'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 13, 2021

தூண்டில்

கவிஞர் இரா. இரத்திசு குமரன்


இந்த முறை தேவையான அளவு அதிக மீன்களைப் பிடித்துக்கொண்டுதான் வீடு திரும்ப வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான் கோதண்டம். மீன் பிடிக்கக் கட்டுவலை, சிறு பை, தூண்டில், மண் புழு, குடிநீர் ஒரு சிறிய பிளாஸ்டிக் பாட்டிலில், மற்றும் கேழ்வரகு அடை சில துண்டுகள் - இவற்றுடன் ஆற்றங்கரைக்குத் தன்  பயணத்தைத் தொடங்கினான்.


இப்பொழுதுதான் உச்சியிலிருந்த சூரியன் மேற்குப் பக்கமாக லேசாக சாயத் தொடங்கியது. வெயில் அவன் உச்சியைப் பதம் பார்த்தது.


"அப்பப்பா... வெயில் இப்படி அடிக்குது..." தனக்குத் தானே பேசிக் கொண்டான்.  இந்தப் பழக்கம் அவனுக்குள் வந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. யாரும் தனக்காகப் பேச இல்லாதபோது தனக்குத்தானே பேசிக் கொள்ளும் பழக்கம் அவனுள் தோன்றியது. அவனைப் புரிந்துகொண்டு அவனுக்காகப் பேசும் ஒரே ஒரு ஜீவன் அவன் மனைவி மட்டும்தான். அவளும் இப்போது இல்லை. தான் வைத்திருந்த பையில் ஒரு துண்டு இருந்தது. எங்காவது கூலி வேலை செய்யும்போது தன் தலையில் கட்டிக் கொள்ளும் பரிவட்டம் அதுதான்.  வெயிலின் தாக்கத்தைத் தாக்குப்பிடிக்க அதைத் தண்ணீரில் நனைத்து எடுத்துப் பரிவட்டத்தைக் கட்டிக்கொண்டான் தனக்குத் தானே. 


சிறுவயது முதலே அவனுக்கு மீன் பிடிக்கச் செல்வதில் ஆர்வம் அதிகமாகவே இருந்தது. சிறுசிறு கூலி வேலைகள் அவனுக்குச் சோறு போட்டது. எனினும் மீன் பிடிக்கும் ஆசைதான் அவன் உணவில் பல நேரங்களில் சுவை சேர்த்தது. வேலை இல்லாத சில நாட்களில் காலையிலேயே எழுந்து மீன்பிடிக்க ஆற்றிற்குச் சென்றுவிடுவான். வீடு திரும்ப நேரம் ஆகும்.  ஒரு சிறிய மண் சட்டியில் பழைய கஞ்சியை ஊற்றிக் கொள்வான். பசி வரும் நேரத்தில் இரண்டு மூன்று கைப்பிடி  அளவு விழுங்கிவிட்டுத் தண்ணீர் குடிப்பான். சிறிதளவு சோற்றுப் பருக்கைகளை வீசி மீன்கள் கூட்டம் தன்பக்கம் வருமாறு ஈர்ப்பான். எந்த இடத்தில் எந்த மாதிரி மீன்கள் இருக்கும் என்று அவனால் மிகச்சரியாக கூறிவிட முடியும். ஆனால் எங்கு எந்த மாதிரியான மனிதர்கள் இருப்பார்கள் என்று அவனுக்குத் தெரியவில்லை. யாருக்குத்தான் தெரியும்? சில தருணங்களில் அவர்கள் மனிதர்கள்தானா என்ற கேள்விகள் அவனுக்குள் எழும். மீனைப் பற்றி நன்கு தெரிந்த அவனுக்குத் தன் இனத்தைப் பற்றிய அறிவு மிகக் குறைவுதான். யார் எங்கு எப்படி இருப்பார்கள் என்று யாருக்குத்தான் தெரியும்?


பள்ளத்தை நோக்கிய நீர்போல் ஆற்றை நோக்கிக் கோதண்டம் வந்தடைந்தான். ஆற்றின் குறுக்கே வலையைக் கட்டிவிட்டு மேலே கரை ஏறும் சமயத்தில் முள் ஒன்றைத் தன் இடது காலில் ஏற்றிக்கொண்டான். 


"இது வேற கொடையுது...". முள்ளைப் பிடுங்கி எறிந்தான். அவன் கவனம் முள்ளின் மீதோ அல்லது அது  ஏற்படுத்திய வலியின் மீதோ செல்லவில்லை. சிறு சிறு விஷயங்களில் அதிக கவனம் செலுத்தினால் அவையெல்லாம் பெரிய ஆலமரம்போல்தான் தெரியும் என்பதை அவன் அனுபவத்தில் உணர்ந்தவன் போலும். அவன் கவனமெல்லாம் அந்தப்பக்கம் கூட்டமாக வந்து மேலே காற்றைச் சுவாசிப்பதுபோல் பாவனை செய்துகொண்டு தொபுக்கென்று தலையை உள்ளே இழுத்துக்கொண்டு தமக்கு முன் செல்லும் மீனைப் பின்தொடரும் ஜிலேபிகளின் மீதுதான்.


"வந்துட்டீங்களா வாங்க வாங்க" விருந்தினர்களை வரவேற்றான்.


