிறவியெனில் என்ன சொல்வோம்
முப்போதும் மனிதமிங்கு வாழு கின்ற
... முழுநாளே முதல்நாளாம் விடிய லுக்கே.

சகமனிதர் துயர்நீக்கும் திருநாள் பாரில்
... சாதியிலா நிலையாக்கும் பெருநாள் யாரும்
அகமதிலே வஞ்சமிலா மனங்கொள் நன்னாள்
... ஆணவக்கொ லைகளின்றி விடியும் இந்நாள்
உகந்தபடி விடியலினைக் கொணரும் முன்னால்
... ஊரெல்லாம் கொண்டாடும் வெளிச்சப் பூக்கள்
தகுந்தபடி இப்படித்தான் விடியும் என்னும்
... தத்துவத்தைக் களிப்புடனே வரவேற் போமே
தனித்துவத்தை யிழக்காத விடியல் வேண்டும்
... தமிழ்மொழியின் ஏறறமென விடியல் வேண்டும்
மனிதமன வுயர்வுக்காய் விடியல் வேண்டும்
... மாறாத சமத்துவமாய் விடியல் வேண்டும்
வனிதையரின் உணர்வுக்காய் விடியல் வேண்டும்
... வற்றாத நதிகளுக்காய் விடியல் வேண்டும்
இனியிங்கு விடிகின்ற விடியல் எல்லாம்
... இரைபோடும் விவசாயிக் கென்றே வேண்டும்.

புதுவெளிச்சம் பாய்ச்சுகின்ற விடியல் வேண்டும்
... பூமணக்கும் பாமணக்கும் விடியல் வேண்டும்
இதுவிடியல் என்றுசொல்லும் வண்ணம் வேண்டும்
... இப்படித்தான் வேண்டுமெனும் விடியல் வேண்டும்
மதுக்குளியல் இல்லாத விடியல் வேண்டும்
... மதுரமெனுந் தமிழெழுப்பும் விடியல் வேண்டும்
புதுவிடியல் ஒளிகாட்டும் வாழ்வைக் காட்டும்
... புன்னகையின் சுடரெனவே விடியும் நன்றே!

இப்படித்தான் விடியுமென்னும் கவிய ரங்கில்
... இன்கவிதை இயம்புதற்கு வாய்ப்பு நல்கிச்
செப்பரிய தமிழ்ஞான மரபைத் தந்த
... செந்தமிழர் பாவரசர் வரத ராசர்
கைப்பிடியில் அடங்கியவர் தமிழைக் கற்றுக்
... கவிதையாக்கித் தருவதற்கும் சொல்லித் தந்த
வைப்புநிதி தமிழாக்கி வழங்கும் வள்ளல்
... மரபுமணிக் கிருகரத்தால் நன்றி சொல்வேன்
வாழ்த்துரை

முத்து முத்தாய்ச் சொல்லெ டுத்து
முத்து மாலை கோத்துத் தந்தீர்!
முத்தத் தமிழே மூச்சாய்க் கொண்டு
 
தித்திக் கின்ற கவிதை தந்தீர்!
 
புத்தம் புதிய உலகைப் படைக்க
 
சித்தம் செய்தீர் வாழ்க வாழ்க!
 


சோலைக் கவியரங்கம் - 8


கவிஞர் வஜ்ஜிரவேலன் தெய்வசிகாமணி.

பெங்களூரில் தொழில்நுட்பம் பயின்றவர். 
• சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார்.
• பள்ளிப் படிப்போடு தமிழ்ப்படிப்பு நின்றுவிட்ட போதிலும், தமிழ்மீதுகொண்ட பற்றினாலும் ஆர்வத்தினாலும் நீண்ட இடைவெளிக்குப்பின், கடந்த இரண்டாண்டுகளாகத் தமிழ் பயின்றுவருகிறார்.

கவிஞரை வரவேற்றல்

துள்ளி விளையாடத் துணைவரு நண்பனைப் 
பள்ளிப் படிப்பொடு விட்டதைப் போலத்
தொழில்மேற் கொண்டு தொடர முடியாத்
தமிழின் நட்பைப் புதுப்பித் தின்ப
அமிழ்தம் பருக அள்ளி யணைத்தார்
பொற்றேர் எழுந்து புறப்படுந் தமிழை
 
நாவில் இருத்திப் பாடும் குயிலாய்
 
மரபு பாக்கள் நாடும்
வச்சிர வேலனார் வருக வருக

தமிழ்த்தாய் வாழ்த்து!

