'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Mar 14, 2021

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 9. பைந்தமிழ்ச்செம்மல் இரா.கண்ணன்

பெயர்: இரா . கண்ணன்

பணி: நடுவணரசு பாதுகாப்புத்துறை

படிப்பு: இளங்கலை இலக்கியம் (தமிழ்)

பட்டம்: பைந்தமிழ்ச் செம்மல்

 

கவிஞர் அழைப்பு

கண்ணன் வரவை எதிர்நோக்கிக்  

    கவிஞர் கூட்டம் அவையினிலே 

எண்ணம் சிந்தும் கருத்துதனை

    இங்கு மகிழ்வாய்ப்  பொழியுங்கள்

வண்ணக் கதவைத்  திறவுங்கள் 

    மனத்தின் குமுறல் கொட்டுங்கள்

மன்றம் கேட்கும் உம்கவிதை

    மகிழ்வாய்க்  கூற வாருங்கள்


பைந்தமிழ்ச் செம்மல் கண்ணன் வருக

கன்னல் கவி தருக

 

தமிழ் வாழ்த்து

நாடினேன் நற்றமிழ் உன்னைத் - தனி

      நடையினி லேற்றினாய் என்னை.

பாடினேன் பைந்தமிழ்ப் பண்ணைக் - கவி

      பயிற்றனை இக்களி மண்ணை

மேவினேன் உன்புகழ் தன்னை - அவை

      மேலேற்றி வைத்தனை முன்னை

தாவினேன் தாண்டிட விண்ணை - ஏன்

      தாமதம் காட்டு நீ கண்ணை

தலைமை வாழ்த்து

இருபெரும் தலைமையின் சிறப்பை - நானோ

        எப்படி யுரைப்பது நெருப்பை

அருந்தமிழ் காத்தெழும் திறத்தை - மொழி

       ஆளுமை கொண்டநல் உரத்தை

நறுந்தமிழ் அளித்தநல் வரத்தைக் - கொண்டு

       நாளெலாம் ஊட்டும்வல் அறத்தை

இருந்தமிழ் ஏற்றுவர் மறத்தை - இவர்

      இலக்கிய உலகினில் சிறுத்தை

 

கதவைத் திறந்து வை

மனிதனை மனிதனே ஏய்க்கும் - கெட்ட

     மனுவெனும் மடமையை மாய்க்கும்

இனிபல கவிதைகள் செய்வோம் -அதில்

     எரிதழல் கொண்டுடன் நெய்வோம்

நனிவுடன் நம்மினம் ஆய்வோம் - கொடும்

     நரிகளின் தலைகளைக் கொய்வோம்

தனியிலை நாம்பெரும் கூட்டம் - எழத்

      தாங்குமா பகை புகை மூட்டம்

 

களம்பல காத்துதான் கிடக்கு - நம்

      கடமைகள் அதில்பல முடுக்கு.

தளங்களும் கணக்கிலை இருக்கு - இனி

      தடைகளும் நமக்கிலை நொறுக்கு

உளத்தினில் கொண்டெழு செருக்கு - நிதம்

      உணர்வினை அத்துடன் பெருக்கு

இளைஞனே மீசையை முறுக்கு - நீ

      இழிநிலை அறுத்திடும் கருக்கு

 

உழவனின் உரிமைகள் பறித்து - இங்கு

    உயிர்வதை செய்கிறார் நெரித்து

இழிநிலை நடக்குது நாட்டில் - ஏனோ

      இதுவரை வரவிலை ஏட்டில்

உழவனின் உழைப்பினைச் சுரண்டி - இங்கு

     உயர்ந்தவர் பலருளர் மிரட்டி

எழுவினி எதிர்வினை யாற்றி - அவர்க்

      கிரையெனும் நம்நிலை மாற்றி

 