மற்ற மீன்களைவிட ஜிலேபி மீன்கள் மீது அவனுக்கு ஒரு உறவு இருந்தது. சிறுவயது சம்பவம்தான் என்றாலும் அவன் மனத்தை அது வெகுவாகப் பாதித்தது. அந்தச் சம்பவத்தின் தாக்கம் ஒரு வினாடி எட்டிப்பார்த்துச் சென்றுவிட்டது. பதினேழு அல்லது பதினெட்டு வயது இருக்கும் அப்போது கோதண்டத்திற்கு. தூண்டிலுடன் அவன் கரையில் கவனம் தக்கையில். தண்ணீர் நல்ல தெளிவாகத் தெரியும் இடத்தில் இரண்டு ஜிலேபி மீன்கள் இணையாக நீந்திக் கொண்டிருந்தன இங்குமங்குமாய்ச் சென்றுகொண்டு வட்டம் அடித்தபடி. உடனே தன் தூண்டிலை அவ்விடத்தில் இலகுவாக இறக்கிவிட்டான். எங்கோ சென்று விட்டன அந்த ஜோடி மீன்கள். இருப்பினும் காத்திருந்தான் மீண்டும் திரும்பும் என்று அவன் யூகித்து இருந்தான். ஆம், அவை வந்தன இணையாகவே. அவற்றில் ஒன்றுமட்டும் தூண்டில் புழுவை விழுங்கி மாட்டிக்கொண்டது. வலி உணர்வை அந்த மீன் நீருக்கு மேலே வந்துதான் உணர்ந்து இருக்கும்; அவ்வளவு விரைவாகத் தன் தூண்டிலை உயர்த்தித் தன் கைக்கு அந்த மீனைக் கொண்டு வந்தான். தன் பைக்குள் அந்த மீனைப் போட்டுக்கொண்டு புழுவை சரி செய்துவிட்டு மீண்டும் அவ்விடத்தைப் பார்த்தால் இந்த முறை ஒரு மீன்மட்டும் அந்த இடத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது. நிச்சயம் அது தன் துணையைத் தேடி அலைந்தது. அவன் மனம் ஏதோ ஒரு வலியை உணர்ந்தது. சில நேரங்களில் "ச்சே... தப்புப் பண்ணிட்டேன்" என்று தன் செயலினை விமர்சித்துக் கொள்வான்.


இப்போது தூண்டிலை வீசினான். தூண்டில் தக்கையின் ஒருமுனை நீருக்குள்ளும் மறுமுனை மேலேயும் நடனமாடத் தொடங்கியது. அவன் கண்கள் உற்றுநோக்கும் தவத்தை மேற்கொண்டிருந்தன.  தவத்தின் பலனைக் காண ஆரம்பித்தான். தக்கை முழுமையும் உள்ளே சென்றது. ஏனோ இந்த முறை தூண்டிலை மெதுவாக வெளியே இழுத்தான். ஒரு சிறிய ஜிலேபி மீன் தூண்டிலில் புழுவின் முனையை அப்படியே விழுங்கிய நிலையில் தொங்கிக் கொண்டிருந்தது.


"ஓ… நீதானா? ஏதோ பெரிய மீனோனு நினைச்சேன்" வரவேற்றுக்கொண்டு தூண்டிலில் இருந்து அதை மெதுவாக விடுவித்தான். "நல்ல பெருசா வளர்ந்து வா.. அப்புறம் பிடிச்சுக்கறேன்". சிறு மீன்களின்மீது அவனுக்கு நாட்டம் இல்லை. அதற்குக் காரணம் அவனும் இல்லை. தன் கை கட்டைவிரல் அளவே இருந்த அந்த ஜிலேபி மீனைத் தண்ணீரில் மெதுவாக விட்டான். தன்னைப் பிடிக்க வருபவரிடம் இருந்து தப்பிக்க  நான்கு வயது சிறுவன் சர்ரென ஓடுவதுபோல் இருந்தது அந்த மீனின் ஓட்டம். 


சிறுவயதில் தன் தட்டில் இருந்து ஒரு சிறு மீனை விளையாட்டுத்தனமாய் எடுத்துக்கொண்டு தாயின் மடியில் தொப்பென்று விழுந்த தன் மகனின் நினைவு அவனுக்கு வந்தது.          ஹா ஹா என சிரித்துக்கொண்டே அதை வாயில் போட்டுக்கொண்டதுதான் தாமதம். ஆ... வென கத்த முயன்றான் சிறுவன். முடியவில்லை. மீன் முள் தொண்டையில் மாட்டிக்கொண்டு தவித்தான். மரகதம் பிள்ளையின்  வாயில் விரல்விட்டுத் துழாவினாள். பலன் இல்லை. வெறும் சோற்றுப் பருக்கை சிறிய உருண்டை என உருட்டி அவன் வாயில் திணித்து விழுங்க வைத்தாள். இப்போது பரவாயில்லை என்பதுபோல் குழந்தை உணர்ந்தாலும் இரவு தூக்கம் வரும் வரையிலும் அழுகை ஓய்ந்தபாடில்லை. முள்ளோடு மீனைப் பையனுக்கு கொடுக்காதே என்று எவ்வளவு முறை சொல்லுறது என்பதுபோல் மரகதம் கோதண்டத்தை முறைத்தாள். குழந்தைதான் அவனே எடுத்துக்கிட்டான் என்று கோதண்டத்துக்கு விளக்கம் கொடுக்கவும் தோன்றவில்லை. தன் கணவனை யாருக்கும் முன் விட்டுக் கொடுக்காமல்தான் இருந்தாள் எனினும் அவள் இறுதியாகக் கண்மூடும் வரையில் தன் மகனுக்காகப் பரிந்து பேசுவதை இயல்பாக கொண்டிருந்தாள். அதுநாள் முதல் ஒவ்வொரு முறையும் மீன் குழம்பு வைக்கும்போது முள்ளை  அகற்றிவிட்டுச் சதையை மட்டும் தனியாக எடுத்துக் கொடுப்பான் தன் பிள்ளைக்கு. இப்போது அப்படியில்லை . "அப்பா எனக்கு... எனக்கு..." என்று தன் அப்பாவோடு சேர்ந்து சாப்பிட்டு விளையாடிக் கொண்டிருந்த அவன் இன்று காலை கேட்ட கேள்வி கோதண்டத்தின் காதுகளில் இன்னும் அடித்துக் கொண்டே இருக்கிறது.


