'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2020

நடுப்பக்க நயம்

கம்பனைப் போலொரு…

பகுதி – 9

மரபு மாமணி 

பாவலர் மா.வரதராசன்


சாதியம் என்பது எல்லா இனத்தாரிடமும் உள்ளதே. இந்துக்களிடம் மட்டும் உள்ளதன்று. அது மனிதர்க்கிடையேயுள்ள உயர்வு தாழ்வு குறித்தான நிலையைச் சுட்டும். உயர்வு தாழ்வு நிலையிலாத போதே இந்தக் கட்டமைப்பு சிதையும். ஆனால் ஏற்றத்தாழ்வு என்னும் நிலையைப் பார்க்கப் புகின் அது எல்லாவுயிரிடத்தும் பரவியிருப்பதை அவற்றின் வாழ்வியலை உற்றுநோக்கின் அறிதற்கேலும். ஆக, ஏற்றத்தாழ்வு இருக்கும்வரை சாதியம் என்ற கட்டமைப்பை யாராலும் சிதைக்கவோ அழிக்கவோ இயலாது.


ஆனால் சமயம் என்பது அந்தந்த இனத்தாரிடையே ஒரு முறையான கருத்தியலால் பொதுவில் வைத்துச் சுட்டப்படும் அடையாளமாகும். அது மாந்த வாழ்வின் ஒழுக்க நிலையைச் சார்ந்த நெறியைக் கூறி அதற்கேற்ப மனங்களைச் சமைக்கும் வழியாகும். இந்த வழியில் அந்தந்த இனத்தார்க்குரிய "மதவொழுக்கம்" பொதுவாகவே இருக்கும். சான்றாக, இந்துக்களிடம் உள்ள கடவுள் வழிபாடு அனைத்து இந்துக்களிடமும் ஒரே மாதிரியாக இருக்கும். அஃதாவது, காளியை வணங்கும் முறையும், சிவனை வணங்கும் முறையும் மற்ற கடவுளை வணங்கும் முறையும் ஒரே விதத்தில் அமையும். அதேபோல்தான் இசுலாத்திலும் கிறித்துவத்திலும்.


எனவே, சாதி என்ற கட்டமைப்பில் நின்றுகொண்டு இறைமையை ஒழிக்கவோ, இறைமை என்ற கட்டமைப்பில் நின்றுகொண்டு சாதியை ஒழிக்கவோ எக்காலத்தும் இயலாது.


இந்நிலையில் பெரியார் முன்னெடுத்த சாதியொழிப்பு என்பது குறிப்பிட்ட மதம் (இந்து) சார்ந்த நிலையிலேயே நின்றுவிட்டது. அதிலும் கூடத் தம்மை உயர்சாதியினராகச் சொல்லிக் கொண்ட ஆரிய பார்ப்பனர்களை எதிர்ப்பதாக மட்டுமே இருந்தது.


★இதன் காரணமாகவே இராசாசி என்ற பார்ப்பனர் கொண்டுவந்த குலக்கல்வி முறையை எதிர்க்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. அதில் வெற்றியும் கிடைத்தது. (சமூகம் சார்ந்த சீர்திருத்தங்களில் இது மட்டுமே அவர் பெற்ற வெற்றியாகும். இதுவே அவரைப் புகழிலேற்றியது) ★


"சங்கக் காலத்திற்குப் பிறகு" கல்வியை அனைவருமே கற்கலாம் என்ற நன்னிலை இம்மண்ணில் உள்ளதென்றால் பெரியாரின் இந்த வெற்றியே... அவருடைய இந்தத் தொண்டு மட்டுமே மிகப்பெரிய காரணம் எனலாம்.


