'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


11.     கவிஞர் பி. எம். நாகராஜன்


கவிஞர் அழைப்பு

பாலையிலே வாழ்ந்தாலும் சோலையினைச் சுற்றிவந்து
      பாட்டியற்றக் கற்பவரே வாங்க! வாங்க!
மாலவனின் பேரருளால் மாலையிட்டுச் சீர்செய்ய
      மன்றமிதில் நல்லகவி தாங்க! தாங்க!!

நாகராஜா வருக நற்கவிதை தருக
   
வெண்கலிப்பாக்கள்

தமிழ் வாழ்த்து.!

செந்தமிழே வந்தனம் சந்தமிகும் மந்திரம்
சந்தனமே நிந்தையில் சொந்தமென்றா னந்தம்
சிந்தையிலே விந்தைகள் சிந்தியதோ செந்தேன்
எந்தனிலே வந்ததின்ப மே.

அவை வணக்கம்.!

வாய்மையும் விதைத்தோர் வியப்பினி லாழ்வோர்
வாய்ப்பினைப் படைத்தோர் வயதினில் மூத்தோர்
வியர்வையில் நனைந்தோர் இயக்கத்தில் வாழ்வோர்
வையகத்தின் வளர்பிறை யாம்.!

ஏருக்குச் சீர் செய்வோம்!!

துளியொன்றை மணியாக்கித் தயவென்ற வரமாகும்
தளிரொன்றை வளமாக்கும் தரணிக்கும் துணையாகிப்
பளுதாங்கிப் பரிவாகப் பயிராக்கும் உழவனே
உளமார்ந்து உணவுந்து வான்

எளிதொன்றைப் புரிவோரும் வழிதந்த அறிவாளி
உளிசெய்து புதிதாக்கும் எழில்மிக்க படைப்பாளி

பளிங்குன்றிப் பசியாகும் பொழுதிற்கும் உழவனே
அளவில்லா உணவுந்து வான்
செழிப்பாக்கும் தொழிலொன்றே சிரங்கொணட குணமாகச்
செழுமைக்கும் தொண்டாற்றிச் சிலிர்ப்பாக்கு மடிவேராய்
முழித்துச்செல் உலகோரின் மகிழ்வுக்கும் உழவனே
உழவாக்கி உணவாக்கும் வேர்.

விழியெங்கும் கனவாக்கி விதையொன்றை உயிராக்க
வழியெங்கு முயர்வாக்கி வரப்பிற்கு முயர்வெய்திப்
பழித்துப்பொய் களைகிள்ளிப் பயிராக்கும் உழவனே
உழவெய்தி உலகாக்கும் வேர்.

தருமேகம் மழையென்றால் தாங்கியதைப் பயிராக்கத்
திருவாக்கித் தருமென்றால் தழுவியதை உயிராக்க
விரும்புகின்ற வரந்தந்தே விளைவாக்கும் உழவனே
விருதென்று விதையாக்கு வோம்

உருளுகின்ற உலகத்தில் உழுதொண்டு நிலமாக
உருக்கொண்ட உயர்வுக்குத் தொழுதுண்டு நலமாகப்
பெருகின்ற செல்வத்தில் பழுதின்றி உழவனே
பெருமைக்குள் புகழாக்கு வோம்!

நாடுகின்ற குலதெய்வம் நலமீய வருமாப்போல்
நாடெங்கும் சீராக்கும் உழவென்றும் உயர்வாக
ஏடெங்கும் சிறப்பாக்கும் தமிழேரால் உழவனின்
ஏருக்குச் சீர்செய்கு  வோம்.
    
வாழ்த்துப்பா !!

உழுதொழிலின் சிறப்புகளை உளமகிழ்வோ(டு) உயர்வாக
அழகியவெண் கலிப்பாவில் அற்புதமாய்த் தீட்டியநின்
கவிமலரைச் செவிமடுத்துக் களிப்புடனே வாழ்த்துகளை
நவின்றிடுவேன் நன்றியுடன் நான்.