"எனக்காக என்ன செஞ்ச?" காலையில் நடந்தது மனதில் ஓடியது.


"இருக்கிறதே கால் காணி அதையும் விட்டுச் சும்மா கிடக்கிறதா?" சலிப்புக் கலந்த கோபத்துடன் கோதண்டம் கேட்டான்.


"நான் என்ன வித்து வீண்செலவு பண்ணவா கேட்கிறேன்? பிசினஸ் பண்ணத்தானே கேட்கிறேன். எனக்குக் கல்யாணத்துக்கு ஆன செலவுகூட நான் சம்பாதிச்சது தானே. எனக்கு இன்னும் என்ன செஞ்சுட்ட நீ?" மகனின் வாக்குவாதம் தொடங்கியது.


"உன்ன காலேஜ் வரைக்கும் படிக்க வச்சேன். அதுக்கு எல்லாம் காசு எப்படி வந்துச்சு. பாதி நான் கூலி செஞ்சு சம்பாதிச்சதுனா மீதி அந்த நிலத்துல வெளஞ்சது. இப்ப அத விக்க நெனச்சா எப்படி?" 


தன் மகனால் எப்படி இதுமாதிரி பேச முடிகிறது என எண்ணினான்.


 "இப்போ என்ன பெருசா அதுல வெளைஞ்சி கிடைக்குது?" தன் வாதத்தை நியாயப்படுத்தும் விதமாகத் தன் தந்தையிடம் கேள்வி கேட்டான். தன் தகப்பனின் தூண்டிலில் தான் மாட்டிக் கொண்டு ஏதும் செய்ய முடியாமல் இருப்பதாக மகன் நினைத்தான்.


"சும்மா கருப்பா இருந்தாலும் பரவாயில்லை அது அப்படியே இருக்கட்டும்." அருகில் நின்று கொண்டிருந்த தன் மருமகளைப் பார்த்துக்கொண்டே கோதண்டம் பேசினான்.


அவன் அதை நினைத்துக்கொண்டிருந்த வேளையில் தூண்டில் தக்கை மெதுவாக உள்ளே சென்றது. சட்டெனத் தூண்டில் மேலே எடுத்துப் பார்த்தான். ஒரு பெரிய மீன் தண்ணீர் மேற்பரப்புவரை வந்து உள்ளேயே விழுந்துவிட்டது. அந்தப் பெரிய மீன் தப்பித்துவிட்டது. சில மணி நேரங்கள் கடந்தன. சூரியன் மறைந்துவிட்டான். இருள் அதிகமாகப் படரத்தொடங்கியது. தூண்டில் நரம்பை இழுத்துக் கட்டிக்கொண்டு, பிடித்த மீன்களைப் பத்திரமாகத் தரையின் மேற்பகுதியில் வைத்துவிட்டு ஆற்றின் குறுக்கே கட்டி இருக்கும் வலையை எடுத்து ஆராய்ந்தான். தூண்டிலில் மாட்டியவற்றைவிட வலையில் அகப்பட்டவை  குறைந்தவைதான் எனினும் இரண்டையும் சேர்த்தால் குழம்புக்கு ஆகும். தன் துணிகளை எடுத்துக்கொண்டு வீடு வந்தான் கோதண்டம்.


மீன்களைச் சுத்தம் செய்ய வீட்டின் பின்புறம் உள்ள பலகைக் கல்லின்மீது கொட்டி அவற்றின்மீது சாம்பல் போட்டான். மீன்களிலும் தன் கைகளிலும் இருந்த வழவழப்புத் தன்மை போனது. எவ்வளவுதான் மகனின் வாழ்க்கைக்குத் தன் உழைப்பைப் போட்டாலும் இருவருக்கும் இடையில் உள்ள வழவழப்பைப் போக்க முடியவில்லையென வருந்தினான்.


"என்ன செஞ்சிட்ட எனக்குன்னு கேட்கிறான். நன்றி கெட்ட பையன் நன்றி கெட்ட பையன்." ஒரு பெரிய மீனின் செதில்களை உரசித் தேய்த்துச் செவுள்களை உடைத்து எறிந்தான்.


"எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுச் சாப்பாடு போட்டு இருப்பேன், படிக்க வச்சிருப்பேன்." வயிற்றைக் கிழித்து அதில் இருந்த அழுக்கு மற்றும் குடலை அப்புறப்படுத்தினான்.


"ஏதோ என் பொழப்புள அவ்வளவுதான் முடிஞ்சது. அவன் பொழப்பு அவன் கையிலதான். நான் என்ன பண்ணப் போறேன்? தத்துவமாக சலித்துக் கொண்டான். மீனின் இறக்கை, வாலைத் துண்டித்துச் சுத்தமான நீரில் மீனோடு கையைச் சேர்த்துக் கழுவினான்.


பிடித்து வந்த அத்தனை மீன்களையும் சுத்தம் செய்து பாத்திரத்தில் போட்டு  அடுப்புப் பக்கத்தில் வைத்துவிட்டு வெளியே நடமாடினான். ஒன்று கூடி ஊர்க்கதைகள் பேசும் இடத்தில் ஒரு மவுனியாக அமர்ந்துவிட்டுத் திரும்பவும் வீட்டிற்குச் சென்றான் சிறிது நேரம் கழித்து. பாதித்                தலைகளோடு ஒரு பக்க உடம்பை மட்டும் காட்டிக்கொண்டு குழம்பு சட்டியில் விருந்தாக மாறி இருந்தனர் கோதண்டத்தின் விருந்தாளிகளான மீன்கள்.


"அவன் சாப்பிட்டானாம்மா?" தன் மருமகளைப் பார்த்துக் கேட்டான் கோதண்டம்.