மற்றபடி தமிழுக்காகவும், தமிழினத்திற்காகவும் அவர் எந்த முன்னேற்றத்தையும் செய்ததில்லை. அது அவருடைய நோக்கமுமன்று. அவருடைய நோக்கமே "திராவிடம் என்ற போர்வையில்" தமிழினம் என்ற தொன்மையினத்தை "திராவிட இனம்" என்று மாற்றுவதாகவே இருந்தது. அதன் ஒரு கூறுதான் தமிழிலக்கியங்களைக் குப்பை யென்றும், பயனில்லாதவையென்றும் இழித்தும் பழித்தும் கூறியது. அதுமட்டுமன்றித் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் ஆரிய அடிவருடி நூல்களென்றும் கூறுகின்ற திராவிடர் கழகத்தின் உண்மையான உளப்பாடு இதுவேயாம். அதே மனப்பான்மைதான் கம்பராமாயணத்தை அவர்கள் எதிர்ப்பதும்.


மூட நம்பிக்கை எதிர்ப்பைக் கடவுள் மறுப்பாக மாற்றிய பெரியார், ஆரிய - திராவிடர் பற்றிய எவ்வித ஆய்வு அறிவுமின்றி ஆரிய பார்ப்பனியத்தை எதிர்க்கும் அதே நேரத்தில் அந்த உணர்வு தமிழுணர்வாக மாறிவிடாதபடி திராவிட எழுச்சி என்பதாகவே உருப்பெறச் செய்தார்.


கடவுள் மறுப்பின் வழியாகப் பார்ப்பனர்களை எதிர்க்க அவர் மேற்கொண்டதே கம்பராமாயண எ(திர்)ரிப்பாகும். கடவுள் மறுப்பு என்பதில் இராமனையும், கண்ணனையும் மட்டுமே குறியாகக் கொண்ட அவர்கள் அதன்மூலம் ஆரிய-திராவிடக் கருத்தியலைத் தமிழ் மக்களிடையே ஆழமாகப் பதிய வைத்தனர். திராவிடமே தமிழினம் என்பதை "எடுப்பார் கைப்பிள்ளை யான" தமிழரிடையே மிக நுட்பமாகப் பரப்பினர். அதற்கு அவர்களின் அமைப்பும், அவரைத் தொடர்ந்து திராவிடக் கட்சிகளும் மிகவும் உதவியாயிருந்தன. ★


இனி நாம் எடுத்துக்கொண்ட தலைப்பிற்குள் நுழைவோம். இக்கட்டுரையைத் தொடங்கும்போது கம்ப ராமாயணத்தை இவர்கள் எதிர்ப்பதற்குரிய காரணங்கள் சிலவற்றைக் குறிப்பிட்டிருந்தேன். அவற்றுள் மிக முதன்மையான ஒரு காரணத்தை முதலில் எடுத்துக் கொள்வோம். அது "கம்பர் ஆரியத்தைத் (இராமனை) தமிழகத்தில் பரப்பினார். ஆரிய அடிவருடியானார்" என்பது.


விளக்கம்: பெரியாரும் சரி... அவருடைய தொண்டர்களும் சரி... எதையும் ஆராயாமலே ஒரு முடிவுக்கு வருவதையும், அதுவே சரியானது என்று அழுத்தமாக வாதிடும் இயல்பினர் என்பதற்கு இந்தக் குற்றச்சாட்டே சிறப்பான எடுத்துக் காட்டாகும்.


திராவிடத்தை வளர்ப்பதே ஒரே நோக்கமாகக் கொண்டதால் அவர் பார்ப்பன எதிர்ப்பையும், கடவுள் மறுப்பையும் கையிலெடுத்துக் கொண்டார் எனக்கண்டோம். 


இராமன் ஆரியன் என்றும், இராவணன் திராவிடன் என்றும் அவர்களாகவே ஒரு கருத்தைக் கற்பித்துக் கொண்டனர். "இராமன் ஆரியன் என்பதால் அவனை நல்லவனாகவும், இராவணன் திராவிடன் என்பதால் அவனைக் கெட்டவனாகவும் இராமாயணம் கூறுகிறது" என்று தமிழ் மக்களிடையே பரப்பினர். 


