'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 15, 2020

சோலைக் கவியரங்கம் - 10


6.     கவிஞர் மதுரா

கவிஞர் அழைப்பு

வாசிப்பை நேசிக்கும் பண்பு டையாள்
       மரபினிலே பாட்டியற்றும் மாண்பு டையாள் !
காசினியில் பைந்தமிழைக் கண்ணாய்ப் போற்றிக்
      கவிமழையில் குளிர்விக்கும் சிறப்பு டையாள்!
ஆசையுடன் ஏருக்குப் பெருமை சேர்க்க
      அன்னவளை எண்சீரில் விருத்தம் பாடி
 மாசில்லாத் தேன்மொழியே வருக வென்று
        மனம்நிறைந்த வாழ்த்துடனே அழைத்தேன் நானே!

மதுரா வருக ! மணக்கும் கவிதை தருக !

தமிழ் வாழ்த்து !

உயிரில் கலந்தென் உணர்வில் நிறைந்தே
உயர்வை யளித்திடும் உன்னதத் தாயே
தொழுவே னுனைநான் துணையா யிருந்து
பழுதிலாப் பாடலைத் தா.

தலைமை வாழ்த்து !

நாமணக்கும் நற்றமிழை நாளெல்லாம் பாடுகின்ற
பாமலருஞ் சோலை பணிந்தே வணங்குகிறேன்
தேமதுரச் சொல்லரசி தீந்தமிழின் பாவரசி
மாமன்றில் ஏற்பாய் மகிழ்ந்து.

ஏருக்குச் சீர் செய்வோம்

சேற்றினிலே நெற்கதிரும் செழிப்பாக நின்று
    சீரோடு மகிழ்வோடும் சிறந்ததொரு காலம்
நாற்றுநடக் களையெடுக்க நாளெல்லாம் போக
    நடுவீட்டில் பத்தாயம் நிரம்புமொரு காலம்
காற்றடிக்கும் நேரத்தில் கதிரடித்து வேலை
    கணக்காக வாழ்ந்திங்குக் களித்ததொரு காலம்
மாற்றாக வந்ததுவே மழையற்ற மேகம்
    மண்ணெல்லாம் தரிசாகி மனம்வெதும்புங் கோலம்.

ஆனைகட்டிப் போரடித்த அழகான நாளும்
    அயல்நாட்டு மோகத்தால் அடிபட்டுப் போகக்
கானலதை நம்பிநாமும் கழனிகளை விற்றுக்
     கனவுலகில் வாழ்கின்றோம் கடுமுழைப்பை விட்டு.
வானமதுப் பொய்த்துநிற்க வறண்டுவிட்ட பூமி
     வயல்வெளிகள் குடியிருப்பாய் வளமிழந்த காட்சி 
கானழித்துப் பெருங்கேட்டைக் கவலையின்றிச் செய்தோம்
    கண்ணியம முழவுதனைக் களையிழக்க வைத்தோம்

ஈடில்லா உழவினைநா மெப்படித்தான் மறந்தோம்
    இவ்வுலகில் உணவின்றி எங்ஙனம்நாம் வாழ்வோம்
வாடிநிற்கு முழவர்வாழ் வைமீட்க வேண்டும்
     வாய்ப்புகளை உருவாக்கி வளமாக்க வேண்டும்
பீடுடைய விவசாயம் பேணியதைக் காப்போம்
    பெய்கின்ற பெருமழையைச் சேமித்து வைப்போம்
நாடெங்கும் நதியிணைத்து நல்லுலகம் காண்போம்
     நஞ்சைபுஞ்சை வளங்கொழிக்க நாளெல்லாம் நினைப்போம்.

ஊரெல்லாம் செழிப்பாக்க ஊருணியை அமைப்போம்.
    உழவருக்கு முயர்வளிக்க உறுதுணையா யிருப்போம்.
பாரெல்லாம் சிறந்தோங்க பயிர்த்தொழிலை வளர்ப்போம்
     பங்கிட்டுப் பகிர்ந்துண்ணும் பண்பதனை யேற்போம்.
நீருக்குக் கையேந்தும் நிலைமைதனைத் தவிர்த்து
    நிறைவான திட்டத்தால் நீரதனைச் சேர்ப்போம்.
ஏருக்குச் சீர்செய்து எழுச்சிதனை யடைவோம்
     என்றென்றும் தமிழோடு மியற்கையதைக் காப்போம்.

