'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

May 16, 2020

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் --பரமநாதன் 



   ”செங்கழு மலரின் மென்மை
            தேங்கனிச் சுவையின் தேறல்
        திங்களின் ஒளியாய்த் தோற்றம்
            சீர்கவி வழங்கும் ஊற்றம்”
என மரபுமாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களால் பாராட்டப்படுபவர்; கடல் கடந்து தமிழைப் பரப்பிக் கொண்டிருப்பவர்; தமிழுணர்வோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்; தன்னுடைய நூல்களின் வழியாக உணர்வையும் உந்துதலையும் மற்றவர்களுக்குச் சேர்க்கும் விதமாகத் தமிழ்ப்பணியாற்றி வருபவர் பைந்தமிழ்ச்செம்மல் இணுவையூர் .க.பரமநாதன் அவர்கள்.

இவர் ஈழத்தின் வடபகுதியில் அமைந்த, வரலாற்றுச் சிறப்புடைய ஊரான இணுவில் என்னும் ஊரில் 23-02-1955-இல் பிறந்தார். இப்பகுதி விவசாய மக்களைக் கொண்ட பூமியாகும். இவருடைய பெற்றோர் கணேசுதவமணி ஆவர். இவருடைய தாயாரின் தந்தை வி.எம்.நாகலிங்கம் அவர்கள் 1930களில் மிகச்சிறந்த நாடக நடிகராக விளங்கினார். இவரை அண்ணாவி நாகலிங்கம் என்றே அழைப்பர்.

கல்வி: சிங்கள அரசின் தரப்படுத்தல் முறைக்குள் சிக்கிப் பல்கலைக்கழகம் புகும் வாய்ப்பினை இழந்ததால் இவரது படிப்பு 12-ஆம் வகுப்போடு நின்று போனது.

தொழில்: மருத்துவமனையில் படப்பிடிப்புப் பகுதியில் (X-ray department) எக்ஸ்-கதிரியலாளராகப் (Radiographer) பணிபுரிந்தார். போர்ச்சூழல் காரணமாக மனைவி பிள்ளைகளுடன் இடம்பெயர்ந்து டென்மார்க் வந்தடைந்தார். அங்கு அதே கதிரியலாளர் (Radiographer) வேலையைத் தொடர்ந்தார். தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

குடும்பம்: இவருடைய மனைவி அந்நாட்டில் முதியவர்களைப் பராமரிக்கும் அரச நிர்வாகத்தில் பணிபுரிகிறார். இவர்களுக்கு மூன்று ஆண் பிள்ளைகள். மூத்தவர் கனிணித் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றுப் பணிபுரிகிறார். மற்ற இருவரும் மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். இரண்டு பெயரன்மார் உள்ளனர்.

இலக்கிய ஈடுபாடு: சிறுவயதிலிருந்தே தமிழ்மீது பற்றுக் கொண்டவர். இவர் முதலில் தொடராகப் படித்த நூல் பொன்னியின் செல்வன். கவிதையில் மிகுந்த நாட்டமுடையவர். இவருடைய உறவினர் பண்டிதர் கவிஞர் .வே.பஞ்சாட்சரம் அவர்களிடம் கவிதை கற்றார். அவரோடு பல நூறு கவியரங்குகள் கண்டார். 20ஆவது அகவையில் இவரது கவிதைகள் ஈழத்து்ப் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. அங்கு நிலவிய போர்ச்சூழல் அவருடைய கவிதை கற்கும் வாய்ப்பினைப் பறித்துக் கொண்டது.

டென்மார்க்கில் வாழ்ந்து வரும் இந்நாள்களில் பைந்தமிழ்ச்சோலையின் வழியாகப் பல்வேறு மரபு பா வகைகளைப் பாவலர் மா.வரதராசன் அவர்களிடம் கற்று வருகிறார். பைந்தமிழ்ச் சோலையின் பல கவியரங்கங்களில் பங்கேற்று வருவதுடன் பைந்தமிழ்ச் சோலையின் மாணவர்களுக்குக் கற்பிக்கும் பணியிலும் பங்கு கொண்டுள்ளார். மேலும், பைந்தமிழ்ச்சோலை எண்பேராயத்தில் பங்கு வகிக்கிறார். தமிழ்குதிரில் புலம்பெயர் வாழ்வியலை - டென்மார்க் நாட்டின் வாழ்வினை - வாய்ப்பினைப் ’புலம்பெயர் நாடும் வாழ்வும்’ எனும் தொடராக எழுதி வருகிறார்.