சோலைக் கவியரங்கம் - 10


12.     கவிஞர் கல்யாணசுந்தரராஜன்

கவிஞர் அழைப்பு !

இயற்கையை விரும்பி இறைவனைப் போற்றும்
அயலகம் வாழும் அருந்தமிழ்க் கவியே !
உழவரின் உறவாம் உன்னத ஏரை
எழுத்தில் செதுக்கி ஏற்ற மளித்துக்

கவின்மழை யாகக் கவிதையில்
செவிகுளிர் வண்ணம்  சிறப்புறப் பொழிக !!
சுந்தர்  வருக ! சுவைமிகு கவிதை தருக !!

தமிழ் வாழ்த்து

பெருவெளியில் பூதங்கள் பின்னலிடும் முன்னே
வருமொலியாய் வந்ததமிழ் வாழ்த்தே! - உருவமெனும்
ஓரறிவு கொண்ட உயிர்தொடங்கி யாவர்க்கும்
பேரறிவு வார்ப்பவளைப் போற்று!

தலைவர், அவை வாழ்த்து!

கூடு மிடமெலாம் கூவிடும் பாவலர்
நாடு மன்பரை நற்றமிழ்ப் பாடிட
ஏடு செய்பவர், இவ்வவைக் கூட்டிட
நீடு வணங்கியே நிலைபெற வாழ்த்துவோம்.

ஏருக்குச் சீர் செய்வோம்

வானம் பொய்க்கா வண்ணம் காடும்
தானம் தர்மம் ஓங்கும் வீடும்
பாவம் புண்ணிய மறமாய் வாழ்வும்
தாவும் மனத்தைத் தட்டும் மாண்பும்
புள்ளினம் போற்றிப் புழுவினம் காத்து               ....5

வள்ளியோர் வாழ்ந்த வண்டமிழ் பூமி
இன்றோ எல்லாம் அழிய, இன்பம்
இன்றித் தவிக்கக் காரணம் ஏது?
உழவை மறந்தே உண்டு கழித்துப் 
பழமை மிதித்து பண்பை வீழ்த்தி                            ...10

அறிவைத் தொலைத்தே ஆசை மிகுத்து
செறிவில் சமூக மாகி விட்டதே!
பரந்த நிலத்தில் பாயும் ஆறு
விரிந்து வாய்க்கால் விரவும் நீரை
செழித்து வளரும் செந்நெல் உயர                           ...15

கொழித்துக் கிடக்கும் சோலை நாடே
வரப்பு மூடி வரம்பு கெட்டு
பரப்பு முழுதும் பணமாய் மாற்றிக் 
கிடைத்த பணத்தைக் கொட்டி இரைத்துப் 
படைத்த கேட்டால் பண்பு ஒழிந்தது!                      ...20

இனிமேல் எல்லாம் இருந்தது ஆகும்
பனிமேல் பட்ட பகலவன் ஒளிபோல்
கல்வி என்பது கயமை ஆனால்
பல்கிப் பெருத்துப் பயனென் ஆகும்?
நல்லோர் சொல்லோ நஞ்சென ஆனபின்             ..25

புல்லோர் எங்கும் புன்மை விதைக்க
எல்லாம் மறந்ததே! இன்பம் தொலைந்ததே!
இன்னும் இங்கே பாவலர் போன்றோர்
பண்ணின் மூலம் பழையதை மீட்க
ஏரினைப் பூட்டி இன்பம் தேட                                   ...30

பாரினை அழைத்தார்! சீரதை
ஏருக்குச் செய்தே வேரினை மீட்போம்!

வாழ்த்துப்பா !