வாழ்த்து

ஈடில்லாப் பயிர்த்தொழிலை மறந்து விட்டால்
       இனியுணவுக் கென்செயவென் றுள்ளம் நொந்தாய் !
வாடிநிற்கும் ஏருழவர் வாழ்வை மீட்டு
      வளமாக்க நல்வழிகள் சொல்லித் தந்தாய்!
காடுகரை விளையவில்லை என்றால் பாரில்
      காசிருந்தும் பயனில்லை என்று ணர்ந்து
பாடியநின் கவிகேட்டால்  பெருகு மூக்கம்
     பாவையுனை வாழ்த்திடவே சோலை பூக்கும் !!

★★★

சோலைக் கவியரங்கம் - 10


7.     புலவர் இரா. மாது

கவிஞர் அழைப்பு

திருச்சிவாழ் பாவலரே! தீந்தமிழ்க் காவலரே!
அருள்நெறி நாவலரே! ஆன்மீக ஆர்வலரே!
பரிவுடன் பண்புமிக்க பட்டிமன்ற நாயகரே!
மரபுமீது கொண்ட வளமான காதலால் 
வரதனார் சோலையில் வாஞ்சையு டன்பயிலும்
கருணை மிகுந்தவரே! கம்பனில் தோய்ந்தவரே!
இருகைகள் கூப்பியுமை ஏருக்குச் சீர்செய்ய
வருகவென இம்மன்றில் வாழ்த்திவர வேற்பேனே !!
இலக்கியச் செம்மலே வருக! இன்கவி தருக!

தமிழ் வாழ்த்து  !

வல்லோர் அறிவில் வளர்ந்திட்டாய்  எந்நாளும்                           
நல்லோர் மொழியில் நடம்கொண்டாய் - அல்லோர்                   
மகிழ்ந்து புகழ்ந்திடும் வண்டமிழே தாயே                                                                                    
நெகிழ்ந்து பணிந்தேன் உனை.                                                                           

தலைவர் - அவை வாழ்த்து                                       

கருத்துறப்  பாதா என்றிடும் தலைமைக் 
    கருத்தம்   மாவுனை வணங்கி
விருப்புடன் பாவை விசையுறப் பதிவி   
      வேகனைச்  சாலவே போற்றி                        
அருத்தமாய்ப்  பாவும்   தேர்ந்திட விளக்கும்        
      அருமையர்  பாவல வாரா        
வருவர தாயான் பாவினால் நும்மை
     அவையினை   வணங்கினேன் யானே!                                                                   

(கருத்தம்மா - சியாமளா - கருத்தோடு செயலாற்றும் அன்னை                          

 வாரா வருவரதா - நேரில் வாரா பாவலர் - முகநூல் மூலம் வரும் பாவலர்)                                      

ஏருக்குச் சீர் செய்வோம்

1. கலித்தாழிசை

பாராண்ட மன்னரும் பணிந்துநிற்பர் யாரை?                                                                          
போராண்ட  வீரரும்  போற்றிநிற்பர்  யாரை?                                                                         
சீராண்ட  பாவலர்  சிந்தைசெய்வர் யாரை?,                                                                       
ஏராண்ட   நம்பியைப்  பீடுடை உழவரை
யேற்றமிகு எம்பியைக் காட்டு                  

2. நிலைமண்டில ஆசிரியப் பா

வடிசாறு   வார்த்துச்   செழிக்கும் வணிகர் 
கொடிய மதுவை யருந்தும் மாக்கள்        
மடிநோக்குச் சூதினைக் காட்டும்  சூழ்ச்சியர்
கடிபோ யாடிக் களிக்கும் பதர்கள்                
அடிச்சேறு கண்ட உழவன் தனக்குப்
பிடிசோறு மின்றி நாளும் வருந்தி       
மிடிநோக்கச்  சாதல் அறிந்தும் திருந்தார்
உடைநா டுற்றசீர்  குன்றிக் கெடுமே !

3. கட்டளைக் கலித்துறை

படைப்பத னாலே படைப்போன் எனநான் வணங்குவனோ
மடைக்கோலிக் காத்தலால் மாலன்!எனவே வழங்குவனோ
படைகொண்டு காக்கும்நற்  பாங்கினில் நம்பன் பரசிவனோ
விடையினால் ஏரோட்டும் வீரரால் மானுடம் வென்றதம்மா

4. நேரிசை வெண்பா

கொஞ்சும் பசுங்கிளியே கேளிதுநீ என்னவன்                                                                   
விஞ்சுபுகழ; ஏராளும் வித்தகன்  - மஞ்சுசூழ்
நாவிலன்னம் தந்து நலங்கூட்டும் அன்னாரை
ஆவியென அன்பால் அணை.

வாழ்த்து !