இவர் பெற்ற பட்டங்கள் / விருதுகள்:
·        பைந்தமிழ்ப் பாமணி
·        பைந்தமிழ்ச் செம்மல்
·        சந்தக் கவிமணி  
·        பைந்தமிழ்க்குவை
·        நற்றமிழாசான்

இவரது நூல்கள்:
1.       காலம் தந்த வலிகள் (2016)
2.       எண்ணச்சிதறல் (2017)
3.       பரல்கள் (2018)

இவருடைய ஈழத்துப் போர் பற்றிய பாக்கள் நெஞ்சை உருக்குவன.  ஈழத்துப் போரின் இன்னல்களைப் பாடும் கவிஞர் இணுவையூர் --பரமநாதன் அவர்களைப் பைந்தமிழ்ச் சோலையின் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம்.

நடுப்பக்க நயம் - கம்பனைப் போலொரு… பகுதி – 2


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்

இலக்கியம் என்பது அவ்விலக்கியம் எழுந்த காலத்துக் கண்ணாடியாகும். அக்கால மக்களின் வாழ்வியலையும், பண்பாட்டுக் கூறுகளையும் படம்பிடித்துக் காட்டுபவை அக்கால இலக்கியங்களே! அதனாலன்றோ சங்க இலக்கியங்களை நம் தமிழினத்தின் அடையாளமாகச் சொல்லி நாம் பெருமைப்படுகிறோம்.

களப்பிரரின் ஆட்சிக் காலத்தைத் 'தமிழகத்தின் இருண்டகாலம்' என்பர் வரலாற்று ஆய்வாளர்கள். ஆனால், வரம்பற்ற கொடுமையால் இன்னலுற்று, வாழ்வின் அறநெறி பிறழ்ந்து மக்கள் சீரிழந்த காலத்தில்தான் வாழும் முறைமையைக் காட்டி, மக்களின் சிக்கலைத் தீர்த்து, வாழும் நெறியை எடுத்துக் கூறிய அறநூல்களான பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின. அந்தக் காலக்கட்டம்தான் தமிழ்நாட்டுக்குப் பொற்காலம். அந்தப் பொற்காலத்தில் தோன்றிய திருக்குறள் உள்ளிட்ட அறநூல்கள் மலைமேலிட்ட விளக்காக நின்று நமக்கு வாழும் முறையைக் காட்டி இன்றைக்கும் ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன.

நாட்டு மக்கள் அயலானிடத்தில் அடிமைப்பட்டுக் கிடந்த காலத்தில் விடுதலை வேட்கையைப் பரப்பியதால் சுப்பிரமணியன் "மகாகவி பாரதியானார்". கடவுளைப் பாடிக் கொண்டிருந்த காலத்தில் அறியப்படாத கனகசுப்புரத்தினம், இந்தி நுழைப்புக் காலச் சூழலில் இந்தியை எதிர்த்துத் தமிழெழுச்சியைப் பாடியதால் "பாவேந்தராக" அறியப்பட்டார். எனவே, இலக்கியங்களைச் சுவைப்பதற்கும், அவற்றை ஆய்வதற்குமான ஏது "காலநிலையாகும்".

ஒரு படைப்பு எழுத்துகளை மட்டும் தாங்கி வருவதில்லை. அது எழுதப்பட்ட காலத்தின் நிலையை, மக்களின் வாழ்வியலை, அரசியலைத் தாங்கிவரும். வரவேண்டும். அந்த எழுத்தின் கர்த்தாவான எழுத்தாளன் இந்தப் பொருண்மைகளின் மூல நாடியாக நின்று தன் மனக்கதவைத் திறந்து எழுத்துகளின் வடிவத்தில் அந்தப் படைப்பைப் படைக்க வேண்டும். அவையே நல்ல இலக்கியமாகும். காலத்தை வென்று நிற்கும் படைப்பாகும்.
இதே வழியில்தான் நாம் கம்பராமாயணத்தையும் பார்க்க வேண்டும். அக்காப்பியம் எழுந்த காலம், அக்காலத்து மக்கள் பண்பாடு, வாழ்வியல், இறை நம்பிக்கை, சமூகப் பழக்க வழக்கங்கள் இன்ன பிறவற்றை யெல்லாம் மனத்தில் கொண்டும், அவை அக்காப்பியத்தில் எப்படி பயன்கொள்ளப்பட்டன என்பதையும் சீர்தூக்கிப் பார்த்துப் போற்றவோ, தூற்றவோ வேண்டும்.