அகத்தியமும் காப்பியமும் அறியும் முன்பே
... ஆண்டுபல செழுமையுடன் வாழ்ந்து நின்றாய்
பகுத்தபல விலக்கணங்கள் பாகாய்க் கொண்டாய்
... பாரினிலே பலமொழிக்குத் தாயாய் நின்றாய்
தொகுத்துனது வயதினைத்தான் சொல்ல விங்குத்
... தொல்லியலும் தயங்குவது பொறாமை யாலோ
மகுடமுயர் செம்மொழியாய் மன்றம் வென்றாய்
... மகிதலத்தில் இணையிலையே தமிழ்த்தாய் வாழி!

அவை வாழ்த்து! (கட்டளைக் கலித்துறை)

மரபுத் தமிழ்ப்பா மறையா திருக்க வழிவகுத்துக்
கரத்தைப் பிடித்துக் கருத்தை அளித்துக் கவிபுனையச்
சிரத்தை எடுத்துத் திருத்தம் கொடுத்துத் திறம்வளர்க்க
உரத்தைக் கொடுக்கும் உயர்தமிழ்ச் சோலைக்கிங்(கு) ஒப்பிலையே.

இப்படித்தான் விடியும்: நன்மை (கும்மிச் சிந்து)

அன்பினில் யாவரும் சேர்ந்திருந்தால் - நம்மை
... அண்டுந்தீ மைகளைத் தாங்கிநிற் கும்...
அன்னையின் தந்தையின் தாள்பணிந்தால் - அவர்
... ஆசிகள் வாழ்வினைக் காத்துநிற் கும்...

பள்ளியில் ஓதிடும் பாடங்களைக் - கற்றுப்
... பக்குவ மாய்ச்சிந்தைக் கேற்றிவிட் டால்...
தெள்ளிய சிந்தனை மேவிவரும் - என்றும்
 
... தேடுபட் டம்பொருள் நாடிவ ரும்...


நல்லெண்ணச் சிந்தனை நெஞ்சினிலே - வைக்க
... நம்பிக்கை யாவையு மேலெழு மே...
பொல்லன விட்டுனைப் போய்விடுமே - இன்பம்
... புத்துயிர் பெற்றுடன் நின்றிடு மே...

நல்லுயிர் நண்பர்கள் வாய்த்திருந்தால் - உன்றன் 
... நன்மைதீ மைகளைக் கண்டுரைப் பார்...
இல்லத்தி லோருறுப் பாயிருப்பார் - என்றும்
... இன்பதுன் பத்திலுன் னோடிருப் பார்...

வள்ளுவன் சொல்பற்றி வாழ்ந்துநின்றால் - யார்க்கும்
... வாழ்க்கையி னிக்குமே மாற்றமில் லை...
உள்ளுவ தென்றுமு யர்நோக்கமென் றாலிங்(கு)
... ஒற்றுமை மேலெழும் வாழ்வுய ரும்...

இப்படித்தான் விடியும்: தீமை (வெண்பா)

கண்மூடித் தான்செய்யும் காரியங்கள் யாவுமே
மண்மூடிப் போகும் மறவாதே - பொன்மூடி
போட்ட் பெருநகையும் பொய்யுரையும் ஓர்நாளில்
காட்டிவிடும் தன்நிறத்தைக் காண்.

காடு மலையழித்துக் காசு பொருட்சேர்க்க
நாடு வளமிழக்கும் நம்பிடுநீ - ஓடும்
நதியாவும் வான மழையின்றி நாளும்
கதிரோன் பொசுக்கிடுவான் காண்.

கள்ளுண்ணும் போதுன்றன் கண்மயங்கிக் காலிடரும் 
பள்ளத்தி லேவிழநீ பார்ப்போரங்(கு) எள்ளுவரே
 
உள்ளமதி கெட்டொழுக்கந் தானிழக்க ஊரிலுனைக்
கள்ளுகுடி காரனென்பர் காண்.

கள்ளவழி நாடிக் கவரும் பொருள்யாவும் 
உள்ளபடி யோர்நாள் உனைத்தாக்கும் - கள்ளக்கோல்
வைக்கும் கடையதனின் வாணிகமும் காலத்தே
கைக்கூடா மற்போமே காண்.

வாழ்த்து: வெண்பா

அன்புவழி நின்(று)ஆன்றோர் ஆய்ந்தளித்த பாதையிலே
உன்போல் உயிர்யாவும் ஒப்பெனவே கொண்டுள்ளம்
மண்ணுமுயர் வானின் மகிமையதைத் தான்வணங்கி
கண்ணெனக் காத்திடநல் வாழ்த்து.