ஏராளும் நம்பியை ஏற்றமிகு பாக்களால்
சீராகப் போற்றிச் சிறப்பித்தீர் ! - பாராட்டச்
சொற்களைத் தேடித் தொலைகிறேன் என்றுமுமை 
வெற்றிகள் சேரும் விழைந்து.

★★★

சோலைக் கவியரங்கம் - 10


                                           8.     கவிஞர் சோமு. சக்தி


கவிஞர் அழைப்பு !

பொதுநலத் தோடும் பகுத்தறி வோடும்
     புரட்சியை நெய்திடும் கவிஞன் !
கொதிப்புடன் பொங்கிப் போர்க்குணத் தோடு
     கொடுமைக  ளெதிர்ப்பதில் முதல்வன்!
பதிவுகள் படித்துக் கருத்துக ளளிக்கும்
     பைந்தமிழ்ப் பாக்களின் சுவைஞன்!
அதியழ காக இக்கவி யரங்கில்
     அடைமழை யாய்க்கவி பொழிக!!

சோமுசக்தி ஐயா வருக! சுந்தர கவிதை தருக!

தமிழ்வாழ்த்து

செந்தமிழே சிந்துவகைப் பாவால் – நான்
சிந்துமொழி செம்மையுற நாவால் – உன்
தீந்தமிழில் காவடியாற் சிந்துகவி பாடிடவே
தேர்வாய் எனைச் சேர்வாய் !

அவைவாழ்த்து:

பாட்டரசி தாங்குமவை பாரீர்- என்
பாட்டிதனைக் கேட்பதற்கு வாரீர்- தாய்ப்
பாட்டிசையில் மீட்டுமிசைப் பாருலகை மீட்பதற்குப்
பாடும் பணிந் தாடும் !

ஏருக்குச்சீர்செய்வோம்!

 ஏருலகைச் சீர்செயவே நாளும் - இங்கு
ஏற்றதொரு திட்டமிட லாளும் –வெறும்
எண்ணிலதை ஏற்றிவிட்டு கண்ணிலதைக் காட்டிவிட்டு
ஏய்க்கும் நிலை ஓய்க்கும்

நீர்வரவை சேர்த்துவைக்க மோதும் – பிழை
நேற்றுவரை செய்ததெலாம் போதும் – மழை
நீர்ப்பிடிப்பைத் தேக்கிவைத்து ஏர்த்தொழிலை மீட்பதற்கு
நேர்க்கும் நிலை வேர்க்கும்

 நல்லுரத்தை நாமிடவே நாளும்- வளர்
நற்பயிரின் தாள்மடலும் நீளும்-வரும்
ஞாலமெலாம் நெற்பயிரைக் காலமெலாம் காத்திடுமே
ஞானம் பெறும் மானம்

மெல்விதையை மின்னனுவால் மாற்றும் – பயிர்
வெல்வகையை நாசமுறத் தேற்றும் – நம்
மேலுழவைச் சேதமுற மேலுதட்டில் வேடமிட
மேய்க்கும் நிலை சாய்க்கும்

வங்கிகளே செல்வமது தேங்கும் – கடும்
வட்டியின்றி ஏழைகளும் வாங்கும் – பல
மங்கலமாய்ப் பொங்குவளம் மண்ணிறைந்து தங்கவளம்
வாங்கும் வகை தாங்கும்

வந்தபொருள் நல்விலைக்குப் போக – ஒரு
மந்தநிலை கொள்விலையால் நோக – முன்
வந்தநிலை மாறுவதால் மாந்தநிலை தீருவதால்
வாழும் தொழில் சூழும்

சோறிடவே சேறிறங்கு நீயும் – பசி
சோர்வினிலே தேசமது காயும் –ஒரு
தோள்வலியும் தோழமையும் சூளுரைத்து வென்றுவரும்
தோழா துயர் சூழா

வேறிடத்தில் தீர்விதற்கு இல்லை –ஒரு
வேரிடத்தில் சேர்ப்பதற்கேன் தொல்லை –இதை
மேலிடத்தில் மேய்ப்பதற்கும் வேலிடத்தால் ஏய்ப்பதற்கும்
வேளேன் இதைக் கேளேன்        ( ஏருலகை…….)

(பொருள்: நேர்க்கும் –நேர்ப்படுத்தும்;வேர்க்கும் – அடிப்படையாக்கும்; சூள்-உறுதிஎடுத்தல்; வேள்-ஆசை,விருப்பம்)

வாழ்த்துப்பா
சிந்துமழை இவ்வரங்கில் பெய்தார் - நம்
சிந்தையினை யுங்குளிரச் செய்தார் - இவர்
       சீர்மிகுந்த பாக்களினால் ஏருழவர் வாழ்வில்வளம்
        சேரும்- துயர் - தீரும் !!