கம்பராமாயணத்தையும், கம்பனையும் வெறுப்பவர்கள் கூறும் கரணியங்கள் பின்வருவன:
  1. கம்பராமாயணம் தமிழ்க்காவியமன்று. அது ஆரியச் சார்புடையது.
  2. கம்பர் ஆரியர்தம் கடவுளைத் (வைணவத்தைத்) தமிழ்நாட்டில் பரப்பினார்.
  3. ஆரியரின் அடிவருடியாகித் தமிழ்ப் பண்பாட்டைக் கெடுத்தார்.
  4. ஆரிய இராமனை உயர்த்தித் தமிழனாம் இராவணனைத் தரம்தாழ்ந்த கொடுமையான அரக்கனாகக் காட்டினார்.
  5. அளவுக்கு மீறிய காமச்சுவை மிகுந்த பாடல்களை எழுதியுள்ளார்.
  6. மொத்தமுள்ள 11,000 பாடல்களில் மூன்றில் ஒருபங்கே பாடல்கள். மற்றவை தேவையற்ற பிதற்றல்கள்.
(எனக்குத் தெரிந்து இவ்வளவுதான். வேறு ஏதேனும் இருப்பின் அதையும் குறிப்பிட்டால் அவற்றிற்கும் விளக்கம் தருகிறேன்.)

நிற்க... இப்போது நாம் விளக்கப்புகுவோம்.!
ஆனால் அதற்கு முன், கம்பரை எதிர்ப்பவர்கள் யார்? அவர்களின் பின்புலம் என்ன? அதற்கான ஏதுக்கள் எவை? என்பவற்றையும் நாம் யார்? நம்மினம் எது? நம் நாடு எது? நம் கொள்கை என்ன? என்பனவற்றிற்கும் முதலில் விடைதேட வேண்டிய கட்டாயத்தில் இந்த விளக்கத்தைத் தொடர்கிறேன்.
...வளரும்...       

உழவுத்தொழிலே உன்னதம்

பைந்தமிழ்ச் செம்மல் அழகர் சண்முகம்


கழனியில் நாற்று நட்டுக்
    கதிர்முகம் கண்ட காலம்
பழங்கதை யாகி நஞ்சை!
    பணிமனை வீடாய்ப் போச்சே
உழவனின் கோட்டைக் குள்ளே
    உயிர்த்தெழும் களைகள் கூடி
அழகிய நச்சைத் தூவ
    அழியிதே ஏரின் வேரே                      1

நிலத்தினைக் கூறு போட்டு
    நிரந்தர மலட்டில் சேர்க்கக்
கலத்திலே மருந்தை வாங்கிக்
    கருத்தடை செய்து விட்டோம்
வலுத்தவன் விரித்து வைத்த
    வலைக்குளே வழுக்கி வீழ்ந்து
மலத்தினை அள்ளிப் பூசி
     மதியினை அழித்துக் கொண்டோம்     2

கொடையெனும் மாம ழையைக்
    கொடுக்கின்ற மரத்தை வெட்டி
மடையிலே பாயும் ஆற்றின்
    மணலையும் அள்ளிக் கட்டி
கடையிலே கொண்டு விற்கும்
    கடையரால்  சீருங் கெட்டு
நடையினை இழந்து நாட்டின்
    நலமெலாம் முடங்கிப் போச்சே!             3

பணத்தினைக் கண்ட தாலே
    பயிர்தொழில் தண்ட மென்ற
குணத்தினைக் கொண்ட மூடர்
    குழப்பிடும் கார ணத்தால்
பிணங்களில் போடக் கூடப்
    பிடித்துளி அரிசி யின்றி
மணங்கமழ் உலகம் நாளை
    மருகியே மயங்கும் பாரீர்            4

ஏரிட மறந்து போனால்
    இருளெனும் பசியில் சிக்கி
நீரில்லா மீனாய்த் துள்ளி
    நிலத்திலே காய்ந்து மாய்ந்து
வேரில்லா மரத்தைப் போல
    விழுதையும் விழுங்கி விட்டு
ஊரில்லா உலகம் நாளை
    உயிரின்றிச் சுழலும் பாரீர்          5