"இல்ல அவரு சாப்பாடு வேண்டாமுன்னு சொல்லிட்டாரு." பதிலைக் கூறிவிட்டுத் தன் கணவன் இருந்த அறைக்குச் சென்று கதவைத் தடாலெனச் சத்தத்துடன் சாத்திக்கொண்டாள்.


தனக்குத்தானே தூண்டில் போட்டுக்கொண்டு மேலும் கஷ்டத்தில் மாட்டிக்கொள்வானோ  தன் பிள்ளை என நினைத்தான் தகப்பனாகிய கோதண்டம். சில நேரங்களில் தூண்டில் புழுவாய் மாறிவிடும் அப்பன் பிள்ளை உறவை நினைத்துப் பெருமூச்சுவிட்டான் கோதண்டம்.


திருமுருகாற்றுப்படை

 உரையாடல் - பகுதி - 9


பைந்தமிழ்ச் செம்மல் தமிழகழ்வன் 


புலவர்: எப்படியெல்லாம் முருகப் பெருமானைப் பாடி வணங்கலாம்?

நக்கீரர்: எங்கெல்லாம் திருமுருகப் பெருமானைக் காணும் நற்பேறு பெறுகிறாயோ அங்கெல்லாம், முகம் மலர்ந்து திருமுருகப்பெருமானை விரும்பி நோக்கி, வாயால் வாழ்த்திக் கைகளைத் தலைமீது குவித்து வணங்கி அவர்தம் திருவடிகளில் தலை பொருந்தும்படி விழுந்து வணங்கிப் போற்றிப் பாடுவாயாக!

எவ்வாறெல்லாம் வாழ்த்தலாம் என்றால்,

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய தீப்பொறிகளை வானம், காற்று, தீ, நீர், நிலம் ஆகிய ஐவருள் ஒருவரான தீயானவர், தன் அழகிய கையிலே தாங்கிக் கொண்டு வந்து நெடிய பெரிய இமய மலையின் உச்சியில் 'சரவணம்' எனப்படும் தருப்பை வளர்ந்த பசுமையான சுனையில் இடவும், கார்த்திகைப் பெண்டிர் அறுவரால் பாலூட்டப் பெற்று வளர்ந்த ஆறு திருமுகங்களையுடைய பெருமானே! 


கல்லால மரத்தின் கீழ் எழுந்தருளிய சிவபெருமானின் புதல்வரே! 


இமயவான் மகளான பார்வதி தேவியாரின் மைந்தரே! 


தீயோராகிய பகைவர்களுக்கு யமன் போன்றவரே!


வெற்றியை உடைய வெல்லும் போர்த் தெய்வமான கொற்றவையின் மைந்தரே!


அணிகலன்களை அணிந்த தலைமைத்துவம் உடைய காடுகிழாளின் குழந்தையே!


வானவர்களாகிய தேவர்களின் விற்படைகளுக்குத் தலைவரே! 


கடம்பு மலர்களாலாகிய மாலையினை அணிந்த மார்பினை உடையவரே!


அனைத்து மெய்யான நூல்களின் உண்மையான பொருளை அறியும் புலமை உடையவரே!


போர்த்தொழிலில் ஒப்பற்றவரே! உலகமெலாம் அழியும் காலத்திலும் தீயோரை எதிர்த்துப் போரிடுவதற்கென்று எஞ்சி நிற்கும் ஒரே கடவுளே!


அந்தணர்க்குச் செல்வமாக விளங்குபவரே!


புலமையுடைவர்கள் புகழ்ந்து கூறும் சொற் கூட்டமாய் விளங்குபவரே!


தெய்வயானை, வள்ளி அம்மையார் ஆகிய மங்கையரின் கணவரே! 


வலிமை உடைய வீரர்களுக்குள் அரியேறு போன்றவரே!


ஞான சத்தியாகிய வேலினைப் பெற்று விளங்கும் பெருமை பொருந்திய கையினை உடைய செல்வரே!


கிரௌஞ்ச மலையில் ஒளிந்திருந்த சூரபன்மனை அழித்து வென்ற குறையில்லாத வெற்றியையும் பெருமையையும் உடையவரே!


வானத்தைத் தொடும் குறிஞ்சி நிலத்திற்கு உரிமை உடைய தலைவரே!


உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் நூல் இயற்றும் புலவர்களுக்கெல்லாம் தலைவரே!


மூத்த பரம்பரையினையும் சிறந்த புகழினையும் உடையவராக என்றென்றும் இளைஞனாகவும் அழகனாகவும் திகழ்வதால் முருகன் என்னும் திருப்பெயரை உடையவரே!


விரும்பிச் செல்கின்றவர் வேண்டும் எல்லாவற்றையும் தந்தருளும் கொடை வள்ளலே!


பொருள் இல்லாது துன்புறுவோர்களுக்குத் தர வேண்டியே பொன்னால் ஆகிய அணிகளை அணிந்துள்ளவரே!


பரிசில் பெற வருகின்ற அனைவரையும் தழுவித் தாங்கிக் காத்து அருள்பவரே!


அசுரன் சூரபன்மனையும் அவன் தன் சுற்றத்தினரையும் அழித்து வென்ற காரணத்தால் 'மதவலி' என்னும் பெயரை உடையவரே!


மிகச்சிறப்பாகப் போரிடும் இளமை பொருந்திய வீரரே!


உண்மையான தலைவரே!

இவ்வாறு திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குதலில் யான் அறிந்த அளவு கூறுகிறேன். இறைவனின் தன்மை அனைத்தையும் அளவிட்டறிதல் இயலாது. நீயும் அறிந்தவா றெல்லாம் திருமுருகப் பெருமானைப் போற்றி வணங்குவாயாக!

புலவர்: நன்றி ஐயனே! நற்பேறுடையேன்! ஒப்பில்லாத மெய்யறிவை உடைய பெருமானே! நின் திருவடிகளை அடைய எண்ணி வந்தேன் என்றும் உரைப்பேன் ஐயனே!