ஆசிரியப் பாவில் அழகாய் வனைந்தகவி
வாசித்து நன்றியுடன் வாழ்த்துவேன் ! - வீசும்
புயலாய்க் கவிதையில் பொங்கி யெழுந்தாய்
வயலுக்கும் வாழ்வு வரும் .
★★★

சோலைக் கவியரங்கம் - 10


13.     கவிஞர் சதீஷ் காளிதாஸ்
  
கவிஞர் அழைப்பு

பந்தநல் லூரில் பிறந்தவனே -  நம்  
   பைந்தமிழ் சோலையின் மாணவனே !
அந்தமிழ்ப் பற்றுடன் பாக்களி யற்றிடும்
    அற்புத ஆற்றல் மிகுந்தவனே!
செம்மையாய்ப் பாட்டொன்று நின்குரலில் - பாட
   தீங்கவியோ டிங்கே வந்திடுவாய் !
இம்மன்றில் சோலையின் செல்லப்பிள்ளை - நீயும்
      ஏருக்குச் சீரினைச் செய்திடுவாய் !!

சதீஷ் வருக!  தண்டமிழ்க் கவிதை தருக!

தமிழ் வாழ்த்து !

அன்னைத் தமிழே அழகு மொழியுடை

உன்னை வணங்கி உயர்ந்திட - இன்ப
உழவை இனிதாய் உயர்த்திட வந்தேன்
அழகாய் வரியுள் அருள்.

தலைமை வாழ்த்து

ஏற்றமிகு சோலையிலே ஏற்றிய பாவலரே
சாற்றுகிறேன் பாமாலை சங்கத் தலைமைமுன்னே
பாட்டறியாப் பாமரனின் பாவினையும் கேட்டருள்வீர்
நாட்டுகிறேன் ஆற்றல் நடவு.

ஏருக்குச் சீர் செய்வோம்

காதலனைப் பிரிந்ததொரு காதலியாய் நீரும்
   காடுமலை போகாது காய்ந்திருக்கு பாரும்
ஆதவனும் அன்றாடம் அகன்றகதிர் வீச
    ஆளுமில்லை உழவினையே ஆழமாகப் பேச
நாதமுடைக் கானமழை நாற்றுநட்டுப் பாட
     நாளுமின்றி ஓடிடுதே நல்லிசையும் கூட
மாதரினைப் போலிங்கு மண்ணினமும் தாயே
      மாண்புடனே போற்றிடவே மகுடமுடன் வாராய்!

நகரவாழ்வு நன்றெனவே நால்வரவர் கூற
    நாமுமிற்றைக் கிழந்தோமே நல்வாழ்வை ஊரில்
அகரத்தைக் கற்றவனும் அரிசியையே உண்ண
    அதைப்பயிலப் பாராமல் அலைவதுவும் ஏனோ?
இகழ்ச்சியினைக் காணாமல் இன்பமாக ஈயும்
     இறைவனவன் உழவனென இனிநீயும் கூறு
பகல்முழுதும் பயிரிட்டுப் பண்புடனே வாழ்வோம்
   பகற்கழிய வீடுவந்து பொழுதோடு  சேர்வோம்

பாரினிலே பாட்டுரைக்கும் பாமரனு மின்று
     பயிரினையே பரமனாகப் பாடிடுவான் நன்று
தேரினையே இழுத்தவனும் தென்றலுடன் சேர்ந்து
     தென்னையினை விதைத்தானே தோப்பினிலே அன்று
பாரியைப்போல் வள்ளலுமே படைப்பவனுக் கில்லை
    பாவமந்தப் பயிரென்ற பதில்தானே எல்லை
ஏரியிலே நீரிரைத்திங்(கு) ஏற்றமுடன் இங்கு
    என்னினிய விவசாயம் ஏற்றிடுவோம் எங்கும்.

ஏருழுவும் தெய்வத்தை ஏழையெனச் சொல்லி
    ஏரெடுத்தும் பார்க்காமல் ஏசிடுவர்ச் சொல்லை
ஊருணியால் உழவுசெய்து ஊரினுக்கு அள்ளி
      உளமாறக் கொடுப்பாரே உழவருமே நெல்லை
வேருடைய எம்தொழிலை வேட்டிடவு முண்டோ?
      வேலையென வரத்தினையும் வழங்கிடுத லுண்டோ?