உழவனை மறந்து விட்டோம்
    உணர்வையும் உடைத்து விட்டோம்
தொழுதனைத் துடிக்க விட்டுத்
    தொடர்ச்சியாய்த் தொலைத்து விட்டோம்
அழுதவன் குரலைக் கேட்க
    அருகிலே யாரு மில்லாப்
பழுதுடை மானி டத்தால்
    பயிர்த்தொழில் பட்டுப் போச்சே!    6

பச்சிலை உரமும மட்கும்
    பசுவதன் எருவை விட்டு
மெச்சிட வேண்டு மென்றே
    மேலையன் கொண்டு தந்த
நச்சினைக்கொட்டி கொட்டி
    நன்னிலம் கெட்டுப் போக
அச்சினை முறித்து நோயை
    அழைத்துநாம் உருக்கு லைந்தோம்   7

முயற்சியை மூல மாக்கி
    முன்னவர் காட்டிச் சென்ற
இயற்கையி னோடு சேர்ந்தே
    இயங்கிடும் விவசா யத்தை
அயர்விலா ஆற்ற ஏந்தி
    அழிவிலாப் பாதை காண
தயக்கமில் லாமல்  கூடித்
    தழைத்திடச் செல்வோம் வாரீர்!     8

புலம்பெயர் நாடும் வாழ்வும்... 12


பைந்தமிழ்ச் செம்மல்
இணுவையூர் வ.க.பரமநாதன்

டென்மார்க்கிலிருந்து...

நீர்மேலாண்மை

தமிழினத்தின் உச்ச அறிவியலாக விளங்கிய நீர்மேலாண்மை பற்றி இவ்வுலகாருக்கு எடுத்தியம்பும் நிலை மாறி வெளிநாட்டவர் கையாளும் நீர்மேலாண்மை பற்றி எழுதும் நிலை  ஏற்பட்டதை எண்ணி வருந்துகிறேன்.

டென்மார்க் நாட்டில் நிலத்தடி நீர் ஏராளமாக உள்ள போதிலும், எவரும் சுயவிருப்போடு கிணறு தோண்டுவது இயலாத செயலாகவே காணப்படுகின்றது. அப்படியாயின் டென்மார்க்கில் குழாய்க்கிணறுகள் இல்லையா எனும் வினா தோன்றும். ஆம் உண்டு என்னும் பதிலே விடையாகக் கிடைக்கும். விவசாயம் செய்பவர்களுக்குப் போதியளவு நீரினைப் பெறுமளவிற்குக் குழாய்க் கிணறுகள் தோண்டுவதற்கு அனுமதியுண்டு. அரசின் அனுமதியின்றித் தோண்டினால் கடும் நடபடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும். 10 மீற்றர்வரை அரசு அனுமதிக்கும் பகுதிகளில் மட்டும் அப்பகுதி உள்ளூராட்சி மன்றில் அனுமதி பெற்றுக் கிணறுகளைத் தோண்டலாம்.

இவ்வாறு பெறப்படும் நீர் வீட்டுத் தோட்டம், பூ மரங்கள், பழ மரங்கள் போன்றவற்றுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. குடிநீராகப் பயன் படுத்தக் கூடாது. இனி இது பற்றிக் கூடுதலான தகவல்களைப் பார்ப்போம்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீர் நிலத்தடிப் பெருங்குழாய்கள் மூலமாகச் சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. இந்நீரானது பெரும் தொட்டிகளில் நிரப்பப்பட்டுச் சுத்திகரிக்கப்படும். இவ்வாறு மறுசுழற்சி செய்யப்பட்ட நீரானது சிறு கால்வாய்கள் வழியாகச் சுற்றுப் புறங்களுக்குக் கடத்தப் படுகின்றது. இவ்வாறு சுத்திகரித்த நீர், நீரடி நீரின் அளவினை மேன்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பெரிய நகரங்களில் இச்செயற்பாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றது. அதிக அளவிலான மக்கள் வாழும் பெருநகரங்களில் தண்ணீர்ப் பயன்பாடு அதிகமாகவேயுள்ளது.

குடிநீர்: நிலத்தடி நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கப்படுகிறது. நீரானது பிராண வாயு ஏற்றப்பட்டு முறையான வடிகட்டலுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மக்களின் தேவைக்கு வழங்கப்படுகின்றது. ஒவ்வோர் நகராட்சி சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் நீர்வழங்கு நிறுவனமானது சபையின் பூரண அனுமதியுடனே நீர் வழங்கலினை மேற்கொள்கின்றன.
கழிவு நீர்: கழிவு நீரானது வீடுகள், தொழிற் சாலைகள், வணிக நிறுவங்கள் மற்றும் பணிமனைகளிலிருந்து  வருகின்றது. கழிவுநீரைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரியான முறையில் சுத்திகரிக்கின்றன. இதனால் நீரில் காணப்படும் மாசுபடுத்திகள் நீக்கப்பட்டுச் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில்  மாற்றப்படுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் ஓடைகள், ஏரிகள், கடல் மூலமாக வெளியேற்றப்படுகிறது  அல்லது மண்ணில் நேரடியாகச் சேர்க்கப்படுகிறது.