நக்கீரர்: நன்று. நன்று. அவ்வாறு உரைத்து நீர் எண்ணிய பரிசிலைப் பற்றிக் குறிப்பிடுவதற்கு முன்பே அவருடைய ஏவலாளர்கள், திருவிழா நிகழும் களத்தில் தோன்றுவது போலப் பொலிவுடன் தோன்றித், திருமுருகப்பெருமானை நோக்கி என்ன உரைப்பார்கள் தெரியுமோ?

புலவர்: அவர்கள் யாது உரைப்பர் ஐயனே?

நக்கீரர்: 'பெருமானே, அறிவு முதிர்ந்த சொற்களையுடைய இந்த இரவலன் இரங்கத்தக்கவன்; நின் அருளுக்குரியவன்; நின்னுடைய புகழை விரும்பி வந்துள்ளான்' என்று இனிய உறுதி பயக்கும் சொற்களைக் கூறி நிற்பார்கள்.

அப்போது தெய்வத்தன்மையும் வலிமையும் பொருந்திய வானத்தைத் தொடும் வடிவுடைய திருமுருகப்பெருமான் நின்முன்னே எழுந்தருள்வான். ஆயினும் காண்பவர்களுக்கு அச்சத்தைத் தரும் தெய்வ வடிவினை உள்ளடக்கிக் கொண்டு முந்தைய மணம் கமழும் தெய்வத்தன்மை உடைய இளமை பொருந்திய வடிவினைக் காட்டி, 'நீ அஞ்ச வேண்டா; உன்னைக் காத்தருள்வேன்; நின்வருகையை யான் முன்னரே அறிவேன்' என்று அன்புகூர்ந்த சொற்களைக் கூறி அருள்வான்.

மேலும் இருண்ட கடலால் சூழப்பட்ட இப் பெரிய உலகத்தில் தனிப்பெருமை வாய்ந்த ஒருவனாக நீ விளங்குமாறு மற்றவர்களும் பெறுவதற்கு அரிய பரிசிலைத் தந்தருள்வான்.

புலவர்: அருமை. நன்றி ஐயனே! திருமுருகப் பெருமானைக் காணும் ஆவலோடு செல்கிறேன்.

நக்கீரர்: இன்னுமோர் அழகிய இடத்தில்  திருமுருகப்பெருமானைக் காண்பீராக!

புலவர்: அஃது எவ்விடம் ஐயனே?

நக்கீரர்: பல சிறு ஊற்றுகள் இணைந்து வெவ்வேறான துகிலால் ஆகிய பல கொடிகளைப் போன்று மலை உச்சியிலிருந்து அசைந்து அருவியாக வரும். அஃது, அகிற்கட்டையைச் சுமந்து கொண்டு வரும். பெரிய சந்தன மரத்தைச் சாய்த்துத் தள்ளும். சிறு மூங்கிலின் மலர் பொருந்திய கொம்பு தனிப்பட வேரைப் பிளந்துகொண்டு வரும்.

புலவர்: அடடா! அஃது வளப்பமுடைய அருவியாயிருக்கும் எனத் தோன்றுகிறதே.

நக்கீரர்: ஆம். அதனால் என்னவெல்லாம் நிகழும் தெரியுமா? 

வானத்தைத் தொடுவது போன்ற நெடிய மலை மீது கதிரவனைப் போல் சிவந்து தோன்றி ஈக்கள் மொய்க்கின்ற குளிர்ச்சியும் மணமும் பொருந்திய தேன் கூடு சிதைவுறும்.

பலாப்பழத்தின் பல முற்றிய சுளைகள் அருவியில் விழுந்து கலக்கும்.

மலையின் உச்சியில் உள்ள சுரபுன்னை மரத்தின் பூக்கள் உதிரும். 

கருங்குரங்குடன், கரியமுகத்தை உடைய பெண் குரங்குகளும் குளிரால் நடுங்கும்.

நெற்றியில் புள்ளிகளை உடைய 'பிடி' எனப்படும் பெண் யானையும் மிகுதியான குளிர்ச்சியை உணரும். 

பெரிய யானையின் முத்தினை ஒத்த கொம்புகளையும், நல்ல பொன், மணிகள் ஆகியவற்றையும், பொடி வடிவத்தில் உடைய பொன்னையும் கொண்டு சேர்க்கும். 

வாழை மரத்தின் அடிப்பாகம் ஒடிந்து விழும். 

தென்னையின் இளநீர்க் குலைகள் உதிரும். 

மிளகின் கரிய கொத்துகள் விழுந்து சாயும். 

அழகான இறகைப் புறத்தேயுடையதும்  இளமையுடன் கூடிய நடையையும் உடைய பல மயில்கள் அச்சமுறும். 

வலிமையுடைய பெண் கோழிகளும் அஞ்சி ஓடும். 

ஆண் பன்றியும், கரிய பனையின் புல்லிய செறும்பைப் போன்ற கரிய மயிரை உடைய உடலையும் வளைந்த அடியினையும் உடைய கரடியும் பெரிய கற்குகைக்குள் சென்று சேரும். 

கரிய கொம்பினையுடைய காட்டுப் பசுவின் நல் எருது அச்சத்தால் கதறும்.

இத்தகு விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தும்.

அவ்வாறு மலையின் உச்சியிலிருந்து 'இழும்' என்னும் ஓசையுடன் குதித்து விழும் அருவியினையும் முற்றிய பழங்களையும் உடைய சோலைகளைப் பெற்று விளங்கும் குறிஞ்சி நிலமாகிய பழமுதிர்சோலைக்கு உரிமை உடையவர் திருமுருகப்பெருமான்.

புலவர்: நன்றி ஐயனே! தாங்கள் என்னைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய விதம் என்னுள் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போதே திருமுருகப் பெருமானைக் காணச் செல்கிறேன்.