ஓருருவாய் உழவுக்காய் ஒன்றிணைவோம் நாமே
   பேறுபெற்று வாழ்ந்திடுவோம் பெருமையுடன் தானே...

வாழ்த்துப்பா ...!!!

இறைவனென்றே உழவோரைக் காணச் சொல்லும்
       இளைஞனிவன் இன்குரலில் கவிதை கேட்டேன்!
குறைவரினும் பிறருக்காய் உழைப்பை நல்கிக்
      குணக்குன்றாய்த் திகழ்வோர்தம் பாட்டைக் கேட்டேன் !
உறவாக ஒன்றிணைய வேண்டு மென்றே
      உருகியிவன் கவிவடித்த பாங்கைக் கேட்டேன் !
நிறைமனத்தோ(டு) இவனுக்கு நன்றி சொல்லி
        நீடூழி வாழநானும் வாழ்த்து வேனே !!

சோலைக் கவியரங்கம் - 10



14.     கவிஞர்  வே. அரவிந்தன்

கவிஞர் அழைப்பு!

இயற்பியல் பயிலும் மாணவன் எனினும்  
      இயற்றமிழ்க் காதலில் வீழ்ந்தான்!
மயக்கிய மரபு கவிதைக ளீர்க்க
      வரதரைத் தஞ்சம டைந்தான்!
பயிற்சியி லிணைந்து மரபினை நித்தம்
      பைந்தமிழ்ச் சோலையில் கற்றான்!
பெயலெனப் பொழியும் கவியர விந்தன்
     பெரும்புக ழடையவாழ்த் துவனே!
அரவிந்தா வருக! அருங்கவி தருக!

தமிழ் வணக்கம்

பாரண்டப் பேருடைப் பைந்தமிழே! சந்தனத்
தேராய்க் கமகமக்கும் தீந்தமிழே! பாராய்நீ!
மாறாச் சுவையே! மங்கா அமுதேநீ!
வாராய் எழுத்தையே ஆய்ந்து..


தலைமை, அவைவணக்கம்

பைந்தமிழ்ச் சோலையுடைப் பாவலர் மாமணியே!
பூந்தமிழால் போற்றினேன்நும் பொற்பாதம் - தீந்தமிழால்
பாவியற்றும் பூங்கரத்துப் பாவலர்க ளே!கேள்மின்
நாவியம்பும் பாப்படைத்தேன் நாற்று.

ஏருக்குச் சீர் செய்வோம்

கள்ளமேது மில்லாக் கருமுகில் வண்ணவுடல்
உள்ளார்ந்த தேடலில் ஓடுவதும் ஓய்ந்ததோ
எள்ளிநகை யாடும் எருமைச்சா ணத்தீக்கள்
துள்ளி விளையாடித் தூக்கத்தைத் தின்கிறதோ
கள்ளிக் கிளையொன்று காதைச் சொறிகையில்

வெள்ளி முளைத்திடும் வேளை வந்ததுவோ
தள்ளிப் படுத்துறங்கும் தங்கமவள் நீரிறைக்கப்
புள்ளிதனை வைக்கிறாளே பூக்கோலப் பொன்னியவள்!

ஏற்றமேத் தாதிங்கே ஏர்ப்பிடிக்க ஏதுவழி
ஊற்றும்நீ ரின்றியே ஊறவும் ஏதுவழி
ஆற்றோரக் கால்வாயும் ஆறிரண்டாய்ப் பங்கங்கே
சாற்றும் தவளையோ சங்காய்ச் சடசடக்க
நாற்று நடவிற்கு நாளையோடு பட்டமில்லை
வேற்று கிரகத்து விண்மீன்கொட் டும்பனி
கூற்றுவனாய் நீடிக்க ஊசியெனக் குத்திடுதே
சாற்றிட ஏதுமில்லை சல்லடையாய்க் கந்தலே