இவர்களுடைய கம்பராமாயண எதிர்ப்பென்பது “தமிழர் தனி இனமல்லர்; அவர்கள் திராவிடரே" என்னும் கருத்தைப் பதிய வைக்கும் கருவியாகவே பயன்பட்டது. அதன் காரணமாக இராமாயணத் திற்கு மாற்றாகக் கீமாயணம் என்றும், இராவணக் காவியம் என்றும் இவர்களால் எழுதப்பட்டன.


இப்போது நாம் விளக்கத்திற்குள் உள்விளக்கமாக இராமாயணம் தோன்றிய மூலத்தைச் சற்றே ஆய்வோமா...!.?         


                                                                                                                               ...தொடரும்...

சூரிய வெளிச்சம்

 பகுதி-3

பைந்தமிழ்ச்செம்மல்

முனைவர் அர.விவேகானந்தன்


2. குறிஞ்சி வளம்!


படர்ந்திடு மூங்கில் தோட்டம்

    பக்கமாய்க் கமுகு தோட்டம்

அடர்ந்திடும் வனத்தின் நாட்டம்

    அழகென வியற்கை கூட்டும்

இடர்தரும் விலங்கே எல்லாம்

    இசைவினைக் காட்டிச் செல்லும்

தொடர்ந்திடு மழலை யன்ன

    தொடுமலை சிறப்பின் குன்றாம் 31


பவளமா மலையு முண்டாம்

    பளிங்கென வொளிரும் நன்றாம்

தவமதை முனைய வேண்டித்

    தவத்தினில் கனிந்தோ ருண்டாம்

அவமென வந்த போதும்

    அதிர்ந்திடா அறவோ ருண்டாம்

நவமணி விளைச்சல் நல்கும்

    நல்வழி நாட்டுங் குன்றாம் 32


வேலவ னருளுங் குன்றாம்

    வெள்ளைக ளொலிக்குங் குன்றாம்

கோலமே கூடுங் குன்றாம்

    குறமகள் வாழுங் குன்றாம்

சீலமே காட்டும் மன்றம்

    சேர்ந்துமே வாழு முற்றம்

பாலமா யுலகி லோங்கும்

    பைம்முறை காட்டுங் குன்றாம் 33


பற்பல விளைச்ச லாக்கிப்

    படையலி லோங்கி நிற்கும்

சிற்சில வின்னல் நேரின்

    செழுமையா யாக்கிக் கொள்ளும்

பற்பல பழமை தேக்கிப்

    பாங்கெனும் பண்பை நாட்டும்

வெற்பென நிமிர்ந்து நிற்கும்

    வெற்றியை யாக்குங் குன்றாம் 34


வரிசையா யூர்திக் கூட்டம்

    வழியினில் செல்லல் போலும்

வரிசையாய்க் குன்றின் தோற்றம்

    வளமையைச் சுமந்து நிற்கும்

சரிவினில் கதிரோன் செல்லத்

    தருவெனும் மணிகள் மின்னும்

பரிவுடன் வந்த பேர்க்குப்

     பலவளந் தேக்குங் குன்றாம் 35


பலாவினைச் சுமக்கு மந்தி

    பகலினில் பந்தி வைக்க

உலாவரும் புள்ளின் கூட்டம்

    உரிமையாய்க் கொத்தித் தின்னும்

கலாவெனுங் கனியைக் காட்டிக்

    கணக்கெனப் பங்கைப் போடும்

துலாவிய கையின் நாற்றம்

    தொலைவினில் மணக்குங் குன்றாம் 36


பெருமலை யுடைத்தல் போலும்

    பிசினெனுங் கிழங்கைத் தோண்ட

வருமுறை சொல்லா நேர்வாய்