முழவினைக் கொட்டி நீ முழங்கு - நம்

      முன்னவர் வலிகளை விளங்கு

தழலென இருக்கனும் கருத்து - வரும்

     தலைமுறை படிக்கனும் பெருத்து

வழிகளும் பலதிசை நோக்கு - இனி

      வரன்முறைப் பிழைகளை நீக்கு

விழிகளில் கனலினைத் தேக்கு - மொழி

      விடுதலை பேசட்டும் நாக்கு

 

துஞ்சுவ(து) ஏதினி வாழ்வில் - நாமும்

     துயர்களை யாதிரும் போழ்தில்

வெஞ்சினம் கொண்டெழும் போது- நமை

     வீழ்த்திடும் பகைகளும் ஏது

அஞ்சுவ(து) ஏதினிக் கடப்போம் - மேல்

      ஆதிக்கத் தைமுறி யடிப்போம்

நெஞ்செனும் கதவினைத் திறப்போம் - அதில்

     நெடியதோர் பயணத்தை எடுப்போம்

 

வாழ்த்து

நெஞ்சமென்ற  கதவுதனைத்  திறந்து விட்டால்

    நெடுந்துயரைத் தீர்ப்பதற்கு வழிகள் உண்டு

வஞ்சகரை எரிதழலால் எரித்து விட்டால்

    வாழ்வினிலே வசந்தங்கள் வீசி நிற்கும் 

அஞ்சுவது போதுமென்று கூறும்  கண்ணன்

    அகத்தினிலே  துணிவுகொள்ள  வேண்டு மென்றார்

செஞ்சுடரின் அனலைப்போல்  வடித்த  பாக்கள்

   சிறப்பென்றே  அனைவருமே வாழ்த்து வோமே


சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

10. பைந்தமிழ்ச்செம்மல் உமாபாலன் சின்னதுரை

யாழ்ப்பாணத்தில் மாவிட்டபுரத்தைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்து  நோர்வேயில் வாழ்கிறார்.

வெளியீட்ட  நூல்கள்:

1 மாவை மான்மியம் (மரபுக்கவிதையில் மாவிட்டபுர வரலாறு)

2 நோர்வேயில் வேர்விட்ட விழுதுகள் (நோர்வேவாழ் தமிழர்களின் 60ஆண்டுகால வரலாறு)

 

கவிஞர் அழைப்பு

மரபு கவியை மகிழ்வுடன் கற்றுத்

தரமாய்ப் படைக்கும் தண்டமிழ்க் கவிஞர்

அரங்கம் சிறக்க அந்தமிழ்க் கவியினை

விரைந்து பாட மிடுக்காய் வருக


பைந்தமிழ்ச் செம்மல்  உமாபாலன் ஐயா வருக !

உங்கள் உன்னதக் கவிதையைத்  தருக

 

தமிழ்த்தாய் வாழ்த்து

தாயே தமிழே தனிப்பெரும் மொழியே

    தரணியின் பொற்பே!

நீயே யுலகின் முதலென முகிழ்த்தாய்

    நிலையென நின்றாய்

சேயே யெனவுன் கழல்தனைத் தொழுவேன்

    செகமது காப்பாய்

வாயேன் வரமாய் வளமது அருள்வாய்

    வணங்குவன் யானே!

 

பாவலர், அவை, தலைவர் வாழ்த்து

தண்ணருந் தமிழ்பாற் கொண்ட

    தளர்விலா அன்பால் என்றும்

எண்ணரும் பணிதா னாற்றும்

    எங்களின் ஆசான் மா.வ

அண்ணனை அவையோர் தம்மை;

    அரங்கதன் தலைமை பெற்ற

பெண்ணருந் தெய்வந் தொட்டுப்

    பெரிதுவக் கின்றேன் யானே!

 

கதவைத் திறந்துவை

கதவைத் திறந்துவை காட்சிகள் தெரியும்

இதயம் விரியும் இன்பம் விளையும்

உதவும் மனத்தால் உள்ளம் கனத்தால்

நிதமும் நன்மை நீடித் திருக்கும்!