வாழ்த்துரை

யாப்பினைக் கற்றறிந்து யாவையும் சீர்துக்கிப் 
பாப்புனையும் வச்சிர வேலரே - நாப்பழகு
 
நல்லதமிழ்ப் பாவால் நனிமகிழ்ந்து வாழ்கவே
வல்லதமிழ் வாழ்விக்க வே

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ச்சுடர் மதுரா

• புனைபெயர்: மதுரா
• இயற்பெயர்: தேன்மொழி ராஜகோபால்
• குடும்பத்தலைவி
• படிப்பு: முதுகலை ஆங்கில இலக்கியம்
• மரபு கவிதை, புதுக்கவிதை, நவீன மீமொழிக் கவிதை, ஹைக்கூ, தெலுங்கு வடிவ நானிலு என எல்லா வகைக் கவிதைகளும் எழுதிவருகிறார்
 
• சிறுகதைகள் பல எழுதியிருக்கிறார். கோகுலம், மங்கையர்மலர், தினமலர் போன்ற பிரபல இதழ்களிலும் சிற்றிதழ்களிலும் மின்னிதழ்களிலும் இவருடைய படைப்புகள் வெளியாகி உள்ளன.
• இவருடைய நாற்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் தற்போது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

கவிஞரை வரவேற்றல்

நனிதேன் அருந்தும் வண்டாக
... நாந யக்கும் தமிழுண்டு
பனியாய் உள்ளப் பாங்கோடு
... பண்பில் ஓங்கும் சிறப்போடு
கனிப்பா பலவும் கைக்கொண்டு
... காப்பி யங்கள் படைக்கின்றார்
இனிக்க வினிக்கப் பாவியற்றும்
... இனிய கவிஞர் வாழியவே

பைந்தமிழ்ச்சுடர் மதுரா அவர்களே வருக!
பைந்தமிழ்க் கனிச்சுவையைத் தருக!

தமிழ் வாழ்த்து (எழுசீர் விருத்தம்)

பொன்னாய் மணியாய்ப் பொலிவாய்ச் சிறந்து 
... புதிதாய் மிளிரும் தமிழே
என்னில் கரைந்தென் இதயம் நிறைந்த
 
... எழிலாம் இனிய மொழியே
மண்ணில் செழித்து மனிதம் வளர்க்கும்
 
... மகத்து வமேநீ வருவாய்
உன்றாள் பணிந்தேன் உணர்வில் கலந்தேன்
 
... உயர்வை உடனே தருவாய்


இப்படித்தான் விடியும் (எழுசீர் விருத்தம்)

எண்ணஞ் சிறந்திங் கேற்றம் பெறவே 
... எளிமை வாழ்வு சிறப்பாம்
திண்ணங் கொண்டு திறமாய் வாழத்
 
... தெளிவு வேண்டு மென்றும்
வண்ணங் காட்டும் வாழ்வில் கூட
 
... வறுமை மெல்ல வரலாம்
மண்ணி லெதுவும் மடியா தில்லை
... மரித்துப் பிறக்கு மெல்லாம்.

காற்றும் கூடக் கடுமை காட்டிக்
... கதற வைக்கும் உயிரை!
தேற்றும் உதவி தேடும் மனிதம்
 
... தெளிவாய்ப் புரியும் மனமே
சீற்ற மென்றும் சிறப்பு தருமோ
 
... சினமும் நம்மை அழிக்கும்
போற்ற வேண்டும் புவியை நாளும்
 
... பொறுமை காத்தல் இனிதே

இயற்கை வழியில் இடரைத் தவிர்த்தே 
... இனிதாய் வாழ நினைத்தால்
செயற்கை மறுத்துச் செய்யும் செயல்கள்
 
... செழிக்கச் செய்யும் புவியை
உயர்வைத் தேடி உழைக்க விழைந்து
 
... உண்மை நேர்மை கொண்டால்
பெயரைக் காத்துப் பெருமை பெறலாம்
 
... பேறாய் வாழ்வும் சிறக்கும்.
பணத்தை மறுத்துப் பதவி வெறுத்துப் 
... படைப்போம் புதிதாய் உலகை!
குணத்தை உயர்த்தக் குன்றி லேறும்
 
... குலமும் தழைக்கும் நன்றாய்
கணக்காய் வாழ்ந்து கடமை செய்து
 
... காப்போம் புவியைக் கருத்தாய்
சுணக்க மின்றிச் சுழலும் பூமி
 
... சுடராய் விடியும் பொழுதும்


வாழ்த்துரை

சுடர்கொண் டெழுந்த விளக்காக
இடர்தீர்க் கின்ற இன்பாவால்
மடமை கொளுத்தும் மாமதுரா!
படரும் ஒளியாய்! வாழியவே!