    வரிசையாய் நாடிச் செல்வார்

ஒருவரு மோய மாட்டார்

    ஒருநிழ லமர்ந்தே உண்பார்

தருநிழல் செழிக்குங் குன்றம்

    தவிப்பெலா மில்லாக் குன்றாம் 37


இடுப்பினில் தழையா மாடை

    இருப்பெனக் குறவோர் கட்ட

மிடுப்பினில் மழலைக் கூட்டம்

    மிஞ்சியே ஆட்டிப் பார்க்கும்

துடிப்பென ஒளிருங் கூட்டம்

    துயரதை நின்றே போக்கும்

உடுப்பென இல்லா வாழ்வில்

    உலகதை மயக்குங் குன்றாம் 38


கூத்திடும் கலைஞர் கூட்டம்

    குறையெனக் கூறி நிற்க

வேத்தெனப் பாரா வண்ணம்

    வென்றிடும் வழியைச் சொல்வார்

பூத்திடும் மலர்கள் போலும்

    புவியினில் செழிக்கச் சொல்வார்

காத்திடுங் குறவர் குன்றம்

    கருணையு மொளிருங் குன்றாம் 39


மணிவளஞ் சுரக்குங் குன்றம்

    மனவளம் சிறக்கும் குன்றம்

கனிவளம் பெருக்குங் குன்றம்

    கரும்பென இனிக்கும் குன்றம்

குணவளங் குறவோர் குன்றம்

    குறையது மில்லாக் குன்றம்

தனியெனத் தழைக்குங் குன்றம்

    தகையெலாங் கூட்டுங் குன்றாம் 40


வெளிச்சம் தொடரும்…

இற்றைத் திங்கள் இவரைப் பற்றி



பைந்தமிழ்ச்செம்மல் 

திருவாளர்  பே.வள்ளிமுத்து அவர்கள்


கட்டுரையாக்கம்: 

பைந்தமிழ்ச்செம்மல் 

தமிழகழ்வன் சுப்பிரமணி


புதுக்கவி நாயகராம் - இவர்

    புதுப்புதுக் கவிதையின் தாயகமாம்

மதுதரும் போதையைப்போல் - மனம்

   மயக்கிடும் சிலேடையில் ஓங்கிடுவார்!

சீரொடு யாப்பறிந்தே - தனிச்

   சீருடன் பாக்களை யாத்திடுவார்

என மரபு மாமணி பாவலர் மா.வரதராசனார் அவர்களால் பாராட்டப்பட்டவர், மிகச்சிறந்த மரபு பாவலர், புதுக்கவிதைப் புயல், சிலேடைச் சிங்கம், இயற்கையை வியந்து வியந்து பாடும் இன்னிசைக் கவிஞர் பைந்தமிழ்ச்செம்மல் திருவாளர் பே.வள்ளிமுத்து அவர்கள்.

அவர்  தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியம் கரடிகுளம் என்னும் ஊரில் 1982-ஆம் ஆண்டு பிறந்தார். முத்தாகத் தமிழ் பாடும் இவரைப் பெற்றோர் பேச்சிமுத்து – ராமுத்தாய் அவர்கள் மட்டுமன்று; இந்நாட்டு மக்களுந்தான்.

கல்வியின் மீது தீராத காதல் கொண்ட அவர் முதுகலைத் தமிழ் (M.A.), இளநிலைக் கல்வியியல் (B.Ed.), ஆய்வியல் நிறைஞர் (M.Phil) ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார். அவர் பள்ளியில் மாணவர்களுக்குத் தமிழைக் கற்பித்து இளைய சமுதாயத்தைத் தமிழ் எழுச்சியோடு வீறுகொண்டு எழச் செய்யும் தமிழாசிரியர் (எடப்பாடி ஒன்றியம் -சேலம் மாவட்டம்) ஆவார்.