பெண்ணில் ஆணில் பேதம் பார்க்கும்

எண்ணந் தன்னை எள்ளி எறிவோம்

பாசங் காட்டி மோசம் செய்யும்

வேசந் தன்னை வேரொடு சாய்ப்போம்!

விரித்தால் வலையில் வீழ்வா ளென்றும்

சிரித்தால் போதும் போர்வா ளென்றும்

வீட்டில் பெண்ணை விலங்காற் பூட்டிப்

பாட்டில் மட்டும் பாசம் பொழிவோம்

பேணிடுந் தன்மையாற் பெண்ணெனத் தோற்றி

ஆணினங் காக்கும் அரிவையர் போற்றி

இதயச் சுமையை இறக்கு தற்காய்க்

கதவைத் திறப்போம் களிப்போ டிருப்போம்!

மறுமணம் என்றே மறுபடி வாழ்வைப்

பெறுபவன் ஆணாம் பெண்ணெனில் வீணாம்;

இந்நிலை யின்றும் இருந்திடல் நன்றா?

அந்நிலை மாற்றித் திருந்திடல் நன்றா?

எண்ணம் அழகாய் இருந்தால் போதும்

மண்ணில் வருமே மனம்போல் வாழ்வு

விதவை மறுமணம் வேண்டி; இதயக்

கதவைத் திறந்து காதல் செய்வோம்!

ஓர்குலம் ஓர்நெறி ஓர்ந்தே தமிழர்

தேர்நிலந் தானே தென்னிலம்; அதனால்

அனைவரும் ஒன்றென அணைப்போம்! யாரும்

மனைவரக் கதவை மனம்போல் திறப்போம்!

மாட்டிய எலிதன் மரணம் போன்றே

பூட்டிய கதவுள் புழுங்கிச் சாகா

மனிதர் நாங்கள் மகிழ்வொடு

இனிதாய்க் கதவைத் திறப்போம் இன்றே!

 

வாழ்த்து

வீட்டினிலே பெண்களினை விலங்காற் பூட்டும்

  வீணர்கள் போக்குதனை மாற்ற வேண்டும்

பாட்டினிலே முழக்கத்தைப் பொழிந்து தள்ளிப்

  பாரதியை எம்முன்னே கொண்டு வந்தார்

நாட்டினிலே தீங்குசெய்யும் கூட்டந் தன்னை

  நசுக்கிவிட வேண்டுமென்றும் சொல்லிச் சென்றார்

வாட்டுகின்ற தீமையெல்லாம் அழிந்து போக

  வகைவகையாய்க் கூறியதை வாழ்த்து வோமே

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 11. பைந்தமிழ்ப் பாமணி மதுரா

 

புனைப்பெயர்..மதுரா

இயற்பெயர்.தேன்மொழி

சோலை விருதுகள் : பைந்தமிழ்ப்பாமணி, காரிகை வேந்தர்

எழுதிய நூல்கள்:

சொல் எனும் வெண்புறா,

முல்லை முறுவல்,

பெண் பறவைகளின் மரம் (விரைவில் வெளியீடு)

மின்னூல்: சிதறும் முத்துகள் (தன்முனைக்கவிதைகள்)

பிராயசித்தம் (சிறுகதை தொகுப்பு)

 

கவிஞர் அழைப்பு

உள்ளக் கதவில் மறைந்திருக்கும்

  உள்ளக் குமுறல் சிதறட்டும்

அள்ளித் தெளித்துச் சிந்துங்கள்

  ஆன்றோர் அவையும் சிறக்கட்டும்

துள்ளி வருக தேன்மொழியே

  சுடராய்க் கவிதை ஒளிரட்டும்

கிள்ளை மொழியால் பேசுங்கள்

  கேட்கும் அவையும்  மகிழட்டும்  

 

பைந்தமிழ்ப் பாமணி மதுரா வருக வருக

 

தமிழ் வாழ்த்து

உயிரில் கலந்த உயர்ந்த மொழியே

மயக்க மறுத்துநல் மாண்பை யளித்துத்

தயக்கங் களைந்து தடையை நீக்கிப்

பயப்பா யினிய பயன்.