நக்கீரர்: நன்று. நன்று. திருமுருகப் பெருமானின் திருவருளால் நற்பேறு பெறுக. வாழிய நலம்.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்   புலவர் ஒருவரைத் திருமுருகப் பெருமானிடத்தில் ஆற்றுப்படுத்திய 'திருமுருகாற்றுப்படை உரையாடல்' நிறைவுற்றது.

எடுத்தாண்ட நூல்கள்:

1. திருமுருகாற்றுப்படை உரை - பேராசிரியர் சிங்காரவேலு சச்சிதானந்தம் (மலேசியா) (http://www.kaumaram.com/)

2. திருமுருகாற்றுப்படை விளக்கம் - கி.வா.ஜெகந்நாதன் அவர்கள்


நடுப்பக்க நயம்

 கம்பனைப் போலொரு…

பகுதி – 11


மரபு மாமணி பாவலர் மா.வரதராசன்


கம்பருக்கு முன்னரே நம் சங்க இலக்கியங்களிலும், சங்கமருவிய சிலப்பதிகாரத்திலும், பழமொழி நானூறு போன்ற பிற இலக்கியங்களிலும், எல்லாவற்றுக்கும் மேலாக பக்தி இலக்கியக் காலமான 6-8ஆம் நூற்றாண்டு இலக்கியங்களிலும் இராமாயணச் செய்திகள் மிகப்பரவலாகப் பேசப்பட்டுள்ளன. இவற்றில் ஒரு சிறப்பென்ன வெனில், இவற்றில் "இராமனைக் கடவுளாகவே" காட்டப்பட்டுள்ளன.


புறநானூற்றில் 378 ஆம் பாடல்... ஊண்பொதிப் பசுங்குடையார், சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியைப் பற்றிப் பாடிய பாடல்.


அரசன் அளித்த பெருஞ்செல்வத்தையும், பொன்னகைகளையும் பெற்ற புலவரின் குடும்பத்தார் அந்த நகைகளை எப்படி எங்கெங்கு அணிய வேண்டும் என்றறியாமல், விரலில் அணிய வேண்டியவற்றைச் செவியிலும், செவியில் அணிய வேண்டியவற்றை விரலிலும், இவ்வாறே அனைத்து நகைகளையும் இடம்மாற்றி அணிந்து மயங்கினர். இக்காட்சி... “சீதையை இராவணன் கவர்ந்து செல்கையில் இராமனுக்காக அடையாளத்திற் காகச் சீதை அவிழ்த்தெறிந்த நகைகளைச் செம்முகக் குரங்குகள் மாற்றி மாற்றி அணிந்ததைப் போலிருந்தது" என்று சோழனின் வள்ளண்மையைக் கூறுவார்.


தென்பரதவர் மிடல்சாய

. . . . .

. . . . .

இனிதுபெற் றிகுமே...

(புறம். 378) என்கிறது அந்தப் பாடல்.

***


அகநானூறு 70ஆம் பாடல். மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் பாடியது.


"இராமன் தன் படைவீரர்களுடன் போர் பற்றிய வியூகத்தின்போது இரைச்சலிட்ட பறவைகள் ஒரு சேர அமைதியாயின போல், தலைவன் உன்னை வரைவு முடித்த பின் இப்போதுள்ள அலர் நீங்கும்" என்று தோழி கூறுவதாய் அமையும் பாடல்...


கொடுநிமிர் பரதவர் வேட்டம் வாய்த்தென

. . . . . 

. . . . . அழுங்க லூரே!

(அகம் 70.

***


கலித்தொகையில் கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடல்.


இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்

உமையமர்ந் துயர்மலை இருந்தனனாக

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல...

(கலி. குறி.38)


இப்பாடலில் இராவணன் சிவபெருமானின் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போன செய்தி இடம்பெற்றுள்ளது.

****


முன்றுரையரையனாரின் பழமொழி நானூறு 92ஆம் பாடல்.

பொலந்தார் இராமன் துணையாகத் தான்போந்(து)

இலங்கைக் கிழவற்(கு) இளையான்-இலங்கைக்கே

போந்(து)இறையாயதூஉம் பெற்றான்பெரியாரைச்

சார்ந்து கெழீஇயிலார் இல்.


இலங்கை அரசன் இராவணனின் தம்பி வீடணன். இராமனுக்குத் துணையாகப் போந்த வீடணன் இலங்கைக்கே அரசன் ஆனான். ஆதலால் பெரியாரைச் சார்ந்தவர் பெருமை பெறாமல் போனதில்லை.

***


சிலப்பதிகாரத்தில் இராமாயணச் செய்தி: 

ஊர்காண் காதையில் வருகின்ற ஒரு காட்சி. தன்னூரை விட்டுக் கண்ணகி மற்றும் கவுந்தியடிகளுடன் மதுரை நோக்கிச் செல்லும் போது மனம் வருந்தும் கோவலனைத் தேற்றும் கவுந்தியடிகள்...

"தாதை யேவலின் மாதுடன் போகிக்

காதலி நீங்கக் கடுந்துயர் உழந்தோன்

வேத முதலோன் பயந்தோன் என்பது

நீயறிந் திலையோ? நெடுமொழி யன்றோ?" 

(சில. ஊர். 46-49)

என்று கேட்கும் கவுந்தியின் பேச்சில் இன்னொரு உண்மை தொக்கி நிற்பதைக் காணலாம்.

அது... 

"இராமாயணம் சிலப்பதிகாரத்திற்கு முன் நெடுங்காலத்திற்கு முன்பே யாவரும் அறிந்த கதை" என்பதாம்.


இன்னுமோர் இடத்தில் இராம இலக்குவன் சீதையுடன் காடு சென்ற காட்சியைக் காட்டுவார் இளங்கோ... அது ஆய்ச்சியர் குரவையில் 35 ஆம் பாடலாக வருகிறது. 


மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்

தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து

சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த

சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே

திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!