தமிழ்ப்பணி: அவர் 13 வயதில் கவிதை இயற்றத் தொடங்கினார். பைந்தமிழ்ச்சோலை முகநூல் குழுமத்தில் பாவலர் மா.வரதராசனாரிடம் முறையாக யாப்பிலக்கணம் பயின்று மரபு கவிதை எழுதி வருகின்றார். பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், அதன் எண்பேராயத்தில் உறுப்பினராகவும், மரபு பாக்களைப் பயிற்று விக்கும் துணையாசிரியருள் ஒருவராகவும், தமிழ்க்குதிரின் துணையாசிரியராகவும் பொறுப்பேற்றுப் பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறார்.


சிலேடைக் கவிஞரான அவருக்குப் பாவலர் மா.வரதராசனார் இயற்றிய சிலேடைக் கவிதை:

வள்ளியைச் சேர்த்ததால் வண்டமிழ் தேர்தலால்

தெள்ளிய சோலை திரிதலால் - உள்ள

முருகுதமிழ்ப் பாவி லுறைதலால் ஒன்றும்

முருகனும் வள்ளிமுத்து வும்!


இயற்கை இயம்பி: அவர் எப்போதும் கற்பனை ஓடையில் கவித்துவம் நிறைந்த மீன்களைப் பிடித்துக் கொண்டிருப்பவர். மண்மீன்களைச் சுவைப்பது மட்டுமன்றி விண்மீன்களையும் ஒரு கை பார்ப்பவர். காட்டருவிகளோடு கொஞ்சிக் குலவிக் கொண்டிருப்பவர். வயல்வெளிகளிலும், பூஞ்சோலைகளிலும் சுற்றித் திரியும் அவருக்கு முகிலும் மகிழ்மதியும் சொந்தப் பிள்ளைகள். இத்தகு இயற்கைக் கவிஞரின் இலக்கியப் படைப்புகளாவன:

இரட்டுற மொழிதல் நூறு (சிலேடை வெண்பாக்கள்) என்ற இவரின் முதல் நூல் மதுரை உலகத் தமிழ்ச்சங்கத்தால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இந்நூலைச் சிறந்த நூலாகத் தேர்வுசெய்து ஈரோடு தமிழ்ச் சங்கம்  மூன்றாம் பரிசு வழங்கியது. 

மேலும் அவர்,

வள்ளிமுத்து கவித்துவம் 100 

காக்கைவிடு தூது 

இயற்கைப் பாவை

பட்டாம்பூச்சி (சிறுவர் பாடல்)

ஆகிய நூல்களை இயற்றியுள்ளார். இவை அச்சில் உள்ளன. இவற்றோடு அணியில் ஆயிரம் என்ற நூலைத் தொடராக எழுதிவருகிறார்.


அவருடைய கவித்துவத்திற்கு ஒரு சான்று:

வாய்க்கால் வழிந்தோடும் நீர்வரப்பில் செந்தட்டான்

பூக்கால் மிதித்தருகம் புல்வளைக்கும் -நோக்குங்கால்

வில்வளைந்து நீர்கிழித்து மெல்லிசை தோற்றுவிக்க

நெல்வயலும் ஆடும் நெளிந்து...!


புரட்சிப் புயல்: ‘உலகம் சமநிலை பெற வேண்டும்; உயர்வு தாழ்விலா நிலை வேண்டும்’ என்னுமாறு உயரிய சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை நெஞ்சமெல்லாம் நிறைத்துக் கொஞ்சு தமிழில் உலகமெல்லாம் கொண்டு சேர்ப்பவர். இவரது பாடல்களில் புரட்சிக் கருத்துகள் வெடிக்கும். புரட்டுக் கதைகள் மடியும். காலத்திற்கேற்ற சிந்தனையைத் தூண்டும் கருக்கொண்ட கவிஞர் அவர். ஆம்.. அதற்கொரு சான்று:

சாதியென்னும் சாக்கடையில் பன்றிகளாய்ப் புரளுகின்ற 

சாத்திரத்தை உடைக்கவேண்டும் எழுக..!