 

தலைமை வாழ்த்து

சோலையின் பூக்கள் நாங்கள்

  சுகந்தரும் பாக்கள் யாக்க

மாலையில் எம்மைக் கோத்த

  மன்றலின் தலைக்கு வாழ்த்து

கோலமாய்க் கவிஞர் கூடிக்

  குறைவிலாக் கவிதை பாடும்

ஆலமாம் சோலை யென்னும்

  அவைக்குமென் அன்பு வாழ்த்து.

 

கதவைத் திறந்து வை

உலகினில் பிறக்க வைத்தும்

  உறவெனச் சிலரைச் சேர்த்தும்

நிலையிலா வாழ்வைத் தந்தும்

  நிம்மதி யற்று நாளும்

அலைகடல் போல உள்ளம்

  அலைகழித் தரற்று மிந்தத்

தலையெழுத் தெழுதி நம்மைத்

  தவித்திட வைத்தார் யாரோ?

 

 

இறையெனச் சொல்வா ருண்டே

  இயற்கையாய்க் கொள்வா ருண்டே

அறிவினால் பகுத்துப் பார்க்க

  அவசிய மேது மில்லை

குறையிலா அன்பு கொண்டு

  குவலயம் வாழ வேண்டும்

நிறைவினால் நெஞ்ச மென்றும்

  நிம்மதி கொள்ள வேண்டும்.

 

கவலைக ளற்று மாந்தர்

  கண்ணியம் காக்க வேண்டும்

அவனியி லுயிர்க ளெல்லாம்

  அமைதியாய் வாழ வேண்டும்

துவண்டிடா நெஞ்சம் வேண்டும்

  தூய்மையா யுள்ளம் வேண்டும்

தவநெறி ஏது மின்றி

  தரணியும் தழைக்க வேண்டும்.

 

வஞ்சமே யில்லா வாழ்வு

  வஞ்சியர்க் கமைய வேண்டும்

நஞ்சிலா உணவு வேண்டும்

  நல்லதாய்க் காற்றும் வேண்டும்

பஞ்சமோ பிணியோ யின்றிப்

  பாரது செழிக்க வேண்டும்

எஞ்சிய நாளி லேனும்

  இன்பமாய் வாழ வேண்டும்.

 

இதற்கொரு வழியைச் செய்யும்

  எவரையும் இறையாய்க் கொள்வோம்.

மதமென எதையும் கொள்ளோம்

  மனிதமே போது மென்போம்

உதவிடும் கரங்கள் கோப்போம்

  உறுதுணை யாக உள்ளக்

கதவினைத் திறந்து வைப்போம்

  கடவுளை நம்முள் காண்போம்.

 

வாழ்த்து

 

இறைவனை வணங்கி நாளும்

  இழிசெயல்  செய்யும் கூட்டம்

அறிவினைப் பெற்றால்  நாட்டில்

  அறமது நிலைக்கு  மென்றார்  

குறைவிலாக்  கவிதை பாடிக்

  குறைதனை எடுத்துக் கூறும்

நிறைமதி மதுரா பாக்கள்

  நிறைவென வாழ்த்து வோமே

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

 12. பைந்தமிழ்ப் பாமணி இரா_அழகர்சாமி

கவிஞர் அழைப்பு

பண்பில் சிறந்த கவிஞரிவர்

  பாக்கள் சுவையாய்ப் பலதருவார்

அன்பாய் அவையில் கவிபாட

  அன்னைத் தமிழால் அழைக்கின்றேன்

 

அழகர்சாமி ஐயா வருக

அருந்தமிழ் பாக்கள் தருக

 

தமிழ்த்தாய் வாழ்த்து

ஆய மொழிகள் அனைத்திற்கும் தாயாகி

நேயமுடன் நெஞ்சில் நிறைபவளே-தூயமொழி

உன்னை விடுத்தே உயிர்வாழும் யாவரையும்

கண்ணிலா தாராய்க் கருது!