(சில. ஆய். 35)

என்று கூறும் இளங்கோ இராமனைத் திருமாலாகக் காட்டுவதையும் நோக்குக.

****


இவை போக...

உருகியுருகிப் பக்திச்சுவை சொட்டச் சொட்டப் பாடப்பட்ட ஆழ்வார் பாசுரங்களில் பலவாறாக இராமாயணச் செய்திகள் பேசப்பட்டுள்ளன. அவற்றைத் தேடிக் காண்க. மேலும் சில நாயன்மார் பாடல்களிலும்கூட இராமாயணச் செய்திகள் உள்ளன.


எனவே... கம்பருக்கு முன் 900 ஆண்டுகளுக்கு முன்பே இராமன் கடவுளாக்கப்பட்டுவிட்டதால் தன் காப்பியத் தலைவனைக் கம்பரும் கடவுளாகக் காட்ட வேண்டியதாயிற்று என்பதாலேயே இராமனைக் கடவுளாகக் காட்டினார். அவ்வாறின்றி மாற்றி எழுதியிருப்பாரேயானால் கம்பனுக்குப் புகழும் கிடைத்திருக்காது... இவர்கள் கம்பனை இகழவும் வாய்ப்பில்லாது போயிருக்கும். (எப்படியோ நமக்கு அருமையான பைந்தமிழ்ப் பனுவல் ஒன்று கிடைத்தது).


சங்க இலக்கியக் காலத்திற்குப் பின் பௌத்தம், சமண சமயங்கள் வளர்ச்சி பெறத்தொடங்கி வலுப்பெற்றிருந்தன. அவை பல்லவர் ஆட்சிக் காலத்தில் தம் செல்வாக்கை இழக்கத் தொடங்க, சைவமும், வைணவமும் செழிக்கலாயின. அக்காலத்தில் எழுந்த சமய இலக்கியங்கள் சிவனையும், திருமாலையும் பரவலாக்கின. ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைமையை இலக்கியங்களின் வழியே வளர்த்தனர். அக் கால நீட்சியில்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பர் தன் காப்பியத்தைப் படைக்கிறார்.


முன்பே குறிப்பிட்டதைப்போல், ஒரு இலக்கியம் என்பது அவ்விலக்கியம் எழுந்த காலத்தின் கண்ணாடியாகும். எனவே கம்பர் காலத்தில் நிலைத்த செல்வாக்கு பெற்ற வைணவமும், இராமனும் அவருடைய காப்பியத்தில் கருப்பொருளானமைக்கும், இறைமையைப் போற்றியமைக்கும் வேறெந்தக் காரணமும் தேவையில்லை என்றுணர்க.


மாறாகக்... கம்பனை எதிர்க்கிறோம், கம்ப ராமாயணத்தை எரிக்கிறோம் என்று பரப்புரை செய்ததால்தான், படித்த புலவர்களிடத்தே மட்டும் உலவிக் கொண்டிருந்த கம்பராமாயணத்தை அனைவருக்கும் கொண்டு சேர்த்த 'பெருமை' பெரியாருக்கும், அவர்தம் தொண்டர்கட்குமே சேரும்.


எந்தவொரு செயலையும் "செய்யாதே" என்றால்தான் அச்செயலில் நம்மை யறியாமல் நம்மனம் ஆர்வங் காட்டும். இது மாந்தரியல்பு. இவ்வியல்பின் காரணத்தாலேயே இவர்கள் 'படிக்காதே... படிக்காதே' என்று கம்ப ராமாயணத்தை எதிர்த்ததால்தான் கம்ப ராமாயணத்தின் புகழ் மிக்கோங்கியது என்பதே உண்மை.


அடுத்த பகுதியில் இவர்கள் கம்பராமாயணத்தை எதிர்க்கும் காரணங்களில் அடுத்த காரணத்தைப் பார்ப்போம்.


...தொடரும்...


மயானம்

 பைந்தமிழ்ச் சுடர் மெய்யன் நடராஜ்


வரவேற்க ஆளில்லா வாச லென்றும்

    வழிகாட்ட யாருமில்லா வனந்தா னென்றும்

தரமற்ற தானவிடந் தானஃ தென்றும்

    தனியாகச் செலவியலா தென்றும்  கூறி

வரமாட்டே னெனச்சொல்ல வியலா தந்த

    வனந்தேடிச் செலவேதான் வந்தோ மிங்கே

வரமாகக் கேளாமல் வாய்க்கு மிந்த

    வாசலிலே தானெவர்க்கும் வாழ்வின் முற்று


இற்றைத் திங்கள் இவரைப் பற்றி


 பைந்தமிழ்ச் செம்மல் கவிஞர் விவேக்பாரதி


கட்டுரையாக்கம்: 

பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்


கன்னல் மொழியாம் கன்னித் தமிழைக்

    காதல் செய்பவன்!

கண்ணில் பட்ட காட்சி யெல்லாம்

     கவியாய் நெய்பவன்!

மின்னல் வேகத் தோடு யாக்கும்

      மேன்மை  பெற்றவன்!

 மீசைக் காரப் புலவன் பாட்டை

     விரும்பிச் சுவைப்பவன்!

அன்னை சக்தி தாள்வணங்கி    

    அகங்கு ளிர்பவன் !

அன்பி லுருகிப் பாட்டுப் பாடி

    அமைதி பெறுபவன்!

தென்றல் போலும் சோலை தன்னில்

      தேனைப் பொழிபவன்!

 செல்வம் யாவும் பெற்று வாழச்

      சேர்ந்து வாழ்த்துவோம் !!


இற்றைத் திங்கள் தமிழ்க்குதிரை அலங்கரிப்பவர் கவிஞர் விவேக்பாரதி அவர்கள்!