ஆதியிலே வந்துநின்ற கேடுகெட்ட மூடத்தனம்

அத்தனையும் தொலைக்கவேண்டும் திமிர்க..!

பாதியிலே புகுந்தெழுந்து பாவையரின் அறிவொடுக்கும் 

பெண்ணடிமை ஒழியவேண்டும் வருக..!

நீதியொன்றால் நாட்டிலெங்கும் சமத்துவமே நிலைக்கவேண்டும்

நீயதற்குப் புரட்சிக்கவி தருக...!


பட்டங்களும் விருதுகளும்: அவர் 

பைந்தமிழ்ச்செம்மல்

நற்றமிழாசான்

சந்தக்கவிமணி 

விரைகவி வேந்தர் 

பைந்தமிழ்ச்சுடர் 

ஆசுகவி எனப் பல பட்டங்களைப் பைந்தமிழ்ச்சோலையில் பெற்றுள்ளார். மேலும்

சிலேடைச் செம்மல் (ஈரோடு தமிழ்ச்சங்கம்)

கவியொளி (ஈரோடு தமிழ்ச்சங்கம்)

கவி காளமேகம் (உலகப் பாவலர் தமிழன்னைத்  தமிழ்ப்பேரவை)

வீறுகவி முடியரசனார் விருது

முதலிய பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.


தொடர்ந்து மரபு கவிதையின் பல்வேறு யாப்பிலக்கியங்களையும் படைத்து வருகின்றார். இத்தகைய தமிழறிஞர் வாழுங் காலத்தில் யாமும் பிறப்பெடுத்தோம் என்பதை எண்ணும்போது உள்ளம் களிகொள்கிறது. அன்னாருக்கு என்னுடைய வணக்கங்களைத் தெரிவித்து மகிழ்கிறேன்.