 

அவைவாழ்த்து

அருமைக் கவிச்சரம் ஆக்கிப் படைத்தே

பெருமைகள் சேர்க்கும் பைந்தமிழ்ச் சோலையின்

அவைக்குத் தலைவராய் ஆனநற் செம்மலாம்

சிவராச சிங்கம் சிறப்புடன் வாழ்க!

 

கதவைத் திறந்துவை

முடைநாற்றம் வீசுகின்ற சமுதா யத்தில்

     மூச்சடக்கி வாழ்ந்ததெல்லாம் போதும்! நம்மை

இடைவந்து கெடுக்கின்ற மதத்தின் பேரால்

     இனிக்கின்ற பலகதைகள் கொண்டு வந்தே

கடைவிரித்தப் பொய்ச்சரக்கை விற்க வந்த

     கயவர்களின் வலைக்குள்ளே வீழ்தல் வேண்டா

மடைதிறந்த வெள்ளமென வெளியில் வந்தே

     மனஞ்சொன்ன வழிவாழும் முறைதான் நன்றே!

 

இருளென்னும் போர்வைக்குள் இருந்து கொண்டே

     இடருக்கும் சுடருக்கும் பேதம் இன்றிப்

பொருளற்ற வாழ்க்கையினை வாழ்தல்  நம்மைப்

     பொறுப்பற்ற இடந்தேடி நகர்த்திச் செல்லும்

விருப்புக்கும் வெறுப்புக்கும் பேதம் இன்றி

     வேண்டாத வாழ்க்கையினை வாழ்வோர் எல்லாம்

இருப்பைத்தான் ஓர்நாளில் இழப்பர் அந்த

     இடர்களையக் கதவுகளைத் திறப்பீர் இன்றே!

 

இதயத்தின் கதவுகளைத் திறந்து வைத்தால்

     இன்பங்கள் வரவாகி நெஞ்சில் நிற்கும்

உதயத்தின் பொழுதாக இனிக்கும் வாழ்வை

      உணர்கின்ற அக்கணமே இன்பம் பொங்கும்

மதமென்னும் குகைக்குள்ளே அடிமைப் பட்டு

     மாயவலைப் பேச்சினிலே மயக்கங் கொண்டே

இதமான வாழ்கையினை இழக்க வேண்டா

     இதயத்தின் கதவுகளைத் திறப்பீர் இன்றே!

 

அண்டிவரும் உறவுகளைப் புறத்தே தள்ளி

     ஆகாத வன்மமதை நெஞ்சில் ஏற்றி

மண்டையிலே கனத்தோடு வாழும் வாழ்க்கை

     மகிழ்ச்சியினை ஒருபோதும் தருவ தில்லை

சண்டைகளே சரித்திரமாய் மாற மாற

     சகமாந்தர் நேசங்கள் விளைவ தேது

அண்டையிலே உள்ளோரின் அன்புக் காக

     அகக்கதவை அன்போடு திறப்போம் நாமே!

 

வாழ்த்து

முடைநாற்றம் வீசுகின்ற சமுதா யத்தில்

    மூச்சடக்கி வாழ்ந்ததெல்லாம் போது மென்றார்

இடைவந்து கெடுக்கின்ற மதத்தின் பேரால்

    இன்னல்கள் கொண்டுவந்து சேர்ப்பா ரென்றார் 

விடைகளின்றிச் சிக்கலினில் வாழ்வோ ரெல்லாம்

    வெலவெலத்து மனக்கதவை மூடி நிற்பர்

அடுத்தடுத்து மனக்குறைகள் பலவும்  சொன்னார்

    அகக்கதவைத் திறந்துவைத்து வாழ்த்துவோமே

சோலைக் கவியரங்கம் – 11 - கதவைத் திறந்து வை

13. பைந்தமிழ்ப் பாமணி ஷேக் அப்துல்லா அ

 