அந்தமிழில் சோமுசக்தி பாட்டு - தமிழ்
அன்னையவ ளும்மலர்ந்தாள் கேட்டு - இங்கு
        அன்புடனே எல்லோரும் நன்றிசொல்லி வாழ்த்திடுவோம்
        ஆடிக் - கவி - பாடி !!

சோலைக் கவியரங்கம் - 10


9.     கவிஞர் இரா.அழகர்சாமி

கவிஞர் அழைப்பு

அந்தமிழ் மீது கொண்ட
       அளவிலாக் காத லாலே
பைந்தமிழ்ச் சோலை நாடிப்
      பல்வகைப் பாக்கள் கற்ற
செந்தமிழ்க் கவியே இங்குச்
      செம்மையாய் ஏரைப் போற்றிச்
சந்தன மாய்ம ணக்குந்
       தண்டமிழ்க் கவிதை தாராய்!

அழகரே வருக! அருங்கவி தருக!!

தமிழ்த்தாய் வாழ்த்து

ஆதியில் மண்ணில் வந்த
     அருந்தமிழ் மொழியே உன்னை
ஓதினோர் தாழ்ந்த தில்லை
     உலகையே வென்றார் தானே
சோதியாய் என்றும் நாட்டில்
     சுடர்விடும் தமிழே உன்னை
வேதமாய் நெஞ்சில் வைத்தே
     விழியெனப் போற்று வேனே!

ஏருக்குச் சீர்செய்வோம்!

ஏருக்குச் சீர்செய்வோம் வாரீர் என்றே
     என்தலைவர் அழைக்கின்றார்! கவிதை கொண்டு
போருக்கும் துணிகின்ற நெஞ்சம் தந்த
பைந்தமிழை வணங்குகின்றேன்! நமது சோலை
யாருக்கும் சளைத்ததல்ல! கவிதை பூக்கும்
     எழிலார்ந்த சோலைக்குள் வந்தோர் எல்லாம்
கார்போலக் கவிதைமழை பொழிவர்! அந்தக்
     காட்சிக்குச் சாட்சியிந்த அரங்கம் தானே!

விளைந்தபொருள் வீடுவந்து சேரும் காலம்
    வீடெங்கும் மகிழ்ச்சியிலே திளைக்கும் கோலம்
களைத்தமனம் களிப்புடனே துள்ளும்! இந்தக்
    காட்சியினைத் தருவதுதை மாதம் தானே!
இளைத்திருக்கும் வயிற்றுக்குச் சோறு போடும்
    எம்முழவர் எதிர்நிற்குந் தெய்வம்! அன்னார்
வளையாது வாழ்வாங்கு வாழ வேண்டி
    வணங்கிடுவோம் வான்வழங்கும் மாரித் தாயை!

ஏதேதோ தொழிலின்று நாட்டில் உண்டு
     இருந்தாலும் அதற்கெனவோர் காலம் உண்டு
தீதான பலசெயல்கள் நடந்த போதும்
     திருந்தாத மக்களுக்குப் பாடம் சொல்லும்
மூதாதை யர்வகுத்த உழவு தானே
     முன்னின்று வழிகாட்டும் வாழ்க்கை யாகும்
வேதங்கள் பொய்த்தாலும் விளைச்சல் காணும்
     விவசாயி நமையென்றும் ஏய்த்த தில்லை!

வயிற்றுக்கு உணவளிக்கும் அந்தத் தெய்வம்
     வாழ்க்கையது சிறப்பதற்கு வகையைச் செய்வோம்
பயிர்வாழப் பாடுபடும் மள்ளர் வாழ்வு
     பலகாலம் மேன்மையுடன் சிறப்புப் பெற்றே
உயர்ந்தோங்க வேண்டுமெனச் சபதம் செய்வோம்
     உலகுள்ளோர் நலத்துடனே அன்றும் இன்றும்
உயிர்வாழச் செய்துவரும் உழவர் தம்மை
     ஊரோடு கொண்டாடி மகிழ்வோம் நாமே!

வாழ்த்துப்பா  !

சுழலுமிவ் வுலகில்  ஏர்தான்
      சோறிடு மென்று ணர்ந்தே
உழவரைத் தெய்வ மாக
      உயர்த்தியே கவிதை செய்தீர்!
மழைமுகில் வானில் கண்ட
      மயிலென மனமு மாட
அழகரே நன்றி சொல்லி
      அன்புடன் வாழ்த்து வேனே!!