வைகை நதி பாயும் கோயில் நகரமாம் மதுரையில் 1998-ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 22-ஆம் நாள் பிறந்தவர். காவிரி பாயும் மலைக்கோட்டை மாநகராம் திருச்சியில் வளர்ந்தவர். இவரது பெற்றோர்  திரு. ஸ்ரீனிவாசன் - திருமதி. ஜானகி. உடன்பிறந்த தம்பி ஸ்ரீவத்ஸ்.

 

இளம் வயதில் மகாகவி பாரதியாரின் கவிதைகள் படித்த தாக்கத்தால் கவிதை எழுதத் தொடங்கியவர். 13 வயதிலிருந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பவர். 15 வயதிலிருந்து பைந்தமிழ் மரபு கவிதைகளை எழுதி வருபவர்.


திருச்சி எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளியில் பயின்றவர்.  சென்னை து.கோ. வைணவக் கல்லூரியில் பட்டப் படிப்பைத் தொடர்ந்தவர். கல்கி வார இதழில் பணி புரிந்தவர். தினமலர் (திருச்சிப் பதிப்பு) நிருபராகப்  பணி செய்பவர். மகாகவி பாரதியாரின் மீது கொண்ட பற்றின் காரணமாகத் தன் பெயருக்குப் பின்னடையாக அவர் பெயரைச் சேர்த்துக் கொண்டவர். பாரதி பக்தனான இவர் மாகாளியின் செல்லப்பிள்ளை.


நினைத்த மாத்திரத்தில் அருவியாய்க் கொட்டும் கவிஞானம் பெற்றவர். மரபு கவிதைகளில் மனமொன்ற எல்லா வகைமைகளிலும் திறம்படப் பாடும் வல்லமை படைத்தவர். இந்த இளங்காளைக்குப் பராசக்தி மேல் தீராக் காதல்!  கொஞ்சுதமிழ்ச் சொற்களால் சந்தங்கள் துள்ளிவர இவர் பாடும் அழகில் அம்பிகையே சொக்கிவிடுவாள். 


சந்தவசந்தம், பைந்தமிழ்ச்சோலையில் மரபு பயின்றவர். மரபு மாமணி பாவலர் மா.வரதராசனாரின் மனங்கவர்ந்த மாணவர். குரு காணிக்கையாய் 2017-ல் "பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை" என்ற நூலைப் படைத்துள்ளார். எல்லோருக்கும் செல்லப்பிள்ளை. பெரியோர்களின் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தொடர்ந்து பெறுபவர். பணிவு மிக்கவர். பண்பிற் சிறந்தவர். 


“தேசமும் தெய்வமும் ஒன்று” என்ற மகாகவி பாரதியாரின் கருத்துகளை ஆழமாக நம்பிச், செயலாக்கி வருபவர். காட்சித் தொடர்பியல் (Visual 

Communication) பட்டதாரி, இதழியலாளர். 


❖ முதல் சிறகு (2016) 

❖ பாவலர் மா.வரதராசன் பன்மணி மாலை (2017) 

❖ ககனத்துளி (2018) 

❖ பேசுபொருள் நீயெனக்கு (2018) 

❖ சுதந்திர தேவி (2018) 

❖ காலமா வனத்தில் (2020) 

என்ற ஆறு நூல்களின் ஆசிரியர்.


தமிழக அரசின் மாநில அளவு கவிதைப் போட்டியில் மூன்றாம் பரிசு வென்றவர். எண்ணற்ற கவியரங்கங்களில் கலந்து கொண்டவர். பல கவியரங்கங்களுக்குத் தலைமை தாங்கியவர். இலக்கிய விழாக்கள், நூல் வெளியீடு போன்ற நிகழ்ச்சிகளை வெகுசிறப்பாகத் தொகுத்து வழங்கி வருபவர். “பாரதி யார்?” என்ற நாடகம் மூலம் 50 மேடைகளைக் கண்டவர்.

இயல், இசை, நாடகம் என முத்தமிழும் அரவணைக்கத், தமிழ்வானில் நம்பிக்கை நட்சத்திரமாய் வளைய வருபவர்.


துபாய் தமிழ்ச்சங்கம் உட்பட பல அமைப்புகளிலிருந்து, 

⭐ வித்தக இளங்கவி பட்டம் (2015) 

⭐ கவியருவி

⭐ தமிழன்பன் - 80 விருது (2015) 

⭐ பைந்மிழ்ப் பாமணி பட்டம் (2016) 

⭐ பைந்தமிழ்ச் செம்மல் பட்டம் (2017) 

⭐ ஆசுகவி பட்டம் (2017) 

⭐ பைந்தமிழ்க் குருத்து விருது (2018) 

⭐ மரபு ஆளுனர் விருது 

      (தொன்மைத் தமிழ்ச் சங்கம்) 

⭐ விரைகவி வேந்தர் (2019) 

⭐  சந்தக்கவிமணி(2019)

உள்ளிட்ட பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவர். 


🌷 அமெரிக்காவின் தென்றல் இதழில் இவரது நேர்காணல் இடம்பெற்றுள்ளது. 


🌷 விஜய பாரதம் வார இதழிலும் இவரது நேர்காணல் வெளியாகியுள்ளது.


🌷 பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் ‘படித்ததில் பிடித்தது’ நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர்.


🌷 இவை தவிர பல நேரலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றுக் கவிபாடியவர்.

   

🌷 கவிதைகளோடு, கட்டுரை, இசைப்பாடல்கள், சிறுகதைகள் என்று வெற்றித்தடம் பதிப்பவர். இவரது படைப்புகள் பல இதழ்களிலும், மின்னிதழ்களிலும் வெளிவந்துள்ளன.


கவிஞர் விவேக்பாரதி அவர்கள் தமிழன்னை அருளால் சீரோடும், சிறப்போடும் எல்லா வளமும் பெற்று நூறாண்டு வாழ மனம்நிறைந்து வாழ்த்துவோம்.