நல்வழிகள்

பைந்தமிழ்ச் செம்மல் நிர்மலா சிவராசசிங்கம்


மாண்பினில் சிறக்கும் மானிடர் வாழ்வில்

    மதுவது வீழ்ச்சியைக் கொடுக்கும்

ஆன்றோர் கூறும் வாழ்வியல் வழிகள்

    அகமதில் ஏற்பது நன்று

மாண்டவர் பலரே குடியினில் வீழ்ந்து

    மதுவினைத் தொட்டதி னாலே

வேண்டுவேன் கெட்ட குடியினை மறந்து

    மீச்செல வினையெலாம் விடுவாய் 1


விடுகிற  தவறைத்  திருத்திட வழிகள் 

    விரைவெனத் தேடிடக் கிட்டும்

இடரினைத்  தகர்த்துத்  தொடர்ந்திட யாவும்

    இன்னலும் தீயுமே உணர்வாய்   

கடுகென நினைத்துப் பொய்தனைச் சொல்லிக் 

    கலங்கிட வைத்திட  வேண்டா 

அடக்கிடு  மனத்தை நல்லவை நினைத்தே 

    அகன்றிடும் தீயவை மறைந்து 2


மறைவினில் நின்று சூழ்ச்சிகள்  செய்து

    மற்றவர் வாழ்வதைக்  குலைத்தால்   

குறையினைக் கேட்பாய் நல்லவர் விலகக்  

    குடிகளும் வெறுப்பினைக் காட்டும் 

கறைபடும் வாழ்வு நற்பெயர் கெடுமே

    களங்கமும் தொடரென வருமே

இறைவனை வணங்கி நல்லவை செய்ய 

    இதயமும் வெறுக்குமே ஏய்ப்பை


ஏய்ப்பினைச் செய்ய ஈன்றவர் வெறுப்பர்

    ஏற்றமும் வாழ்வினில் இழப்பாய்

தூய்மையும் கெட்டு மதிப்பதும் நீங்கும்

    தூயவர் அற்றவர் என்பர்

வாய்மையைப் போற்றும் வழியினில் செல்ல

    மகிழ்வுற இல்லமும் சிறக்கும்

சாய்வதற் கொருவர் நாளுமே இருப்பர்

    தயக்கமும் விரைவென நீங்கும் 4


நீங்கிடும் நேரம் திரும்பவும் வராது 

    நெஞ்சினில் நன்றென ஏற்பாய்  

தூங்கிடச் சோம்பல் தொற்றுமே விரைவாய்த் 

    துரிதமாய்க் கடமைகள் செய்வாய்

தீங்கினைச் செய்து திரிகிற வேளை 

    தெய்வமும் அருளினைத் தராது  


பாங்கெனப் பணியைத் தொடர்ந்திட  நாளும் 

    பாரினில் உயர்வினைப் பெறுவாய் 5


உயர்வினைப் பெற்றால் உதவிகள் நல்கி  

    உன்னத வாழ்வினை வாழ்வாய் 

வியர்வையைச்  சிந்தி உழைப்பவர் மீது 

    விருப்புடன் மதிப்பினை நல்கு 

துயரதை நீக்க முயற்சியை எடுக்கத்   

    துன்பமும் விலகிடும் நம்பு 

பயன்தரும் செயல்கள் நாளுமே செய்யப்  

    பதவியில் உயர்வது கிட்டும் 6


உயர்வது கிட்டும் போதினி லென்றும்  

    உயரிய ஒழுக்கமும் வேண்டும் 

மயங்கியே நீயும் பிறர்மனை நோக்க

    வசந்தமும் அகன்றிடும் தூரம் 

தயக்கமும் மனத்தில் நிரந்தர மாகித் 

    தரணியில் தாழ்ந்திடு வாயே

வியத்தகு செயல்கள் ஆற்றிட வேண்டும்

    வினைதரும் யாவையும் நீக்கு  7


குணத்தினில் உயர்வு நிலைத்திட என்றும் 

    கொள்கையில் உறுதியும் வேண்டும் 

பணத்தினை வீணே செலவழி த்திடவே 

    பழக்கமும் மாறிடும் உணர்வாய் 

இணங்கலர் சேர்ந்தால்  கொலைகளும் செய்வர் 

    எதிரியை அறிந்ததும் விலகு

உணர்ந்திடு உண்மை நிலையது யாவும்   

    உலகினில் மாறிடும் காண்பாய்  8


காண்பவை யெல்லாம் நல்லவை என்றே 

    கற்பனை செய்யவே வேண்டா 

ஆண்டுகள் கடக்கும் அவலமும் தீரும்  

    ஆசைகள் துயரினை நல்கும்  

நாண்மதி போல நிறைவுற வாழ 

    நன்மைகள் சூழ்ந்துமே கிட்டும்  

வேண்டுவ தெல்லாம் நிறைவுற என்றும் 

    விழுமிய தொண்டினைச் செய்வாய் 9


தொண்டுகள் செய்ய நல்வழி காட்டும்

    துடிப்புடன் செயல்படு பாரில் 

எண்ணுவ தெல்லாம் நல்லன எண்ணு 

    ஏற்றமும் வருமே நாடி

கண்ணியம் காக்கக் கடமைகள் யாவும் 

    கடிதென முடிவுறும் நம்பு

திண்மையும் மனத்தில் நிலைபெற வாழ்வில் 

    தெய்வமும் அருளினைத் தருமே! 10

கரடிகுளம் வள்ளிமுத்தார் காக்கைவிடு தூது

பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து

பகுதி - 8

பிரிந்தவர் நினைத்துப் புலம்பல்


பூக்குளித்தல் போலும் புனற்குளத்தில் நீராடத்

தீக்குளித்தல் போல்நான் திமிர்ந்தழகால் வெந்ததுவும்!


பூவணி போதாதோ..! புன்னகை காணாதோ!

தாவணியும் நீவியவள் தற்கொலைக்குத் தூண்டியதும்!


பொன்னடி பூப்போல் புலம்பெயரப் பூவிழியாள்

கண்ணடி பட்டுக் கலங்கித் தவித்ததுவும்..!