கவிஞர் வரவேற்றல்

உண்மை நிலையை உலகத்தார்

    உணரும் கருத்துப் பலதருவார்

பண்பில் சிறந்த கவிஞரிவர்

    பணிவாய்ப் பயிற்சி தினம்பெறுவார்

எண்ணம் எண்ணும் கருத்துகளை

    எளிதாய்ப் பாவில் எடுத்துரைப்பார்

அன்பாய் அவையில் கவிபாட

    அன்னைத் தமிழால் அழைக்கின்றேன்

 

ஷேக் அப்துல்லா ஐயா வருக

அன்னைமொழி சிறக்கும் பாக்கள் தருக

 

கதவைத் திறந்து வை

ஒன்றென்ற உண்மையதை உள்ளுணர வேற்றுமை

நன்மனத்துள் ஓடிவிடும்! நன்மைகளே ஊற்றெடுக்கும்!

எண்ணம் விழிப்பில் எழுதுவதே வாழ்க்கையதில்

கண்கொண்டு பார்க்க, கதைகளல்ல; காணும்

பிரபஞ்சம் ஒன்று பிறவியின் தூக்கங்

கரவொலி கேளாக் கடுமுறக்கங் கொண்டின்

இறந்தபின் எவ்விதமும் இல்லை! அதுபோல்

திறனெல்லாம் வாரா! திகழ்ந்ததுவே காண்பாய்!

அருளிருந்தால் பேரின்பம்! அன்றேல் உணர்வில்

இருக்கும் எரிநெருப்பின் எல்லாங் கொடுக்கும்!

விழித்து வதைக்கும்! விரைக! கிடைத்த

செழிப்பான தோற்றத்தில் செம்மை மனிதனாய்ச்

சீர்தூக்கி மேம்படுத்து! செய்திடாதே துன்பங்கள்!

பாரதனில் பாழான பண்பில்லாப் பார்வையால்

நிம்மதி கெட்டு நிலத்திலும் வானிலும்

உம்மதியாற் சீற்றங்கள் உண்டாக ஏது

புரியாமற் சூழ்வெள்ளம் போன்ற  பலவும்

தெரிந்து விடாநிலையில் துன்பத்தில் ஆழ்த்திவிடும்!

போதையில் மூழ்கிப் புரியும் புதுமைகள்

காதைத் திருகிக் கருணைகாட்டாக் கூட்டத்தில்...

எப்படி? எல்லா இருப்பில் இருப்பதெல்லாம்

ஒப்பில்லா வொன்றென உன்னுள் உணர்வாய்!

நிலையில்லாத் தோற்றத்தில் நேரான பார்வை

நிலையதைக் கொள்ளத் திறந்துவிடு நின்னுள்!

மனக்கதவைப் புத்தாண்டு மத்தாப்புப் பூக்க!

மனத்துள் மனிதம் மலரட்டும் மாண்புடன்!

மானிடர் தைத்திருநாள் மண்வளங்கள் கொண்டாட்டம்!

காணிகள் தோறும் கலைநிகழ்வின் காட்சிகள்!

கண்கொள்ளா ஆட்டங்கள்! கற்பித்துப் போனதிற்

கொண்டே மனிதனாகிக் கொள்!

 

வாழ்த்து

மனத்தில் மனிதம் மலர்ந்துவிட்டால்

    மண்ணில் புனிதம் பிறந்துவிடும்

சினத்தில் செய்யும் செயலெல்லாம்

    திருத்தம் காணும் என்றுரைத்தார்

நினைவில் வந்த கருத்துகளை

    நிறைவாய்த் தந்தார் மன்றினிலே

இனிதாய்க் கேட்டு மகிழுங்கள் 

    இன்பம் பொங்க வாழ்த்துவமே