இங்கு அதிகமான பனிப்பொழிவும், மழையும் உள்ள காரணத்தால் வீதியோரக் கால்வாய்கள் மற்றும் நீர் ஓடைகள் மூலமாக நீர் ஓடுவதற்குத் தடையில்லாமல் இருப்பதற்காக அக்காலப் பகுதிகளில், சரியாகச் சொல்வதாயின் ஒவ்வோராண்டும் சீரமைக்கப்படும். எதிர்பார்க்கும் அளவினை மீறி மழைபெய்யும் காலங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்படுவதுண்டு. 

குடிநீர் வழங்கல் மிகச்சரியாகவே நடைமுறைப் படுத்தப்படுகின்றது. ஒவ்வோர் வீட்டுரிமையாளரும் அதற்கான ஒரு தொகைப் பணத்தினைச் செலுத்த வேண்டும். இதற்காக வீட்டினுள் நீர் வழங்கும் குழாயுடன் பயன்படுத்தப்படும் நீரினை அளவு செய்யும் கருவி இணைக்கப்பட்டிருக்கும். இதன் அளவீடுகள் சுயமாகவே நகராட்சி நீர்வழங்கு சபைக்குக் கிடைக்கும். ஆயின் அவ்வீட்டார் பயன்படுத்திய நீருக்கான பணத்தினை அரசிற்குச் செலுத்த வேண்டும். அதே போல் எவ்வளவு நீர் பயன்படுத்தினார்களோ அதேயளவு நீர் கழிவு நீராக வெளியேற்றப்பட்டதாகக் கருதப்பட்டு, இக்கழிவுநீர் சுத்திகரிப்புச் செலவுக்கென இன்னுமோர் தொகையானது அறவிடப்படுகின்றது.

நீர்மேலாண்மைத் தொழில்நுட்பம்: 6 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்நாட்டில் நீர்மேலாண்மை பற்றிய தொழில் நுட்பங்களினைக் கையாளும் வகையில் 350 நிறுவனங்கள் இயங்குகின்றன.  இந்நிறுவனங்களில் 18.000 பேர் பணி செய்கின்றார்கள். 2015ஆம் ஆண்டுக் கணக்கில் 16.8 மில்லியன் டொலர் பெறுமதியான தொழில்நுட்பக் கருவிகளை ஏற்றுமதி செய்துள்ளது. விசையியக்கக் கருவி, அடைப்பான், வடிப்பான் (pumps, valves, filters) போன்றவற்றினையே இந்நிறுவனங்கள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. இவை டென்மார்க் நாட்டின் கால நிலைகளுக்கு அமைவாகச் செயலுறும் திறன் வாய்ந்தவை, மேலும் 2025ஆம் ஆண்டளவில் உற்பத்தியைப் பெருக்கி ஏற்றுமதியினை இரட்டிப்பாக்குவதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. இது போன்ற செயற்பாடுகளும் திட்டங்களும் மிக அதிக அளவில் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  எனினும் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இப்பகுதியில் சேர்த்துள்ளேன்.

எது எவ்வாறாயினும் குடிநீர்ப் பிரச்சனைகள் இங்கு எழுவதில்லை. மேலும் தரமான குடிநீர் ஒவ்வோர் குடிமகனுக்கும் கிடைக்கும் வழிகளை அரசு உறுதி செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்க வொன்றாகும்.

காக்கைவிடு தூது - 1


பைந்தமிழ்ச் செம்மல்
வள்ளி முத்து
   
                                                                    காப்பு
திங்கள் முகத்தாளைச் சேர வழியின்றிப்
பொங்கும் கடல்போல் புலம்புகின்றேன் - எங்கள்
பழுதில்லாக் காதல் பகர்தற்குத் தோதாய்க்
கழுகுமலை வேலவனே காப்பு..!