காளையனைப் பூட்டிவைத்துக் காடெல்லாம் சேறாக்கி
நாளைமறக் காதிடையில் நைந்த இலைத்தழையும்
வேளைப்பார்த் திட்டு விளைந்த பயிரதுவும்
மாலைவந்து சேர்ந்து மலையாகி நிற்குமே
தோலையுரித் துக்கொட்டும் தொள்ளாயிர முத்துக்கள்
காலையில் காட்டிடுமே கொத்தனமும் போட்டதைப்
பாலைக்கா ணாது பதறும் குழவிக்கு
வாலைக்காட் டும்மந்த வாசலையும் என்னவென. . .
பொன்னேரு கட்டுபவன் பொண்ணுக்கி ணையன்றோ
தன்னுடல்வ ருத்தியும் தானென்று வாழாதான்
வன்னுடல் எங்கிலும் வாடியஉ வர்மலர்கள்
வண்ணான் வெளுத்திடா ஆடையுடை வள்ளலவன்
கண்ணில் களவிலாக் கண்ணிய உள்ளமுடை
மண்ணுலகு போற்றும் மனிதவின மானவன்
அன்னையவ ளையொத் தகமுடை மானுடத்தைப்
பொன்னென எண்ணியே பூவுலகில் போற்றுவமே!!

வாழ்த்துப்பா !

தன்னுடல் நோகத் தனக்கென வாழாத
பொன்னேர் உழவரைப் போற்றிப் பொலிவாக
இன்றமிழ்ப் பாவினை இவ்வரங் கிற்பொழிந்தாய் !
நின்பா மழையினால் நெஞ்சம் நெகிழ்வித்தாய் !
தென்றலாய்த் தொட்டுத் திளைத்திட வுஞ்செய்தாய் !
கன்றுனை வாழ்த்தக் காத்திருப் பாள்தமிழ்த்தாய்!
அன்புடன் வாழ்த்தி அகமகிழ் வோடுனக்கு
நன்றிகளைச் சொல்வேன் நனைந்த விழியோடே !!

★★★

சோலைக் கவியரங்கம் - 10



நிறைவு கவிதை !!

( சியாமளா ராஜசேகர் )

புத்தரிசி பொங்கலிட்ட பொன்னாளில் சோலையிலே
தித்திக்கும் கவியரங்கில்  சிறப்பாகப் படையலிட்டீர்!
எத்திக்கும் பாராட்ட இன்பத்தேன் பாய்ந்தாற்போல்
முத்தமிழாள் அகங்குளிர்ந்து முத்துநகை  புரிந்தாளே !!

வண்ணவண்ண பதங்கூட்டி வடிவாகப் பாதீட்டி
எண்ணத்தால் எழுத்துகளால் ஏருக்குச் சீர்செய்தீர் !
மண்ணுலகில் உழவின்றேல் வாழ்வில்லை என்றுணர்ந்து
கண்மணியாய்த் தான்கருதிக் காக்கின்ற வழிசொன்னீர் !

குருவருளுந் துணைநிற்கக் கொஞ்சுதமிழ்ச் சொல்லெடுத்து
விருத்தங்கள் வண்ணமென விதவிதமாய் விருந்தளித்தீர் !
அருந்தமிழுக் கணிசெய்த அனைவரையும் வணங்கியன்பாய்ப்
பெருமையுடன் வாழ்த்துவதில் பேருவகை  கொள்கின்றேன் !

கற்பித்த ஆசானும் களிப்பினிலே மிதக்கின்றார்
இற்றைக்குப் பாடாதோர் ஏமாந்தே தவிக்கின்றார்
சொற்றிறமை இருந்தென்ன சோலையிலே நழுவவிட்ட 
அற்புதநல் வாய்ப்பிதுபோல் அடுத்துவந்தால் விடவேண்டா!!