சோலைக் கவியரங்கம் - 10


10.     கவிஞர்
ஷேக் அப்துல்லாஹ் அ


கவிஞர் அழைப்பு

கண்ணில் விரியும் கனவுகளைக்
     கன்னித் தமிழில் கவிசெய்யும்
பண்பிற் சிறந்த பாவலரைப்
      பாசத் துடனே அழைக்கின்றேன் !
மண்ணி லுயிர்கள் வாழ்ந்திடவே
      வரமாய் விளங்கும் ஏருழவைக்
கன்னல் மொழியில் சீராட்டிக்
        கவிதை யொன்று தருவீரே !!

அப்துல்லாஹ் வருக!  அழகாய்க் கவிதருக!

தமிழ் வாழ்த்து

நற்குண மானிடர் வாழ்வே வுருவாகப்
பொற்பதங்கள் சேர்ந்த புகழோவி யங்களின்
அற்புதமே ! அன்னைத் தமிழே ! தமிழனாய்நான்
பெற்ற பிறப்பே புகழ் !

தலைவர், அவை வாழ்த்து

தேவனில் தானுருகித் தேன்தமிழ் பாவெழுதும்
காவிய நாயகியின் நற்றலைமை சீர்தளத்தில்
பாவலர் நம்வரதர் பாதை வழிவந்த
பாவலருள் நிற்பதே பேறு !

ஏருக்குச் சீர் செய்வோம்

பாரினில் நம்தமிழ் நாடு தனிப்புகழ்
வீரியம் கொண்டது வெற்றிகள் கண்டது
காரியம் கைக்கூடக் களத்தி லிணைந்தொன்றாய்க்
கோரிக்கை வெல்வதற்குக் கூர்மை மதிதீட்டி
ஏர்கொண்டே வாழ்ந்தார்க ளெங்கும் பசுமையில்
வேர்விட்டு ஆனந்தம் ! வீரவிளை யாட்டுடன்
சீர்கொடுக்கச் செல்வங்கள் சேர்த்தும் உறவிலின்பம்
பார்க்கு மினமேதான் நம்தமிழர் திண்ணம்!
கடின உழைப்பு களத்தி லிறங்கி
விடியும் பொழுதில் விதைக்கும் குணத்தில்
மடிய விடமாட்டார் மானிடர் மான்பைத்
துடிப்பு மிகுந்த துவளாத் தமிழர் !
வழிபாடாம் சைவ வழியில் வணக்கம்
'அழிந்தாலும் ஒன்றே அடர்ந்தாலும் ஒன்றே'
விழித்தது தானே வினையாற்றும் சீவன் !
ஒழிந்தாற் சிவனென்றே ஓர்ந்துணர்ந்த கொள்கை !
ஓருயி ரென்றே உணர்ந்தா லனைத்துமிங்கே !
ஊரு முலகும் உயர்வாகு மமைதியாய் !
பாரும் ! மரக்கிளைப் பற்றி யொடிக்கநாடின்
யாருயிரும் தன்னுயி ரென்பதாற் பற்றவிடார் !
நாளுந் தமிழர் நலன்விரும்பி வாழ்ந்தார்கள்
மூளும் பகைகள் முடிந்தோர் பிரித்தாளும்
பாழும் உயர்வுதாழ்வு பார்வை விதிகளென்ற
தேளும் கடிபாம்பாம் தீரா வியாதி !
முடித்தொழிக்க முன்வந்தே முற்று முணர்ந்தும்
விடிவும் பெறவும் விதைத்தார்நேர் மாற்றம் !
'இறைவன் எனக்கொள்வது ஏமாற்றே' என்றும்
முறையாய் 'அவனில்லை முட்டாளே !' என்றார் ?
ஏர்கொண்டு ழைத்தவன் ஏருக்குச் சீர்செய்ய
வேர்கொண்டு பற்றவைக்கும் வித்தைகள் வென்றொழிக்க
நேர்கொண்ட தன்பார்வை நின்று நிலமெங்கும்
தீர்க்க நினைத்தாரோ தீர்வு !

வாழ்த்துப்பா

அழைப்பிற் கிணங்கிக் கவிவடித்த
     அதிராம் பட்டி னத்தாரே !
மழையா யிங்குக் கொட்டிவிட்டீர்
     மனத்தைத் தைத்த வற்றையெல்லாம் !
உழைப்பால் வுயர்வு கிட்டட்டும்
     உழவர் வாழ்வு சிறக்கட்டும் !
அழகுத் தமிழில் நன்றிகளை
     அன்பாய்ச் சொல்லி வாழ்த்துவனே !!
★★★