அவையடக்கம்
அலையடிக்கும் முந்நீர்போல் ஆன்றதமிழ்ச் சான்றோர்
கலைமிகுத்த நம்மொழியைக் கண்டேன் - நிலைதெரிந்தேன்
புன்மேல் பனித்துளிபோல் நானும் புலவரென்று
சொன்மாலை தந்தேன் துணிந்து

தூதின் தொடக்கம்
நோக்கும் திசையெல்லாம் நொந்துயிர் சாகும்படி
பார்க்கும் பொருளெல்லாம் பாதகத்தி போல்தெரிய                                      1

யாக்கை ஒடுங்கி எதையோ நினைத்திருத்தேன்
ஆக்கம் தொலைத்தவர்க்கு ஆறுதல் போலவே                                                 2

காக்கையொன்று வந்திறங்கும் காட்சிகண்டேன் வாயிலிரை
தேக்கிவைத்துத் தம்மிணைக்குத் தேர்த்தூட்டும் அன்புகண்டேன்             3

ஆம்பல் மலரிரண்டு அல்லிரவை மேல்பூண்டு
வேம்பில்  விளையாடு  தென்றே வியந்துநின்றேன்..!                                       4

வாட்டும் பசித்தீயில் மக்கள் வருந்திநிற்கக்
கூட்டும் பொரியலும் கோனுன்னும் கோலம்போல்                                           5

வாயூட்டி அன்பை வலுப்படுத்தும் காக்கையால்
நோயூட்டிப் போனவளை நொந்து நினைத்துநின்றேன்..!                                6

இன்பனி நீங்கி இளவேனில் வந்துவிட்டால்
வெண்பனி  போலவே வேம்பெங்கும் பூப்பூக்கும்.!                                            7

தந்தை வளர்த்தமரம் தாங்கிக் கிளைபரப்ப
விந்தைப் பறவையெல்லாம் வீட்டில் இளைப்பாறும்.!                                      8

ஒற்றைக்கால் பந்தர்போல் ஓங்கும் மரத்தின்கீழ்
சற்றே துயரோடு சாய்ந்திருந்த போதில்தான்                                                    9

கள்ளமில்லாக் காக்கையின் காதல் கரைபுரளத்
துள்ளி எழுந்தஎன்னுள் தூதெண்ணம் தோன்றியது..!                                     10

அன்ன நடைபயிலச் சின்ன இடைநொடுங்கப்
பின்னல் அசைந்தாடப் பேரழகி செல்லுவழி                                                     11

உள்ளம்  உடைந்தழிந்து ஓடியதை ஊரறியார்
கள்ளம் மறைத்திருந்தால் காதலிலே வெற்றியுண்டோ..!                               12

நெற்றிப் பிறையிலே நித்திலத்தைத் தோற்றுவித்து
முட்டும் கரைபோல் முழுநீள் புருவத்தாள்                                                          13

பாற்கடலில் பள்ளிகொண்ட பாரளந்தான் போலவே
வேற்கண்ணாள் மையென்னும் நஞ்செழுதும் வாட்கண்ணாள்                                                                                                           14

கொல்லுகின்ற யானைபோல் கோல முலையிரண்டை
மெல்லிய கச்சால் மீறாது  கட்டிவைப்பாள்..!                                                       15

வில்விழியாள் மென்மொழியாள் கார்குழலாள் வற்றாது
கள்வடிக்கும் காம அதரத்தாள் பெண்மயிலாள்..!                                              16

காமன் வகுப்பறையில் காதல்  தெரிந்தவள் 
ஈம விறகடுக்கி என்னுயிர் எ...ரிப்பவள்..!                                                               17
  
அந்த அணங்கவளின் ஆவல்  மொழிகேட்க
நொந்து உடலொடுங்கி நூல்போல் இளைத்திருந்தேன்..!                                 18

ஆறிரண்டு திங்கள் அவள்முகம் காணாமல்
நூறிரண்டு  ஆண்டாய் நுடங்கியது போல்நொந்தேன்..!                                  19

பேச்சழகும் வாள்விழியின் வீச்சழகும் கண்டுகேட்டு
மூச்சிறைந்தே வீட்டில் முடங்கிருந்த போதில்தான்                                          20

காகாகா என்றே கரையுமொலி கேட்டேன்னைக்
காகாகா என்றே கசிந்துருகிக்  காக்கையிடம்                                                    21

பேசலானேன் பெருந்துயரை வார்த்தையில் அள்ளியள்ளி
வீசலானேன் மென்மொழியில் தேனள்ளிப் பூசலானேன்..!                              22

                                                                                      தூது  தொடரும்..!