புதுமைகளைத் திறத்தோடு புகுத்துவதில் சோலைக்கு
முதலிடந்தான் எப்போதும் முழுவீச்சாய் முகநூலில்
மதுவுண்ட வண்டாக மனமளையத் திளைத்திருந்தோம்
கதையல்ல உண்மையெனக் கவிக்குயில்காள் நாமறிவோம் !!

அவரவர்தம் குரலினிலே அவரவர்தம் கவிகேட்டுச்
சுவைத்தவற்றை அசைபோட்டுச் சொக்கித்தான் போய்நின்றோம் !
அவைமணக்கச் செய்தவளின் அடிபணிந்து மலர்தூவிக்
கவியரங்கை நிறைவுசெய்வோம் கண்பனிக்கச் சோலையிலே !!

ஏருக்குச் சீர் செய்வோம் !!

உழவின்றேல் உணவில்லை என்றறிந்த பின்னும்
     உழவுக்கு முதலிடத்தைக் கொடுக்கத்தான் மறந்தோம் !
கழனிகளை ஆலைகட்குத் தாரைவார்த்து விட்டுக்
     கடுகளவும் கவலையின்றி வாய்மூடிக் கிடந்தோம் !
கழிவுகளால் ஆறுகளும் மாசுபட நோயால்
     கணக்கில்லா உயிர்ச்சேதம் கண்முன்னே கண்டோம் !
பொழிகின்ற மழைநீரைக் கடல்சேர விட்டுப்
    புலம்பித்தான் தீர்க்கின்றோம் நீரில்லை என்றே!!

மருதநிலம் பாலையாக விட்டுவிட லாமா
   வளம்நல்கும் பயிர்த்தொழிலை நலியவிட லாமா?
கருவேலங் காடுகளைப் பெருகவிட லாமா
   கதிர்களெல்லாம் நீரின்றிக் காயவிட லாமா?
புரியாமல்  மீத்தேனை எடுக்கவிட லாமா
    பொன்னான விளைநிலத்தைப் பொசுங்கவிட லாமா?
தெரிந்திருந்தும் நெகிழியினைப் பயன்படுத்த லாமா
    சீர்மிக்க நிலமகளை மலடாக்க லாமா ??

ஏரோட்டம் வயல்காண வான்கருணை  வேண்டும்
     ஏரிகுளம் நீர்நிலைகள் நிறைந்திருக்க வேண்டும்
நீரோடும் நதிகளெல்லாம் ஒன்றிணைய வேண்டும்
    நேர்மையுடன் நல்லரசும் துணைநிற்க வேண்டும்
தீராத கடன்சுமையால்  உழல்வோர்தம் பாட்டைத்
    தீர்த்திடவே இயன்றவரை  உதவிசெய வேண்டும்
வேரோடு நல்லுழவர் குறைகளைந்து விட்டால்
    விவசாயம் செழித்தோங்கி நாடுநலம் பெறுமே !!

அறிவியலால் தொழில்நுட்பம் வானெட்டி னாலும்
     அடுபசிக்குச் சோறின்‌றேல் எதையுண்டு வாழ்வோம் ?
உறவாக உரிமையுடன் உழுபவரைக் கருதி
      உயர்நிலையில் அவர்வாழச் செய்வதுநம் கடமை !
இறைதந்த கொடையான இயற்கையினைப் பேணி
     இறுமாப்பை விட்டொழித்துப் பல்லோரும் கூடிக்
கறையில்லா மனத்தோடு நலம்வாழ வாழ்த்தி
      களிப்புடனே ஏருக்குச் சீர்செய்வோம் நாமே !!
    
நன்றி ..!!

இச்சோலைக் கவிய ரங்கில்
     எளியேனைத் தலைமை யாக்கி
உச்சத்தி லேற்றி வைத்த
      ஒப்பில்லா வரத ருக்கும்
மெச்சுவண்ணம் ஏரைப் போற்றி
     மேன்மைசெய்த கவிஞர் கட்கும்
இச்சமயம் நன்றி யோடே
     இருகைகள் கூப்பு வேனே

★★★