செம்மண் வழித்தடத்தில் சிள்வண்டு பாட்டிசைக்க

அம்மன் விழாவுக்(கு) அவள்பின் நடந்ததுவும்


மார்கழி முன்பனியில் மஞ்சள் நிலாமுகத்தாள்

கூர்விழி காணவே கோவிலுக்குப் போனதுவும்?


தென்றல் மிதிவண்டித் தேரேறி ஊர்ந்துவரச்

சென்று தவங்கிடந்து சேல்விழியால் செத்ததுவும்!


வாரத்தில் மூன்றுநாள் வைகறையில் நீர்வரும்..அந்

நேரத்தில் முக்குடம் தாங்கியென் தேர்வர!


ஈக்கள் பலசுற்றும் மின்சாரப் பூவின்கீழ்

பாக்கள் எழுதல்போல் பன்னாள் நடித்ததுவும்!


அந்தி அடங்கிய அன்றொருநாள்..! அன்னதானப்

பந்தியில் பார்வையால் என்னைப் பருகியதும்


கூத்துக் கரகாட்டாம் கூடியூர் பார்த்திருக்க

ஆத்தாடி கண்ணிரண்டால் ஆளை விழுங்கியதும்


முந்தானை மாட்டி முளைப்பாரி தானெடுத்து

வந்தவளை எண்ணியெண்ணி வாழ்வைத் தொலைத்ததுவும்


வாய்நீர் பருக வரங்கேட்டு வந்தெனக்குத்

தேநீர் சுடச்சுடத் தேர்ந்தெடுத்துத் தந்ததுவும்


புத்தகம் மார்பணைத்துப் பூவையர் சூழ்ந்துவரப்

பத்தனைப்போல் பாலத்தில் நித்தம் கிடந்ததுவும்


எள்ளுப்பூப் போலென்னைப் பார்த்துத் தலைகவிழ்ந்தாள்

கள்ளம் விலகியது காதல் எனவறிந்து


சொல்லி விடத்துணிந்து சொல்லைக் கவியெழுதிச்

சொல்ல முடியாமல் சொல்லை ஒளித்ததுவும்.!


எத்தனை பாக்கள் எழுதிவைத்தும் இன்னுமின்னும்

எத்தனை பூக்கள் பறித்துவைத்தும் நேர்வரப்


புத்தனைப் போல ஒளித்துவைத்துப் பூவைமுன்

பித்தனைப் போலப் பிதற்றிக் கிடந்ததுவும்


வேலாடும் மைவிழியாள் வேட்கைதனை யாமறிந்து

நாளும் பொழுதோடு பேசிக் கிடந்ததுவும்!


முத்தம் கொடுத்ததில்லை கட்டிப் பிடித்ததில்லை

பத்து விரல்புதைத்து மோகம் தொலைத்ததில்லை!


சித்தம் அடக்கிச் சிரித்தெதிர் தாமர்ந்து

புத்தம் புதுமைபல பேசி மகிழ்ந்ததுவும்


கற்றைக் குழல்விரிய கார்மழையில் கால்நனைய

ஒற்றைக் குடைக்குள் உயிர்நனைந்து போனதுவும்!


காலம் பிரித்ததினால் காதல் மிகுந்தோடக்

கோலஞ் சிதைந்தவளைக் கொள்ளும் வழிதேடி


ஏங்கித் தவிக்கின்றேன் ஏதோ புலம்புகின்றேன்

வீங்கி மனங்கிடக்க வெந்து தொலைக்கின்றேன்!


பொட்டழகும் போர்செய்கண் வெட்டழகும் கொங்கையிரு

மொட்டழகும் எட்டழகைப் போலிடைக் கட்டழகும்!


அன்ன நடையழகும் அந்தி உடையழகும்

பின்னல் சடையழகும் கண்டால் படைதுவளும்!


தூது தொடரும்...